Published:Updated:

மிஸ்டர் கழுகு: துரத்தப்பட்ட கோயில் தனபால்!

மிஸ்டர் கழுகு: துரத்தப்பட்ட கோயில் தனபால்!

ஜெ. சாட்டை பார்ட் - 2

மிஸ்டர் கழுகு: துரத்தப்பட்ட கோயில் தனபால்!

''கடந்த முறை நான் சொன்னது மாதிரியே அக்ரி  கிருஷ்ணமூர்த்தியின் அமைச்சர் பதவி பறிபோய்விட்டது. இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்குப் போய்விட்டதால் வேளாண்மைத் துறை அதிகாரி முத்துக்குமாரசாமியை தற்கொலைக்குத் தூண்டிய கடைசி போனை பேசியவரும் அவரைப் பேசச் சொன்னவரும் விரைவில் கைதாகலாம் என்பதே இன்றைய நிலைமை'' என்று சொன்னபடியே நம் முன் ஆஜரானார் கழுகார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''உதவி செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை விவகாரத்தில் அக்ரி கிருஷ்ண​மூர்த்தி வசமாக சிக்கிக்கொண்டு​விட்டார் என்றே கோட்டை வட்டாரங்கள் சொல்கின்றன. ஆதாரங்கள் இருப்பதை உளவுத் துறை உறுதி செய்ததால்தான், உடனே பதவியைவிட்டே தூக்கிவிட்டார்களாம். சென்னையில் இருந்து யாரோ ஒருவர், செல்போனில் கடைசியாகப் பேசியபின்னர்தான் உணர்ச்சிவசப்பட்டு தற்கொலை முடிவை எடுத்திருக்கிறார் முத்துக்குமாரசாமி. அவரைத் தற்கொலை செய்துகொள்ள தூண்டியது யார் என்பதுதான் சி.பி.சி.ஐ.டி போலீஸாரின் விசாரணை. அந்தப் பிரிவின் எஸ்.பியான அன்பு தலைமை​யிலான டீம் நெல்லையில் முகாமிட்டு விசாரணையைத் தொடங்கியிருக்கிறது.'

''அக்ரி கிருஷ்ணமூர்த்தி வரை விசாரணை போகுமா?'

''கடைசியாக முத்துக்குமாரசாமியிடம் பேசிய நபர் யார் என்பது அவரது போன் விவரங்​களைப் பார்த்தாலே தெரிந்துவிடும். சென்னையில் இருந்துதான் போன் வந்ததாக போலீஸ் தரப்பில் சொல்கிறார்கள். அநேகமாக, விவசாயத் துறை அமைச்சர் அலுவலகம் முதல் இலக்காக இருக்கிறது. அடுத்து, முத்துக்குமாரசாமி பணி செய்து வந்த பிரிவின் தலைமை அலுவலகம் சென்னை நந்தனத்தில் இருக்கிறது. அங்குள்ள ஒரு அதிகாரி யாராவது போன் செய்தார்களா? என்றும் விசாரணை நடக்கிறது. முத்துக்குமாரசாமி இறப்பதற்கு இரண்டு நாள் முன்பு, அவசர மீட்டிங் என்று சொல்லி சென்னைக்கு வரவழைத்திருக்கிறார்கள். அவரிடம், 'மினிஸ்டரைப் போய் பாருங்க’ என்று அதிகாரி ஒருவர் பிரஷர் கொடுத்தாராம்.''

மிஸ்டர் கழுகு: துரத்தப்பட்ட கோயில் தனபால்!

''மினிஸ்டரைப் பார்த்தாரா?''

''மினிஸ்டரை முத்துக்குமாரசாமி பார்த்தாரா, இல்லையா என்பது தெரியவில்லை. முத்துக்குமாரசாமி நெல்லைக்கு போன பிறகுதான், டார்ச்சர் அதிகமாகியிருக்கிறது என்கிறார்கள் விவசாயத் துறை அதிகாரிகள். உயர் அதிகாரி ஒருவர் இவரை நிற்கவைத்துப் பேசிக்கொண்டு இருந்ததாகச் சொல்கிறார்கள்.

'உன்னை நிம்மதியாக ரிட்டையர்டு ஆக விடமாட்டோம். அசிங்கப்படுத்திவிடுவோம்’ என்று போன் குரல் மிரட்டியதாகப் பேசிக்கொள்கிறார்கள். மானஸ்தரான முத்துக்குமாரசாமி வேறு வழியில்லாமல் தற்கொலை முடிவைத் தேடிப் போயிருக்கிறார்!'

''சி.பி.சி.ஐ.டி போலீஸார் இவர்களை வளைத்து​விட்டார்களா?'

''தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் அலுவலகத்தில் நான்கு பி.ஏகள் இருக்கிறார்கள். சிறப்பு பி.ஏவாக கோவிந்தராஜன், சிறப்பு கூடுதல் பி.ஏவாக தியாகராஜன், டெக்னிக்கல் பி.ஏவாக பாண்டியன், அரசியல் பி.ஏவாக தினகரன்... இவர்களுடன் அக்ரியுடன் பழைய தோஸ்து என்ற பேனரில் ஐந்து எழுத்து ஒய்ட் பிரமுகர் ஒருவர் வலம் வருவாராம். இவரும் தன்னை பி.ஏ என்றுதான் சொல்லிக்கொள்வாராம். விவசாயத் துறையின் முக்கிய அதிகாரிகள், 'வழக்கமாக எதற்கெடுத்தாலும் எங்களை டார்ச்சர் செய்கிறவர்கள் இருவர்தான்’ என்று சொல்கிறார்கள். அதில் ஒருவர் ரொம்ப அடாவடியான மனிதராம். இந்தப் பிரிவுக்கு வருவதற்கு முன்பும் பின்பும் என்று அந்த இருவரின் சொத்து மதிப்பைப் பார்த்தாலே, கிறுகிறுக்க வைக்கிறதாம். 'அமைச்சரை எடுத்தால் போதாது. இந்த இரண்டு பேரையும் துறையைவிட்டே நீக்க வேண்டும்’ என்று முதல்வருக்குக் கடிதம் எழுதி வருகிறார்கள் விவசாயத் துறை அதிகாரிகள். மேற்கு மண்டலத்தில் உள்ள விவசாயத் துறை அலுவலகத்தில், 'எப்படியெல்லாம் லஞ்சம் வாங்கலாம்?’ என்று தமிழகம் முழுக்க விவசாயத் துறையின் அதிகாரிகளை வரவழைத்து ரூட் போட்டு சொல்லிக்கொடுத்தாராம் ஓர் உயர் அதிகாரி. ஸ்டாஃப் மீட்டிங் என்கிற பெயரில் நடந்ததாம் அந்தக் கூட்டம்.

நலிந்தோர் நலநிதி என்கிற பெயரில் இந்த வசூல் வேட்டை நடந்ததாம். இங்கேயும் அமைச்சர் பெயரைத்தான் முன்மொழிந்தார்களாம். 'தமிழகம் முழுக்க இருக்கும் விவசாய அதிகாரிகளுக்கு ஒரு ரேட், டெபுடி டைரக்டருக்கு இன்னொரு ரேட்... என்று வசூல் வேட்டை நடந்ததாகச் சொல்கிறார்கள். கொடுக்க மறுத்தவர்களுக்கு டிரான்ஸ்ஃபர் மிரட்டல் வந்தது. 'உன்னால முடிஞ்சா மாத்திக்க.. பணம் தரமுடியாது’ என்று ஒரு சில அதிகாரிகள் முரண்டுபிடித்தார்கள். வசூல் அதிகாரி தனது டார்க்கெட்டை முடித்துவிட்டாலும் அந்த குறிப்பிட்டவர்களை பிளாக் லிஸ்டில் வைத்திருக்கிறார்.

ஸ்ரீரங்கம் தேர்தலுக்கு முன்பு, தமிழகம் முழுவதும் உள்ள அதிகாரிகள்  சென்னை வீட்டுக்கு வரவழைக்கப்பட்டார்கள். இரவு 10 மணிக்கு ஆரம்பித்து விடியற்காலை வரை ஆலோசனை என்கிற பெயரில் கப்பம் கட்டும் நிகழ்ச்சி நடந்ததாம். எந்த டீலிங் என்றாலும் வி.வி.ஐ.பியே நேரடியாக பேரம் பேசுவார்’ என்று அதிர்ச்சியுடன் விவரிக்கிறார்கள் துறை அதிகாரிகள். சென்னையிலும் கோவையிலும் இரண்டு முக்கியப் பதவிகளுக்கு அதிகாரிகளை நியமிக்காமல், அக்ரி கிருஷ்ணமூர்த்தி தனக்கு வேண்டப்பட்ட இருவரிடம் அந்தப் பொறுப்பைவிட்டு கவனிக்கச் சொல்லியிருந்தாராம். அவர்கள்தான் அக்ரியின் வலது, இடதுகரமாக செயல்பட்டு வந்ததாக விவசாயத் துறையினர் சொல்கிறார்கள்.'

''போலீஸ் விசாரணை எப்படி போகிறது என்று பார்ப்போம்!'

''அக்ரி கிருஷ்ணமூர்த்தியை அதிரடியாகத் தூக்கிய அடுத்த நாளிலேயே இந்து சமய அறநிலையத் துறை கமிஷனர் தனபால் விரட்டப்பட்டுவிட்டார்.

அ.தி.மு.க ஆட்சியில் அதிகாரிகள் மட்டத்தில் முக்கியமான அதிகார மையமாக இருந்த தனபால் விரட்டப்பட்டது கோட்டையை ஆட வைத்துள்ளது. ஜெயலலிதாவை அப்பாயின்மென்ட் வாங்கி பார்ப்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால், அடிக்கடி ஜெயலலிதாவைப் போய் பார்க்கும் அளவுக்குச் செல்வாக்கு படைத்தவராக இருந்த தனபாலின் பதவிப் பறிப்புதான் கோட்டையின் ஹாட் டாபிக்.!'

''இந்து சமய அறநிலையைத் துறைக்கு இந்த ஆட்சியில் முதலமைச்சர் அலுவலகத்துக்கு இணையான முக்கியத்துவம் உண்டே?'

மிஸ்டர் கழுகு: துரத்தப்பட்ட கோயில் தனபால்!

''இந்துசமய அறநிலையத் துறையின் சார்பில் 1006 ஜோடிகளுக்கு 2012-ல் இலவச திருமணம் நடைபெற்றது. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாதான் இந்தத் திருமணத்தை நடத்தி வைத்தார். ஏற்கெனவே திருமணமான ஜோடிகளுக்கு திருமணம் நடத்தப்பட்டது என சர்ச்சை கிளம்பவே... அப்போது அறநிலையத் துறை கமிஷனராக இருந்தவர் மாற்றப்பட்டார். அறநிலையத் துறை கூடுதல் கமிஷனராக இருந்த தனபால், இந்தத் துறையின் கமிஷனராக அமர்த்தப்பட்டார். இந்து சமய அறநிலையத் துறை வரலாற்றிலேயே இந்தப் பதவிக்கு முதல்முறையாக ஐ.ஏ.எஸ். அல்லாத ஒருவர்  நியமிக்கப்பட்டது பலரையும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. கொஞ்ச காலத்திலேயே நியமன ஐ.ஏ.எஸ் அதிகாரி என்கிற அந்தஸ்து தனபாலுக்கு வழங்கப்பட்டது. அதோடு நின்றுவிடவில்லை. 2013-ம் ஆண்டு தனபால் ஓய்வுபெற்ற நிலையில் மூன்று ஆண்டு பணி நீட்டிப்பும் வழங்கப்பட்டது. பணி நீட்டிப்பில் இருந்தவருக்குதான் இப்போது ஆப்பு!'

''ஏனாம்?'

''ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆவதற்காகக் கோயில் கோயிலாக அமைச்சர்கள் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். கோயில்களில் தொடர்ந்து பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்படி அமைச்சர்கள் கோயில்களில் யாகம் நடத்துவதற்கும் பூஜைகள் செய்வதற்கும் ஒப்புதல் தர வேண்டிய பொறுப்பு தனபால் வசம் இருக்கும் அறநிலையத் துறைதான்.  

மதுரை தமுக்கம் மைதானத்தில் ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆவதற்காக யாகம் ஒன்று சில நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்டது. அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உட்பட முக்கிய அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதும் 122 கோயில்களில் சிறப்பு யாகங்கள் நடந்தன. இதில் ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு மாதிரியான ஏற்பாடுகளைச் செய்து சொதப்பிவிட்டதாகச் சொல்கிறார்கள். திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 100 கோடி சொத்துகளை சிலர் அபகரித்துவிட்டதாக கோயிலின் ஒரு தரப்பினர் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று ஜெயலலிதாவிடம் கோரிக்கை விடுத்துவந்தனர். அதனைப் பற்றியும் தனபால் அக்கறை செலுத்தவில்லையாம்.'

''சொல்லும்!'

''மிக முக்கியமாகச் சொல்லப்படுவது இதுதான்.... திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் மீது ஜெயலலிதாவுக்கு தனி பக்தி உண்டு. முக்கிய விஷேச நாட்களில் ஜெயலலிதா இங்கு வந்து சாமி தரிசனம் செய்வார். சசிகலா, இளவரசி ஆகியோர் வாரம் தவறாமல் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். சமீபத்தில் நடந்த சொர்க்க வாசல் திறப்புக்குக்கூட சசிகலா வந்து மனமுருக வேண்டிச் சென்றார். புதன்கிழமைதோறும் இளவரசி வந்து செல்கிறார். அந்த அளவுக்கு அந்தக் கோயிலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். இந்த கோயில் மூலஸ்தானம் இப்போது, குடமுழுக்கு விழாவுக்காக மூடப்பட்டுள்ளது. இந்தக் கோயிலுக்கு

2005-ம் ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் குடமுழுக்கு நடத்தப்படுவது வாடிக்கை. அதன்படி பார்த்தால் 2017-ம் ஆண்டுதான் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே குடமுழுக்குக்கு ஏற்பாடுகள் ஏன் நடக்க வேண்டும்? பெங்களூர் வழக்கு விசாரணை சமயத்தில் கோயில் மூலஸ்தானம் மூடி இருப்பது அபசகுணம் என்று நினைக்க மாட்டார்களா?'

''மாதம் இருமுறை மேலிடத்தவர்களை சந்திக்கும் தனபால், அவர்களிடம் சொல்லி அனுமதி வாங்கி இருப்பாரே?'

''அதுதான் இல்லை. மேலிடத்தில் தனக்கு இருக்கும் செல்வாக்கை வைத்து யார் இதை​யெல்லாம் கேட்க முடியும் என்ற தைரியத்தில் இப்படிச் செய்துவிட்டாராம் தனபால். 2016-ம் ஆண்டு இவர் ஓய்வு பெற்றுவிடுவார். ஆனால் கும்பாபிஷேகம் 2017-ல் தானே நடக்கும்? அதனால் அவசரப்பட்டுவிட்டார். மேலும், பார்த்தசாரதி கோயிலில் இருக்கும் ஜோதிமயமான ஒருவரும் இதில் ஆர்வமாக இருந்துள்ளார். இவை அனைத்தும் சேர்ந்து தனபாலை வீட்டுக்கு அனுப்பிவிட்டது. இவர் மீது கார்டனுக்கு விவகாரமான வில்லங்க புகார்களும் சமீப காலமாக வரத் தொடங்கி இருந்தன. ஒரு கோயில் கும்பாபிஷேகம் மற்றும் தங்கக் கூரை வேய்தல் போன்றவற்றில் சந்தேக ரேகை படிந்துள்ளதாம். அதுபற்றி விசாரணை செய்யவும் உத்தரவு போட்டுள்ளார்களாம்.'

''அக்ரி கிருஷ்ணமூர்த்தி பார்ட் ஒன் என்றால் தனபால் பார்ட் டூ வா?'

''இந்து அறநிலையத் துறையின் கீழ் இருக்கும் முக்கியமான 15 பெரியகோயில்களுக்கு மக்கள் தொடர்பு அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்று மக்கள் செய்தி தொடர்புத் துறையில் இருந்து ஃபைல் மூவ் பண்ணினார்களாம். ஏற்கெனவே, செய்தி மக்கள் தொடர்புத் துறையில் இருக்கும் 15 பி.ஆர்.ஓக்களை இந்து அறநிலையத் துறைக்கு மாற்றிவிட்டு, புதியதாக 15 ஏ.பி.ஆர்.ஓக்களை எடுக்கத் திட்டம் தயாராக இருக்கிறதாம். செய்தி மக்கள் தொடர்புத் துறையின் இந்த மூவ்களுக்கு தனபால் முட்டுக்கட்டை போட்டு வந்தாராம். இவை அனைத்தும் சேர்ந்துதான் அவரைக் காலி செய்துவிட்டதாம். இப்போது இந்தத் துறைக்கு கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள வீரசண்முகமணி, முன்பு ஜெயலலிதாவின் செயலாளராக இருந்தவர். 'தான் பதவி வகித்த காலத்தில் பலபேரை தனபால் பழிவாங்கிப் பதவியைப் பறித்தார். பதவி பறிபோன அவர்கள் எல்லோரும் பட்டாசு போட்டு கொண்டாடுகிறார்கள்’ என்பது அறநிலையத் துறை தகவல்.'

''அப்படியா?''

''ஆனால் அவரோ, 'டி.என்.பி.எஸ்.சி சேர்மன் போஸ்ட் காலியாக இருக்கிறது. அந்தப் பதவிக்காகத்​தான் என்னை இங்கிருந்து விடுவித்திருக்கிறார்கள்’ என்று மீசையில் மண் ஒட்டாத கதையாக பந்தாவாகச் சொல்கிறாராம்'' சொல்லிவிட்டுப் பறந்தார் கழுகார்.

வகேலா மாறுகிறாரா?

மிஸ்டர் கழுகு: துரத்தப்பட்ட கோயில் தனபால்!

கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த மே 2013-ல் இருந்து டி.ஹெச்.வகேலா இருந்து வருகிறார். 18 வருட காலம் நடைபெற்று வந்த ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்குக்கு முடிவுரையை எழுதியவர். இந்த வழக்கை விசாரித்து வந்த பாலகிருஷ்ணா ஓய்வு பெற்ற பிறகு  புதிய நீதிபதியாக 31.10.2013-ல் ஜான் மைக்கில் டி.குன்ஹாவை நியமித்தவர் இவர் தான். மேல் முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகளின் சீனியாரிட்டியில் நான்காவதாக இருந்த குமாரசாமியை நியமித்தவர். ஜனவரி 4-ம் தேதியில் இருந்து இந்த மனுவை துரிதமாக விசாரித்து வருகிறார் குமாரசாமி.

அரசு வழக்கறிஞராக இருந்து பவானி சிங் இந்த வழக்கில் வாதாடக் கூடாது என்று தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன் தாக்கல் செய்த மனு இவர் முன்னிலையில் தான் விசாரணைக்கு வந்தது. நீங்கள் விசாரிக்கக் கூடாது என்று பவானி சிங் வாதாடியதால் வேறு பெஞ்சுக்கு வகேலா அந்த மனுவை மாற்றினார். பவானி சிங்கை நீட்டிக்கலாம் என்று அந்த பெஞ்ச் தீர்ப்பளித்தது. இந்த சூழ்நிலையில் ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பு வரப்போகிறது.

கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வகேலா ஒடிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்படுவதற்கான ஆர்டர் வந்ததாகவும், தான் ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெறுவதால் இந்த நீதிமன்றத்திலேயே பணியாற்றி ஓய்வுபெற விரும்புவதாக குடியரசு தலைவருக்கு வகேலா கடிதம் அனுப்பியதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.  

எம்.எல்.ஏவு-க்கே இவ்வளவு அவமானமா?

சோழவந்தான் அ.தி.மு.க. எம்.எல்.ஏ கருப்பையாவை, ஆளும் கட்சிக்காரர்களே தொடர்ந்து சாதியைச் சொல்லி அவமானப்படுத்துவது அந்த வட்டாரத்தில் கடும் கோபத்தை கிளப்பி உள்ளது.

மிஸ்டர் கழுகு: துரத்தப்பட்ட கோயில் தனபால்!

மதுரையில் அ.தி.மு.க இளம்பெண், இளைஞர் பாசறை தொடங்கி ஏழாம் ஆண்டு விழா நடந்தது. அப்போது நடந்த ஊர்வலத்தில் எம்.எல்.ஏக்கள் திருமங்கலம் முத்துராமலிங்கம், சாமி, மூக்கையா, முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, எம்.பியான கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நடந்து வந்தார்கள். கடுமையான வெயில் என்பதால் எம்.எல்.ஏ. சாமி மயங்கி விழுந்துவிட்டார். அப்போது, அருகில் இருந்த கருப்பையா, சாமிக்கு முதலுதவி செய்திருக்கிறார். சாமியின் உள்ளங்காலில் கையை வைத்து அழுத்தி தேய்த்து விட்டுள்ளார். இதனைப் பார்த்த முக்கிய பிரமுகர் ஒருவர், 'நீ எதுக்காக அவரை தொடுற? நீ தொடலாமா?’ என்று கேட்டுள்ளார். கையை ஓங்கியதாகவும் சொல்கிறார்கள்.

இதனால் ஆத்திரம் அடைந்த கருப்பையா, அருகில் இருந்த காவல் நிலையத்துக்குச் சென்று புகார் சொல்லப் போனதாகவும் ஆனால் மேலிடத் தலையீட்டால் திரும்பி வந்துவிட்டதாகவும் சொல்கிறார்கள். ஏற்கெனவே வாடிப்பட்டியைச் சேர்ந்த ஒருவர் கருப்பையாவை சாதியைச் சொல்லி திட்டியதாக தகவல் சொல்கிறார்கள். கான்ட்ராக்ட் பணி தொடர்பான பிரச்னையிலும் இப்படி அவமானப்படுத்தப்பட்டதாகத் தகவல் உண்டு. ''இப்படி நடந்து கொண்ட ஆள் எதற்கெடுத்தாலும் முதலமைச்சர் பன்னீர் செல்வம் பெயரைச் சொல்லியே தப்பித்து வருகிறார். அதனால் அவர் மீது யாரும் புகார் சொல்லப் பயப்படுகிறார்கள்' என்று சொல்கிறார்கள் ஆளும் கட்சியில்!

''காலம் கனிந்து வரும்!'

தி.மு.க மகளிர் அணி நடத்திய மகளிர் தின விழாவுக்காக கோவையில் இரு தினங்கள் முகாமிட்ட மு.க.ஸ்டாலின், அங்கேயே தி.மு.க இளைஞர் அணி மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டத்தையும் நடத்திவிட்டார். இந்தக் கூட்டத்தில் மகேஷ் பொய்யாமொழி பேசும்போது, ''நாலாவது தலைமுறையா நானும் ஸ்டாலின் குடும்பத்தோடு உறவுல இருக்குறது சந்தோஷமா இருக்கிறது. தளபதியை முதல்வர் வேட்பாளரா சீக்கிரம் அறிவிக்க வேண்டும்' என்று பேசியிருக்கிறார். அதன் பிறகு பேசியவர்களும் இதனையே வலியுறுத்தி உள்ளார்கள். இறுதியில் பேசிய ஸ்டாலின், ''இங்கே பேசிய அனைவரும் என்னை முதல்வர் வேட்பாளராக  அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தீர்கள். காலம் கனிந்து வரும். நிச்சயம் நாம் நினைப்பது எல்லாம் நடக்கும். தலைவர் என்னை 'வருங்கால தமிழகமே’ என சொல்லிவிட்டார். எனவே அவர் அறிவிக்க வேண்டிய நேரத்தில் நிச்சயம் அறிவிப்பார்,' என்று சொல்லி அனைவரையும் உற்சாகப்படுத்தி இருக்கிறார்!