Published:Updated:

டெங்கு பரவலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் புதுவிளக்கம்!

டெங்கு பரவலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் புதுவிளக்கம்!
டெங்கு பரவலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் புதுவிளக்கம்!

பாரத ரத்னா எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் நிலவும் சீதோஷ்ண நிலை காரணமாக டெங்கு பரவுவதாகக் கூறினார்.

இவ்விழாவில் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், ''ஒளவை பூமியில் எம்.ஜி.ஆருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுதுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கு இருப்பவர்கள் அம்மாவால் பட்டை தீட்டப்பட்ட பொன் நகைகள். இதில் இருந்து சில சேதாரங்கள் வெளியேறியது பற்றி கவலைப்பட வேண்டாம்'' என்றார்.

நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, ''தர்மபுரி ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் இருக்கும்போது இங்கிருக்கும் கிராமங்களுக்கு பஸ் வசதி இல்லை. சேலத்தில் இருக்கும் பஸ் உரிமையாளர்கள்தான் தர்மபுரி டு கிருஷ்ணகிரிக்கு ஒன்ணு ரெண்டு பஸ்களை விட்டுக்கொண்டிருந்தார்கள். எம்.ஜி.ஆரிடம் நான் சொன்னபிறகு தர்மபுரி கிராமங்களுக்கு பஸ் வசதி செய்துகொடுத்தார். எம்.ஜி.ஆர்.,ஒரு வள்ளல்'' என்றார்.

அடுத்துப் பேசிய சபாநாயகர் தனபால், ''எம்.ஜி.ஆர்., சிறந்த பண்பாளர் மட்டுமல்ல. அவர் நன்றி உணர்வுமிக்கவர். எம்.ஜி.ஆர்., தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல்லில் சூட்டிங்-காக பலமுறை வந்து தங்கி இருக்கிறார். எம்.ஜி.ஆர்., ஆற்றில் குதிக்கும் காட்சிகளுக்கு சென்னியப்பன் என்ற படகோட்டிதான் டூப் போடுவார். எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனதும் தனக்காக டூப் போட்ட சென்னியப்பனை அழைத்து தமிழக சுற்றுலாத் துறையின் கீழ் செயல்படும் படகுத் துறைக்கு அவரை பொறுப்பாளராக நியமித்து தன் நன்றிக் கடனைத் தீர்த்தார்'' என்றார்.

துணை முதல்வர் பன்னீர்செல்வம், ''புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., நினைத்ததையெல்லாம் நிறைவேற்றியவர் அம்மா. அம்மா வழியில் தற்போது எடப்பாடி பழனிசாமியின் விசுவாசிகள் நல்லாட்சி நடத்தி வருகிறார்கள். அம்மா மறைந்த பிறகு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக சிலர் சொல்லுகிறார்கள். வெற்றிடமும் இல்லை. வெற்றிடம் ஆகப் போவதும் இல்லை. இது வெற்றியின் இடம். மாட்டுச சந்தையில் கைகள் மீது துணி போட்டுப் பேசும் மாட்டு தரகர்களைப் போல தற்போது தமிழக அரசியலில் மறைமுகமாக சிலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி விலை போகக் கூடியவர்களை மக்கள் அரசியலை விட்டே வெளியேற்றுவார்கள்.

ஓரிரு நாள்கள் இரட்டை இலைச் சின்னம் நமக்குக் கிடைத்துவிடும். எம்.ஜி.ஆர்., அம்மாவின் ஆன்மா அதைப் பெற்றுத் தரும். அந்த இரட்டை இலைக்காக எம்.ஜி.ஆரும், அம்மாவும் எவ்வளவு உழைத்திருப்பார்கள். கூரையேறி கோழி பிடிக்கத் தெரியாதவன். வானம் ஏறி வைகுண்டத்தை பிடிப்பதைப் போலவும், உடுமலைபேட்டையில் உடும்புப் பிடிக்கத் தெரியாதவன். உத்தரப்பிரதேசத்துக்குச் சென்று ஒட்டகத்தைப் பிடித்தக் கதை போல வஞ்சகம் செய்தார்கள். அவர்களுக்கு மக்கள் துணை போக மாட்டார்கள். இந்த அரசை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள்'' என்றார்.

இறுதியாக பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ''எம்.ஜி.ஆர்., சொன்ன தாரக மந்திரமான ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம். என்ற வழியில் இதுவரை 17 மாவட்டங்களுக்குச் சென்று மக்களின் தேவை அறிந்து தீர்த்து வைத்துவருகிறோம். எதிர்க்கட்சித் தலைவர் என்ன திட்டங்கள் செயல்படுத்தி வருகிறார்கள் என்று கேட்கிறார். அம்மா அறிவித்த அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம். எதிர்க்கட்சி இந்த அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இந்த அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று நினைத்தார்கள் முடியவில்லை.

தமிழ்நாட்டில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்துவருகிறோம். அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். 23.5 கோடி ஒதுக்கப்பட்டு புதியதாக ரத்த அணுக்களைக் கண்டுபிடிக்கும் 837 கருவிகள் வாங்கப்பட்டிருக்கின்றன. அந்தக் கருவி 40 செகன்ட்களில் டெங்கு காய்ச்சல் இருக்கிறதா? இல்லையா? என்று சொல்லிவிடும்.
அதனால் லேசான காய்ச்சல் ஏற்பட்டால் கூட மருத்துவமனைக்குச் சென்று இந்தக் கருவியில் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். டெங்கு ஒழிப்பதற்கு 25,000 துப்புரவு பணியாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள். இன்னும் 15,000 பேர் நியமிக்க இருக்கிறோம். மக்கள் அதிகமாக கூடும் ரயில்வே நிலையம், பேருந்து நிலையம், கல்லூரிகள், சுற்றுலா இடங்களில் வேப்பங் கசாயம் வழங்கப்படுகிறது.

நல்ல தண்ணீரில்தான் டெங்கு கொசு உருவாகிறது. அதனால் பொதுமக்கள் தண்ணீரை மூடி வையுங்கள்.10,525 செவிலியர்கள் பணியில் இருக்கிறார்கள் கூடுதலாக 2000 பேர் நியமிக்க இருக்கிறோம். 1190 மருத்துவர்களும், 650 சிறப்பு மருத்துவர்களும் இருக்கிறார்கள். இன்னும் 10 நாள்களுக்குள் 744 சிறப்பு மருத்துவர்களை நியமிக்க இருக்கிறோம். டெங்குவைப் பற்றி சிலர் தவறான பரப்புரை செய்து வருகிறார்கள். அதை நம்பாதீர்கள்” என்றார்.