Published:Updated:

அன்று கொண்டாட்டம், இன்று திண்டாட்டம்! - அ.தி.மு.க வின் ‘அக்டோபர்’ அலர்ஜி

அன்று கொண்டாட்டம், இன்று திண்டாட்டம்! - அ.தி.மு.க வின் ‘அக்டோபர்’ அலர்ஜி
அன்று கொண்டாட்டம், இன்று திண்டாட்டம்! - அ.தி.மு.க வின் ‘அக்டோபர்’ அலர்ஜி

அன்று கொண்டாட்டம், இன்று திண்டாட்டம்! - அ.தி.மு.க வின் ‘அக்டோபர்’ அலர்ஜி

திமுக என்ற மக்கள் ஆதரவு மிக்க ஒரு திராவிடக் கட்சியின் பலம் எம்.ஜி.ஆரும் அதன் இரட்டை இலை சின்னமும்தான். அதிமுக என்ற கட்சியின் வெற்றி என்பது அது ஆரம்பிக்கப்பட்ட 1972-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 ந்தேதியே துவங்கிவிட்டது எனலாம். எம்.ஜி.ஆர் என்ற தமிழகத்தின் பெரும்பான்மை மக்களின் வழிபாட்டு நாயகனாக இருந்த ஒரு நடிகரால் துவக்கப்பட்ட அதிமுக, அது போட்டியிட்ட முதல் தேர்தலிலிருந்தே வெற்றிகளை சுவைக்க ஆரம்பித்துவிட்டது. அதற்கு எம்.ஜி.ஆர் என்ற தனிமனிதரின் பலம் மட்டுமே காரணம் என்று அடித்துச்சொல்லலாம். எம்.ஜி.ஆருக்குப்பின் அந்தக் கட்சியின் வெற்றிமுகமாக இருந்தது எம்.ஜி.ஆர் உருவாக்கிவிட்டுச்சென்ற கட்சியின் சின்னமான இரட்டை இலை.  

தேர்தல் சமயங்களில் அதிமுகவை எதிர்த்துநின்ற கட்சிகளுக்கு சிம்ம சொப்பமான விளங்கிய இரட்டை இலை இன்று தேர்தல் கமிஷனில் அடமானம் வைக்கப்பட்டிருக்கிறது. 45 ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசியல் களத்தில் அனல் பறந்த ஒரு அக்டோபர் மாதத்தில் துவக்கப்பட்ட அதிமுக, இன்று பொன்விழாவை நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில் அதே ஒரு அக்டோபர் மாதம் அதன் எதிர்காலத்தை இழக்கும் அபாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. வீட்டுச் சண்டையை வீதிக்கு கொண்டுவந்ததால் அதிமுகவின் ஆக்சிஜனான இரட்டை இலையை டெல்லியில் தொலைத்துவிட்டு நிற்கிறார்கள் அதன் இன்றைய தலைவர்கள். 

“சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம் நாடகத்தில் நடிப்பதற்காக நடிகமணி டி.வி நாராயணசாமியால் அண்ணாவிடம்  அறிமுகம் செய்துவைக்கப்பட்டவர் காங்கிரஸ்காரரான எம்.ஜி.ஆர். அவரது பணத்தோட்டம் நாவல் பிடித்துப்போய் ஒரு கட்டத்தில் அவரை காதலிக்கவே ஆரம்பித்தார். காங்கிரஸின் காலணா உறுப்பினராக இருந்து அதுவரை கதர் உடை உடுத்திவந்த எம்.ஜி.ஆர் அண்ணாவின் அழைப்பின்பேரில் 1951 ல் தி.மு.க வில் சேர்ந்தார். தனது திரையுலக சகாவான கருணாநிதி, தி.மு.கவில் முக்கியத்துவம் வாய்ந்தவராக இருந்ததால் எம்.ஜி.ஆருக்கு தி.மு.க வில் இணைவதில் சங்கடங்கள் எதுவுமில்லை.

எம்.ஜி.ஆரின் சினிமா பிரபல்யம் தி.மு.கவுக்கு உதவியது. அண்ணாவும் கருணாநிதியும் சினிமாப் புகழ்கொண்டவர்கள்தான் என்றாலும் கதை வசனகர்த்தாக்களான அவர்கள் எம்.ஜி.ஆரைப்போல் அடித்தட்டு மக்களின் அசாத்தியமான அன்பை பெற்றிருக்கவில்லை. தனது திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் சின்னம், தனது கதாபாத்திரங்களின் பெயர், அணியும் உடை என எதிலும் தி.மு.கவை அடையாளப்படுத்தி மக்களிடம் தி.மு.க வை கொண்டு சேர்க்க பெரிதும் உதவினார் எம்.ஜி.ஆர். கட்சியின் கூட்டங்களிலும் பங்கேற்று தன் பங்களிப்பை வழங்கினார். எம்.ஜி.ஆரின் வரவுக்குப்பின் தி.மு.க சற்று வேகமெடுத்தது.

தன்னை நேசிப்பதோடு கட்சியின் வளர்ச்சிக்கு சிறந்தமுறையில் பங்காற்றிய எம்.ஜி.ஆரை அண்ணா அவ்வப்போது நெகிழ்ந்துபாராட்டினார். எம்.ஜி.ஆரும் வளர்ந்தார்; கழகமும் வளர்ந்தது. கூடவே கட்சியில் பகையும் வளர்ந்தது. எம்.ஜி.ஆரின் ஆதிக்கம் கட்சியில் அதிகமாவதில் சிலருக்கு பொருமல் உண்டானது. கட்சியின் இருபெரும் தலைவர்களாக வளர்ந்துவந்த எம்.ஜி.ஆர் மற்றும் கருணாநிதி இடையே பனிப்போர் உருவானது. 1967 தேர்தலில் வாக்குப்பதிவுக்கு சில தினங்களுக்கு முன் எம்.ஜி.ஆர், எம்.ஆர். ராதாவால் சுடப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கிப்போட்டது.

குண்டடிபட்ட நிலையில் எம்.ஜி.ஆர்  பரிதாபமாக காட்சியளித்த சுவரொட்டி தமிழகம் எங்கும் ஒட்டப்பட்ட அந்த தேர்தலில் தி.மு.கவின் வெற்றி எளிதானது. 138 இடங்களில் வென்று  தி.மு.க ஆட்சியைப்பிடித்தது. 

இந்த வெற்றியினால் எம்.ஜி.ஆருக்கு அண்ணா அளித்த முக்கியத்துவம் மீண்டும் கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியது. கருணாநிதி எம்.ஜி.ஆர் இடையே மீண்டும் பனிப்போர் துவங்கியது. 1969 ம் ஆண்டு அண்ணா புற்றுநோயால் மரணமடைந்தார். அண்ணாவுக்குப்பின் அந்த இடத்திற்கு கருணாநிதி வருவதில் இருந்த தடைகளை அகற்றி அதில் வெற்றிகண்டார் எம்.ஜி.ஆர். அடுத்துவந்த தேர்தலில் வெளிப்படையாக கருணாநிதிக்கு ஆதரவாக பிரசாரம் செய்து மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வர முக்கிய காரணகர்த்தாக்களில் ஒருவரானார். 
ஆனால் அடுத்த ஒரு வருடம் கூட நிலைக்கவில்லை அந்த நட்பு. இருவருக்கிடையே மனஸ்தாபம் முற்றியது.

தலைவர்கள் தங்கள் தாங்கள் சொத்துக்கணக்கை காட்டவேண்டும் என கட்சிக்கு எதிராக 1972 அக்டோபர் 8-ம் தேதி திருக்கழுக்குன்றத்தில் நடந்த கூட்டத்தில் கொடிபிடித்தார் எம்.ஜி.ஆர். “வருமான வரித்துறை மூலம் மத்திய அரசு விடுத்த மிரட்டலுக்கு பயந்து கட்சியை காவு கொடுக்கிறார் எம்.ஜி.ஆர்” என்றார் கருணாநிதி. ஒரு முடிவுக்கு வந்தவர்களக இருதரப்பிலும் குற்றச்சாட்டுக் கணைகளை வீசிக்கொண்டனர். கட்சியின் விவகாரங்களை பொதுவெளியில் பேசியதாக எம்.ஜி.ஆருக்கு ஷோகாஸ் நோட்டீசு அனுப்பியது கட்சி மேலிடம். எம்.ஜி.ஆர் முரண்டு பிடித்தார்.  பெரியார் ராஜாஜி என யார் யாரோ தலையிட்டும் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை. இறுதியாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் எம்.ஜி.ஆர்.

திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர் நீக்கம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் எம்.ஜி.ஆர் தி.மு.க வுக்கு சொந்தம் கொண்டாடி சட்டப்புர்வமாக முயல்வார் என்று சொல்லப்பட்டது. ஆனால் 1972 அக்டோபர் 17 ந்தேதி எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம்  என்ற கட்சி ஒன்றை துவக்கினார். கட்சியில் தி.மு.க தலைவர்கள் பலர் அடுத்தடுத்து வந்து இணைந்தனர். கட்சி மக்களிடையே வளரத்துவங்கியது. 

கட்சி சந்தித்த முதல் தேர்தலான திண்டுக்கல் இடைத்தேர்தலில்தான் இரட்டை இலை சின்னம் முதன்முதலாக ஒதுக்கப்பட்டது. அதுவரை கட்சிக்கென தனியே சின்னம் என்று எதுவும் இல்லாத நிலையில் அந்த தேர்தலில் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்ட 16 சின்னங்களில் ஒன்றாக இருந்த இரட்டை இலை சின்னத்தை வேட்பாளர் மாயத்தேவர் தேர்ந்தெடுத்தார். 
வின்சென்ட் சர்ச்சிலின் புகழ்பெற்ற விக்டரி சிம்பள் போலதுவே இரட்டை இலை சின்னமும் இருப்பதால் பிரசாரத்திற்கு வசதியாக  இருவிரல்களை காட்டி பிரசாரம் செய்யலாம், சுவற்றில் எளிதாக வரையக்கூடியது, பெண்கள் மத்தியில் இரண்டு இலையை கொடுத்து வாக்கு சேகரிக்கமுடியும்’ என மாயத்தேவர், எம்.ஜி.ஆரிடம் அதற்கு ஒப்புதலும் பெற்றார். மாயத்தேவர் பெரும்வெற்றிபெற்றார். அ.தி.மு.க வின் வெற்றிப்பயணம் தொடங்கியது. 

அடுத்துவந்த சட்டமன்றத்தேர்தலில் அ.தி.மு.க அமோக வெற்றிபெற்று ஆட்சியமைத்தது.  எம்.ஜி.ஆரின் பிரபலமான இரட்டை விரல் காட்டும் மேனரிஸம் அதன்பிறகு உருவானதே. அதைத்தொடர்ந்து 3 முறை எம்.ஜி.ஆர் முதல்வரானார். எம்.ஜி.ஆர் பெற்ற வெற்றிகளில் அவருக்கு இணையான பங்கு இரட்டை இலைச் சின்னத்துக்கு உண்டு. இதை உணர்ந்திருந்ததால்தான் கட்சியின் சின்னத்தை கட்சிக்காரர்கள் தங்கள் கைகளில் பச்சைக்குத்திக்கொள்ளவேண்டும் என ஒருமுறை எம்.ஜி.ஆர் அறிவித்தார். அதன்படி உலகிலேயே கட்சியின் சின்னத்தை உடம்பில் பச்சைக்குத்திக்கொண்ட ஒரே தலைவர் எம்.ஜி.ஆராகத்தான் இருக்கமுடியும். அது 2 ம் கட்டத் தலைவர்களிடையே சலகலப்பை ஏற்படுத்தவே அதை கைகழுவினார் அவர். 

எம்.ஜி.ஆர் காலத்திற்குப்பின் கட்சியில் ஆர்.எம்.வீரப்பன், ஜெயலலிதா என இரு கோஷ்டிகள் உருவானது. ஆர்.எம்.வீரப்பனால் அரசியலுக்கு கொண்டுவரப்பட்ட ஜானகி ஜெயலலிதாவுடன் மல்லுக்கட்டினார். கட்சி பிளவுபட்டதால் 1989ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலைச் சின்னத்தை தேர்தல் கமிஷன் முடக்கியது. அந்தத்தேர்தலில் ஜெயலலிதாவுககு சேவல் சின்னத்தையும் ஜானகி அணிக்கு இரட்டை புறா சின்னத்தையும் வழங்கியது தேர்தல் கமிஷன். தேர்தலில் படுதோல்வி அடைந்த ஜனாகி, அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்தார். பிளவுபட்ட அதிமுக ஜெயலலிதா தலைமையில் ஒன்றுபட்டது. இரட்டை இலைச் சின்னம் மீண்டும் கிடைத்தது. 
எம்.ஜி.ஆரின் புகழ் ஜெயலலிதாவின் அசுர பிரசாரம் இவற்றை மீறி கிராமப்புறங்களில் இரட்டை இலைச் சின்னம்தான்  இன்றைக்கும் அதிமுகவின் பிரதான பிரசாரகர்.

கட்சியின் பெயர், வேட்பாளர் பெயர், தேர்தல் அறிக்கை என அந்த மக்களுக்கு எதையும் சொல்லவேண்டாம்; எதையும் பல மணிநேரங்கள் பேசிக்கொண்டிருக்கவேண்டாம். அவர்கள் வீதிகளில் இரட்டை இலைச் சின்னத்ததை வரைந்துவிட்டால் போதும், வாக்குகள் குவிந்துவிடும். எம்.ஜி.ஆருக்குப்பின் ஜெயலலிதா பெற்ற வெற்றிகளுக்குப்பின்னணியும் இரட்டை இலைதான். இதனாலேயே தேர்தல் சமயங்களில் அதிமுக தன் சின்னம் தொடர்பாக அதிகார துஷ்பிரயோகம் செய்கிறதா என கண்ணில் விரலை விட்டுப்பார்க்கும் தி.மு.க. காரணம் ஜெயலலிதாவை விட கருணாநிதிக்கு தெரிந்திருந்தது அந்த சின்னத்தின் பலம்.

அப்படிப்பட்ட சின்னம் இன்று இரண்டாவது முறையாக தேர்தல் ஆணையத்தின் அலுவலகத்தில் முடங்கிக்கிடக்கிறது. ஜெயலலிதா மறைவுக்குப்பின் முதல்வராக நீடிப்பதில் சிக்கல் எழுந்த நிலையில் அ.தி.மு.க வில் இருந்து தனி அணியாக பிரிந்துசென்றார் ஓ.பன்னீர்செல்வம். ஆர்.கே நகர் தேர்தலில் ஓ.பன்னீர்தரப்பும் தினகரன் தரப்பும் முட்டிக்கொள்ள தேர்தல் கமிஷன் இரண்டாவது முறையாக இரட்டை இலைச் சின்னத்தை முடக்கியது. கொஞ்சநாளில் தேர்தலும் முடங்கியது. இப்போது ஆப்பத்தை கொண்டுபோய் குரங்கிடம் கொடுத்த கதையாய் தங்கள் கட்சியின் அட்சய பாத்திரத்தை டெல்லியில் அடகுவைத்துவிட்டு அஃபிடவிட்டுகளுடன் அலைந்துகொண்டிருக்கிறார்கள் இரண்டு அணிகளும்.

எந்த அக்டோபர் மாதத்தை அ.தி.முக. தொண்டர்கள் கோலாகலமாக கொண்டாடி மகிழ்வார்களோ அதே அக்டோபர் மாதம் இந்த முறை அவர்கள் டெல்லியின் திசையை பார்த்து காத்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாபோல் மக்கள் ஆதரவு பெற்ற தனித்தன்மை கொண்ட தலைவர்கள் இல்லாத இந்த நேரத்தில் கட்சியின் இரட்டை இலைச் சின்னமும் கிடைக்காமல் போனால் தங்கள் தலைவனும் தலைவியும் வளர்த்தெடுத்த கட்சி காணாமல் போய்விடுமே என்ற நிஜமான அக்கறையில் புழுங்கிக்கிடக்கிறார்கள் தொண்டர்கள். 

