Published:Updated:

'கண்ணை தொறக்கணும் சாமி!’

புது சிக்கலில் சேலம் தி.மு.க.

பிரீமியம் ஸ்டோரி

சேலத்தில் ஸ்ரீராமலிங்க சௌடேஸ்வரி கோயில் நிர்வாகத்துக்குள் புகுந்து ஆதிக்கம் செலுத்துவதாக தி.மு.க-வின் சேலம் மாநகரச் செயலாளர் கலையமுதனுக்கு எதிராகக் கொந்தளிக்கிறார்கள் தேவாங்க செட்டியார் சமூகத்தினர்.

'கண்ணை தொறக்கணும் சாமி!’

'சேலம் மாநகராட்சிக்குள் தேவாங்க செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த ஒன்றரை லட்சம் பேர் இருக்கிறோம். சேலம் அரிசிபாளையத்தில் மட்டும் 700 குடும்பங்கள் உள்ளன. இவர்களுக்கான குலதெய்வம் அரிசிபாளையத்தில் உள்ள ஸ்ரீராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோயில். இந்தக் கோயிலுக்குத் திருமண மண்டபம், வழிபாட்டு மண்டபம், கடைகள், வீடுகள் உள்ளன. இவற்றின் மூலம் கோயிலுக்கு வருமானம் வருகிறது. எங்கள் சமுதாயத்தில் உள்ள பட்டக்காரர் ஜெயகோபால், மூன்று வருடங்களுக்கு ஒருமுறை மகாசபையைக் கூட்டி, கோயில் நிர்வாகக் கமிட்டி, வழிபாட்டு மண்டபக் கமிட்டி, கோயில் சொத்துகள் பராமரிப்பு கமிட்டி ஆகியவற்றுக்கான நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பார்.

ஆனால் 2007-ல் அடாவடித்தனமாகக் கோயிலுக்குள் புகுந்தார் தி.மு.க-வின், சேலம் மாநகரச் செயலாளர் கலையமுதன். அவருடைய நெருங்கிய சகாவான அன்புமொழியைக் கோயில் கமிட்டி தலைவராகவும் அவரது இரண்டாவது மகன் ராஜசேகரை நிர்வாகக் குழுவிலும் அவரது அண்ணனை தேவாங்க திருமண மண்டபத்தின் துணைத் தலைவராகவும் அவரது மூத்த மகன் மாதேஸ்வரனை வழிபாட்டு மண்டபத்தின் துணைத் தலைவராகவும் நியமித்து, இவர்களுக்கெல்லாம் சிறப்பு ஆலோசகராக தன்னைத்தானே நியமித்துக்கொண்டு, கோயிலின் ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டார். கடந்த எட்டு ஆண்டுகளாக எந்தவொரு கணக்கையும் காட்டவில்லை. மகாசபையைக் கூட்டவில்லை. புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கவில்லை. மேலும், எங்களைக் கோயிலுக்குள் சாமி கும்பிடவோ, எங்கள் வீட்டுத் திருமணங்களை சமூக மண்டபத்தில் நடத்தவோ விடுவதில்லை' என்று கலையமுதனுக்கு எதிராகப் புகார் பட்டியலை வாசிக்கிறார், கோயில் செட்டிதனக்காரர் பழனிசெட்டி.

''கடந்த எட்டு ஆண்டுகளாகக் கோயில் நிர்வாகத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டார். பஞ்சலோக விநாயகர் சிலை செய்​ததில் பல சந்தேக ரேகைகள் உண்டு.  முருகன் சிலை செய்து கோயிலில் படுக்கப்போட்டு முருகன் கண் திறந்துட்டான் என்று சொன்னது குறித்து பலரும் சந்தேகம் கிளப்புகிறார்கள். ஐய்யப்பன் சிலை செய்ததிலும் புகார்கள் எழுந்தது' என்று குற்றம்சாட்டுகிறார், ஊர் பட்டக்காரர் ஜெயகோபால்.

'கண்ணை தொறக்கணும் சாமி!’

இந்தப் புகார்கள் குறித்து கலையமுதனிடம் கேட்டோம். ''எனக்கு 40 வருட அரசியல் அனுபவம் இருக்கிறது. இரண்டு முறை கூட்டுறவு சொசைட்டியில் சேர்மனாகவும் மூன்று முறை மாநகராட்சிக் கவுன்சிலராகவும் இருந்து, இந்தப் பகுதி மக்களுக்கு ஓடாய் உழைத்து என் ரத்தத்தை வியர்வையாகச் சிந்தியிருக்கிறேன். என் பணியில் சிறு துரும்பு அளவு தவறுகூட செய்தது கிடையாது. என் அரசியல் வாழ்க்கையைக் களங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், நான் ராஜேந்திரன் அணியில் இருந்து செயல்படுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், எங்கள் கட்சியில் உள்ள ஒரு கோஷ்டிதான் அவர்களைத் தூண்டி​விட்டிருக்கிறது. நானும் இதே சமூகத்தில் பிறந்தவன். அந்தக் கோயிலில் எங்களுக்கும் உரிமை இருக்கிறது. 27 பொறுப்​பாளர்களில் என் மகனும் ஒருவன். அவ்வளவுதான். விநாயகர் சிலை, முருகன் சிலை, ஐயப்பன் சிலை செய்தது உண்மைதான். அதற்கான முறையான கணக்குகள் நிர்வாகத்திடம் இருக்கும். முருகன் கண் திறந்தான் என்று நான் சொல்லவில்லை. ஊர்மக்களும், பூசாரியும் சொன்னார்கள். நான் சென்று பார்த்தேன். 'கண்ணைத் தொறக்கணும் சாமி!’ என்று வணங்கிவிட்டு வந்தேன். என் மீதான குற்றச்​சாட்டுகளில் ஒன்றை நிரூபித்​தால்கூட, அரசியல் வாழ்க்கையைவிட்டே விலகுவதற்குத் தயாராக இருக்கிறேன். நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது. அது அவர்களை சும்மாவிடாது'' என்று தழுதழுத்தார்.  

கலையமுதனுக்கு எதிராக தி.மு.க தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின் ஆகியோரைச் சந்தித்துப் புகார் கொடுத்திருக்​கிறார்கள்.

ஆலய விவகாரம் அரசியல் ஆகி இருக்கிறது!

வீ.கே.ரமேஷ், படங்கள்: எம்.விஜயகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு