Published:Updated:

"தென்னிந்தியப் பெண்களுக்கு அவர் காம்ப்ளிமென்ட்தான் கொடுக்கிறார்!”

சரத் யாதவ் சர்ச்சை... விவரிக்கும் கனிமொழி!

பிரீமியம் ஸ்டோரி

மது தேசத்தை வழிநடத்துவது நாடாளுமன்றத்தில் உள்ள மூத்த உறுப்பினர்கள்தான். ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே நாடாளுமன்ற செயல்பாடுகளும், உறுப்பினர்களின் கருத்தும் தரம் தாழ்ந்த நிலையிலே சென்று கொண்டிருக்கின்றன.

இதற்கு அண்மை உதாரணம் ஜக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் சரத் யாதவ், தென்னிந்தியப் பெண்களைப் பற்றிப் பேசிய கொச்சையான கருத்து. இந்தப் பேச்சுக்குக் கொதித்து எழுந்து கண்டனம் தெரிவிக்காமல் நாடாளுமன்ற  உறுப்பினர்களில் பலர் அமைதிகாத்து ரசித்திருக்கிறார்கள். ஒட்டுமொத்த உறுப்பினர்களில்  கனிமொழி மட்டுமே எழுந்து தனது காட்டமான எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார். ஆனால், சில உறுப்பினர்கள் கனிமொழியை அமைதிகாக்கச் சொல்லியதுதான் அதிர்ச்சியின் உச்சம்.

"தென்னிந்தியப் பெண்களுக்கு அவர் காம்ப்ளிமென்ட்தான் கொடுக்கிறார்!”

அன்று நாடாளுமன்றத்தில் என்ன நடந்தது கனிமொழியிடமே கேட்டோம். 'நாடாளுமன்றத்தில் விவாதம் நடப்பது இயல்புதான். ஆனால், விவாதத்தின்போது எதைப் பற்றியும் எல்லை மீறி பேசுவது தவறு. இந்த விவாதத்தின்போது பெண்களைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் என்ன என்பதும் புரியவில்லை. இத்தகைய கருத்துகளை ஏன் நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என்பதுதான் புரியவில்லை' எனக் கோபப்பட்டவர்  நாடாளுமன்றத்தில் நடந்ததைச் சொல்லத் தொடங்கினார்.

'அன்று காப்பீட்டுத் துறையில் விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, சரத் யாதவ் தனது கருத்தைச் சொல்லத் தொடங்கினார். 'அந்நிய முதலீட்டை 26 சதவிகிதத்தில் இருந்து 46 சதவிகிதமாக மத்திய அரசு உயர்த்துகிறது. இங்கு சிலர் தோலின் நிறத்தால் மயங்கியவர்களாக உள்ளனர். நிர்பயா ஆவணப்படம் எடுத்த லெஸ்லி உட்வின்கூட வெள்ளைத் தோல் நிறத்தைக் கொண்டவராக இருந்ததால்தான் அவருக்கு சிறையில் ஆவணப்படம் எடுக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மணமகள் தேடும் இணையதளத்தில்கூட வெள்ளை நிறப் பெண்களைத்தான் அதிகம் விரும்புகின்றனர். தென்னிந்தியப் பெண்கள் கறுப்பானவர்களே. ஆனால், அழகானவர்கள், அழகான உடல் அமைப்பைக் கொண்டவர்கள். அவர்களுக்கு நடனமாடவும் தெரியும்’ எனத் தொடர்ந்து பேசிக்கொண்டே சென்றார். என்னால், இதற்கு மேலும் பொறுமையாக இருக்க முடியாமல் எழுந்து கண்டனம் தெரிவித்தேன்.

"தென்னிந்தியப் பெண்களுக்கு அவர் காம்ப்ளிமென்ட்தான் கொடுக்கிறார்!”

அப்போது 'ஏன் கோபப்படுறீங்க? தென்னிந்தியப் பெண்களுக்கு அவர் காப்ளிமென்ட்தான் கொடுக்கிறார்’ என்ற ரீதியில் சிலர் பேசினார்கள். அதன் பிறகு தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் பிராஃபுல் படேலும், திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர் டெரக் ஓபிரையனும் என்னை சமாதானம் செய்ய ஆரம்பித்தார்கள். மேலும் சரத் யாதவுக்கு ஆதரவாக தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர் டி.பி.திரிபாதி, காளிதாசரின் வரிகளை மேற்​கொள்காட்டி ஆதரவு தெரிவித்து தனது கருத்தைப் பதிவு செய்தார். மீண்டும் விடாமல் சரத் யாதவ் தான் சொன்னது சரி என்ற ரீதியிலேயே தனது வாதங்களைத் தொடர்ந்து வைத்தார். டெரக் ஓபிரையும், பிராஃபுல் படேலும் கருத்தை திசை திருப்பாமல் காப்பீடுத் துறையின் விவாதம் பற்றி பேசுங்கள் என முற்றுப்புள்ளி வைத்தனர்.

"தென்னிந்தியப் பெண்களுக்கு அவர் காம்ப்ளிமென்ட்தான் கொடுக்கிறார்!”

இதுகுறித்த செய்தி ஊடகங்களில் தொடர்ந்து வெளியாக இரண்டு நாட்கள் கழித்து தகவல் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் வருத்தம் தெரிவித்தார். தொடர்ந்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும் எழுந்து, 'பெண்களின் தோல் நிறம் குறித்த கருத்துகளை சரத் யாதவ் நிறுத்திக்கொள்ள வேண்டும்’ என்றார். ஆனாலும், சரத் யாதவ் தொடர்ந்து 'நீங்கள் யார் என்பதை நான் அறிவேன்’ என்று கொச்சையாகப் பேசினார். அடுத்தநாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இந்த விவாதத்தில் தலையிட்டுக் கண்டித்தபின்புதான் ஸ்மிருதி இரானி பற்றி சொன்ன கருத்துக்கு சரத் யாதவ் வருத்தம் தெரிவித்தார். ஆனால், பெண்களைப் பற்றிப் பேசியப் பொதுவான கருத்துக்கு மறுப்போ, மன்னிப்போ கேட்கவில்லை. இதை நான் சரத் யாதவ் என்ற ஒரு தனிநபரின் கருத்தாகப் பார்க்கவில்லை. பெண்களைப் பற்றி இந்தச் சமூகம் வைத்திருக்கும் பொதுவான மனோபாவமாகத்தான் பார்க்கிறேன். தொலைக்​காட்சி, திரைப்படங்கள், பத்திரிகை ஊடகங்கள் அனைத்திலும் பெண்ணை ஒரு போகப் பொருளாகவும், உயிரும் உணர்வுகளும் அற்ற பயன்பாட்டுக்கான ஒரு பண்டமாகவும்தான் பார்க்கிறார்கள். இதில் உள்ள தவற்றைப் புரிந்துகொள்ளக் கூடிய தன்மையும் அறிவு முதிர்ச்சியும் இல்லாமல் இன்றும் பலர் இருப்பதுதான் வருத்தத்துக்குரியது' என்று சொன்னார்.

நாடாளுமன்றத்தில் நடப்பது பெண்களைப் பற்றிப் பேசி இழிவுபடுத்தும் ஆபத்தான ஆட்டம். இந்த ஆட்டத்துக்கு தமிழகத்தில் இருந்து சென்ற உறுப்பினர்களும் டெல்லியில் அமைதி காத்து இருந்ததுதான் அதிர்ச்சி  தருவதாக இருக்கிறது.

நா.சிபிச்சக்கரவர்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு