Published:Updated:

மிஸ்டர் கழுகு: உடன்குடி மின்சாரம் உண்மை என்ன?

8 ஆயிரம் கோடி ‘ஷாக்’ டெண்டர்

பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு: உடன்குடி மின்சாரம் உண்மை என்ன?

கையில் கனமான கோப்பு​களுடன் நம்முன் ஆஜரா​னார் கழுகார்!

''ஏதோ புகார் பட்டியல் தாக்கல் செய்யப்​போவதுபோலத் தெரிகிறதே!' என்றோம் தலையாட்டியபடியே ஆரம்பித்​தார் கழுகார்.

''உடன்குடி மின் திட்டத்தை வைத்து அரசல் புரசலாக இருந்த தகவல்கள் றெக்கைகட்டிப் பறக்க ஆரம்பித்துள்ளன. கோடைகாலம் வந்தாலே மின்சாரத்தின் தேவை அதிகமாகும். மின்வெட்டு, கோடையில் சகஜமாகும். அப்படிப்பட்டச் சூழ்நிலையில்தான், உடன்குடி மின் திட்ட டெண்டர் திடீரென ரத்து செய்யப்பட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான டெண்டர் இது. இதனை முறைப்படி செய்திருந்தால் தமிழகத்தின் மின் தேவை ஓரளவு திருப்திகரமாக இருந்திருக்கும். தனியாரிடம் வாங்கும் நிலைமையும் குறைந்திருக்கும்!'

''என்னதான் நடந்தது?'

மிஸ்டர் கழுகு: உடன்குடி மின்சாரம் உண்மை என்ன?

''தி.மு.க ஆட்சியில் மத்திய அரசு நிறுவன​மான பாரத மிகுமின் நிறுவனமும் (பெல்) தமிழ்நாடு மின்சார வாரியமும் கூட்டுத் திட்டத்தின்படி 8 ஆயிரத்து 362 கோடி ரூபாய் மதிப்பில் 1,600 மெகாவாட் மின் உற்பத்தித் திறன்கொண்ட இரண்டு யூனிட்டுகள் தொடங்கத் திட்டமிடப்பட்டது. 2009-ல் உடன்குடி பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற நிறுவனமும் அமைக்கப்பட்டது. அதற்குள் ஆட்சி மாற்றம் நடந்தது. 2012ல் இந்தத் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா ரத்து செய்தார். தமிழ்நாடு மின்சார வாரியமே தனித்து இந்தத் திட்டத்தைத் தொடங்கும் என்றும் ஜெயலலிதா உறுதி செய்தார். இதற்கான டெண்டர் 2013 ஏப்ரலில் தொடங்கியது. மத்திய அரசின் பாரத மிகுமின் நிறுவனமும் (பெல்) மூன்று சீன நிறுவனங்களும் இதில் பங்கெடுத்துக் கொண்டன. அதே ஆண்டு அக்டோபர் மாதம் தொழில்நுட்பப் புள்ளி ஒப்பந்தம் டெண்டர் திறக்கப்பட்டு பெல் நிறுவனமும் சீனாவைச் சேர்ந்த ஒரு நிறுவனமும் தேர்வானது. தொழில்நுட்பப் புள்ளி ஒப்பந்தம் திறக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள் விலை புள்ளி ஒப்பந்தம் திறக்கப்பட வேண்டும். ஆனால், உடனடியாகத் திறக்கப்படவில்லை. 2014-ம் ஆண்டு நவம்பரில்தான் இந்த விலை ஒப்பந்தப் புள்ளி டெண்டர் திறக்கப்பட்டது. அதில் இருந்துதான் முக்கியமான சிக்கல் எழுந்தது!'

''அது என்ன?'

