Published:Updated:

காங்கிரஸ் கட்சி நாலாவது இடத்தில் இருக்கிறது!

சிதம்பரம் நடத்திய சீக்ரெட் மாநாடு

பிரீமியம் ஸ்டோரி

ளங்கோவனுக்கும் சிதம்பரத்துக்கும் தமிழக காங்கிரஸ் கட்சியில் நிலவிவந்த பனிப்போர், காரைக்குடியில் உச்சகட்டத்துக்கு வந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் இல்லாமல் அங்கு பிரமாண்ட மாநாட்டை கடந்த 21-ம் தேதி நடத்தி, தனது செல்வாக்கை நிலைநிறுத்திக் காட்டியிருக்கிறார் ப.சிதம்பரம்.

சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது இளங்கோவன் கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க முயன்றபோது, அந்தக் கோபத்தை டெல்லி தலைமையிடம் காட்டி தனது மகனைக் காப்பாற்றினார். அதன்பின் மாவட்டப் பொறுப்பாளர்கள் பெயர்கள் தமிழகம் முழுவதும் அறிவிக்கப்பட்டபோது சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் பல இடங்களில் புறக்கணிக்கப்பட்டனர். இந்த நிலையில்தான் காரைக்குடியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்த சிதம்பரம், ''நாம் சொல்லி டெல்லி செய்த காலம் போய்விட்டது. இனி எல்லாவற்றுக்கும் டெல்லியை நம்ப முடியாது. இனி கட்சியை அடிமட்டத்தில் இருந்து நாம்தான் வளர்க்க வேண்டும். டெல்லி தலைமை சொல்லி செய்த காலம் இனி பயன் தராது என்பதை சோனியாவிடம் சொல்லிவிட்டேன். எனவே, கிராமம் வாரியாக நாம் கட்சியைப் பலப்படுத்த வேண்டும். அதற்கு முதல்படியாக காரைக்குடியில் சிவகங்கை மாவட்டப் பிரதிநிதிகள் மாநாட்டை நடத்துவோம்' என்றார்.

காங்கிரஸ் கட்சி நாலாவது இடத்தில் இருக்கிறது!

டெல்லியையே நம்ப முடியாது என்று சொன்னதாலோ என்னவோ, தமிழக தலைவர் இளங்கோவனிடம் இந்த மாநாடு குறித்த விவரத்தைத் தெரிவிக்காமலேயே மாநாட்டை நடத்திவிட்டனர். சிதம்பரத்துக்கு எதிராக அரசியல் செய்துவந்த சுதர்சன நாச்சியப்பனை இந்த மாநாட்டுக்கு அழைத்து இருந்தனர்.

மாநாட்டில் கார்த்தி சிதம்பரம், ''தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு முன்னுதாரணமான மாவட்டம் இருக்கிறது என்றால், அது சிவகங்கை மாவட்டம்தான். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகளைத் தாண்டி வாங்கியது நானும் வசந்தகுமாரும் மட்டும்தான். மற்ற அனைத்துத் தொகுதிகளிலும் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வாக்குகள்தான் வாங்க முடிந்தது. இதற்குக் காரணம், இங்குதான் கட்சிக்கு நல்ல கட்டுமானம் இருக்கிறது.

காங்கிரஸ் கட்சி நாலாவது இடத்தில் இருக்கிறது!

உறுப்பினர் சேர்க்கையில் 70 லட்சம் உறுப்பினர்கள் சேர்த்ததாக டெல்லிக்குத் தெரிவித்தோம். ஆனால், தேர்தலில் விழுந்த வாக்குகள் 18 லட்சம் மட்டும்தான். மீதி உறுப்பினர்கள் எங்கே போனார்கள்?

அதேபோல் இளைஞர் காங்கிரஸில் 13 லட்சம் பேர் சேர்ந்ததாகக் கூறினோம். அதுவும் உண்மையல்ல. அப்புறம் எப்படி கட்சி வளரும்? இனி வரும் காலங்களில் உண்மையாக உறுப்பினர் சேர்க்கை நடத்த வேண்டும்'' என்று பேசினார்.

கடைசி நேரத்தில் வருகை தந்து மைக்கை பிடித்த சுதர்சன நாச்சியப்பன், ''தமிழகத்தில் எந்த நேரத்திலும் சட்டமன்றத் தேர்தல் வரும் நிலை உள்ளது. ஆகையால் நாம் கட்சியில் உள்ள திறமையானவர்களைத் தேர்ந்தெடுத்து இப்போதே வேட்பாளர் பட்டியல் தயார் செய்து பணியாற்றத் தொடங்க வேண்டும்' என்றார்.

காங்கிரஸ் கட்சி நாலாவது இடத்தில் இருக்கிறது!

ப.சிதம்பரம் பேசும்போது, 'கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தோற்போம் என்பது எனக்கு முன்பே தெரியும். பி.ஜே.பியின் பிரசாரம் அனைத்தும் மாயை. நல்ல அரசானது பாதிக்கப்பட்டவர்களையும் சாதாரண மக்களையும் சிறுபான்மையினரையும் சார்ந்தே இருக்க வேண்டும். மோடி அரசு அப்படி இல்லை. மோடி அரசு, 'நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது...’ என்று கூறிக்கொண்டேதான் இருக்கும். எப்போது பிறக்கும் என்று அவர்களால் கூறமுடியாது. பொது நல திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு பாதிக்குமேல் குறைத்துள்ளது. இதனால் கல்வி, மருத்துவம் மற்றும் பல நல்ல திட்டங்கள் பாதிப்படையும்.

தமிழகத்தில் காங்கிரஸ் ஆளும் கட்சி, எதிர்க் கட்சி என்று இருந்த காலம் போய் இன்று நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் நடக்கும் உள்ளாட்சித் தேர்தல்களில் நாம் அதிக இடங்களில் வெற்றி பெற்றால்தான், அடுத்த முறை மத்தியிலே வலுவாக ஆட்சி அமைக்க முடியும். அதற்காகத்தான் இப்போது ஊராட்சிப் பிரதிநிதிகள் மாநாடு நடத்தப்படுகிறது. என் உடம்பில் கடைசிச் சொட்டு ரத்தம் உள்ள வரை காங்கிரஸ் கட்சிக்குப் பாடுபடுவேன்'' என்று முடித்தார்.

கட்சித் தலைமைக்குத் தெரியாமல் சிதம்பரம் நடத்திய சீக்ரெட் மாநாடு காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருப்பது என்னவோ நிஜம்!

அ.சையது அபுதாஹிர், படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு