Published:Updated:

முரண்பாடுகளைத் தவிர்த்து நாம் கைகோக்க வேண்டும்!

முரண்பாடுகளைத் தவிர்த்து நாம் கைகோக்க வேண்டும்!

காங்கிரஸ் விழாவில் திருமாவளவனின் கூட்டணிப் பேச்சு

'இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைந்தால் மகிழ்ச்சிதான்' என்று பேசி காங்கிரஸ் வட்டாரத்தை ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.

தி.மு.க-வின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராக இருந்த ஈ.வெ.கி.சம்பத், பின்னர் அதில் இருந்து விலகி தமிழ் தேசிய கட்சியைத் தொடங்கினார். அதன்பிறகு தனது கட்சியை காங்கிரஸுடன் இணைத்தார். அவரது மகன் தான் இன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் இளங்கோவன். அந்த ஈ.வெ.கி. சம்பத்தின் 90-வது பிறந்தநாள் விழா கடந்த 5-ம் தேதி சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு சத்திய மூர்த்தி பவனுக்கு வந்திருந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி சுப்பராயன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், முன்னாள் எம்.எல்.ஏ யசோதா, மூத்த வழக்குரைஞர் ஜி.மாசிலாமணி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
முரண்பாடுகளைத் தவிர்த்து நாம் கைகோக்க வேண்டும்!

திருமாவளவன் பேசும்போது, 'காங்கிரஸ் இன்னமும் நம்பிக்கொண்டிருக்கும் சமூகம், தலித் சமூகம்தான். அவர்கள்தான் அகில இந்திய அளவில் காங்கிரஸின் வாக்கு வங்கி. தமிழகத்தில் காங்கிரஸ் தலைவர்களாக கக்கன், இளையபெருமாள் போன்று பலர் இருந்துள்ளனர். நேருவையும் காந்தியையும் கடுமையாக விமர்சித்தவர் அம்பேத்கர். ஆனால், அவரை அழைத்து சட்ட அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்த கட்சி காங்கிரஸ் என்பது வரலாறு. பேச்சாற்றல் மிகுந்தவர் ஈ.வெ.கி.சம்பத் யாரையும் எதிர்க்கக்கூடிய திறன் வாய்ந்தவர். 50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் தேசியக் கட்சியை நடத்தினார் சம்பத். ஆனால் பலர், இன்றுதான் அதன் தேவையை உணர்ந்து இருக்கிறார்கள்.

மதவாதம் என்ற சொல்லை சட்டத் திருத்தத்தில் கொண்டு வந்தவர் இந்திரா காந்தி. தகவல் அறியும் உரிமைச் சட்டம், கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச்சட்டம் போன்றவை தலித் மக்களுக்குப் பெரிதும் உதவி செய்யும் விஷயங்களை காங்கிரஸ் ஆட்சி செய்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி என்றைக்கும் சமூக நீதியின் பக்கம்தான். சிறுபான்மைச் சமூகத்தின் மீதான வெறுப்பை தூண்டி அரசியல் வளர்க்கும் பி.ஜே.பியை அனைவரும் எதிர்க்க வேண்டும். முரண்பாடுகளைத் தவிர்த்து உடன்பாடான கருத்துகளைக் கொண்டு நாம் கைகோக்க வேண்டும்' என்று காங்கிரஸ் பக்கமாக சாய்ந்து பேசினார்.

அடுத்து பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இதனை வழிமொழிந்தார். 'மக்களே சுய​நலமாக மாறி​விட்டார்கள். அதனால்தான் அரசியல்வாதிகளும் மாறிவிட்டார்கள். மாதம் 50 ஆயிரம் சம்பளம் வாங்குபவன்கூட தனக்கு வர வேண்டிய பணத்தை வாங்கிக்கொண்டுதான் ஓட்டுப்போடுகின்றான். நூறு காமராஜர், இன்னும் ஆயிரம் பெரியார் வந்தாலும் திருந்துவார்களா என்பது சந்தேகம்தான். ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவருக்கு 108 மாடுகளை வைத்து பூஜை செய்து கொண்டிருக்கும் ஊரில் இருக்கிறோம் நாம். கொள்ளையடிக்கலாம், லஞ்சம் வாங்கலாம், அதிகாரியை தற்கொலைக்குத் தூண்டலாம் என்ற எண்ணங்கள் தலைதூக்கி இருக்கின்றன. தமிழகத்தில் கோடி என்ற சொல்லுக்கு மரியாதை இல்லாமல் போகக் காரணம், வயதான பெருந்தகை ஒருவர். வீட்டினுள்ளே முடங்கிக்கிடக்கும் அம்மையார் இன்னொருவர்.

முரண்பாடுகளைத் தவிர்த்து நாம் கைகோக்க வேண்டும்!

எனவே, முதலில் மாற்றப்பட​வேண்டியவர்கள் நம் மக்கள்.  பொருளாதார கொள்கையில் வேறுபாடு இருக்கலாம் ஆனால், 2004-ல் காங்கிரஸும், கம்யூனிஸ்ட்டும் சேர்ந்து மிகப்பெரிய வெற்றி பெற்றோம். எல்லோருக்கும் சங்கடங்கள் இருக்கின்றன அதுவும் நம் கட்சியில் இருக்கும் சங்கடங்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். அமெரிக்க கெளபாய் திரைப்படங்களில் வருவதுபோல, தமிழக மக்கள் எதற்கு எடுத்தாலும் பணம், பணம் என்று இருக்கிறார்கள். திராவிட கட்சியில் நாத்திகம் பேசி ஆட்சிக்கு வந்து பணம் சம்பாதித்து அதில் கடவுளுக்கே பங்கு கொடுக்கும் பலர் இருக்கிறார்கள்.  நமக்கு காசு கொடுத்து ஓட்டு வாங்கும் நிலை இல்லை.  எனவே, சமுதாய சாக்கடைகளை நீக்க ஒன்று சேர வேண்டும்'' என்று முடித்தார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் சுப்பராயன் பேசுகையில், 'மதவாத சக்திகளை வீழ்த்த வேண்டுமானால், நேருவை காங்கிரஸ் தூக்கிப் பிடிக்க வேண்டும். அவரது கொள்கைகளை மக்கள் முன் வைக்க வேண்டும். நேருவை மறந்தால் காங்கிரஸுக்கு எதிர்காலம் இருக்காது' என்றார்.

மூன்று கட்சியினர் பேச்சும் கூட்டணிக்கு அச்சாரமாக அமைந்தது!

மா.அ.மோகன் பிரபாகரன், படங்கள்: வீ.நாகமணி