Published:Updated:

மிஸ்டர் கழுகு: தி.மு.க-வை அழைத்த சோனியா!

மிஸ்டர் கழுகு: தி.மு.க-வை அழைத்த சோனியா!

பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு: தி.மு.க-வை அழைத்த சோனியா!

''சகாயத்துக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் கடிதம் வந்து கொண்டே இருக்கிறது!' என்ற பதற்றத் தகவலுடன் பறந்து வந்தார் கழுகார். கம்ப்யூட்டர் பக்கமிருந்து தலையை கழுகார் பக்கம் திருப்பினோம்.

''மறுபடியும் சகாயத்துக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இது அவருக்கு இரண்டாவது கொலை மிரட்டல் கடிதம். ஏற்கெனவே அவருக்கு வந்த கொலை மிரட்டல் கடிதத்துக்கு காவல் துறை சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் கிடக்கிறது அந்த முதல் கடித வழக்கு.''

''என்ன இருக்கிறது கடிதத்தில்?'

''ம்... சொல்கிறேன். '......... கனிமவள வழக்கு நீதிபதி ............. பையா நீ மரியாதையாக என் தலைவி டாக்டர் புரட்சி தலைவி அம்மாவின் ஆட்சிக்கு எதிராக கனிமவள வழக்கில் தீர்ப்பு சொல்லக்கூடாது. அப்படிச் சொன்னால் நீயும் உன் குடும்பத்தினரும் உயிரோடு இருக்க முடியாது. ஜாக்கிரதை! எச்சரிக்கை!  .................. நீயோ பிச்சை...... டெல்லியே எங்கள் கையில். எங்களை ஆட்டவோ அசைக்கவோ முடியாது.இறுதித் தீர்ப்பில் நீ ஒரு வருடம் ஜெயில் மற்றும் 10 லட்சம் அபராதம் மட்டும் அந்த மேலூர் கனிமவள ஊழலுக்கு தீர்ப்பு கொடு. அம்மா அவர்களையும், ஆட்சியைப் பற்றியும் எந்தவித குறையும் தீர்ப்பில் சொல்லக்கூடாது. அப்படிச் சொன்னால் நீ உயிரோடு இருக்க மாட்டாய். வரும் டிசம்பரில் கிறிஸ்துமஸ் கொண்டாட மாட்டாய். எச்சரிக்கை! எச்சரிக்கை!’ என்று முடிகிறது அந்தக் கடிதம். கடிதத்தை எழுதியவர் முகவரியாக 'என்.கஸ்தூரி ரங்க அய்யங்கார், சென்னை 86’ என்று குறிப்பிட்டு கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். கடிதத்தைப் படித்த சகாயம் மதுரை மாவட்ட ஆட்சியருக்கும், கமிஷனருக்கும் முறைப்படி புகார் அனுப்பியிருக்கிறார். பதற்றத்தில் இருக்கிறது மதுரை!'

''கிரானைட் வழக்கை எடுத்தது போலவே, கார்னெட் விவகாரத்திலும் சென்னை உயர் நீதிமன்றம் கை வைத்துள்ளதே!'

''ஆமாம் அதில் என்ன தீர்ப்பு வருகிறது என்று பார்ப்போம்!'

''தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களைச் சேர்ந்த உயர் போலீஸ் அதிகாரிகளை திடீரென மாற்றியிருக்கிறார்களே? என்னவாம்?'

''கடந்த சில மாதங்களில் தூத்துக்குடியிலும் நெல்லையிலும் நடந்த படுகொலைகள் நூற்றுக்கும் மேல்! ஸ்ரீவைகுண்டத்தில் புதிய தமிழகம் கட்சி நிர்வாகி பாஸ்கர் கொலை விவகாரம் மக்கள் மத்தியில் பெரும் பீதியை உண்டாக்கிவிட்டது. இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய வி.ஐ.பி-கள் யாரும் மாலை, இரவு நேரங்களில் வெளியே வரவே பயந்து கிடந்தனர். பாணங்குளத்தில் ஹோட்டல் உரிமையாளர், வள்ளியூரில் கல்லூரி மாணவர், தச்சநல்லூரில் ஆட்டோ டிரைவர் ஆகியோர் கொலை செய்யப்பட்டதன் பின்னணியைப் பார்த்தால் அவர்களுக்கும் கொலையாளிகளுக்கும் எந்த மோட்டிவும் இல்லை. ஏரியாவில் தங்களைப் பற்றிய பீதி மக்களிடத்தில் இருக்கவேண்டும் என்பதற்காகவே சர்வசாதரணமாய் இந்த அப்பாவிகளைக் கொடூரமான முறையில் கொன்று போட்டுப்போனது தெரியவந்ததாம்!'

''போலீஸ் மீது பயம் போய்விட்டது என்று சொல்லும்!'

''நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களின் டி.ஐ.ஜி பதவி மற்றும் நெல்லை மாநகர கமிஷனர் பதவி இரண்டையும் சேர்த்து கவனித்து வந்தவர் ஸ்மித் சரண். இந்த மாவட்டங்களில்தான் கொலை சம்பவங்கள் அதிகம் நடந்துகொண்டிருந்தன. ஸ்மித் சரண் பொதுவாக அதிகம் வெளியே தலைகாட்டமாட்டார். இருந்த இடத்தில் இருந்தே கீழ்மட்ட அதிகாரிகள் சொல்வதைக் கேட்டுவந்தார் என்று கூறப்படுகிறது. நெல்லை எஸ்.பியாக இருந்த நரேந்திரன் நாயர், கீழ் மாவட்ட அதிகாரிகளிடம் சரிவர வேலை வாங்கத்தெரியவில்லை என்கிறார்கள். தூத்துக்குடி எஸ்.பி துரை... முக்கியமான பிரச்னைகளில் சரிவர செயல்படவில்லை என்று புகார். இந்த மூவரைப்பற்றி சமீபத்தில் நெல்லைக்கு விசிட் வந்த தமிழக சட்டம் ஒழுங்குப் பிரிவு கூடுதல் டி.ஜி.பியான ராஜேந்திரனிடம் பத்திரிகையாளர்களே சொல்லி ஆதங்கப்பட்டனர். விரைவில் எல்லாம் சரியாகும் என்று சொல்லிவிட்டு வந்தாராம். அதன் பிறகுதான் அவர்களுக்கு டிரான்ஸ்ஃபர்.!''

''உயர் அதிகாரிகளை மட்டும் மாற்றினால், நிலைமை சரியாகிவிடுமா?'

மிஸ்டர் கழுகு: தி.மு.க-வை அழைத்த சோனியா!

''உளவுத் துறை ஐ.ஜியான கண்ணப்பன், நெல்லை சரகத்தில் அதிக காலம் பணியில் இருந்தவர். அங்கே நிலவும் பல்ஸ் நன்றாகவே தெரியும். போலீஸ் துறையின் கீழ்மட்டத்தில் இருக்கும் சிலர் சாதி ரீதியாக ஆர்வம் காட்டுவதும்கூட வன்முறைச் சம்பவங்கள் நடக்க ஒரு காரணம். உதாரணத்துக்கு, சமூக ஆர்வலரான ஒரு வக்கீல் வன்முறைச் சம்பவத்தை மேற்கோள்காட்டி, 'அந்த தாதாவின் கையை ஒடிச்சுப்போடுங்க’ என்று சொன்னாராம். அடுத்த சில நாட்களில் அந்த வக்கீலின் நண்பரை சந்தித்த தாதா, 'என் மீது ஏன் இப்படி அவர் கோபத்தை காட்டுகிறார். அவருக்கு நான் என்ன துரோகம் பண்ணினேன்’ என்று அன்பாக எச்சரிக்கை விடுத்தாராம். இதைக் கேட்ட வக்கீல் ஆடிப்போய்விட்டாராம். போலீஸுக்கும் தாதாவுக்கும் எந்த அளவுக்கு நெட்வொர்க் சரியாக இயங்குகிறது என்கிற தகவல் கண்ணப்பனுக்கு உடனே போனதாம். இதையடுத்து, சாதிப் பாசத்துடன் பழகும்  கீழ்மட்ட போலீஸ் அதிகாரிகளின் பெயர் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. கூடிய விரைவில் தென் மாவட்டங்களில் பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என டி.ஜி.பி ஆபீஸ் வட்டாரத்தில் பேச்சு!'

''ஒருபக்கம் இப்படின்னா இன்னொருபக்கம் போலீஸ் கிளுகிளுப்பா இருக்கே!''

''வாட்ஸ் அப் கிளுகிளுப்பு சமாசாரம்தானே! அந்த உதவி கமிஷனர் நசீர் பாஷாவை காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றியது தெரிந்ததுதான். சம்பந்தப்பட்ட பெண் போலீஸும் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டார். 'வாட்ஸ் அப்பில் இந்த ஆடியோ வெளிவந்ததற்கு உளவுத் துறை போலீஸாரே காரணம்’ என்று சிலர் சொல்கிறார்கள். நசீர் பாஷா பேச்சை ரெக்கார்டு செய்த அந்த பெண் போலீஸ் தன்னுடன் பணியாற்றும் சில பெண் போலீஸாரிடம் அந்த ஆடியோவை போட்டுக் காண்பித்துள்ளார். அதனை ஒரு பெண் போலீஸ் வாங்கி உளவுத் துறை போலீஸ் ஒருவருக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி உள்ளார். அதை உளவுத் துறைக்கு ரிப்போர்ட் போட்டுள்ளார் அவர். இதனால் நசீர் பாஷாவை அழைத்து உயரதிகாரிகள் கண்டித்துள்ளனர். இதில் ஆத்திரமடைந்த நசீர் பாஷா, சம்பந்தப்பட்ட உளவுத் துறை போலீஸாரை மிரட்டும் தொனியில் பேசினாராம். கடுப்பான உளவுத் துறை போலீஸ் அதிகாரி, இந்த ஆடியோவை வெளியிட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள்!''

''பேசியது யார் என்பதுதான் முக்கியமே தவிர, யார் இதனை ரிலீஸ் செய்தார்கள்? எதற்காக ரிலீஸ் ஆனது என்பது முக்கியமா என்ன?'

''அந்தப் பெண் போலீஸுக்கு நெருக்கமான தோழிகள், 'இந்த சம்பவத்துக்குப் பிறகு வெளியில் எங்கும் தலைகாட்ட முடியாமல் அவர் தவிக்கிறார். யாரிடமும் சகஜமாகக்கூட பேசுவதில்லை. குடும்பத்திலும் ஏகப்பட்ட பிரச்னைகள். இதுகுறித்து யாரிடமும் வாய் திறக்கக் கூடாது என்று போலீஸ் உயரதிகாரிகள் சொல்லியிருக்கிறார்கள். தற்போது விடுமுறையில் இருக்கிறார்’ என்று சொல்கிறார்கள். 'உதவி கமிஷனர் நசீர் பாஷா தரப்பிலிருந்து அந்தப் பெண் போலீஸுக்கு எந்தவித மிரட்டலாவது வருகிறதா என்றும் உளவுத் துறை உன்னிப்பாக கவனித்து வருகிறது!' என்ற கழுகார், அரசியல் செய்திகளுக்குத் தாவினார்.

''சேலம் மாவட்ட தி.மு.க-வில் புகைச்சல்கள் இன்னும் தீர்ந்தபாடில்லை. முறைப்படி தேர்தல் நடத்தாமல் அறிவித்த தேர்தலைக்கூட ஒத்திவைத்துவிட்டு சேலம் மாவட்டத்துக்குப் பொறுப்பாளர்களை நியமித்திருக்கிறது தி.மு.க தலைமை. பவர்ஃபுல் பகுதியான சேலம் மத்தி மாவட்டத்தை ஸ்டாலின் ஆதரவாளரான பனமரத்துப்பட்டி ராஜேந்திரனுக்கு கொடுத்துவிட்டு, வீரபாண்டி ராஜாவுக்கு கிழக்கு மாவட்டத்தை ஒதுக்கியதால் எழுந்த குமுறல் இன்னும் அடங்கவில்லை என்பதை முன்பே சொல்லியிருந்தேன். மாவட்டச் செயலாளர் பதவிக்குத் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையோடு சென்னைக்குச் சென்ற வீரபாண்டி ராஜா, முதலில் ஸ்டாலினைச் சந்தித்திருக்கிறார். தனக்குக் கொடுக்கப்பட்டுள்ள கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் பதவிக்கு நன்றி தெரிவித்து ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்திருக்கிறார். அதன் பிறகு ஸ்டாலினே ராஜாவை கலைஞரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். ஸ்டாலினிடம் தேர்தலைப் பற்றி எதுவும் பேசாமல் இருந்த ராஜா, கலைஞரைப் பார்த்ததும், 'முறைப்படி தேர்தல் நடத்திக் கொடுங்க தலைவரே’ என்று கம்மிய குரலில் சொல்லியிருக்கிறார். அதற்கு கலைஞர், 'கட்டாயம் தேர்தல் நடத்துவோம்! இப்போது உனக்கு ஒதுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்’ என்று சொல்லிவிட்டாராம். பதில் எதுவும் சொல்லாமல் வருத்தத்துடன் திரும்பியிருக்கிறார் வீரபாண்டி ராஜா!'

''சேலத்துக்காரர்கள் இதனை ஏற்றுக்கொண்டார்​களா?'

