என் விகடன் - திருச்சி
என் விகடன் - சென்னை
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்
தலையங்கம்

ணினித் துறையில் உலக அளவில் கொடி நாட்டி வருகிறார்கள் தமிழ் இளைஞர்கள். இத்தனைக்கும், பள்ளிப் படிப்பின்போது மிகக் குறைந்த விழுக்காடு மாணவர்களுக்கே கணினியுடன் கை குலுக்கும் வாய்ப்பு கிடைத்துவந்தது இதுவரை. இதோ, இப்போது தமிழகத்தின் கிராமப்புற மாணவர்களும் ப்ளஸ் டூ படிக்கும்போதே கணினியோடு பரிச்சயம்கொள்ள வேண்டும் என்ற முன்னேற்றகரமான கருத்தின் அடிப்படையில், செப்டம்பர் 15 முதல் மாநில அரசின் இலவச மடிக்கணினித் திட்டம் அமலுக்கு வருகிறது.

 கல்வி கற்கும் பாணியிலும் சர்வதேச நடப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை அறிந்துகொள்வதிலும் மாணவர்களுக்கு இந்தத் திட்டம் மாறுபட்ட அனுபவத்தை அளிக்கும். அதேசமயம், கலாசாரத்தின் மிக நுட்பமான 'இணைய ஜன்னல்' வழியே அனைத்தையும் கண்டறியும் வாய்ப்பு கிடைக்கும்போது, அதைக் கையாள்வதற்கான பயிற்சியும் பக்குவமும் எச்சரிக்கையும் சேர்த்தே அளிக்கப்படுவது அவசியம்.

புகழ் மிக்க சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே அலைபேசிகளை வகுப்பறைக்குள் அனுமதிப்பது குறித்து எழுந்த சர்ச்சைகள் நினைவிருக்கும். அதன் காரணங்களும் தெரிந்தவையே! மடிக்கணினியும்கூட தகவல் பதிவு மற்றும் பரிமாற்றத்துக்கான சக்தி வாய்ந்த சாதனம் என்பதால், அறியாமையாலும் ஆர்வக் கோளாறினாலும் சில சங்கடங்கள் எழக் கூடும். அப்பாவி மாணவ - மாணவியர் மத்தியில் வீண் குழப்பம், குற்றச்சாட்டு, மன உளைச்சல் என்று வேண்டாத பக்க விளைவுகளும் உண்டாகலாம்.

எனவே, மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச மடிக்கணினிகளின் வழியே அவர்கள் இணையதள இணைப்பை முறையாகப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல் அவசியம். அந்த வழிகாட்டுதலை அளிக்க வேண்டிய பெற்றோரும் ஆசிரியர்களும் இதற்கெனத் தங்களைத் தயார் செய்துகொள்வதும் அவசியம். புரட்சிகரமான இந்தத் திட்டத்தால் ஏற்படக் கூடிய நல்ல விளைவுகளோடு சேர்த்து, சில கசப்பான சாத்தியங்களையும் முன்கூட்டியே அரசாங்கம் புரியவைக்க வேண்டும்.

அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமான ஒரு முடிவை எடுக்கும்போது, அது வேண்டாத எதிர்ப்புகளைச் சம்பாதித்து, 'திட்டமே தவறானது’ என்ற விமர்சனத்துக்கு இடம் கொடுத்தால்... நமக்குத்தான் நஷ்டம்!