Published:Updated:

அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகள்

உடன்குடி மின் திட்டம்

பிரீமியம் ஸ்டோரி

டன்குடி அனல் மின் திட்டத்தில் நடந்துள்ள குளறுபடிகள் தொடர்பாக தி.மு.க தலைவர் கருணாநிதியும் பா.ம.க நிறுவனர் ராமதாஸும் எழுப்பி இருக்கும் சரமாரியான கேள்விகளால் திணறிக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. இந்தச் சமயத்தில், தங்களுடைய டெண்டரை  தமிழக அரசு ரத்து செய்ததற்கான காரணத்தைக் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தை நாடி, தமிழக அரசுக்கு ஹை வோல்டெஜ் ஷாக் கொடுத்து இருக்கிறது, இந்தத் திட்டத்துக்கான டெண்டரில் கலந்துகொண்ட சீன நிறுவனம்.

நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிப்பது, உடன்குடி அனல் மின் திட்டம். இது, குறைந்த எரிபொருளில் அதிக மின்சாரத்தைத் தயாரிக்கும், 'சூப்பர் கிரிடிக்கல்’ வகையைச் சேர்ந்தது. இந்தியாவில் உள்ள குறைந்த நிலக்கரி வளத்தில் இருந்து அதிகமான மின்சாரத்தைப் பெறுவதற்கு மிகச் சரியான திட்டம் இது. ஆனால், இதற்கான தொழில் நுட்பம் இந்தியாவில் எந்த நிறுவனத்திடமும் கிடையாது. மத்திய அரசின் நவரத்தினங்களில் ஒன்றான பாரத மின் மிகு நிறுவனம் என்றழைக்கப்படும் பெல் நிறுவனத்திடம்கூட கிடையாது என்கிறார்கள். எனவேதான், வெளிநாட்டு நிறுவனங்களோடு கூட்டு ஒப்பந்தம் செய்த பிறகே, இந்திய நிறுவனங்கள் இதற்கான டெண்டரில் பங்கு கொள்ள முடியும் என்று சொல்லப்படுகிறது.

அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகள்

தி.மு.க ஆட்சிக் காலத்தில் ஒப்பந்தம்!

இந்தத் திட்டத்துக்காக, தி.மு.க ஆட்சிக்காலத்தில் பெல் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெயலலிதா முதலமைச்சரானதும் அதை ரத்து செய்தார். தமிழக மின்வாரியமே இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் என்று அறிவித்தார். ஒப்பந்தத்தை இடையில் ரத்து செய்ததற்காக, பெல் நிறுவனத்துக்கு 64 கோடி ரூபாயை நஷ்டஈடாக தமிழக அரசு கொடுத்தது.

டெண்டரில் என்ன குழப்பம்?

உடன்குடி அனல் மின் திட்டத்துக்காக தமிழ்நாடு மின்வாரியத்தால் விடப்பட்ட டெண்டர், 'டெப்ட் கம் இபிசி (DEBT cum EPC)’ வகையைச் சேர்ந்தது. இந்த டெண்டரில் பங்குகொள்ளும் நிறுவனமே, திட்டத்துக்கான மூலதனத்தைக் குறைந்த வட்டி விகிதத்தில் கடனாகப் பெற்றுத் தரவேண்டும். மீதி உள்ள தொகையை மட்டும் தமிழக அரசு கொடுக்கும். திட்டம் நிறைவேறியதும் மின்சாரம் அரசாங்கத்துக்குக் கிடைக்கும். மின்சாரத்தை விற்பதன் மூலம் கிடைக்கும் லாபம் அந்த நிறுவனத்துக்குப் போகும். அப்படி கிடைக்கும் லாபத்தொகையில் கடன் அடைந்து, முதலீட்டுத் தொகையும் நிறுவனத்துக்குக் கிடைத்துவிட்ட பின், அந்த நிறுவனம் அனல் மின் நிலையத்தை தமிழக மின்வாரியத்திடம் ஒப்படைத்துவிடும். அதன்பின் அதன் ஏகபோக உரிமை அரசாங்கத்துக்கு மட்டுமே.

பிரச்னை தொடங்கியது எங்கே?

உடன்குடி மற்றும் எண்ணூர் அனல்மின் நிலையங்களுக்கு, 'டெப்ட் கம் இபிசி’ முறையில்தான் டெண்டர் விடப்பட்டது. ஆரம்பத்தில் நான்கு நிறுவனங்கள் டெண்டரைக் கைப்பற்ற போட்டிபோட்டன. ஆனால், விதிமுறைகளைப் பூர்த்தி செய்யாததால், ஆரம்பத்திலேயே இரண்டு நிறுவனங்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டன. இறுதியில், சீன அரசுக்குச் சொந்தமான  'தெற்கு சீன மின்சக்தி வடிவமைப்பு நிறுவனம்’ என்ற நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்தம் போட்டுக்கொண்ட த்ரிஷி என்ற இந்திய நிறுவனமும், மத்திய அரசின் பெல் நிறுவனமும் டெண்டரைக் கைப்பற்றும் போட்டியில் குதித்தன. இதில், பெல் நிறுவனம், வேறொரு என்று வெளிநாட்டு நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு டெண்டர் களத்தில் குதித்தது. இதன்பிறகு மறைமுகமான சில பேச்சுகள் தொடங்கிச் சிக்கலை ஏற்படுத்தியது.

டெண்டரை வழங்குவதற்கு, இந்த சீன நிறுவனத்திடம் மறைமுகப் பேச்சுகளை சிலர் தொடங்கி இருக்கிறார்கள். ஆனால், அதனை சீன நிறுவனம் மறுத்துவிட்டதாம். அதனால் வேறொருவருக்கு டெண்டர் போகும் சூழல் ஏற்பட்டதாம்.

மதிப்பீட்டு நிறுவனத்துக்கு பிரஷர்!

'இந்தச் செயலால் பாதிக்கப்பட்ட சீன நிறுவனம், தன்னுடைய டெண்டர் புள்ளியை அதிரடியாகக் குறைத்தது. தனது தொழிலுக்கு நஷ்டம் ஏற்பட்டாலும் மிகக் குறைந்த தொகையில், அதாவது நஷ்டக் கணக்கில் உடன்குடி அனல் மின் திட்டத்துக்கான விலையை நிர்ணயம் செய்தது. டெண்டரைத் திறந்தபோது, சீன நிறுவனம் குறிப்பிட்டு இருந்த சலுகைகளும், அது குறிப்பிட்டு இருந்த விலையும் பெல் நிறுவனத்தின் விலையைவிட குறைவு. சீன நிறுவனத்தை டெண்டரில் இருந்து கழட்டி விடவே முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்துத்தான், இரண்டு நிறுவனங்களையும் தர மதிப்பீடு செய்து தரும்படி, ஃபிக்ட்னர் என்ற தர மதிப்பீட்டு நிறுவனத்துக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் அனுப்பியது. ஃபிக்ட்னர் நிறுவனம், அரசாங்கமே நியமனம் செய்த நிறுவனம். அவர்களை சுதந்திரமாகச் செயல்பட விடவில்லை. ஆனால், ஃபிக்ட்னர் நிறுவனம் குறுக்கீடுகளுக்கு இடம்தராமல் செயல்பட்டது.

காரணம், இந்த விவகாரம் என்றைக்காவது வெளியில் வந்தால் விசாரணையில் மாட்டிக்கொள்வோம் என்பது ஃபிக்ட்னர் நிறுவனத்துக்குத் தெரியும். ஏனென்றால், எல்லாமே அறிவியல்பூர்வமான கணக்கு அளவீடுகள். அதில் குளறுபடி செய்ய முடியாது என்பதால், உள்ளதை உள்ளபடியே எழுதிக் கொடுத்துவிட்டு இந்த ஆட்டத்தில் இருந்து ஒதுங்கிக் கொண்டது ஃபிக்ட்னர் நிறுவனம். அதன் அறிக்கையில், இரண்டு நிறுவனங்களின் திட்டங்களிலும் சில குறைகள் இருக்கின்றன. ஆனால், டெண்டர் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தால், சீன நிறுவனத்துக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். அதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. ஏனென்றால், சீன நிறுவனம் ஒரு மெகாவாட்டுக்கு நிர்ணயித்துள்ள தொகையை விட, பெல் நிறுவனம் 137 கோடி ரூபாய் கூடுதலாக வழங்கும்படி கேட்டு உள்ளது.

மற்ற அம்சங்களிலும் சீன நிறுவனம்தான் சாதகமான மதிப்பீடுகளைத் கூறியிருந்தது. உதாரணமாக, திட்ட மதிப்பீட்டில் 75 விழுக்காட்டை ஒப்பந்ததாரர்கள் தங்களது சொந்த முயற்சியில் கடனாகப் பெற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், சீன நிறுவனம் 85 சதவிகிதம் கடனைப் பெற்றுத் தருவதாக உத்தரவாதம் அளித்திருந்தது; ஆனால், பெல் நிறுவனம் 75 சதவிகிதம் கடனை மட்டுமே பெற்றுத் தர முன் வந்திருந்தது. இதனால் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக பெல் நிறுவனத்துக்கு அரசுத் தரப்பு முதலீடாக தர வேண்டியதைவிட சீன நிறுவனத்துக்கு ரூ.1400 கோடி குறைவாக வழங்கினால் போதுமானது. அதேபோல் 7.2 சதவிகித வட்டியில் கடன் பெற்றுத் தருவதாக சீன நிறுவனம் குறிப்பிட்டிருந்த நிலையில், பெல் நிறுவனம் 12.25 சதவிகித வட்டிக்குத்தான் கடன் பெற்றுத்தர முடியும் என்று கூறியிருந்தது. இப்படியாக, எல்லா வகையிலும் சீன நிறுவனத்துக்கே சாதகமான அம்சங்களை அரசாங்கம் நிர்ணயித்த தகுதி மதிப்பீட்டு நிறுவனம் சொல்லியிருந்தது. இதனால், கடைசியில் டெண்டர் விலைப்புள்ளி திறந்து 5 மாதங்கள் ஆனபிறகு, டெண்டரை ரத்து செய்வதாக அறிவித்துவிட்டது' என்று சொல்கிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள்.

உடன்குடி மின்திட்டத்துக்கான ஒப்பந்தத்தைத் தமிழக அரசு ரத்து செய்ததன் பின்னணி குறித்து எதிர்க் கட்சிகள் பல கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், 'உடன்குடி திட்டத்துக்கு நிலக்கரி கையாளும் சுய சார்பு துறைமுகம் அமைப்பதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் 19.3.2015 அன்று திறக்கப்பட்டுள்ளன. இதற்கான பணிகள் விரைவில் துவங்கும். உடன்குடி திட்டத்துக்கான புதிய ஒப்பந்தப் புள்ளிகள் விரைவில் கோரப்பட்டு இறுதி செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்படும்' என்று கூறியுள்ளார்.

ஆனால், தங்களுக்கு டெண்டர் வழங்காததற்கான காரணத்தைத் தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சீன நிறுவனம் வழக்குத் தொடர்ந்துள்ளது.  இந்த வழக்கு விசாரணைக்கு வந்து, அதில் தீர்ப்பு சொல்லப்பட்டு, பின்னர் மேல்முறையீடு செய்யப்பட்டு, இறுதித்தீர்ப்பு வழங்கப்பட்டு, அதன் பிறகு திட்டம் நிறைவேற்றப்படுவது என்பது எல்லாம் இப்போதைக்கு சாத்தியம்தானா?

ஜோ.ஸ்டாலின்

காலம்தான் தீர்ப்பளிக்க வேண்டும்!

கடிதங்கள்

பெங்களூரு வழக்கின் தீர்ப்புக்காகத் தள்ளிப்போனது பட்ஜெட் மட்டுமல்ல; மின்வெட்டு, விலைவாசி உயர்வு போன்றவற்றுடன் தமிழக அரசு நிர்வாகத்தில் தலைவிரித்தாடும் ஊழலின் கோரதாண்டவம் என தமிழக மக்களைப் பாதிக்கும் அத்தியாவசியப் பிரச்னைகளும்தான். தாமதிக்கப்படும் நீதியைப் போலவே, தாமதிக்கப்படும் நிர்வாக நடைமுறைகளும் மறுக்கப்பட்டதற்கு இணையானதே!

- எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

முற்காலத்தில் தமிழ் மக்கள், 'தாலபத்திரம்’ என்ற பெயரில் ஒரு சிறிய பனை ஓலைச்சுருள் ஒன்றை மணமகளின் கழுத்தில் மங்கல நாணாக அணிவித்தனர். அது நாளடைவில் மருவி தாலி என அழைக்கப்பெற்றது. இது அடிமைச்சின்னம் அல்ல. ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதற்கான ஓர் அடையாளம். பகுத்தறிவுவாதிகளின் பேச்சு அலட்சியப்படுத்தத்தக்கது!

- ஆர்.லிங்கேசன், மேலகிருஷ்ணன் புதூர்.

ணத்துக்காகப் பாசக்காரப் பாட்டியின் உயிர் பறித்த பேரன்களை என்னவென்று சொல்வது... உறவுகளின் உன்னதத்தை பள்ளிப் பருவத்திலேயே பிள்ளைகளுக்குச் சொல்லி வளர்க்க வேண்டும் என்பது நூறு சதவிகிதம் செயல்படுத்த வேண்டிய செயலே!

- அ.குணசேகரன், புவனகிரி.

ரோக்கியமான அரசியல் நிகழ்வுகளை ஒதுக்கிவிட்டு, அழுக்கு அடைமொழிகளை அச்சிலேற்றி, திராவிடக் கட்சிகள் தங்களின் பத்திரிகை வாயிலாகத் தாக்கிக் கொள்ளும் நிகழ்வு கவலையளிக்கிறது. இதற்கு எப்போது முற்றுப்புள்ளி என்பதை காலம்தான் தீர்ப்பளிக்க வேண்டும்!

- ரேவதிப்ரியன், ஈரோடு - 01

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு