Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.

கழுகார் பதில்கள்

ஸ்டாலின் எதிர்காலம் நீதிபதி குமாரசாமி கையில்தான் இருக்கிறது என்று சொல்லலாமா?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இல்லை. கருணாநிதி கையில்தான் இருக்கிறது. 'கொடுக்கமாட்டேன்’ என்று இருப்பவர் கருணாநிதிதானே? இதில் குமாரசாமிக்கு என்ன சம்பந்தம்?

பி.ஸ்ரீதர்ஷினி, குடந்தை - 1.

'கான்களின் படங்களைப் புறக்கணியுங்கள்’ என்கிறாரே பி.ஜே.பி பெண் எம்.பியான சாத்வி பிராக்சி?

கலாசார சீரழிவுக்கு வழிவகுக்கும் படங்களைப் புறக்கணிக்கச் சொன்னால் அவரது கலாசார அக்கறையைப் பாராட்டலாம். 'கான்’கள் என்று சொல்வது அவரது மதவாத அக்கறை மட்டுமே. சல்மான்கானும் ஷாரூக்கானும் அமீர்கானும் மோடியுடன் தோன்றியது சாத்விக்கு மறந்து போயிருக்கும்!

கழுகார் பதில்கள்

கே.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரூ.

காங்கிரஸ் தலைவர் இளங்கோவனை வரவேற்று திருச்சியில் வைக்கப்பட்ட வரவேற்பு பேனரில் ஈ.வெ.ரா படம் போடப்பட்டது சரியா?

இளங்கோவனின் தாத்தா என்பதால் ஈ.வெ.ரா படம் போட்டிருக்கலாம். அல்லது ஈ.வெ.ரா ஆரம்ப காலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்தவர் என்பதாலும் இருக்கலாம்.

செ.அ.ஷாதலி, கோனுழாம்பள்ளம்.

அண்ணா தலைமையிலான தி.மு.க-வுக்கும் கருணாநிதி தலைமையிலான தி.மு.க-வுக்கும் என்ன வித்தியாசம்?

பெரியாரை எதிர்த்து, கட்சி தொடங்கினாலும் தனது கட்சிக்கு அண்ணா, தலைவர் ஆகவில்லை. பொதுச்செயலாளராகத்தான் ஆனார். கட்சி தொடங்கிய சில ஆண்டுகளிலேயே அந்த பொதுச்செயலாளர் பதவியையும் நாவலர் நெடுஞ்செழியனிடம் கொடுத்துவிட்டு, 'தம்பி வா! தலைமை ஏற்கவா! உன் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடக்க நான் தயாராக இருக்கிறேன்!’ என்றார் அண்ணா. அதன் பிறகு தம்பிமார்களுக்குள் ஏற்பட்ட பிரச்னை காரணமாக சமாதானம் செய்ய முடியாமல் மீண்டும் அண்ணாவே பொதுச்செயலாளர் ஆக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. தம்பிமார்கள் சும்மா இருந்திருந்தால், அனைவருமே சுழற்சி முறையில் பொதுச்செயலாளர் ஆகும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கும். இதுதான் அண்ணா காலத்து தி.மு.க.

கழுகார் பதில்கள்

அண்ணா இறந்து சில மாதங்களிலேயே தலைவர் பதவியை உருவாக்கிவிட்டார் கருணாநிதி. அதில் அவரும் பொதுச்செயலாளராக நெடுஞ்செழியனும் இருந்தார்கள். எம்.ஜி.ஆருடன் நெடுஞ்செழியன் போன பிறகு, அந்த நாற்காலி அன்பழகனுக்குக் கொடுக்கப்பட்டது. இன்றுவரை 40 ஆண்டு காலமாக அவர்தான் தலைவராக இருக்கிறார். ஸ்டாலின் என்னென்னவோ பண்ணிப் பார்த்துவிட்டார். ஹூம்! இதுதான் இன்றைய தி.மு.க.

பெரியகாஞ்சி பேரலை கொண்டான், கருப்பம்புலம்.

நல்லம நாயுடுவுக்கு 93 வயதா?

அவருக்கு வயது 73 தான்! ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை அதிகாரி அவர். அவரை நேரில் வந்து ஆஜராகச் சொல்லி இதன் மேல்முறையீட்டு மனுவை விசாரித்து வரும் நீதிபதி குமாரசாமி கேட்டுக் கொண்டார். நல்லம நாயுடு வந்தால் விசாரணை வேறுமாதிரியாகத் தீவிரமாகிவிடும் என்று பயந்த தமிழக லஞ்சஒழிப்புத் துறை போலீஸ் அதிகாரி, 'நல்லம நாயுடுவுக்கு 93 வயது, அதனால் அவரால் வர இயலாது’ என்று சொல்லிச் சமாளித்துவிட்டார். நீதிபதியும் அதன் பிறகு எதுவும் கேட்கவில்லை. அதனால் இவர்கள் தப்பித்தார்கள்!

சிவக்குமார், சாத்தூர்.

கடன் வாங்குவது தவறு இல்லை என்று எல்லா அரசாங்கங்களும் சொல்கின்றனவே?

'கடனே மிகவும் மோசமான வறுமை’ என்று சொல்கிறார் தாமஸ் ஃபுல்லர்! வறுமை தவறு அல்ல என்று சொல்வார்களா?

அ.குணசேகரன், புவனகிரி.

தமிழக அரசு முழுமையாக இயங்குகிறதா?

தேவையில்லாத விஷயங்களுக்கெல்லாம் ஜெயலலிதாவின் ஆலோசனையைக் கேட்டு விவகாரத்தை தாமதம் செய்வதாகவும், உண்மையில் அவரது அனுமதியைப் பெற வேண்டிய விஷயங்களுக்கு கேட்கத் தயங்கி நாட்களைக் கடத்துவதாகவும் கோட்டை அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு இருக்கிறது. எனவே தமிழக அரசு செயல்படுவது எந்த விதத்தில் என்பதுதான் கேள்வி!

'செய்தக்க அல்ல செயக்கெடும், செய்தக்க செய்யாமை யானுங் கெடும்’ என்கிறது வள்ளுவம்!

ராஜசிம்மன், கிருஷ்ணகிரி.

ஆறாவது முறை முதலமைச்சராக வர விருப்பமில்லை என்று கருணாநிதி சொன்ன அறிவிப்பில் மகிழ்ச்சி யாருக்கு? வருத்தம் யாருக்கு?

மகிழ்ச்சி சென்னைக்கு...  சினம் மதுரைக்கு!

என்.காளிதாஸ், சிதம்பரம்.

'என்னை முதலமைச்சர் ஆக்கியது நிதிஷ் குமார் செய்த தவறு’ என்கிறாரே மாஞ்சி?

இவ்வளவு பச்சையாக உண்மையைப் பேசிய அரசியல்வாதி, சமீப காலத்தில் பீகார் மாஞ்சி மட்டும்தான்.

மேட்டுப்பாளையம் மனோகர், சென்னை - 18.

அரசு அலுவலகங்களில் இன்றைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் படம் உள்ளதா?

அதைவிட முக்கியம், முதலமைச்சராக இல்லாதவர் படம் உள்ளதா? என்பதுதான்.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002 kalugu@vikatan.com என்ற முகவரியிலும் அனுப்பலாம்!