Published:Updated:

தப்புகிறார்களா நிஜக் குற்றவாளிகள்?

திணறும் சி.பி.சி.ஐ.டி!

பிரீமியம் ஸ்டோரி

வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமியின் தற்கொலை சம்பவத்தில் உண்மைக் குற்றவாளிகளை அடையாளம் காண முடியாமல் சி.பி.சி.ஐ.டி போலீஸார் திணறுவதாக நெல்லை போலீஸார் சொல்கிறார்கள். ஆனால், 'உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கே தடங்கல்களும் தடைகளும் எழுந்துள்ளது’ என்றும் சிலர் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள்.

தப்புகிறார்களா நிஜக் குற்றவாளிகள்?

''வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கு, பல்வேறு சிக்கல்கள் கொண்ட, திடுக்கிடும் சம்பவங்கள் நிறைந்த, பல்வேறு சதித்திட்டங்கள் கொண்ட சம்பவமாகத் தெரியவில்லை. அவரை தற்கொலைக்கு சிலர் தூண்டி இருக்கிறார்கள். அவர்கள் யார் என்பது அவர் கடைசியாக யாருடன் பேசினார் என்பதை எடுத்து, அதில் சம்பந்தப்பட்டவர்களை விசாரித்தாலே தெரிந்து போகும். அப்படி விசாரிக்கும் வேலையில்கூட சி.பி.சி.ஐ.டி போலீஸ் இறங்கவில்லை. அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் பி.ஏ என்று சொல்லப்பட்ட பூவைய்யாவை, இந்த போலீஸார் விசாரித்தார்கள். அவரைக் கைது செய்துவிட்டார்கள் என்று செய்தி பரவியது. அப்படி யாரையும் கைது செய்யவில்லை என்று அவசர அவசரமாக மறுத்த போலீஸார், கடந்த இரண்டு வாரங்களாக என்னதான் செய்துள்ளார்கள்? எல்லோரையும் போனில் விசாரித்து, இப்படி ஒரு விசாரணை நடப்பதாக வெளியில் காட்டிவிடக்கூடாது என்று மறைமுகமாகச் செயல்படுவது ஏன்?' என்றெல்லாம் பலரும் சந்தேக ரேகைகளைக் கிளப்புகிறார்கள்.

தப்புகிறார்களா நிஜக் குற்றவாளிகள்?

''முத்துக்குமாரசாமியின் மரணத்தை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி போலீஸார், இந்த விவகாரத்தில் உள்ளூர் ஆளும் கட்சி பிரமுகர்கள் சிலருக்கும் தொடர்பு இருப்பதை ஆரம்பத்திலேயே  கண்டுபிடித்தனர். ஒருவர் ஆளும் கட்சியின் மாவட்டப் பொறுப்பில் இருப்பவர். இன்னொருவர் எம்.பியாகவும் இருக்கிறார். இவர்கள் இருவரும் தற்கொலை செய்துகொண்ட முத்துக்குமாரசாமிக்கு நெருக்கடி கொடுத்துள்ளார்கள். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக தச்சநல்லூரில் உள்ள ஒரு பிரமுகர் வீட்டுக்கு முத்துக்குமாரசாமி வரவழைக்கப்பட்டுள்ளார். 'நாங்கள் சொன்ன ஆளுக்கு நீங்கள் போஸ்டிங் போடவில்லை. அதனால் யாருக்கு போஸ்டிங் போட்டீர்களோ அவர்களிடம் இருந்து பணம் வாங்கிக் கொடுங்கள்’ என்று மிரட்டப்பட்டுள்ளார். அந்த வேதனையில்தான் தற்கொலை முடிவுக்கு வந்துள்ளார்' என்றும் சொல்கிறார்கள் சிலர்.

தப்புகிறார்களா நிஜக் குற்றவாளிகள்?

முத்துக்குமாரசாமியால் வேளாண் துறையில் தற்காலிக ஓட்டுநர்களாகப் புதிதாக நியமிக்கப்பட்ட 7 பேரிடமும் சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தி முடித்துள்ளனர். 'இந்த வேலைக்காக உங்களிடம் பணம் கேட்டார்களா? அதிகாரி முத்துக்குமாரசாமி உங்களிடம் எப்போதாவது தொடர்புகொண்டாரா? வேளாண்மைத் துறை அலுவலகத்தில் இருந்து யாராவது பேசினார்களா? உள்ளூர் அரசியல்வாதிகள் யாரெல்லாம் பேசினார்கள்? என்ன கேட்டார்கள்?’ என கிடுக்கிப்பிடி கேள்விகளால் துளைத்து எடுத்தார்களாம்.

பணி நியமனம் பெற்ற டிரைவர்கள், ''நாங்கள் அதிகாரி முத்துக்குமாரசாமியிடம் பணம் எதையும் கொடுக்கவில்லை. அவர் எங்களிடம் பணம் கேட்கவும் இல்லை. எங்களுக்கு சீனியாரிட்டி மூலமாகவே வேலை கிடைத்தது. ஆர்டர் கிடைத்த பிறகு லோக்கல் ஆட்கள் சிலர் எங்களைத் தொடர்புகொண்டு 'இந்த வேலையில் தொடர வேண்டுமானால் 3 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என கேட்டார்கள்’ எங்களில் சிலர் பணத்தைக் கொடுத்துவிட்டனர். மேலும் சிலர் கடன் வாங்கிக் கொடுக்க முயற்சி செய்தோம்'' என தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு விஷயங்கள் கிடைத்த பிறகும் அந்த ஆளும் கட்சி பிரமுகர்களை நோக்கி சி.பி.சி.ஐ.டி போலீஸார் திரும்பாதது ஏன் என்றே பலரும் கேட்கிறார்கள். ''மாநகராட்சி கவுன்சிலர் ஒருவர், இந்தப் பணிக்காக தான் வாங்கியிருந்த 3 லட்சம் ரூபாயை சம்பந்தப்பட்ட நபரை தேடிப்போய் கொடுத்துவிட்டார். பணத்தை சுருட்டிய லோக்கல் பிரமுகர்கள், 'உள்ளூரில் அரசியல் செய்யும் எங்களைப் பகைத்துக்கொண்டு பணி நியமனங்களைச் செய்து இருப்பதன் பலனை அனுபவிப்பீங்க. அமைச்சருக்கு நீங்களே பணத்தைக் கொடுங்க.. இல்லேனா நிம்மதியா ரிட்டையர்ட் ஆக முடியாது’ என முத்துக்குமாரசாமியை போனில் தொடர்ந்து மிரட்டியுள்ளனர். இவர்களை கைது செய்தால் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது எதிர்க் கட்சிகள் இந்த விவகாரத்தை பூதாகரமாகக் கிளப்பும். அதனால் சாதாரண புள்ளிகள் ஓரிருவரை கைதுசெய்து விவகாரத்தை ஆறப்போட வைக்கும் முயற்சிகளும் நடக்கின்றன' என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.

முத்துக்குமாரசாமியின் உறவினரான வழக்கறிஞர் பிரம்மா, ''இந்த வழக்கில் ஆளும் கட்சியினருக்குத் தொடர்பு இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. அதனால் அவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் ஈடுபட்டு வருகிறார்களோ என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் அமைச்சர் பொறுப்பையும் அவரது கட்சி பொறுப்பையும் பறிப்பது மட்டுமே இழந்துவிட்ட ஓர் உயிரின் இழப்பை ஈடுகட்டிவிடாது. அவரைக் கைதுசெய்ய வேண்டும். முத்துக்குமாரசாமியின் குடும்பத்தினருக்கு, தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றன. குடும்பத் தலைவரை இழந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கும் அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும். வழக்கை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும். இல்லாவிட்டால், நீதிமன்றத்தை அணுகுவேன்'' என்றார் காட்டமாக.        

அதிகாரியின் மரணத்தில் பிணைந்திருக்கும் மர்ம முடிச்சுகளை அவிழ்க்க வேண்டியது அரசின் கடமை!

பி.ஆண்டனிராஜ்

நேர்மையின் மரணம்!

தப்புகிறார்களா நிஜக் குற்றவாளிகள்?

