Published:Updated:

காகிதப்புலிகளின் அநாகரிகக் கூவல்கள்!

காகிதப்புலிகளின் அநாகரிகக் கூவல்கள்!

பிரீமியம் ஸ்டோரி

தற்கும் ஒரு எல்லை உண்டு! எல்லை மீறும்போதுதான் தொல்லைகள் உண்டாகின்றன.

தாங்கள் சார்ந்திருக்கும் இயக்கத்தின் தொண்டர்களுக்குக் கட்சிக்குள் நடக்கும் செய்திகளையும் தகவல்களையும் சொல்லவும், எதிர்க் கட்சிகள் செய்யும் தவறுகளை நாகரிகமாகச் சுட்டிக்காட்டுவதும்தான் கட்சிக்காக நடத்தப்படும் பத்திரிகைகளின் பணியாக ஒருகாலத்தில் இருந்தது. ஆனால் இன்று? ஒருவரை மேடையில் திட்டுவதையெல்லாம் மீறி ஏடுகளில் திட்டிக் கொள்வது முகம் சுழிக்கவைக்கிறது.

காகிதப்புலிகளின் அநாகரிகக் கூவல்கள்!

அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளேடு 'நமது எம்.ஜி.ஆர்.’ இந்த நாளிதழில் அண்மைக் காலமாக தி.மு.க தலைவர் கருணாநிதியை 'தாத்தா’ என்றே குறிப்பிட்டு வந்தனர். 'விடியும் வேளை வரப்போகுது... தருமம் தீர்ப்பைத் தரப்போகுது... புடம்போட்டத் தங்கமான நிரபராதி என்பதை நிரூபித்து புரட்சித் தலைவி அம்மா தமிழினத்தை வழிநடத்தும் தன்னிகரில்லா வேளை பிறக்கப்போகுது...’ என்று ஜெயலலிதாவைப் புகழும் கட்டுரையில், அடுத்த வரியே கருணாநிதியை திட்டும் வேலை ஆரம்பமாகிறது.

'கருவின் குற்றம் கருணாநிதி போட்ட கடைசி வழக்கும் பொய் வழக்கே என்பதும் இப்பூவுலகுக்கே புரியப்போகுது. கோல்மால்புரத்துக் கோழை... வீல்சேர் வில்லன், தீயசக்தி, திருட்டு ரயில் கருணாநிதி’ என்று கூசும் வார்த்தைகளை அச்சில் ஏற்றினார்கள்.

'தாத்தா எனக்கொரு டவுட்டு’ என்று தலைப்பில், 'நிலம் கையகப்படுத்துவது பற்றி நீங்க அடிக்கடி பேசாதீங்க... ஏன்னா பின்னாடி கோபாலபுரத்து வீட்டின் பின்னாடி அரசு நிலத்தை நீங்க கையகப்படுத்தியிருக்கீங்க... ஜெகத்ரட்சகன், எ.வ.வேலு, பொன்முடி, துரைமுருகன்னு தங்களது கல்விக் குழுமங்களுக்காக காம்பவுண்டு போட்டு கையகப்படுத்துன அரசு நிலங்கள் ஆயிரமாயிரம் ஏக்கர்கள். இவ்வளவும் இருக்கும்போது ஏதோ தன் சொத்துகளை மக்களுக்காக வாரி வழங்கிய வள்ளல் அழகப்பா செட்டியார் போல நீங்க வாய்நீளம் காட்டி உங்க ஆளுங்களையே காட்டிக் கொடுக்கலாமா... சொல்லுங்கள் தாத்தா... சொல்லுங்கள்...’ என்று போகிறது அந்தப் பெட்டிச் செய்தி.

காகிதப்புலிகளின் அநாகரிகக் கூவல்கள்!

அதற்கு சற்றும் சளைக்காமல், தி.மு.கவின் அதிகாரப்பூர்வ நாளேடான 'முரசொலி’யில் சவுக்கடி என்ற பெயரில் ஒரு பதில் வந்தது. 'நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையில் சாட்டை என்ற புனைப்பெயரில் ஒருவர், தலைவர் கலைஞர் அவர்களை 'தாத்தா’ என்றே விமர்சனம் செய்கிறார். அந்தக் கட்சித் தலைமை இதுவரை அதனைக் கண்டித்ததாகத் தெரியவில்லை. இன்னும் ஒரு வார காலத்துக்குள் அந்த ஏடு இந்தப் போக்கினை மாற்றிக்கொள்ளாவிட்டால், அ.தி.மு.கவின் தலைவியை இனி முரசொலி நாளேட்டில் 'மாமி’ என்றே குறிப்பிட்டு அவருடைய வரலாறு பற்றி விமர்சனம் செய்யப்படும். குட்டி குரைத்தால் தாய் தலையிலேதான் விடியும் என்ற பழமொழியைப்போல சாட்டைகள் செய்கின்ற விஷமத்தனமான விமர்சனங்கள் கட்சியின் தலைமையில் உள்ளவர்கள் தலையிலேதான் விடியும்’ என்று பதில் கொடுத்திருந்தனர்.

சரி... சண்டை முடிந்தது என்று பார்த்தால்? மறுநாள் நமது எம்.ஜி.ஆரில் வந்திருந்தது அந்த விளக்கம். 'ஆரூராரை 'தாத்தா’னு அடைமொழியிடக் கூடாதாம். இதுக்கு ஒருவாரம் கெடுவாம். அதுசரி, காலத்தால் அழியாத காப்பியங்களை ஆவணப்படுத்தி, ஆன்றோர் படைத்த இலக்கியங்களை, காலத்தால் அழியாத காவியங்களாக்கிய

உ.வே.சாவை 'தமிழ் தாத்தா’ என்று தமிழ் மக்கள் அன்போடு அழைக்குபோது, உலகத் தமிழினத்தால் கருணா என்ற அடைமொழிக்கு ஆளாகிவிட்ட எங்கள் தலைவரை எப்படி 'தாத்தா’ என அழைக்கலாம் என்று கருணாநிதியின் நாளிதழ் பொங்குவது நியாயம்தானே?

கட்சித் தலைவருக்கு 93 வயசுதானே ஆகுது. இளைஞர் அணிச் செயலாளர் ஸ்டாலினுக்கு 63 வயசுதான். மாணவர் அணி செயலாளருக்கு அதிகம் இல்லை ஜென்டில்மேன்... 66 வயசு. அப்படியிருக்கும்போது 93 வயதான இளந்தலைவரை எப்படி தாத்தா போடலாம் என்று கொந்தளிப்பதில் உள்ள நியாயத்தை உணர்ந்து இனி 'மஞ்சள் துண்டு மைனரே!’ என்று அழைக்கவும் தயார்தான். கூடவே நாங்கள் 'மாமி’ என எழுதுவோம் என மிரட்டல். நீ அப்படி எழுதினால் தயாளுவுக்கும், ராசாத்திக்கும், கனிமொழிக்கும், துர்க்காவுக்கும், காந்திமதிக்கும் வகை வகையாய் அடைமொழிகள் வரிசைகட்டி வராதா என்ன? அதனால் சவுக்கடி, தேள்கடி, பூரான்கடி, பூச்சாண்டிகளுக்கெல்லாம் அஞ்சாது சாட்டை!’ என்று குறிப்பிட்டிருந்தனர்.

விமர்சனம் விஷமாக மாறிக்கொண்டிருப்பது இரண்டு கட்சிகளுக்கும் புரிந்தால் சரி!

கே.ராஜாதிருவேங்கடம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு