Published:Updated:

'அம்மா இல்லாமல் எதுவும் செய்ய முடியாது!’

மாற்றுத்திறனாளிகளை மிரட்டினார்களா?

பிரீமியம் ஸ்டோரி

''அம்மா முதல்வராக இல்லாததால் எங்களால் எந்த ஆணையும் தன்னிச்சையாக அறிவிக்க முடியாது. அவர்கள் உங்களுக்கு இதுவரை நல்லதுதான் செய்திருக்கிறார்கள். அவர்கள் வந்ததும் உங்களுக்கு சரியான நடவடிக்கை எடுக்கிறோம். அம்மா வரும்வரை எங்களால் காத்திருக்க முடியாது என்று நீங்கள் போராடினால் அதற்கு எந்தப் பயனும் இல்லை. போலீஸாரிடம் நீங்கள் வாங்கும் அடி மட்டும்தான் மிஞ்சும்!''  இப்படி  தமிழக அமைச்சர் தங்களை மிரட்டியதாக சொல்லி அதிர்ச்சியைக் கூட்டுகிறார்கள் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள்!

தங்களது பல்வேறு கோரிக்கைகளுக்காக மாற்றுத்திறனாளிகள், சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களைப் போராட்டத்தில் இருந்து வாபஸ்பெற வைக்க தமிழக அரசு காவல் துறையின் உதவியோடு எல்லா சித்து விளையாட்டுகளையும் நடத்திவிட்டது. கடைசியில் பேச்சுவார்த்தைக்கு அவர்கள் அழைக்கப்பட்டபோதுதான்  இப்படி மிரட்டி அனுப்பப்பட்டு உள்ளார்கள்.  

'அம்மா இல்லாமல் எதுவும் செய்ய முடியாது!’

பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள்  சங்கத்தைச் சேர்ந்த ராஜாவிடம் பேசினோம். ''இந்தப் போராட்டத்தை நாங்கள் இன்றோ நேற்றோ  தொடங்கவில்லை. எங்களுக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகள் எதுவும் கிடைக்காததால் தொடர்ந்து பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றோம். கடந்த 2013 செப்டம்பரிலும் இதேபோல போராட்டம் நடத்தினோம். அப்போது எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் கொஞ்ச நஞ்சமல்ல. வன்முறை, கேவலமான வார்த்தைகள், அநாகரிகமான செயல்கள், வக்கிரம் என அனைத்தும் எங்களுக்கு எதிராக அரங்கேறின. அந்தப் போராட்டத்துக்கு இன்றுவரை எந்த பதிலும் இல்லை. போராட்டங்களின்போது இவர்கள் தரும் வாக்குறுதிகள் அப்போதே காற்றில் பறக்கவிடப்படுகின்றன.

மாற்றுத்திறனாளிகளுக்கு பொறியியல், மருத்துவம் போன்ற துறைகளிலும் வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. காரணம் அவர்களால் கண்களால் பார்க்க முடியும். எங்களுக்கு அப்படியில்லை. நாங்கள் கல்வி, கலை போன்ற படிப்புகளைத்தான் படிக்கமுடியும். தனியாரிலும் எங்களுக்கான வேலைவாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. குறைந்தபட்சம் அரசு உதவிபெறும் நிறுவனங்களாவது எங்களுக்குப் பணிகொடுக்க முன்வந்திருந்தால் நாங்கள் இப்படிப் போராட வேண்டிய அவசியம் இல்லை. எங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மூன்று சதவிகித ஒதுக்கீட்டைக் கொடுத்தாலே தற்போதைய சூழலில் உதவியாக இருக்கும்.

நாங்களும் இந்த சமூகத்தில் ஓர் அங்கம்தான். எங்களுக்கும் குடும்பம், பொறுப்பு ஆகிய எல்லாம் உண்டு. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையான போராட்டங்கள் எதையும் செய்யவில்லை. முதலில் எங்கள் சங்கத்தைச் சேர்ந்த 7 ஆண்கள் உண்ணாவிரதம் இருந்தார்கள். அவர்கள் 6 நாட்களைக் கடந்திருந்தபோது அவர்கள் உடல்நிலை மோசமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.அவர்களுக்கு ஆதரவாக 7 பெண்கள் பள்ளிக்கல்வி இயக்குநர் அலுவலகத்தில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினர். நந்தனம், கிண்டி, குரோம்பேட்டை, கே.கே.நகர் மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் என எங்கள் சங்கத்தினர் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தினோம்.

இந்த நிலையில், அரசாங்கத்தில் இருந்து பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். அமைச்சர்கள் வளர்மதியும், வீரமணியும் அதில் கலந்து கொண்டனர். 'அம்மா இல்லாமல் எதுவும் செய்ய முடியாது!’ என்று சொன்னதுடன், எங்களை மிரட்டல் விடுத்து போராட்டத்தை வாபஸ் வாங்க வைத்துவிட்டனர்!'' என்று வேதனையோடு சொன்னார்.

மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தும் கோரிக்கைகள் என்ன? ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்ற பார்வையற்ற மாணவர்களுக்கு உடனடியாகப் பணியாணை வழங்க வேண்டும். முதுகலைப் பட்டதாரி, உதவி பேராசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வையற்றவர்களுக்குப் பணி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பார்வையற்றவர்களுக்கு என தனியே சிறப்புத் தேர்வு நடத்த வேண்டும். பார்வையற்றவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட 500 குரூப்ஏ, பி பணியிடங்கள் அனைத்தும்  உடனடியாக நிரப்பப்படவேண்டும். 9000 குரூப்-சி, டி பணி இடங்கள் நிரப்ப வேண்டும். வேலைக்கு காத்திருக்கும் பார்வையற்றவர்களுக்கு உதவித்தொகை உயர்த்துதல், கல்வி உதவித்தொகை, எழுத்துனர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல காலமாகப் போராடி வருகிறார்கள்.

பார்வை இல்லாதவர்களிடமா வீரத்தைக் காட்டுவது?

மா.அ.மோகன் பிரபாகரன், படங்கள்: ஜெ.வெங்கடராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு