Published:Updated:

"முதலில் தி.மு.க... அப்புறம் அ.தி.மு.க.!”

"முதலில் தி.மு.க... அப்புறம் அ.தி.மு.க.!”

தமிழருவி ‘திராவிட’ வியூகம்!

ன்னொரு கூட்டணியை உருவாக்கும் வேலைகளில் மும்முர​மாகிவிட்டார் தமிழருவி மணியன்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தே.மு.தி.க.,  பி.ஜே.பி., ம.தி.மு.க, பா.ம.க. ஆகிய கட்சிகளைக் கொண்ட புதிய அணியை உருவாக்கி, தமிழகத்தில் மூன்றாவது அணிக்கான அடித்தளத்தை அமைத்தார் காந்திய மக்கள் இயக்கத் தலைவரான தமிழருவி மணியன். இப்போது 2016 சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கியுள்ளார். அதற்கு அச்சாரமாக மதுரையில் த.மா.கா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை ஒரே மேடையில் ஏற்றி தன்னுடைய அடுத்த செயல்திட்டத்தை தொடங்கியுள்ளார்.

காந்திய மக்கள் இயக்கத்தின் மாநில செயற்குழு கடந்த 7-ம் தேதி மதுரை திருப்பரங்குன்றத்தில் நடந்தது. அங்கு மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்தது மட்டுமில்லாமல், ''ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் தன் கட்சியினர் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்று கூறாத தே.மு.தி.க-வும், ம.தி.மு.க-வும் தனக்குத்தானே சகதியைப் பூசிக்கொண்டார்கள்,  எதிர்க் கட்சிகள் இப்படி ஒற்றுமை இல்லாமல் நடந்துகொண்டால், அடுத்த தேர்தலிலும் அ.தி.மு.க-தான் ஆட்சிக்கு வரும்'' என்று கடுமையாகப் பேசியிருந்தார். அதைத் தொடர்ந்து அன்று மாலை 'ரெளத்திரம்’ இதழின் இரண்டாம் ஆண்டுவிழா விக்டோரியா எட்வர்ட் மன்றத்தில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ் மாநிலக் காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனும் கலந்து கொண்டனர்.

"முதலில் தி.மு.க... அப்புறம் அ.தி.மு.க.!”

இந்தக் கூட்டத்தில் பேசிய ஜி.ராமகிருஷ்ணன், ''கம்யூனிஸ்ட்களின் செயல்பாடுகளில் காந்தியின் தாக்கம் அதிகம் இருக்கும். விடுதலைப் போராட்ட காலத்தில் காங்கிரஸ் தலைவர்களும் கம்யூனிஸ்ட் தலைவர்களும் ஒன்றாகவே சிறையில் இருந்தார்கள். கொள்கை ரீதியில் வேறுபட்டிருந்தாலும் நட்பால் இணைந்திருந்தார்கள். அந்த அடிப்படையில் காந்திய மக்கள் இயக்கம் நடத்தும் விழாவில் கலந்துகொள்வது பொருத்தமானது. தமிழ் மாநில காங்கிரஸும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டும் தமிழகத்தில் ஒரே நேர்கோட்டில் செல்லும் ஒற்றுமை கொண்டவை. முன்பு மூப்பனாரோடு சேர்ந்து பல போராட்டங்களை நாங்கள் நடத்தியுள்ளோம். தமிழருவி மணியன் எப்போதும் நெறிசார்ந்த அரசியல் செய்து வருகிறார். அவருடைய கட்சி செயற்குழுவில் போடப்பட்டுள்ள அத்தனை தீர்மானங்களிலும் சி.பி.எம்முக்கு உடன்பாடு உண்டு.

பி.ஜே.பி-யினர் கோட்சேவுக்கு சிலை வைக்க வேண்டும் என்கிறார்கள். கான்கள் நடித்த படங்களைப் பார்க்கக் கூடாது என்கிறார்கள். மகாராஷ்டிராவில் மாட்டிறைச்சியை வைத்திருந்தாலே ஐந்து வருடங்கள் சிறை என்கிறார்கள், இப்படி மக்களிடம் பிளவை உண்டாக்கும் வகையில் பி.ஜே.பி அரசு செயல்படுகிறது. தந்தை பெரியாருக்குப் பின் திராவிடக் கட்சிகள் தீண்டாமை ஒழிப்பை முற்றிலும் கைவிட்டுவிட்டன. நாங்கள் அதற்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் லோக் ஆயுக்தாவைக் கொண்டு வரவேண்டும். மாற்று அரசியல் சக்தியாக கம்யூனிஸ்ட்கள், த.மா.கா, காந்திய மக்கள் இயக்கம் இணைந்து செயல்படவேண்டும்'' என்றார்.

ஜி.கே.வாசன், ''தமிழருவி மணியன் நடத்தும் விழாவில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி ஒருபக்கம் என்றால், தோழர் ஜி.ஆரோடு கலந்து கொள்வதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. தமிழருவி மணியன் இந்த சமூகத்துக்காகக் கடுமையாக உழைத்தும், காமராஜரின் வாயால் தமிழருவி என்று பாராட்டப்பட்டும், அவர் எட்ட வேண்டிய இடத்தை எட்டவில்லை. அமர வேண்டிய இடத்தில் அமரவில்லை. காரணம், அவர் லட்சிய நோக்கோடு செல்கிறவர். என் தந்தைக்கும் அன்பானவராக இருந்தார், எனக்கும் அன்பானவராக இருக்கிறார். அவர் நிறைவேற்றியிருக்கும் தீர்மானங்கள் அனைத்தும் நியாயமானவை. நல்லவை'' என்று, தன் அரசியல் நிலைப்பாடு பற்றி நேரடியாகப் பேசாமல் முடித்துக்கொண்டார்.

தமிழருவி மணியன் பேசும்போது, ''தி.மு.க., அ.தி.மு.கவு-க்கு மாற்றாக ஒரு அரசியல் அணியை உருவாக்க வேண்டுமென்ற நோக்கத்துக்காகத்தான் நான் இயங்கி வருகிறேன்.  காமராஜர் விருதுநகரில் தோற்கடிக்கப்பட்ட பின்புதான் திராவிட காட்சிகளுக்கு எதிராக செயல்பட வேண்டுமென்ற கோபம் வந்தது. என்னுடைய ஜாதகம் தோற்றவர்களுடன் இருப்பதுதான். காமராசர் தோற்றபின்தான் அவருடன் இருந்தேன்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நான் ஒரு கூட்டணியை உருவாக்கினேன். எதற்காக தி.மு.க., அ.தி.மு.கவை வீழ்த்த மாற்றுஅணி வேண்டு​மென்பதற்காக. முதலில் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம்தான் ஓடினேன். அவர்கள் அப்போது ஒத்துவரவில்லை. அதன்பின்தான் பி.ஜே.பி தலைமையில் உருவாக்கினேன்.

அப்போது நான் அமைத்த கூட்டணியால் 19 சதவிகித வாக்குகள் கிடைத்தன. அது மோடிக்கு விழுந்த வாக்குகள் அல்ல.

தி.மு.கஅ.தி.மு.கவுக்கு எதிரான வாக்குகள். ஒரே நேரத்தில் தி.மு.க., அ.தி.மு.க இரண்டையும் அழிக்க நினைக்கக் கூடாது. முதலில் தி.மு.கவை அப்புறப்படுத்த வேண்டும். அடுத்து அ.தி.மு.கவுக்கு எதிராக நாம் போராடத் தேவையில்லை. ஜெயலலிதாவே பள்ளம் வெட்டி அவரே விழுந்து கொள்வார். தமிழகத்தில் காமராஜர் விட்டுச் சென்ற இடம் காலியாக உள்ளது. அந்த இடத்தை ஜி.கே.வாசன் நிரப்பவேண்டும்'' என்று பேசி முடித்தார்.

அடுத்த பஞ்சாயத்து ஆரம்பம்!

செ.சல்மான், படம்: பா.காளிமுத்து