மிஸ்டர் கழுகு: தி.மு.க-வை அழைத்த சோனியா!

''இதனைத் தொடர்ந்து கடந்த 18-ம் தேதி சேலம் மத்திய மாவட்டத்துக்கான பொது உறுப்பினர்கள் கூட்டம் கலைஞர் மாளிகையில் நடந்தது. வீரபாண்டி ஆறுமுகம் கட்டிய கலைஞர் மாளிகையில் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் தலைமையில் கூட்டம் நடந்தது. இதைப் பொருத்துக் கொள்ள முடியாத வீரபாண்டி ராஜா ஆதரவாளர்கள் எல்லோரும் கூட்டத்துக்கு ஆப்சென்ட். பகுதி செயலாளர்கள்கூட வரவில்லை. ஆனாலும் தன் பலத்தைக் காட்டுவதற்காக சேலம் கிழக்கு, மேற்கு, மத்தி என் மூன்று மாவட்டங்களிலும் உள்ள தனது ஆதரவாளர்களைத் திரட்டி கூட்டத்தை கூட்டிவிட்டார் ராஜேந்திரன். இதைப்பார்த்த ராஜா ஆதரவாளர்கள், 'இது ஒன்றும் பொதுக்கூட்டம் கிடையாது. மத்திய மாவட்டத்துக்கான பொது உறுப்பினர்கள் கூட்டம். இதற்குக்கூட உறுப்பினர்களை ஒருங்கிணைக்கத் தெரியாதவர் எப்படி கட்சிப் பணிகளை செய்யப் போகிறாரோ?’ என்று கமென்ட் அடிக்கிறார்கள்!'

''சேலம் என்றாலே தி.மு.கவுக்கு எப்போதும் சிக்கல்தான். வீரபாண்டி ஆறுமுகம் இருந்தாலும்! இறந்தாலும்!'

''ம்! காங்கிரஸும் தி.மு.க.-வும் கைகோத்துள்ளது என்பதுதான் டெல்லியில் இருந்து வரும் தகவல்! மோடி அரசை எதிர்ப்பதற்காக எந்தக் கட்சியுடனும் சேரத் தயாராகிவிட்டார் சோனியா. நிலம் கையகப்படுத்தல் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் அவர் நடத்திய பேரணி அதனை அறிவித்துவிட்டது. ஐக்கிய ஜனதா தளம், திரிணாமூல் காங்கிரஸ், தி.மு.க ஆகிய 14 கட்சிகளையும் அழைத்துக்கொண்டு நிலம் கையகப்படுத்தல் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ராஷ்ட்ரபதி பவனை நோக்கி ஊர்வலமாகச் சென்றார் சோனியா. தி.மு.க இதில் நிச்சயம் பங்கேற்க வேண்டும் என்று சோனியா கட்டளையிட்டாராம். இனி தி.மு.க மேடைகளில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனைப் பார்க்கலாம்!'

''ராகுல் எங்கே?'

''நாட்டில் மிக முக்கியமான பிரச்னை ராகுல் எங்கே என்ற கேள்விக்கான விடைதான்! ராகுல் முதலில் பாங்காக் சென்றாராம். அங்கிருந்து போர்ச்சுகல் ஆதிக்கத்தில் இருந்த 'மக்காவ்’ என்கிற இடத்துக்கு போயுள்ளார் என்பது ஒரு தகவல். மக்காவ் தற்போது சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. மக்காவ் போனாரோ அல்லது இங்கு போவது மாதிரி காட்டிக்கொண்டு ஐரோப்பியா போனாரோ என்றும் சிலர் கேட்கிறார்கள். மார்ச் இறுதியிலோ ஏப்ரலிலோ அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தை கூட்டவும் திட்டமிட்டு இருந்தனர். இதில் ராகுல் காந்தியை தலைவராக அறிவிக்கவும் திட்டமிடப்பட்டு இருந்தது. டெல்லியிலோ பெங்களூரிலோ இந்தக் கூட்டத்தை வைத்து அறிவிக்கவும் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், இப்போது கல்யாண மண்டபம் தயாராகிக்கொண்டு இருக்கும்போது மாப்பிள்ளை தயாராகவில்லை என்பதோடு மாப்பிள்ளை காணாமலும் போய் பிரச்னையாகிவிட்டது. இதனால் விவகாரம் தள்ளிப்போகிற நிலைமையில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் அம்மாவோ களம் இறங்கிவிட்டார். வருகிற 25-ந் தேதி நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.'

''அதையும் பார்க்கலாம்!''

''டெல்லி போதும்! தேனிக்கு வருகிறேன். அ.தி.மு.க. எம்.பியை  வைகோ பாராட்டிய விஷயம் தெரியுமா? மேதா பட்கருடன் நியூட்ரினோவை எதிர்த்து பிரசாரத்தைத் தொடங்கிய வைகோ, தொடர்ந்து கிராமம் கிராமாகச் சென்று நியூட்ரினோ திட்டத்தால் வரும் ஆபத்துகளை மக்கள் முன்வைத்து பேசி வருகிறார். தேனி நாடாளுமன்ற உறுப்பினரான ஆர்.பார்த்திபனின் சொந்த ஊரான கூழையனூரில் வைகோ பேசியபோது, அ.தி.மு.கவினரே அதிகப்படியாக குவிந்திருந்தனர். ''சாதாரண தொண்டனாக இருந்து எம்.பியாக உயர்ந்தவர் ஆர்.பார்த்திபன். அவருக்குப் பாராட்டுகள். அவரைத் தேர்வு செய்த மக்களுக்கு என்னுடைய வணக்கங்கள்!'' என்றுதான் பேச்சை ஆரம்பித்தார் வைகோ. தொடர்ந்து, குச்சனூர், கீழச்சிந்தலசேரி, மேலச்சிந்தலச்சேரி கிராமங்களில் வைகோவின் வாகனம் உள்ளே நுழைவதற்கும் மின்சாரம் தடைபடுவதற்கும் சரியாக இருந்தது. திட்டமிட்டே மின்சாரத்தை நிறுத்துவதாக பொதுமக்கள் ஆவேசப்பட்டனர்.

மிஸ்டர் கழுகு: தி.மு.க-வை அழைத்த சோனியா!

கடைசியாக, உத்தமபாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய வைகோ, 'உலகின் மிகப்பழைமையான பாரம்பர்ய சின்னமான மேற்குத் தொடர்ச்சி மலையைத் தாக்கி தமிழர்களை அழிக்கவே இந்தத் திட்டத்தை மோடி அரசு கொண்டு வந்துள்ளது. இதே மேற்குத் தொடர்ச்சி மலை குஜராத் வரைக்கும் இருக்கிறதே... அங்கே இந்தத் திட்டத்தைத் தொடங்கலாமே! அதைவிட்டு ஏன் இங்கே கொண்டு வந்தார்கள்? மற்ற மாநிலங்களில் இப்படி ஒரு திட்டத்தை அனுமதிக்கவே மாட்டார்கள்.நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்துப்  போராட உங்கள் எல்லோரையும் நான் அழைக்கவில்லை. இது ஒரு அழிவுத்திட்டம். நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்துப் போராடுவது நியாயமான போராட்டம் என்று பத்து பேரிடம் சொல்லுங்கள். அதுவே போதும்!’ என்று சொல்லி முடிக்கும் முன்பு... ''செய்வீர்களா... செய்வீர்களா?'' என்று ஜெயலலிதா ஸ்டைலில் கேட்க..  கூட்டமும் தலையாட்டியது. வைகோ பேசி முடிக்கும் வரை ஓர் ஓரமாக நின்று கேட்டுவிட்டுத்தான் நகர்ந்தார்

அ.தி.மு.க முன்னாள் எம்.பி சையது கான்!' என்று சொல்லிவிட்டு எழுந்த கழுகார், ''மத்திய அரசு என்.எஃப்.எஸ்.எம்., என்.ஏ.டி.பி., ஆகிய இரண்டு திட்டங்களின் கீழ் விவசாயிகளுக்காக இந்த ஆண்டு 150 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்த திட்டங்களுக்கு மாநில அரசு சென்னையில் இருந்துதான் முறைப்படி டென்டர் விட வேண்டுமாம். ஆனால், வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தியோ சத்தமே இல்லாமல் மாவட்ட வாரியாக அந்த நிதியை டென்டர் விட்டு ஒதுக்கீடு செய்துவிட்டாராம். 'இந்த டென்டர்களும் பெயருக்காக நடந்திருக்கிறது. விவசாயிகளுக்குப் போய் சேர வேண்டிய 150 கோடியில் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கிறது!’ என்ற புகார் மத்திய அரசுக்குப் போயிருக்கிறது. இதுபற்றி மத்திய அரசு விசாரணையைத் தொடங்கினால் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்படவும் வாய்ப்பு இருக்கிறது!'' என்றபடி பறந்தார்.

அட்டை படம்: சு.குமரேசன், படம்: வீ.சக்திஅருணகிரி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு