Published:Updated:

டெங்கு கொசு ஒழிக்க உள்ளாட்சித்தேர்தல் அவசியம்..! அணிவகுக்கும் ஆதாரங்கள்

டெங்கு கொசு ஒழிக்க உள்ளாட்சித்தேர்தல் அவசியம்..! அணிவகுக்கும் ஆதாரங்கள்
டெங்கு கொசு ஒழிக்க உள்ளாட்சித்தேர்தல் அவசியம்..! அணிவகுக்கும் ஆதாரங்கள்


                                       

ள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய நேரத்தில் தேர்தல் நடந்திருந்தால் உள்ளாட்சி சுகாதாரப் பணியாளர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் கொடுத்திருக்க முடியும். சுகாதாரப் பணிகள் முடங்கியிருக்காது.  'டெங்கு' உள்ளிட்ட நோய்த் தொற்றுகள்  பரவியிருக்காது... என்ற குரல்கள் கிராமசபைக் கூட்டங்களில் பரவலாகக் கேட்கிறது. தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மருத்துவர் ராமதாஸ், வைகோ தொடங்கி பல கட்சிகளின் தலைவர்கள், இதுகுறித்து தொடர் குரல் கொடுத்து வருகின்றனர். 'மர்மக் காய்ச்சல், விஷக்காய்ச்சல், வைரல் பீவர்' என்ற பெயர்களை வைத்துதான், 'டெங்கு'  வை வலை போட்டு ஆட்சியாளர்கள் மறைத்துக் கொண்டிருந்தனர். மனித உயிர்கள் ஆங்காங்கே கொத்துக் கொத்தாய் தலை சாய்க்கத் தொடங்கிய பின்னர்தான், 'டெங்கு' பரவுகிறது என்பதையே ஒப்புக் கொள்ள ஆரம்பித்தனர். இன்று ஒரேநாளில் மட்டும் டெங்குக் காய்ச்சல் குணமாகாமல் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இரட்டை இலை கிடைத்தால் தேர்தலா ?
 கிராமங்கள், தங்களுக்கான அதிகாரத்தைக் கிராமசபை நிர்வாகத்தின் மூலமே, இதுவரை நிலை நிறுத்திக்கொண்டிருந்தன. இப்போது கிராம சபையை நிர்வாகம் செய்ய, மக்கள் பிரதிநிதிகள் இல்லை. மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டே முடிந்து விட்டது. அக்டோபர், 2016- ன் தொடக்கத்திலேயே  உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை, மாநிலத் தேர்தல் ஆணையம் நடத்தி, கிராமசபை நிர்வாகங்களுக்கு உயிர் கொடுத்திருக்க வேண்டும். சின்னத்தையே இழந்து நிற்கிற கட்சி ஆளுங்கட்சியாக இருக்கிற காரணத்தால், 'சின்னம் கைக்கு வரும் வரையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி தள்ளிப் போவதை தடுக்க முடியாது என்று இதற்கான காரணங்கள் என்கிற கருத்து பல மட்டங்களில் கேட்கிறது. 

சீர்குலைந்த கட்டமைப்பு வசதிகள்
 ஓர் இரவு, ஒருபகல் மட்டும் விடாமல் மழை பெய்தால் சென்னையில் படகுசவாரிக்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரலாம் என்பதற்கு சாட்சியாக புறநகர் சென்னை கடந்த 2015-நவம்பர் காட்சியளித்தது. நிலத்தடி நீர்சேமிப்புக் குறித்த திட்டங்களோ, சாலை பராமரிப்பு போன்ற நல்ல விஷயங்களோ அரசிடம் இல்லை என்பதற்கு  இது மற்றுமொரு சாட்சி. அரசாங்கம் கொண்டு வந்த மழைநீர்க் கால்வாய் திட்டமும் அரசாங்கத்தின் கவனத்தில் இல்லாததால் அதுவும் மக்களுக்குப் பலன் தரவில்லை. இந்த இடத்தில்தான் உள்ளாட்சி நிர்வாகத்தை நிலை நிறுத்த மக்கள் பிரதிநிதிகளின் தேவையிருக்கிறது.

ஐகோர்ட், ஆட்சியாளர்கள், தேர்தல் ஆணையம் !
 தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான வழக்கை, கடந்த செப்டம்பர் 4-ம் தேதி சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியின் முதன்மை அமர்வு விசாரித்தது. அப்போது, 'உள்ளாட்சித் தேர்தலை, நவம்பர் 17-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். அதற்கான அறிவிப்பை, செப்டம்பர் 18-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும்' என்று, தேர்தல் கமிஷனுக்கு கோர்ட் உத்தரவும் போட்டது. தேர்தல் கமிஷனோ எதைப்பற்றியும் கவலைப்படாமல், அதேநாளில் (செப்டம்பர், 18-ம் தேதி) கோர்ட்டில் ஆஜராகி, '1996 -ம் ஆண்டில் பிரிக்கப்பட்ட வார்டு வரையறைபடிதான்  உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டுமா என்பதில் ஆணையத்துக்குக் குழப்பம் உள்ளது. வார்டு வரையறை தொடர்பாக ஐகோர்ட்டின் விளக்கம் தேவைப்படுகிறது' என்று பதிலளித்தது. இந்த இடத்தில்தான் உள்ளாட்சி அதிகாரப் பகிரல் விவகாரம், அப்படியே  நொண்டியடித்தபடி நின்றது. உள்ளாட்சிகளுக்கான மக்கள் பிரதிநிதிகளோ, உள்ளாட்சிகளுக்கான (தற்காலிக) சிறப்பு அதிகாரிகளோ இல்லாத நிலையில் உள்ளாட்சி என்ற கட்டமைப்பே கேள்விக் குறியாகி இருக்கிறது. கிராமப்புற வளர்ச்சிகள் சூம்பிப்போய்க் கிடக்கிறது.

உள்ளாட்சி உங்களாட்சியா ?
 'இப்படியே போனால் என்னாகும்... அடுத்தது என்ன ?' என்ற கேள்வியுடன் 'உள்ளாட்சி உங்களாட்சி' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நந்தா சிவகுமாரைச் சந்தித்துப் பேசினோம். "கிராமசபை நிர்வாகத்தை  'ஸ்பெஷல் ஆபீசர்' பொறுப்பில் இருக்கிறவர்கள்தான், இப்போதும் கவனித்துக் கொள்கிறார்கள். அதுமட்டுமே போதுமானது அல்ல. ஆண்டுதோறும் ஜனவரி- 26, மே -1, ஆகஸ்ட் -25 மற்றும் அக்டோபர்- 2 ஆகிய தேதிகளில் நாட்டில் மொத்தமுள்ள 12, 524 கிராமங்களில் கிராம சபைக் கூட்டம் நடக்கிறது. கடந்த அக்டோபர் 2-ம் தேதியும் அப்படியொரு கூட்டம் நடந்தது. மகாத்மாவின் பிறந்தநாளான அக்டோபர்- 2-ம் தேதி நடந்த இந்தக் கூட்டத்துக்கு முந்தைய கூட்டங்களை விட அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தோம். அதற்கு வலுவான ஒரு காரணமும் இருந்தது. 

ஆட்சியர்களின் பங்கு என்ன ?
 கிராம சபைக் கூட்டம் நடக்கப் போவதை  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலமாக, வட்டார வளர்ச்சி அலுவலருக்கு ஏழுநாள்களுக்கு முன்னதாக தகவல் அனுப்ப வேண்டும் என்பது அரசாணையிலேயே இருக்கிறது. கூட்டம் நடக்கிற இடம், நேரம் அதில் குறிப்பிட்டு இருக்க வேண்டும். அப்போதுதான் கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்கள்,  தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளமுடியும். எதைப்பற்றி விவாதிக்கப் போகிறோம், என்ன அஜென்டா, நூறுநாள் வேலை, கிராமவளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட பலவிஷயங்கள் அதில் இருக்கும். அந்தக் கூட்டத்தில் வைத்துதான் ஒவ்வொரு மூன்றுமாதத்திற்கான வரவு செலவு கணக்கு, சமூக தணிக்கைக் கணக்கு அனைத்தும் அங்கு வைக்கப்பட்டிருக்கும் பதிவேட்டில் கொண்டுவரப்படும். கிராமசபை உறுப்பினர்கள் இந்தத் தீர்மானத்தை ஏற்றாலும், ஏற்காமல் போனாலும் அது அங்குள்ள பதிவேட்டில் கையெழுத்துடன் ஆவணமாக இருக்கும். பெரும்பாலான மக்கள் ஏற்காத ஒன்றை பதிவேடே சொல்லிவிடும். ஏறக்குறைய, சட்டமன்ற பாராளுமன்ற செயல்பாடு போலவே, இது அமைந்திருக்கும்.

 கிராமசபை தீர்மானமும், கோர்ட் முடிவும்
 குறிப்பிட்ட  திட்டத்துக்கான பயனாளிகள் தேர்வு, நீர்நிலைகள் பராமரிப்பு, மீத்தேன், ஹைட்ரோ கார்பன், டாஸ்மாக் போன்றவைகள்  கிராமத்துக்கு வேண்டுமா, கூடாதா போன்ற பல விஷயங்கள், இந்த  கிராம சபைக் கூட்டத்தில் வைத்துதான்  முடிவெடுக்கப்படும்.  கிராமசபை உறுப்பினர்களின் கையெழுத்துடன் இருக்கும் அந்தப் பதிவேட்டில் என்ன இருக்கிறதோ அதைத்தான் உள்ளாட்சிப் பிரதிநிதிகளோ, அரசு அதிகாரிகளோ சட்டப்படி  நடைமுறைப் படுத்தமுடியும். ஒட்டுமொத்த கிராமசபை உறுப்பினர்களின் எண்ணத்தையும் அந்த பதிவேடு பிரதிபலிக்கும். மக்களுக்கு எதிராக இதில் ஏதாவது கொண்டுவந்தால் மக்கள் அதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடமுடியும். அப்போது அவர்களுக்குத் தேவை அந்தப் பதிவேடு ஒன்றுதான். ஏறக்குறைய ஒவ்வொரு கிராமத்துக்கும் இந்த பதிவேடுதான் சொத்து ஆவணம் என்றுதான் சொல்ல வேண்டும்.  அரசுகள் கொண்டு வந்திருப்பது மக்களுக்கான திட்டமா, இல்லையா என்பதை முடிவு செய்ய கோர்ட்டுக்கு மட்டுமே உரிமை இருக்கிறது.இந்தப் பதிவேடுகளின் ஜெராக்ஸ் 'காப்பி'  மக்களிடம் இருந்தால், தீர்மானத்தில் இல்லாத ஒன்றை அரசுகள் நடைமுறைப் படுத்தும்போது அவர்கள் கோர்ட்டுக்குப் போய்  தங்களுக்கான நியாயத்தை வாதாடிப் பெறமுடியும். அப்படி ஒரு விஷயம் நடந்து விடக் கூடாது என்பதாலோ என்னவோ கிராமசபை உறுப்பினர்கள் நிறைவேற்றிய  தீர்மானப் பதிவேடுகளின் ஜெராக்ஸ் காப்பியை, கொடுப்பதில் மிகுந்த காலம் கடத்துகிறார்கள். பதிவேடுகளில் உள்ள தீர்மானத்தை  உறுப்பினர்களுக்கு தர ஏற்படுத்தும் கால தாமதத்தால், மக்களுக்கு எதிரான செயல்களை நிறைவேற்ற முடியும்.  கிராமசபை உறுப்பினர்கள்  இதை வலிந்து கேட்டால்,  ஆர்.டி.ஐ. மூலமாக கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள் என்றுதான்  பதில் சொல்கிறார்கள்.

கேள்வி கேட்க ஆரம்பித்த மக்கள்
  கிராமசபை உறுப்பினர்களை நாங்கள் நேரில்போய் சந்தித்து அவர்களுக்கான உரிமைகள் குறித்து விளக்கினோம். இதன் தொடர்ச்சியாக கடந்த அக்டோபர் 2-ம் தேதி நடந்த கிராமசபைக் கூட்டங்களில்  'பதிவேடுகளின் ஜெராக்ஸ்'  கேட்டு மக்கள் குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டனர். அவர்கள்  இப்படி குரல்கொடுக்கவும், தங்களின் அடிப்படை உரிமைகளைப் பெறவும்தான் இவ்வளவு நாள் நாங்கள் போராடினோம்.  அதற்காகவே கிராமசபைக் கூட்டங்களின் போது பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு  கடிதமும் கொடுத்தோம். மக்களும் இந்த அக்டோபர் 2-ம்தேதி கூட்டத்திலேயே, சரமாரியாகக் கேள்விகளை கேட்டனர். 

கிராமங்களுக்காகவே உலகவங்கி நிதி
  கிராம மக்களுக்கு எதிரான எந்த முடிவையும் அதிகாரத்தில் இருப்பவர்கள் மேற்கொள்ள இந்த  தீர்மானப் பதிவேடுகளை  கொடுக்காமல் மறைத்துக் கொண்டாலே போதும். மக்களுக்கு எதிரான எந்த திட்டத்தையும்  இதை வைத்து  செயல் படுத்தலாம். உலக வங்கி அளிக்கும் நிதிகள் அனைத்தும் கிராம மேம்பாடுகளைக் காட்டியே பெறப்படுகிறது. ஆனால், கிராமங்கள் மேம்படாமல் போனதின் காரணம் இதுபோன்ற மோசடிகளே. மக்கள் தங்கள் கிராமசபைகளின் தீர்மானப் பதிவேடுகளை  பார்க்காது போனால் அதை அதிகாரத்தில் இருப்பவர்கள்  மோசடியாக பயன்படுத்தலாம், கண்டு பிடிக்கவே முடியாது. உதாரணத்துக்கு,  'நூறுநாள் வேலை திட்டத்துக்கு  உங்களை சேர்த்திருக்கிறோம்' என்று சொல்லி அப்பாவி மக்களிடம் கையெழுத்தை வாங்கிக் கொண்டு அதையே கிராமசபைத் தீர்மானமாகக் காட்டி மக்கள் விரும்பாத பணிகளை கிராமங்களில் புகுத்தலாம். உள்ளாட்சிமன்றப் பிரதிநிதிகள் அதிகாரத்தில் இருக்கும் போது இப்படி நடக்க வாய்ப்பே இல்லை.  டெங்குக் காய்ச்சல் குறித்தும், உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்துவது குறித்தும் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பேசிவருகிறார். 'உள்ளாட்சிமன்றப் பிரதிநிதிகள் இருக்கும் பட்சத்தில் டெங்கு பரவாமல் தடுக்கப் பட்டிருக்கும்' என்ற  அவர் கருத்தில் முழு உண்மை இருக்கிறது.  அக்டோபர் 2-ம் தேதி நடந்த கிராமசபைக் கூட்டத்தில் மக்கள் அதிகளவு குரல் கொடுத்ததும்,  தீர்மானத்தில் அதிகளவு கையெழுத்துப் போட்டதும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தக் கோரிடும் தீர்மானத்தில்தான்.  உலகவங்கி நிதி முதற்கொண்டு நாட்டிற்குக் கடனாகக் கிடைக்கும் நிதிகள் அனைத்தும் கிராமங்களை முன்னிறுத்திதான் கிடைக்கிறது. அந்த நிதியை வைத்துதான் சட்டமன்றமும், பாராளுமன்றமும் பொருளாதாரத்தில் சிரமம் இல்லாமல் பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை  கிராமங்கள்தான் நாட்டின் வளர்ச்சிக்கான நிதி ஆதாரமே. உலக வங்கி உதவிடுவதும் கிராமங்களைப் பார்த்துத்தான்... கோட்டைகளைப் பார்த்து அல்ல" என்று விரிவாகவே விளக்கம் தருகிறார், நந்தாசிவகுமார். மொத்தத்தில், உள்ளாட்சிதான் நாட்டின் மனசாட்சி என்று, மனசாட்சியோடு கூறலாம். இப்போது அந்த மனசாட்சி எங்கிருக்கிறது என்பதுதான் தெரியவில்லை