முத்துக்குமாரசாமியைப் பற்றி நெல்லையைச் சேர்ந்த எழுத்தாளர் ஆர்.நாறும்பூ நாதன் தனது வலைப்பக்கத்தில் இப்படி எழுதியிருக்கிறார்... ''கடந்த ஒரு மாதத்துக்கு முன்புவரை யாரென்றே தெரியாத ஓர் அதிகாரி... இன்று எல்லா பத்திரிகைகளிலும் முக்கியச் செய்தியாக சிரித்துக் கொண்டு இருக்கிறார். நெல்லை என்றாலே, தமிழ் சினிமாவில் அரிவாள், கத்திகளோடு சுத்திக்கொண்டிருக்கும் ரவுடிகள் நிரம்பிய ஊர் என்ற பிம்பத்தை உடைத்து, நேர்மையின் அடையாளமாக தன்னை முன்னிறுத்தி சிரித்துக்கொண்டு இருக்கிறார் முத்துக்குமாரசாமி, நம் கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டு.

பாளையங்கோட்டை திருமால் நகரைச் சேர்ந்த இந்த அதிகாரி, வேளாண் துறையில் காலியாக இருந்த ஏழு டிரைவர் பதவிகளை நேர்மையான முறையில் காசு வாங்காமல் நிரப்பியதால் வந்த பிரச்னை இது. அமைச்சர்களின் வகையறாக்கள் கொடுத்த நிர்ப்பந்தம் காரணமாக, தச்சநல்லூர் ரயில்வே தண்டவாளத்தில், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ஓர் அதிகாரி நேர்மையாய் வாழ, அதற்குப் பணையமாக தனது உயிரையே கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம்.

கெட்டவர்கள் எளிதாகக் கூடிவிடுகிறார்கள். கூத்தடிக்கிறார்கள். நல்லவர்களால் அப்படிக் கூடமுடியவில்லை. கூடி இருந்தால், ஒருவேளை, தனது பிரச்னைகளை அவர்களிடம் கூறியிருக்கக் கூடும். நல்லவர்களையும் தேடித்தானே கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. தூக்க மாத்திரைகள் சாப்பிடாமல், பூச்சி மருந்து குடிக்காமல், கயிற்றில் தொங்காமல், ரயில் முன் பாயும் மனநிலை ஒரு நல்லவருக்கு ஏற்பட வேண்டும் எனில், எப்படிப்பட்ட மனஉளைச்சல் அவருக்கு ஏற்பட்டிருக்க வேண்டும்? அவரது இரண்டு பையன்கள். சென்னையில் பொறியாளராக வேலை பார்க்கிறார்கள். முத்துக்குமாரசாமிக்கு மீதிப் பணிக்காலம்  இன்னும்  எட்டு மாதங்கள்தான்.

குடும்பத்தினர் கூடி இருக்கும்போது, யாரோ ஒருவர் அரசு வேலை, மகனுக்குக் கொடுக்க வேண்டும் என்று சொன்னதும், 'எதற்கு...எங்க அப்பா மாதிரி நாங்களும் செத்துப் போவதற்கா? ஒன்றும் வேண்டாம்..' என்று பிள்ளைகள் கோபப்பட்டதாகவும் செய்திகள் வருகின்றன. விருப்ப ஓய்வு கொடுக்க நினைத்தாராம். உன்னை லஞ்சக் கேஸில் மாட்டி விட்டு, உள்ளே  தள்ளி அசிங்கப்படுத்திவிடுவோம் என்றெல்லாம்கூட மிரட்டல் விடப்பட்டனவாம். ஒரு நேர்மையாளன் இதற்கு மேல் என்னதான் செய்துவிட முடியும்?

காலையில், மனைவியிடம் கோயிலுக்குப் போவோம் என்று சொல்லிச் சென்றதாக சொல்கிறார்கள். காலை 11 மணிக்கு தன்னை மாய்த்துக் கொண்டார்.

தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வி இருக்கிறது...

பாரதியின் வாக்கு பலிக்கிறதா என்று பார்ப்போம்!'' 

மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்

2015-16-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் பங்குபெற 2,713 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

முதல் கட்டப் பரிசீலனை நடந்து கொண்டிருக்கிறது.

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு