Published:Updated:

மதவாத அமைப்புகளை எதிர்ப்பதே இன்றைய அரசியல்!

’குஜராத்’ தீஸ்தா செட்டல்வாத் சொல்கிறார்

பிரீமியம் ஸ்டோரி

ந்தக் கொடூரம் நிகழ்ந்து 12 வருடங்கள் ஆகிவிட்டன. மதவெறியர்களின் வன்முறை வெறியாட்டங்களால் நிலைக்​குலைந்து போனது குஜராத் மாநிலம். நூற்றுக்கணக்கான மக்கள் துள்ளத்துடிக்க சாய்க்கப்பட்டு குஜராத் முழுவதும் ரத்த வாடை வீச, மதவெறியர்களுக்கு எதிராக வெகுண்டு எழுந்தவர்களில் தீஸ்தா செட்டல்வாத்தும் ஒருவர். அவருக்கு 'அரசியல் மற்றும் பொது​வாழ்க்கையில் நேர்மைக்கான காயிதே மில்லத் விருது’  சென்னையில் வழங்கப்பட்டது. காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை நிகழ்ச்சிக்காக  சென்னைக்கு வந்திருந்த மனித உரிமைப் போராளி தீஸ்தாவை சந்தித்துப் பேசினோம்.      

''குஜராத்தில் 2002-ல் நடந்த வன்முறைச் சம்பவங்களை நினைவுகூற முடி​யுமா ?'

''என் வாழ்நாளில் மறக்க முடியாத துயரச் சம்பவம் அது. பிப்ரவரி மாதம் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்து முடிந்ததில் இருந்து குஜராத் மாநிலம் முழுவதும் பதற்றம் தொற்றிக் கொண்டது. ராஜ்பிப்லா, நர்மதா, தாஹுத், ஹிம்மாத்நகர், வதோதரா, அகமதாபாத், கட்ச் போன்ற பகுதிகளிலிருந்து தினமும் சுமார், 400 தொலைபேசி அழைப்புகள் எனக்கு வந்துகொண்டே இருந்தன. சா​தாரண அழைப்புகள் அல்ல. அவை, துயரத்தின் விளிம்பில் சமூக விரோதிகளால் சூறை​யாடப்பட்டு நிர்க்கதியாய் விடப்பட்டவர்களின் துயரக் குரல்கள். என் வாழ்க்கையை ஒட்டு​மொத்தமாகப் புரட்டிப் போட்டது குஜராத் வன்​முறை.''

மதவாத அமைப்புகளை எதிர்ப்பதே இன்றைய அரசியல்!

''அந்த விவகாரத்தில் நீங்கள் தலையிட்டபோது, என்ன மாதிரியான பிரச்னைகளை எதிர்கொண்​டீர்கள்?'

''எங்கள் மீது அவதூறுகள் வீசப்பட்டன. சூழ்ச்சிகள் நடந்தன. தவறான தகவல்களைக் கொண்டு எங்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவை அனைத்தும், அரசு எந்திரத்தின்  துணையோடு நடந்தன. ஆனாலும், இன்றுவரை அதில் ஒன்றைக்கூட அவர்களால் நிரூபிக்க முடியவில்லை.

குஜராத் மாநில உள்​துறை அமைச்சர் அமித் ஷாவும் எம்.எல்.ஏ மது வத்சவாவும் எங்களை மிரட்டினர். அவர்​கள், பெஸ்ட் பேக்கரி வழக்கின் முக்கிய சாட்சியான ஜகிரா ஷேக்கை மிரட்டி எனக்கு எதிராக சாட்சி சொல்ல வைத்தனர். எனவே, இந்த விவகாரத்தில் உயர் மட்ட விசாரணை கேட்டு உச்ச நீதிமன்றத்தை அணுகினேன். அதற்கு அனுமதி கிடைத்தது. உயர் மட்ட கமிட்டி விசாரணை நடைபெற்றதில், நான் குற்றமற்றவள் என்பதும், ஜகிரா ஷேக் சொன்ன தகவல்கள் தவறானவை என்பதும் நிரூபணமானது. பெஸ்ட் பேக்கரி வழக்கு பற்றி உச்ச நீதிமன்றம் 12.04.2004 அன்று சொன்ன தீர்ப்பில், 'ரோம் நகரம் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தபோது பிடில் வாசித்துக்கொண்டிருந்த நீரோ மன்னன் என்றும் அரசு வழக்கறிஞர் எதிர் தரப்பு வழக்கறிஞர்போல் செயல்படுகிறார் என்றும் குறிப்பிடப்பட்டது.''

''குஜராத் வன்முறை வழக்கில் உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாடு எப்படி இருந்தது?'

''கலவையான அணுகுமுறையைத்தான் உயர் நீதிமன்றம் வெளிப்படுத்தியது. உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பு இருந்தமையால் நீதி நிலைநாட்டப்பட்டது. அந்தக் கடிவாளம் இல்லாத சமயங்களில் உச்ச நீதிமன்றத்தையே அணுக வேண்டிய சூழல் இருந்தது. நாங்கள் கூட்டாக உருவாக்கிய நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் அமைப்பின் மூலம் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளைச் செய்து, இதுவரை 120 பேருக்கு கடுமையான தண்டனைகளை வாங்கிக் கொடுத்திருக்கிறோம்.''

''நிதி வசூல் செய்வதாக உங்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்​படுகிறதே?'

''அனைத்தும் ஆதாரமற்றவை. எங்கள் மீது ஒவ்வொரு முறையும் குற்றச்​சாட்டுகள் வைக்கப்பட்டபோதும் அதை வெளிப்படைத்​தன்மையோடுதான் அணுகியிருக்கிறோம். 2,000 பக்கங்கள் கொண்ட கணக்கு வழக்குகளைப் பொதுதளங்களில் வெளியிட்டிருக்கிறோம்.'  

''குல்பர்க் நிதி மோசடி வழக்கு அரசியல் காழ்ப்புஉணர்ச்சி காரணமாக உங்கள் மீது தொடுக்கப்பட்டதாகச் சொல்கிறீர்களா?'

''இந்துத்துவா அமைப்பினர் எங்களுடைய முன்னாள் ஊழியரைத் தூண்டிவிட்டு, அவரை வைத்தே பழிவாங்கத் துடிக்கிறார்கள். வேண்டுமென்றே வீண் குழப்பங்களை ஏற்படுத்தி குல்பர்க் வழக்கின் முக்கிய சாட்சியங்களை திசைத் திருப்பி அவர்களோடு எங்களுக்கு இருக்கும் இணக்கமான உறவை முறிக்கப் பார்க்கிறார்கள். ஆனால், அது ஒருபோதும் நடக்காது.''

''உங்களுடைய சபரங் மையத்தைப் பற்றி சொல்லுங்கள்?'

''பெரும்பான்மையோ சிறுபான்மையோ, இனவாத அரசியலின் முகத்திரையைக் கிழித்து அவர்களின் உண்மை முகத்தைக் காட்டுவதே சபரங் மையத்தின் நோக்கம். மேலும், வகுப்புவாத மோதல்களை ஆராய்ந்து அதன் பின்னணிகளைத் தோலுரித்துக் காட்டுவதே அதன் பணி. நம் பண்பாட்டு கலாசாரத்தை மறுசீரமைப்பதே எங்களுடைய முதன்மையான நோக்கம்.''

''இன்றைய இந்திய சூழ்நிலை பற்றி என்ன சொல்கிறீர்கள்?'

'' மதச்சார்பற்ற இந்தியாவில் மதவாதம் பல வடிவங்களைக் கொண்டிருக்கிறது. 24 மணி நேரமும் பிரிவினைவாதம் மற்றும் வெறுப்பு உணர்ச்சியைப் பரப்புவதே அவர்களது தலையாயப் பணியாக இருக்கிறது. அதனை முறியடிப்பதே இன்றைய அரசியலாக இருக்க வேண்டும்!'

நா.இள.அறவாழி, படம்: கு.பாலசந்தர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு