Published:Updated:

கோவையில் மீண்டும் ரிலீஸ் ஆன ‘பாசமலர்’!

கோவையில் மீண்டும் ரிலீஸ் ஆன ‘பாசமலர்’!

மிகுந்த ஆச்சர்யங்களுக்கிடையே கோவை​யில் நடந்து முடிந்துள்ளது தி.மு.க மகளிர் அணியின் மகளிர் தின விழா.  தி.மு.கவில் இளைஞர் அணிக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு வந்த முக்கியத்துவம் இப்போது மகளிர் அணிக்கு வழங்கப்பட்டது, கனிமொழி தலைமையில் நடந்த நிகழ்ச்சியை ஸ்டாலின் முன்னின்று நடத்தியது என விழாவில் ஏகப்பட்ட ஆச்சர்யங்கள்.

மகளிர் தின விழா என்பதைத் தாண்டி ஸ்டாலின்  கனிமொழி சேர்ந்த மகிழ்ச்சி விழாவா​கவே இது பெரிதும் பார்க்கப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் நடந்த பொதுக்​குழுவில் கட்சியின் மகளிர் அணிச் செய​லாளராகத் தேர்வு செய்யப்பட்டார் கனி​மொழி. அதன் பின்னர் உலக மகளிர் தினத்தை கோவையில் இரண்டு தினங்கள் விமரிசையாகக் கொண்டாட உள்ளதாக அறிவித்தபோது, தி.மு.க-வினர் குழம்பித்தான் போனார்கள். கனிமொழி பிறந்தநாளுக்கே ஸ்டாலினின் ஆதரவாளர்கள் வாழ்த்துச் சொல்ல தயங்கும் நிலையில் விழாவுக்கு எப்படி உதவுவார்கள் என கேள்வி எழுந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கோவையில் மீண்டும் ரிலீஸ் ஆன ‘பாசமலர்’!

ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில், விழாவுக்கான ஏற்பாடுகளை தி.மு.க இளைஞர் அணி துணைச் செயலாளரும் ஸ்டாலினின் தற்போதைய வலதுகரமுமான மகேஷ் பொய்யாமொழி மேற்பார்வையில் இளைஞர் அணி நிர்வாகிகளே கவனித்துக்கொண்டனர். தனது இடத்திலேயே விழாவை நடத்திக்​கொள்ள ஒப்புதல் வழங்கி, அதற்கான ஏற்பாடுகளையும் செய்தார் பொங்கலூர் பழனிச்சாமி. இதற்கெல்லாம் பின்னணியில் இருந்து விழாவை நடத்திக்காட்டியது மு.க.ஸ்டாலின்.

மார்ச் 7, 8-ம் தேதிகளில் நடந்த இந்த விழாவில் 8-ம் தேதி நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் நிறைவுரை ஆற்றுவது என்பதுதான் திட்டம். ஆனால் மார்ச் 7-ம் தேதியே கோவை வந்த ஸ்டாலின், 7-ம் தேதி தொடக்க நிகழ்ச்சியிலேயே பங்குகொண்டார். அங்கு நடந்த மருத்துவ முகாம், ரத்த தான முகாம், வேலைத் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்களை அவர் பார்வையிட்டார். தொடர்ந்து அன்று மாலை நடந்த கலைநிகழ்ச்சிகளை உடன் இருந்து பார்த்துவிட்டுத்தான் சென்றார். இரண்டாம் நிகழ்ச்சியிலும் ஸ்டாலின் முழுமையாகப் பங்கேற்றார்.

இதுவரை தனக்கென தனி ஆதரவாளர்​களோடு இயங்கி வந்த கனிமொழி, ஸ்டாலினின் தீவிர ஆதரவாளராக மாறிவிட்​டதுதான் இதற்குக் காரணம் என்கின்றனர் தி.மு.கவின் மூத்த நிர்வாகிகள். இதை கனிமொழியும் ஸ்டாலினும் தங்களது பேச்சில் உறுதிப்படுத்தினர். விழா நடந்த இரு தினங்களும் எதைச் செய்தாலும் அதை ஸ்டாலினிடம் கேட்டே செய்தார் கனிமொழி. தமிழக மீனவர் குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்ட இலங்கை பிரதமர் குறித்து, கனிமொழியிடம் செய்தியாளர்கள் கேட்க, ஸ்டாலினிடம் போனில் பேசி அனுமதி பெற்றே, செய்தியாளர்களுக்கு பதில் அளித்தார். அந்த அளவுக்கு ஸ்டாலினின் தீவிர ஆதரவாளராக மாறிவிட்டார் கனிமொழி.

விழாவில் அறிமுக உரை நிகழ்த்திய கனிமொழி, 'கோவையில் இந்த இரு நாட்களாக நடக்கும் இந்த மகளிர் தின விழா நிகழ்ச்சிகள் சீரோடும், சிறப்போடும் நடக்கக் காரணம் அண்ணன் ஸ்டாலின்தான். கிரியா ஊக்கியாகவும் மகளிர் அணியைச் சேர்ந்தவராகத் தன்னை மாற்றிக்கொண்டு, நிகழ்ச்சிக்கு யார் யார் வர வேண்டும், என்ன பதாகைகள் வைக்க வேண்டும் என்பதையெல்லாம் கவனித்து, தானே கட்சியின் மாவட்டச் செயலாளர், இளைஞர் அணிச் செயலாளர் எல்லோரிடமும் பேசி நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்'' என ஸ்டாலினைப் புகழ்ந்தார்.

கோவையில் மீண்டும் ரிலீஸ் ஆன ‘பாசமலர்’!

'இங்கு பல்வேறு தளங்களில் இயங்கும் பெண்ணியவாதிகள் மகளிர் மேம்பாட்டுக்கான சில யோசனைகளை முன்வைக்க உள்ளனர். இதற்கு சமூகத்தை மாற்றக்கூடிய இயக்கத்தின் வழித்தோன்றலாக இருக்கக் கூடிய அண்ணன் ஸ்டாலின் பதில் அளித்து பேசுவார்'' என கனிமொழி அறிவித்தபோது கூட்டம் ஆர்ப்பரித்தது.

இறுதியில் பேசிய ஸ்டாலின், 'தி.மு.க-வின் மகளிர் அணியின் செயலாளராகப் பொதுக்குழுவில் கனிமொழி தேர்வு செய்யப்பட்டார். அன்று மாலை என் இல்லத்தில் வந்து என்னை சந்தித்து வாழ்த்து கேட்க வந்தபோது, நான் வாழ்த்து சொல்லி ஒரு செய்தியைச் சொன்னேன். 'நான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனைத்து மாவட்டங்களுக்கும் ஆய்வுப் பணிக்காக நேரடியாகச் செல்லும்போது நிர்வாகிகளைச் சந்தித்து ஆய்வு நடத்தினேன். அப்போது மகளிர் அணி சகோதரிகள் பேசும்போது நான் மெய்மறந்து போயிருக்கிறேன். மகளிர் அணியில் பேச்சாற்றல், எழுத்தாற்றல் கொண்டவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களை நல்ல வகையில் பயன்படுத்த வேண்டும்’ என்றேன். அதற்கு 'நீங்கள் ஒத்துழைப்பு தந்தால் எனது பணியை சிறப்பாக நிறைவேற்ற காத்திருக்கிறேன்’ என கனிமொழி சொன்னார். நானும் ஒத்துழைப்பதாக உறுதியளித்தேன். அந்த உறுதியை நிறைவேற்றும் வகையில் முதல் நிகழ்ச்சியாக இந்த விழா நடந்து வருகிறது. இது அத்தனைப் பேருக்கும் தெரிய வேண்டும், புரிய வேண்டும் என்பதற்காகத்தான் இதைச் சொல்கிறேன். தி.மு.க-வில் எல்லா அணிகளையும்விட சிறந்த அணியாக தி.மு.க இளைஞர் அணி இருந்து வருகிறது. இதுதான் உண்மையும்கூட. இப்போது அதை மாற்றிக்கொண்டிருக்கிறேன். மகளிர் அணியும் இதில் இடம்பெறும் வாய்ப்பு உருவாகி வருகிறது'' என்று வெளிப்படையாகவே பேசினார் ஸ்டாலின்.

விழாவின் இறுதியில் ஆண்களை மட்டும் எழுந்து நிற்கச் சொன்ன ஸ்டாலின், ''என் மகனையும் மகளையும் எவ்வித பாகுபாடும் இன்றி சரிசமமாய் நடத்துவேன். என் மகள் கல்விச் செல்வத்தைக் குறைவின்றி பெற்று வாழ்வில் மேன்மை பெற வழி வகுப்பேன். என் மனைவியை ஒரு போதும் அடித்துத் துன்புறுத்தாமல் வாழ்வின் உயிராய் மதித்து அன்பு செலுத்துவேன். பெண்களுக்கு எதிரான இழிசெயல்களில் என்றுமே ஈடுபட மாட்டேன். என் இல்லத்தில் நடைபெறும் திருமணங்களில் மாதர் தம்மை இழிவுசெய்யும் வரதட்சனை கொடுமையை ஒரு நாளும் அனுமதிக்க மாட்டேன். இவற்றை என் வாழ்வின் இறுதிவரை கடைப்பிடிப்பேன்... என எனை ஈன்ற தாய் மீதும் என் உயிர் தமிழ் மீதும் ஆணையிட்டுச் சொல்கிறேன்'' என அங்கிருந்த முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளோடு தானும் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

மகளிர் அணிச் செயலாளரான கனிமொழி நடத்திய முதல் விழா என்றபோதும், கனிமொழியை தாண்டி ஸ்டாலினின் பெயர்தான் அனைவராலும் முன்மொழியப்பட்டது. ஸ்டாலின் நடத்திய விழாவாகத்தான் அனைவரும் பார்த்தார்கள்.... கனிமொழி உட்பட.

- ச.ஜெ.ரவி, படங்கள்: தி.விஜய், வி.சதீஷ்குமார், த.ஸ்ரீநிவாசன்