இதுதொடர்பாக அதிமுக எம்.பியும் மைத்ரேயனிடம் பேசினோம். “கழக ஆண்டுவிழா நடைபெறும் அக்டோபர் மாதத்தில் கழகத்தின் வெற்றிச்சின்னம் தேர்தல் ஆணையத்தில் முடங்கிக்கிடப்பது எங்களுக்கும் வேதனை தரக்கூடிய ஒன்றுதான். அதேசமயம் முடக்கிவைக்கப்பட்டுள்ள சின்னம் நிச்சயமாக மீட்கப்படும் என்ற நம்பிக்கை 100 க்கு 200 சதவீதம் எங்களுக்கு உள்ளது. இரட்டை இலையை மீட்பது குறித்து கடந்த 6 ந்தேதி நடந்த விசாரணையின்போது எங்கள் தரப்பு விளக்கத்தையும் சட்டப்படியான ஆவணங்களையும் மிகத்தெளிவாக முன்வைத்துள்ளோம். 

சாதிக் அலி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், “மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவு எண்ணிக்கை யாரிடம் உள்ளதோ, அவர்களுக்கே சின்னம் ஓதுக்கீடு செய்ய வேண்டும் என குறிப்பிட்டது. மேலும் அதில்,  கட்சிப் பொறுப்பில் உள்ளவர்களின் ஆதரவு எண்ணிக்கையைப் பொறுத்தும் முடிவுசெய்யலாம். ஆதாரமாக மக்கள் பிரதிநிதிகளின் உறுதி, பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில்  கடந்த காலங்களில் கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 

அதன்படி மொத்தமுள்ள 49 எம்.பிக்களில் 43 பேர்,  134 சட்டன்ற உறுப்பினர்களில் 113 பேர் மற்றும் 2128 பொதுக்குழு உறுப்பினர்களில் 1877 பேர் என பெரும்பான்மையானவர்கள் ஒருங்கிணைக்கப்பட்ட  ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி பக்கம்தான் நிற்கிறார்கள். எனவே நீதிமன்றத்தீர்ப்பின் அடிப்படையிலும் இதேபோன்று கடந்த காலத்தில்  பிற கட்சிகளின் பிரச்னைகளில் தேர்தல் ஆணையம் கொடுத்துள்ள தீர்ப்புகளின் அடிப்படையிலும் கழக ஆண்டுவிழா மாதமான அக்டோபர் மாதமே இரட்டை இலைச் சின்னம் மீண்டும் எங்களிடம் வரும். 

தினகரன் அணி இவற்றை எல்லாம் அறிந்தும் வீம்புக்காக மனு செய்திருக்கின்றனர். வெறும் 6 எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களில் 21 ல் தற்போது 18 பேர் தகுதியிழப்புக்கு ஆளானவர்கள் போக 3 பேர் மட்டுமே அவர்கள் பக்கம் உள்ளனர். எனவே லெஜிஸ்டேடிவ் விங் என்ற அடிப்படையில்  அவர்களுக்கு உரிமை கோரும் தகுதியே கிடையாது. ஒட்டுமொத்த கழகத்தில் அடிப்படை உறுப்பினர் முதல் எம்.பி, எம்.எல்.ஏக்கள், பொறுப்பாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் என அனைத்திலும் கிட்டதட்ட 100 க்கும் 98 சதவீதம் பேர் எங்களிடம்தான் உள்ளார்கள். எனவே இரட்டை இலைச் சின்னம் எங்களுக்கு கிடைப்பது காலத்தின் கட்டாயம்” என உறுதியாக சொல்லி முடித்தார். 

மீண்டும் அதிமுகவின் வரலாற்றில் அக்டோபர் மாதம் மறக்கவியலாத ஒரு மாதமாகிவிடுமா என்பது சில நாட்களில் தெரியவரலாம்!

அடுத்த கட்டுரைக்கு