பிரீமியம் ஸ்டோரி

தாரா ரமேஷ், புதுச்சேரி - 4.

சாந்தி ரங்கநாதனுக்கு ஒளவையார் விருது தமிழக அரசு அளித்தது பற்றி..?

சாந்தி ரங்கநாதன் கற்பிப்பதும் நன்னெறி தான். அந்த விருதுக்கு அவர் தகுதி வாய்ந்தவர். சாதாரண குடும்பத்தில் பிறந்து பெரிய குடும்பத்துக்கு வாழ்க்கைப்பட்டு வந்தவர். கணவரின் அகால மரணம் அவரது வாழ்கையை மாற்றிப்போட்டது. கணவரின் வர்த்தகத்தை கவனிக்க ஆரம்பித்திருந்தால் அவர் 'பிசினஸ் உமன்’ ஆக இன்று பெயர் எடுத்து தன்னுடைய வாழ்க்கை நிலையை மட்டும் அதிகப்படுத்தி இருக்கலாம். ஆனால், குடிநோயாளிகளால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்க நினைத்தார். அது சம்பந்தமாகப் படிப்பதற்காகவே அமெரிக்கா போனார். தன்னுடன் அக்காவையும் அழைத்துச் சென்று, அங்கு குடிநோயைப் பற்றி படித்து வந்தார். சிறிய இடத்தில் அதற்கான சிகிச்சையைத் தொடங்கினார். மருமகளின் சேவையை மெச்சிய மாமியார், தனது பெரிய கட்டடத்தை அதற்கு தாரை வார்த்தார். 1980-ல் தொடங்கப்பட்ட இந்த சேவை மையத்தை உற்றுக்கவனித்த அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் குறைந்த விலையில் அரசு நிலத்தை வழங்கினார். இந்த சேவையை சாந்தி ரங்கநாதன் தொடங்கிய சில ஆண்டுகளிலேயே அவருக்கு பத்ம விருது கிடைத்தது. இப்போது அவருக்கு ஒளவையார் விருது கிடைத்துள்ளது.

கே.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு - 32.

அரசுப் பணியில் இருப்பவர்கள் மதபோதனை செய்யக் கூடாது என்று கூறப்படும்போது, அவர்கள் பட்டிமன்ற நடுவர்களாக பேச்சாளர்களாக இருக்கலாமா?

அரசு ஊழியர்கள் எதுவுமே பேசக் கூடாது என்று சட்டம் இல்லை. மக்கள் மத்தியில் வேறுபாடுகளை விதைக்கும் வகையில் சாதி, மத அமைப்புகளுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்யக் கூடாது என்று மட்டும்தான் உள்ளது. பட்டிமன்றமோ, பாட்டுமன்றமோ... என்ன பேசுகிறார்கள் என்பதே முக்கியம்!

உமாசங்கர் பல்வேறு அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். மிகக் கடுமையான விமர்சனங்களையும் வைத்தார். அப்போது எந்தப் பிரச்னையும் வரவில்லை. குறிப்பிட்ட மத அமைப்பில் பேசும்போதுதான் சர்ச்சை எழுந்தது.

ரேவதிப்ரியன், ஈரோடு - 1.

தே.மு.தி.க., ம.தி.மு.க., த.மா.கா., விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.ம.க ஆகியவை ஒருங்கிணைந்து சட்டசபைத் தேர்தலை சந்திக்குமா?

யார் முதலமைச்சர் வேட்பாளர் என்று முடிவெடுத்துச் சொல்லி, அதனை இத்தனை கட்சிகள் ஏற்றுக்கொண்டால் மட்டும்தான் இதற்கு சாத்தியம்.

மு.ரா.பாலாஜி, சொர்ணாகுப்பம், கோலார் தங்கவயல்.

இலங்கை அதிபர் சிறீசேனவின் முதல் பயணம் உணர்த்தும் பாடம்?

யார் அங்கே வென்றாலும் இங்கே வந்து, 'நாங்கள் சீனாவின் நண்பன் அல்ல’ என்பதைச் சொல்லிவிட்டுப் போவார்கள். அதனை சிறீசேனவும் செய்திருக்கிறார்.

வண்ணை கணேசன், சென்னை - 110.

இன்றைய அரசியலில் தீர்க்க முடியாத பிரச்னை எது?

அன்றும் இன்றும் அரசியலில் தீர்க்க முடியாதது அதிகாரப் பசி மட்டும்தான்.

கழுகார் பதில்கள்

சீ.பாஸ்கர், சென்னை - 44.

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், தி.மு.க தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறாரா?

1985-86 காலக்கட்டங்களில் அதற்கான வாய்ப்பு வந்தபோதும் பிரபாகரனால் அந்த சூழ்நிலைகள் தவிர்க்கப்பட்டன. கருணாநிதி தனது பிறந்தநாளுக்காக வசூலான நிதியை ஐந்து போராளி இயக்கங்களுக்குப் பிரித்துக் கொடுத்தபோது விடுதலைப்புலிகள் அமைப்பு அதனை வாங்கவில்லை. மதுரையில் தமிழீழ ஆதரவாளர் கூட்டமைப்பு மாநாட்டுக்கு அகில இந்திய தலைவர்கள் அழைக்கப்பட்டதுபோல தமிழீழ அரசியல் அமைப்புகளின் பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டார்கள். அதற்கு பிரபாகரன் வரவில்லை. தனக்கு பதிலாக பேபி சுப்பிரமணியத்தை அனுப்பி வைத்தார். சென்னை துறைமுக விருந்தினர் மாளிகையில் நடந்த சந்திப்பில் பாலசிங்கம், யோகி ஆகியோர் வந்து கருணாநிதியை சந்தித்தார்களே தவிர, பிரபாகரன் வரவில்லை.

12.05.1986 அன்று அன்றைய காமராஜர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும் இன்றைய தி.மு.க செய்தித் தொடர்பாளருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணனின் திருமணம் சென்னையில் நடந்தது. அப்போது மேடையில் கருணாநிதி இருந்தார். கீழே பின்வரிசையில் பிரபாகரன் இருந்துள்ளார். திருமணம் முடிந்து கருணாநிதி செல்லும்போது, பரஸ்பரம் இருவரும் வணக்கம் வைத்துக்கொண்டதாகத் தகவல் உண்டு.  

இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

இன்னமும்கூட ஜெயலலிதாவை ஒரு குரூப் ஏமாற்றி வருவதாகக் கூறப்படுகிறதே?

இன்னமுமா அவர் ஏமாறத் தயாராக இருக்கிறார்?

லட்சுமி காந்தம், வேலூர்( நாமக்கல்).

தி.மு.கவில் ஒரு மாவட்டச் செயலாளரை (சேலத்துக்கு) நியமிக்க முடியவில்லை. ஆனால் ஜெயலலிதா மட்டும் பதவிகளை அதிரடியாகப் பறிக்கிறாரே?

அங்கே ஜெயலலிதா நினைத்தால் நினைத்ததை உடனடியாக செய்து முடிக்கிறார். இங்குதான் ஆயிரத்தெட்டுத் தடங்கல்கள் உண்டே!

டி.ஜெய்சிங், கோவை.

தி.மு.க தலைவர் பதவியை ஸ்டாலினுக்கு கொடுத்தால் கட்சி உடைந்துவிடும் என்று கருணாநிதி பயப்படுகிறாரா?

ஸ்டாலினுக்கு கொடுக்காவிட்டால் கட்சி ஒன்றும் உடைந்துவிடாது என்றும் நினைக்கிறார். அதனால்தான் இழுக்கிறார்!

செ.அ.ஷாதலி, கோனுழாம்பள்ளம்.

மங்கோலிய மன்னன் தைமூர் மாற்றுத்திறனாளி என்பது உண்மையா?

கழுகார் பதில்கள்

ஆம்! மூச்சு விடுவதைப்போலவே போர் செய்வதையும் இயற்கையான ஒரு செயலாகச் செய்தவர் தைமூர். அப்படித்தான் ஒரு போரில் அவரது காலில் அம்பு பாய்ந்தது. அதனை அகற்றிவிட்டாலும் அவரால் முன்பைப்போல நடக்க முடியவில்லை. விந்தி விந்தி நடந்தார், அதற்காக சும்மா இருக்கவில்லை. போரை வழக்கம்போலவே தொடர்ந்தார். அவரது உடல் ஊனத்தைப் பார்த்து மட்டமாக நினைத்தவர்கள் அனைவரும் மலைத்துப் போகும் அளவுக்கு போர்க்களத்தில் புகுந்து விளையாடினார் தைமூர்.

அவரது புகழ்பெற்ற வாசகம்: 'எதிரியை வீழ்த்துவது என்பது தோற்கடிப்பது மட்டுமல்ல. உடல் வேறு தலைவேறு ஆகாத வரை அவன் உன் எதிரிதான்!’

அவரது கல்லறையில் எழுதப்பட்டது இப்படி: 'இந்தக் கல்லறையைத் திறந்தால் மண்ணில் போர் மூளும்!’

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002 kalugu@vikatan.com  என்ற முகவரியிலும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு