Published:Updated:

தண்டனை பெற்றவருக்கு எதுக்கு பேனர்?

விடாமல் விரட்டும் டிராஃபிக் ராமசாமி

பிரீமியம் ஸ்டோரி

புழல் சிறைக்குச் சென்று திரும்பினாலும் கொஞ்சமும் உற்சாகம் குறையாமல் இருக்கிறார் டிராஃபிக் ராமசாமி!

''தொடர்ந்து உழைத்து வந்த எனக்கு அரசே இந்த ஓய்வை வழங்கியதாக எண்ணிக் கொள்கிறேன். அதற்கு அரசாங்கத்துக்கு நான் ஏதாவது பரிசு தர வேண்டும் அல்லவா? அதற்காகத்தான் தற்போது ஒரு வழக்கைத் தொடுத்து இருக்கிறேன். அதில் ஆணையர் ஜார்ஜ் உட்பட என்னைத் தாக்கிய அனைத்து போலீஸ் நண்பர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளேன். பட்டாபிராமில் காவல்படை இளைஞர் ஒருவர் பேனர் ஒன்றை அகற்றும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கிறார். அதற்கும் சேர்ந்து கொலை மற்றும் என்னைத் தாக்கியதற்காக கொலை முயற்சி வழக்கு  பதிவு செய்யவேண்டும் என்று கேட்டுள்ளேன். ஆளும் கட்சியுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு காவல் துறை செய்யும் இந்த சதிக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும்! தண்டனை வாங்கித்தரும் வரை ஓய மாட்டேன்!' என்றவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

தண்டனை பெற்றவருக்கு எதுக்கு பேனர்?

''எந்த மாதிரியான இடையூறுகளை உங்களுக்குக் கொடுத்தார்கள்?''

''வருகிற ஏப்ரல் 1-ம் தேதி வந்தால் எனக்கு வயது 82. ஆனால், 'நான் கொலை மிரட்டல் விடுத்தேன். கண்ணாடியை உடைத்தேன்’ என்று புகார் கொடுத்து இருக்கிறார்கள். நான் போயஸ் கார்டனில் ஜெயலலிதா பேனரை அகற்றச் சொன்னதை மனதில் வைத்து எடுக்கப்பட்ட நடவடிக்கை இது. தேவை இல்லாமல் அடித்து, கைதுசெய்து, ஆம்புலன்ஸ் வசதி செய்து தராமல் என்னைத் துன்புறுத்தி இருக்கிறார்கள். என்னை ஜெயிலிலேயே அடைத்து வைத்திருக்க வேண்டியதுதானே? ஏன் செய்யவில்லை? அங்கு வைத்திருந்தால் இந்த ராமசாமி அங்கே நடக்கும் செயல்களைப் பார்த்து அதற்கும் வழக்குப்போட்டு வில்லங்கம் இழுத்து விடுவானோ என்ற பயத்தினால்தான் மருத்துவமனைக்கு மாற்றினார்கள்!''

''உங்களுக்கு மட்டும் ஏன் தொடர்ந்து இவ்வளவு பிரச்னை?'

''அரசு என்பது மக்கள்தான். ஆனால், அவர்களையே புறக்கணிக்கும் அரசு எப்படி ஒரு நல்ல அரசாக இருக்க முடியும். ’வீரத்தமிழன்’ என்று கருணாநிதி என்னை சொல்லியுள்ளார். அதற்காக அவர்கள் தவறு செய்தால் கண்டிக்காமல் இருப்பேனா? எனக்கு எல்லோரும் ஒன்றுதான். காவல் துறையில் இருக்கும் சில விலைபோகும் அதிகாரிகள், அரசியல்வாதிகளுடன் சேர்ந்து கொண்டு நாட்டையே நாசம் செய்கிறார்கள். அதைத் தடுக்கத்தான் வேண்டும்.  தண்டனை பெற்றவருக்கு எதுக்கு பேனர்? வீட்டுள்ளேயே இருக்கும் அவருக்கு நாடு முழுக்க பேனர் அவசியமா? தவறான சம்பாத்தியத்தில்  இருந்துதான்  இவ்வளவு விளம்பரங்கள் வருகின்றன. எனவே, அதற்கும் ஒரு வழக்குப்போட இருக்கிறேன்.''

''ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் நின்றீர்கள்.ஆனால், உங்களால் குறிப்பிடத்தக்க வாக்குகளை வாங்க முடியவில்லையே?''

''நான் வெற்றிபெற வேண்டும் என்றோ, ஆதாயம் தேடுவதற்காகவோ போட்டியிடவில்லை. அங்கு நடக்கும் முறைக்கேடுகளைத் தட்டி கேட்க வேண்டும் என்பதற்காகப் போட்டியிட்டேன். அங்கேயும் நான் வன்முறை செய்தேன்... ஆட்டோ டிரைவரைத் தாக்கினேன் என்று வழக்குத் தொடர்ந்தார்கள். உண்மை என்ன என்பது மக்களுக்குத் தெரியும். தமிழகத்தில் மட்டுமல்ல... நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் மக்கள் என்னைத் தொடர்புகொண்டு பேசுகிறார்கள். என்னைக் கைது செய்ததற்கு பல இடங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தி இருக்கிறார்கள். இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் எனக்காகப் போராடுகிறார்கள். மக்கள் மத்தியில் இந்த அளவுக்கு விழிப்பு உணர்வு வந்திருக்கிறதே என்று சந்தோஷமாக இருக்கிறது. தொடர்ந்து மக்களுக்காக, மக்கள் பிரச்னைகளுக்காகப் போராடுவேன். கைது பயத்தைக் காட்டியோ, மிரட்டியோ அடக்கவும் முடியாது. தடுக்கவும் முடியாது!''

மா.அ.மோகன் பிரபாகரன், படம்: ஜெ.வேங்கடராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு