பிரீமியம் ஸ்டோரி

ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.

வருங்காலத்தில் எம்.எல்.ஏ சீட்டு வாங்க ஒருவருக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்?

தொகுதிக்கு குறைந்தது ரூ.10 கோடி செலவு செய்பவராக இருக்க வேண்டும். அந்த ஒரு தகுதி போதும்.

செ.அ.ஷாதலி, கோனுழாம்பள்ளம்.

தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றத்துக்குப் பலர் குரல் கொடுத்தும் அம்பேத்கரின் பெயரையே பிரதானப்படுத்துவது ஏன்?

கழுகார் பதில்கள்

பலர் குரல் கொடுத்தாலும் அதில் உறுதியாக இருந்து போராடியவர் அம்பேத்கர். அது வீதியில் நடக்கும் போராட்டமாக மட்டும் இல்லாமல், பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றவர். வட்டமேஜை மாநாட்டில் பங்கேற்றவர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பொறுப்பைப் பெற்றவர். நேருவின் அமைச்சரவையில் சட்ட அமைச்சராகவும் பதவி வகித்தவர். பலரும் போராட்டக்காரர்களாகவே மறைந்திருப்பார்கள். அம்பேத்கர் மட்டும்தான் செயல்படுத்தும் இடத்தையும் தொட்டவர். அதனால் அவருக்கு உரிய முக்கியத்துவம் தரப்படுகிறது.

ச.ஜான்பிரிட்டோ, திண்டுக்கல் - 5.

படிப்படியாக மதுவிற்பனையைக் கட்டுப்படுத்த அரசு என்ன செய்ய வேண்டும்?

மதுவிற்பனை நேரத்தைக் குறைக்க வேண்டும், பார்களை மூட வேண்டும், ஆல்கஹால் அளவைக் குறைக்க வேண்டும், பிராண்ட் வகைகளை நிறுத்த வேண்டும், மதுபான நிறுவனங்களை முழுமையாகக் கண்காணித்து கட்டுப்பாடுகளை முடுக்கிவிட வேண்டும். இவைதான் ஆரம்பகட்டப் பணிகள்.

தாமஸ் மனோகரன், புதுச்சேரி - 4.

கடவுள் நம்பிக்கை கொண்ட ஜெயலலிதாவுக்கு இத்தனை சோதனைகள் எதற்கு?

கடவுள்களுக்கே  வந்த  சோத னைகளைப் படித்ததில்லையா நீங்கள்?

வி.எஸ்.ராமு, செம்பட்டி.

சுப்பிரமணியன் சுவாமி நாடாளுமன்ற இரு அவைகளிலும் அமளியை ஏற்படுத்திவிட்டாரே?

நாடாளுமன்றத்துக்குள் போக முடியாவிட்டாலும் நாடாளுமன்றம் தன்னை மறந்துவிடக் கூடாது என்று நினைப்பவர் சுவாமி. அவர் பேசியது, இந்தியாவின் நல்லிணக்கத்துக்குக் குந்தகமானது.

பேனர்ஜி, மதுரை.

அ.தி.மு.க-வினர் மனதில் என்ன ஓடிக் கொண்டிருக்கும்?

எல்லாக் கோயில்களிலும் பூஜை யாகம் முடித்தாகிவிட்டது. சும்மா இருக்க முடியாது. புதிதாகக் கோயில் கட்டி யாகம் நடத்தலாமா என்று யோசிப்பார்கள்.

பிருந்தா சுந்தரம், வடபழநி.

ஆனந்தமாக இருந்தாலும் அதிர்ச்சியாக இருந்தாலும் இந்த முறை தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் கண்ணீரோடுதான் பட்ஜெட்டைத் தாக்கல் செய்வார் என்று நினைக்கிறேன்..?

இதுவரை அவருக்கு அப்படி ஒரு ஐடியா இல்லாமல்கூட இருக்கலாம். இதைப் படித்தபிறகு உண்மையில் கலங்கத்தான் செய்வார்.

ஏழாயிரம்பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்.

மறைந்த கிள்ளிவளவன் பற்றி..?

கழுகார் பதில்கள்

திராவிட இயக்கத்தில் மலர்ந்து தேசிய இயக்கத்தில் மணம்பரப்பியவர் கிள்ளிவளவன். எந்த இயக்கத்தில் இருந்தாலும் தன்னுடைய கொள்கை, நேர்மை ஆகியவற்றை அடமானம் வைக்காதவர். வாழப்பாடி ராமமூர்த்தி பெட்ரோலியம் அமைச்சராக இருந்தபோது எத்தனையோ பேர் எவ்வளவோ ஆசைவார்த்தைகளைக் கூறியபோதும் பணம், பதவிக்கு ஆசைப்படாதவராக இருந்தார் கிள்ளி. மணிக்கணக்கில் அவரிடம் பேசிக்கொண்டே இருக்கலாம். சென்னை மொழி அவருக்கு லாகவமாக வரும். ''தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ஒருவரை அறிவித்ததும் அவர் ஏன் உடனடியாக டெல்லி போகிறார்?' என்று ஒருவர் கிள்ளியிடம் கேட்டார். ''அங்கே இரண்டு விதமான சென்ட் பாட்டில்கள் இருக்கும். தேர்தல் நேரத்தில் கோபாலபுரம் போகவேண்டுமானால் கருணாநிதிக்கு பிடித்த சென்ட் பாட்டிலை எடுத்துப் போக வேண்டும். அ.தி.மு.கவுடன் சேரவேண்டுமானால் ஜெயலலிதாவுக்கு பிடித்த சென்ட் பாட்டிலை எடுத்துச் செல்ல வேண்டும். அந்த சென்ட் பாட்டிலை கொடுப்பதற்காகத்தான் அழைக்கிறார்கள்' என்று கிள்ளி சொன்ன ஜோக் அரசியல் தலைவர்களிடம் பிரபலமானது.

ஸ்கூப் அடிப்பதில் கிள்ளி மன்னன். கருணாநிதி  ராஜாத்திக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்று தனது நண்பர் எம்.கே.டி.சுப்பிரமணியத்திடம் சொல்ல... அவர், தான் நடத்திய பத்திரிகையில் பெட்டிச் செய்தியாகப் பிரசுரம் செய்தார். அது, அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தியது. கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அப்படி ஒரு மனிதர் கிள்ளி.

என்.முருகேஷ், மங்கைநல்லூர்.

ராகுல் காந்தியை உளவு பார்க்கிறது மோடி அரசு என்று காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறதே?

சும்மா இருக்கும் ராகுல் காந்தியை சீண்டிச் சீண்டியே உணர்ச்சிமிகு தலைவர் ஆக்கிவிடுவார்கள்போல. ராகுலைப் பற்றி காங்கிரஸ்காரர்கள் எந்தச் செய்தியையும் பரப்ப வேண்டாம். பி.ஜே.பியே அதனை கச்சிதமாகச் செய்து விடுகிறார்கள். ராகுலுக்கான பி.ஆர்.ஓ வேலையை பி.ஜே.பியே பார்த்து விடுகிறது.

எஸ்.பூவேந்த அரசு, சின்னதாராபுரம்.

சட்டசபை எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த்தின் செயல்பாடுகளைக் கூர்ந்து நோக்கும்போது, அடுத்து வரும் சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் அவரே ஜெயிப்பாரா என்பது சந்தேகம்தானே?

ம்!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002 kalugu@vikatan.com என்ற முகவரியிலும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு