புதுடெல்லி: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், நிதியமைச்சர் ப. சிதம்பரத்துக்கும் சம்மன் அனுப்பாததைக் கண்டித்து, இன்று நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டுக் குழுக் கூட்டத்தில் இருந்து பா.ஜனதா தலைவர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பி.சி. சாக்கோ தலைமையில் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் குறித்து அனைத்துக் கட்சியினர் பங்கேற்கும் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரித்து வருகிறது.
இதில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர். அந்த வகையில், பிரதமரும், நிதியமைச்சரும் நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப பா.ஜனதா கோரி வந்தது குறிப்பிடத்தக்கது.