''இந்த விவகாரத்தை முதலில் மோப்பம் பிடித்தது டாக்டர் ராமதாஸ்தான். கடந்த 13-ம் தேதி நடந்த மின்வாரியக் கூட்டத்தில் மொத்தமாகவே இந்தத் திட்டத்தை முடக்கும் காரியங்கள் நடக்க ஆரம்பித்ததாக டாக்டர் ராமதாஸும், அவருக்கு அடுத்து அறிக்கைவிட்ட கருணாநிதியும் சொல்லி திகிலைக் கூட்டி இருக்கிறார்கள். அவர்கள் அறிக்கைவிட்டதும் மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஒரு பதிலை அளித்துள்ளார். அதில், 'தெரிவு செய்யப்பட்ட இரண்டு நிறுவனங்கள் அளித்த விலைப் புள்ளிகளில் குறைகள் உள்ளன. குறைகள் உள்ள ஒப்பந்தப் புள்ளிகளை ஏற்றுக்கொள்வதற்கு சட்டத்தில் வழியில்லை’ என்று விளக்கம் அளித்துள்ளார். கருணாநிதி விடவில்லை. 'டெண்டரில் குறை இருக்கிறது என்று ரத்து செய்ய மூன்று ஆண்டுகளா? தாமதப்படுத்தப்பட்ட காலத்தில் நடந்தது என்ன?’ என்று கேள்வியைக் கிளப்பி உள்ளார். 'தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவதில் காட்டப்​படும் உற்சாகம்தான் ரத்து செய்​வதற்கான காரணமா?’ என்பது கருணாநிதியின் கேள்வி. ராமதாஸ் இன்னும் ஒருபடி மேலே போய், 'தமிழ்​நாடு மின்வாரியத்தின் சார்பில் செயல்படுத்தப்படும் மின் திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கே தரப்பட்டு வருகின்றன. அந்த நிறுவனம் அதிக விலையை கோரி இருப்பதால் அந்த நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்க முடியாத சூழ்நிலை உள்ளது. அவர்களுக்கு சலுகை காட்டவே ஒப்பந்தம் ரத்து ஆகி உள்ளது’ என்று ராமதாஸ் சொல்லியிருக்கிறார்!'

''ஓஹோ!'

''விலைப்புள்ளி ஒப்பந்தம் திறக்கப்​பட்டபோது விலை குறைவாக பெல் நிறுவனமும் அதைவிட கூடுதலாக சீன நிறுவனமும் விலையை நிர்ணயம் செய்துள்ளன. இதனால் பெல் நிறுவனத்துக்​குத்தான் ஒப்பந்தம் போகும் என்பது நிலைமை. தங்களுக்கு டெண்டர் கிடைக்கும் என்று பெல் காத்​திருக்க, முறையான அனு​மதி வராத நிலையில் அவர்களே ஸ்பை வைத்து வாட்ச் செய்துள்ளார்கள். தேவை​யில்லாமல் இழுபறி செய்வதாகத் தகவல் வர, தங்களது புகாரை ஓர் அறிக்கை​யாக எழுதி தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் அனுப்பிவிட்டார்கள். உடனடியாக டெண்டரையே ரத்து செய்யும் முடிவுக்கு வந்துவிட்டார்கள்! சீன நிறுவனத்துக்கு ஆதரவாகத்தான் இப்படி நடந்து கொண்​டதாக கருணாநிதியும் ராமதாஸும் சொல்கிறார்கள். மின் ஊழியர் சங்கங்களும் இப்படித்தான் சொல்லி வருகின்றன!'

''அப்படியா?'

''மேட்டூரில் இருந்தும் தூத்துக்குடியில் இருந்தும் தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அரசுக்கு அனுப்பியுள்ள கடிதங்களில் தரம் குறைந்த சீனப் பொருட்கள் இங்கு வந்து இறங்குவதாகப் புகார்கள் சொல்லப்பட்டுள்ளன. முக்கிய வி.ஐ.பி ஒருவரின் மகன் சில டெண்டர்களை எடுத்துக் கொழிப்பதாகவும் தகவல். அதனையும் முடிச்சுப் போடுகிறார்கள். சிலர் இதனை உயர் நீதிமன்றத்தில் வழக்காகத் தாக்கல் செய்யும் முயற்சியில் இறங்கி உள்ளார்கள். நீதிமன்றத்தின் மூலமாகத்தான் உண்மை வெளிவர வேண்டும் போலும்!' என்றபடி அடுத்த மேட்டருக்குத் தாவினார் கழுகார்!

மிஸ்டர் கழுகு: உடன்குடி மின்சாரம் உண்மை என்ன?

''போலீஸ் டி.ஜி.பியான அசோக்குமார், தென்மாவட்டங்களுக்குத் திடீர் விசிட் சென்றார். ஆறு மாத காலமாக 100-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்த தென் மாவட்டத்துக்கு ஒரு டி.ஜி.பி செல்வதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை. இவ்வளவு லேட்டாகப் போகிறாரே என்று வேண்டுமானால் சொல்லலாம்!'

''சரிதான்!'

''தூத்துக்குடியில் இருந்து மாற்றப்பட்ட எஸ்.பியான துரை இன்னும் ரிலீவ் ஆகவில்லை என்று கேள்விப்பட்ட அசோக்குமார், அவரை போனில் பிடித்து சத்தம் போட்டு விரட்டினாராம். ஸ்ரீவைகுண்டம் பகுதியில் கடந்த ஒருமாதமாக சாதி ரீதியிலான கொலைகள் நடப்பது பற்றியும் அதன் தொடர்ச்சியாக இரு சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்கள் பற்றியும் விரிவாக கேட்ட பின்னர், இந்தச் சம்பவங்களைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்பது பற்றி விளக்கம் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட டி.எஸ்.பியிடம் கடுமையான குரலில் எச்சரித்தாராம். ஸ்ரீவைகுண்டம் பகுதியில் புதிய தமிழகம் நிர்வாகி பாஸ்கரன் கொலை செய்யப்பட்ட பின்னர் பதற்றம் நீடித்தது. இரு சமுதாயங்களுக்கு இடையே மோதல் ஏற்படும் நிலைமை உருவானது. இதுபற்றி உளவுத் துறை எச்சரித்தபோதிலும், லோக்கல் ஸ்டேஷனைச் சேர்ந்த சில அதிகாரிகள் எந்த முன்னெச்சரிக்கையும் செய்யவில்லை. அங்கிருந்த டி.எஸ்.பி நடவடிக்கை எடுக்காதது ஏன்?’ என்பது பற்றி காட்டமாகக் கேட்டாராம். புதிய தமிழகம் நிர்வாகி பாஸ்கரன் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை கைதுசெய்யும்போது, அதில் தொடர்புடைய மேலும் இருவர் அவருடனேயே இருந்திருகிறார்கள். அவர்களைக் கைது செய்யாமல் தப்ப வைத்தது யார் என டி.ஜி.பி கேட்டதும் அதிகாரிகள் ஆடிப்போனார்களாம். அப்போது ஓர் அதிகாரி எழுந்து, 'அந்த இருவரும் கல்லூரி மாணவர்கள். அதனால்தான் வழக்கில் சேர்க்கப்படவில்லை’ எனச் சொன்னார்.  இந்தச் சமாதானத்தை ஏற்காத டி.ஜி.பி அசோக்குமார், 'கொலை செய்தவர் கல்லூரி மாணவனாக இருந்தால் என்ன? பள்ளிச் சிறுவனாக இருந்தால் என்ன? கொலைக் குற்றவாளி என தெரிந்தால் கைதுெசய்ய வேண்டியதுதானே உங்கள் கடமை. உரிய வயதுக்குக் குறைவானவர்களாக இருந்தால் எந்தச் சிறையில் அடைப்பது என்பதை நீதிமன்றம் முடிவு செய்து கொள்ளும். அதை விடுத்து குற்றவாளி எனத் தெரிந்திருந்தும் அவனை விடுவிக்கும் அதிகாரத்தை யார் உங்களுக்குக் கொடுத்தது?’ என்று கேட்டிருக்கிறார்!'

''சரிதானே!''

'' 'இந்தப் பகுதியில் இருந்த அதிகாரிகள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் எப்படி எல்லாம் செயல்பட்டார்கள்? யார் யாருக்குத் துணையாக எப்படி எல்லாம் நடந்து கொண்டார்கள் என்பது எனக்குத் தெரியும். இனியும் இது மாதிரியான தவறுகள் நடக்குமானால் அப்படிப்பட்ட நபர்கள் போலீஸ் துறையில் இருக்க மாட்டார்கள். இதை எச்சரிக்கையாக எடுப்பீர்களோ அல்லது நட்பு ரீதியாக சொல்வதாக நினைப்பீர்களோ எனக்குத் தெரியாது. ஆனால், இனியும் இப்படிப்பட்ட தவறுகளைப் பொறுத்துக்கொள்ள முடியாது. யாராவது தவறு செய்வது தெரிய வந்தால் நடவடிக்கை கடுமையாக இருக்கும்’ என்று கடுமையாகவே சொன்னாராம் அசோக்​குமார். ஆடிப்போயிருக்கிறது அதிகாரிகள் வட்டாரம்!''

மிஸ்டர் கழுகு: உடன்குடி மின்சாரம் உண்மை என்ன?

''நெல்லையில்?'

''நெல்லை மாநகரில் கண்டுபிடிக்கப்​படாத நிலையில் இருக்கும் வழக்குகளின் நிலவரத்தைக் கேட்டறிந்த டி.ஜி.பி., அதில் எந்த முன்னேற்றமும் இல்லாததற்குக் காரணம் என்ன? என்பதை டி.எஸ்.பியிடம் விளக்கம் கேட்டார். மாநகர எல்லைக்கு உட்பட்ட, அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள அரசு ஊழியர் குடியிருப்பில் கண​வனும் மனைவியும் கொலை செய்யப்​பட்ட சம்பவத்தில் குற்றவாளி குறித்து தகவலே இல்லாமல் போனது பற்றி விரிவாகக் கேட்டுள்ளார். இதுதவிர, பழைய குற்றாலம் செல்லும் வழியில் மாநகராட்சி உதவிப் பொறியாளர் ராஜேந்திரன் மர்மமான முறையில் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொல்லப்பட்ட சம்பவத்​தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? எனக் கேட்டுள்ளார். சமபவம் நடந்து ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்ட போதிலும், அந்த வழக்கு இன்னமும் விசாரணை நிலையிலேயே இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததும் கடுப்பாகிவிட்டாராம்.

இன்னும் சில அதிகாரிகளுக்குத் தங்கள் லிமிட்டில் என்ன வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என்கிற விவரம்கூட தெரியாமல் இருந்திருக்கிறார்கள். அதனால், 'ஒவ்வோர்  அதிகாரியும் தனது லிமிட்டில் நிலுவையில் இருக்கும் வழக்குகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றிய விவரங்களை அடுத்த ஒரு மாதத்தில் எனக்குத் தெரியப்படுத்த வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளாராம். மணல் தாதாக்​களுடன் நெருக்கமாக இருக்கும் அதிகாரிகள் சிலரைப் பற்றிய விவரங்கள் ஏற்கெனவே உளவுத் துறை மூலமாக அவரது கைக்குச் சென்று இருந்ததால், அந்த அதிகாரிகளுக்கு ஆலோசனை கூட்டத்தின்போது அர்ச்சனை பலமாக இருந்ததாம். சில நேரங்களில் கோபமாகவும் பல நேரங்களில் கவுன்சிலிங்போலவும் நடந்து கொண்டார் டி.ஜி.பி என்கிறார்கள்'

''மணல் பிரமுகர்களுடன் கூட்டணியா?'

''மணல் பிரமுகர்களுடன் ரகசியத் தொடர்பு வைத்திருந்த ஓர் அதிகாரிக்குக் கடுமையான டோஸ் விழுந்ததாம். மணல் கொள்ளையைத் தடுக்கும் மக்களை ரவுடிகள் துணையுடன் மணல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தும்போது அதனைக் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார், அந்த அதிகாரி. அவரை பிடிபிடியென பிடித்து கடுமையாக எச்சரித்தாராம் டி.ஜி.பி.'

மிஸ்டர் கழுகு: உடன்குடி மின்சாரம் உண்மை என்ன?

''பெங்களூரில் என்ன நடக்குது?''

''ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில் பவானி சிங்கை நீக்கக்கோரும் அன்பழகனின் மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்கும். அப்போது என்ன சொல்லப்படுகிறது என்பதைப் பார்த்துவிட்டு தீர்ப்புத் தேதியை நீதிபதி குமாரசாமி அறிவிப்பார் என்றே சொல்கிறார்கள். தீர்ப்பு எழுதுவதற்கான கால அவகாசமாக இதனை அவர் எடுத்துக் கொள்ளலாம். இந்த வழக்குக் காரணமாக பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலைக்கு கர்நாடக மாநிலத்தில் மிகப்​பெரிய பேரே கிடைத்து​விட்டது.'

''என்னவாம்?'

''பரப்பன அக்ரஹாரா சிறையில்தான் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டு ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நான்கு பேருக்கு கடந்த வருடம் செப்டம்பர் 27-ம் தேதி முதல் அக்டோபர் 17-ம் தேதி வரை மொத்தம் 21 நாட்கள் அடைக்கப்பட்டிருந்தார்கள். இவர்கள் சிறைக்குச் செல்வதற்கு முன் பாழடைந்து கிடந்த பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலை தற்போது வெள்ளை அடிக்கப்பட்டு பளபளப்பாக இருக்கிறது. சிறை வளாகத்துக்கு பல அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டதால் சிறைக்கைதிகள் சிறையைவிட்டு வெளியே வர முடியாத நிலை இருந்தது. அந்த நிலை மாறி தற்போது கைதிகள் சிறைச்சாலை வளாகத்தின் வெளியே ஹாயாக உலவுகிறார்கள்! ஜெயலலிதா சிறைக்குள் இருந்தபோது அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் எம்.பிக்கள், மற்றும் கட்சிக்காரர்கள் அனைவரும் சிறை வளாகத்தின் முன்பு பசியும், பட்டினியுமாக அமர்ந்திருந்தார்கள். ஏதாவது டீ, காபி, பிஸ்கெட் வாங்கி சாப்பிடுவதற்குக்கூட கடைகள் இல்லாமல் இருந்தது. தற்போது சிறைத் துறை சார்பாகவே சிறைச்சாலை வளாகத்துக்கு முன்பு பெரிய அளவில் பேக்கரி ஸ்டால் அமைக்கப்பட்டிருக்கிறது. அதற்குப் பக்கத்திலேயே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது!''

''இதெல்லாம் இப்போ எதுக்கு?' என்று நாம் கேட்டதும், பதில் எதுவும் சொல்லாமல் பறந்தார் கழுகார்!

அட்டை படம்: எம்.விஜயகுமார்

படங்கள்: ரமேஷ் கந்தசாமி

செல்போனில் மிரட்டிய குரல்!

மதுரை கிரானைட் குவாரிகளில் நரபலி நடந்தது. அதற்காக, தன்னுடைய லாரியில்தான் ஆட்கள் ஏற்றிச் செல்லப்பட்டனர் என்ற தகவலைக் குற்றச்சாட்டாக முதன் முதலில்  சொன்னவர் மதுரை மேலூர் அருகில் வசிக்கும் சேவற்கொடியோன். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு தொலைபேசியில் மிரட்டல் வந்திருக்கிறது. 'கம்பெனியை பத்தி உனக்கு என்னடா தெரியும்... சோமு, பரமனுடன் சேர்ந்துகொண்டு நீ, நரபலி விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை கேட்கிறாயாமே.. உன்னையும் அவர்களையும் அழிச்சிடுவோம். உன்னோட பொண்டாட்டி புள்ளைங்க எல்லாம் நடுரோட்டுக்கு வந்துடுவாங்க....’ என்று மிரட்டியிருக்கிறது ஒரு குரல். இதை பதிவு செய்திருக்கிறார் சேவற்கொடியோன். அந்த ஆடியோவை காவல் துறைக்கு அவர் அனுப்பிவைக்க... மிரட்டியவரைத் தேடி வருகிறது போலீஸ்.

மிஸ்டர் கழுகு: உடன்குடி மின்சாரம் உண்மை என்ன?

'ஹெல்த்தைப் பார்த்துக்கொள்ளுங்கள்!’

முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவகாமியின் மகன் சுனந்த் ஆனந்த். இவர் அமெரிக்காவில், சௌத் கேரோலினாவில் உள்ள கிளம்சன் பல்கலைக்கழகத்தில் இண்டஸ்ட்ரி இன்ஜினீயரிங் படித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை கார் விபத்தில் உயிரிழந்தார். ''கடந்த வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு கடைசியாக சுனந்த் என்னிடம் பேசினான். அப்போது, 'அமெரிக்காவில் உள்ள மகேந்திரா டெக்கில் இண்டர்ன்ஷிப் கிடைத்துள்ளது. திங்கள்கிழமை அதில் சேரப்போகிறேன்’ என்று சொன்னான். நான், 'உன்னைப் பார்க்க அமெரிக்கா வருகிறேன்’ என்றேன். அதற்கு, 'இப்போது  அவசரமில்லை. ஆகஸ்ட் மாதம் எனக்கு கல்லூரி பட்டமளிப்பு விழா இருக்கிறது. அதற்கு நீங்கள் வாருங்கள். உங்க ஜப்பான் பயணத்துல ஹெல்த்தைப் பார்த்துக்கொள்ளுங்கள்! ஹேப்பி ஜர்னி!’ என்று சொன்னான். அதுதான் அவன் என்னிடம் கடைசியாகப் பேசியது!’ என்று கலங்குகிறார் சிவகாமி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு