Published:Updated:

'தீ குளிக்க வேண்டாம்... டீ குடிக்கலாம்!’

உள்ளே பட்ஜெட்... வெளியே தர்ணா!

முதல்வராக ஜெயலலிதா இல்லாமல் தாக்கல் செய்யப்பட்ட அ.தி.மு.க அரசின் முதல் பட்ஜெட் என்கிற பெருமை(!)யைத் தாங்கி நிற்கிறது 2015 - 16 நிதிநிலை அறிக்கை. தலைவி அரியணையில் இல்லாததால் எந்தத் திட்டமும் இல்லாத வெறும் 'காகித அறிக்கை’யாகிப் போயிருந்தது.

'தீ குளிக்க வேண்டாம்... டீ குடிக்கலாம்!’

பட்ஜெட் புத்தகம் தாங்கிய சூட்கேஸில் ஜெயலலிதாவின் படத்தை ஒட்டி, ஜெயல​லிதாவிடம்  ஆசி வாங்கி போஸ் கொடுத்துவிட்டு கடந்த காலங்களில் பட்ஜெட் தாக்கல் செய்​வதுதான் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஸ்டைல். இப்போது கார்டனில் தலைவியைப் பார்த்து​விட்டு தன்னந்தனியாக வந்து பட்ஜெட் தாக்கல் செய்தார். போட்டோவுக்கு போஸ் கொடுத்தபோது முகத்தில் சிரிப்பே இல்லை. முதல்வராக பட்ஜெட் தாக்கல் செய்வது ஓ.பி.எஸ்ஸுக்கு இதுதான் முதல் முறை. அந்த வரலாற்று நிகழ்வை கண்களுக்குள் சிறைபிடிக்க சட்டசபைக்கு வந்திருந்தார்கள், ஓ.பன்னீர்செல்வத்தின் குடும்பத்தினர். மாடத்தில் அமர்ந்து ஆனந்தமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். எதிர்க் கட்சிகள் மற்றும் மீடியாவின் கண்கள் ஒருவரின் மீது நிலைக் குத்தியிருந்தது. அவர் வேறு யாருமில்லை. பதவியிழந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி. பின்வரிசையில் கடைசி ஸீட்டுக்குத் தள்ளப்பட்டிருந்தார். மானியக் கோரிக்கையின்போதுதான் தடபுடல் விருந்து நடைபெறும். ஆனால் பட்ஜெட்டின்போது மதிய விருந்து போட்ட வரலாறு இல்லை. ஆனால், இந்த முறை செய்தித் துறை விருந்து ஏற்பாடு செய்திருந்தது. ''அம்மா முதல்வராக இல்லாத நேரத்தில் இப்படி விருந்து போடுகிறார்களே'' என ஆளும் கட்சியினர் சிலரின் முணுமுணுப்புகளும் கேட்டன.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதுகூட பட்ஜெட்டில் ஜெயலலிதா என்றுதான் குறிப்பிட்டிருப்பார்கள். ஆனால் அதைப் படிக்கும்போது புரட்சித் தலைவி அம்மா என மாற்றிப் படிப்பார் ஓ.பன்னீர்செல்வம். ஆனால் இந்த முறை பட்ஜெட்டில் 'புரட்சித் தலைவி’ என்றே குறிப்பிட்டிருந்தார்கள். பட்ஜெட் உரையை முடிக்கும்போது ஜெயலலிதாவுக்காக ஒரு பாராவை ஒதுக்கியிருந்தார்கள்.

'தீ குளிக்க வேண்டாம்... டீ குடிக்கலாம்!’

''அம்​மா முதலமைச்சராகப் பதவியேற்று, சட்டசபைக்கு வந்து நம்மையும் அரசையும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் வழிநடத்தி மாநிலத்தைப் புகழின் உச்சிக்குக் கொண்டு செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை'' என தன் உரையை முடித்தார் ஓ.பன்னீர்செல்வம். அம்மாவில் தொடங்கி அம்மாவில் முடித்தபோது 14 இடங்களில் ஜெயலலிதா பெயர் பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்தது.

கவர்னர் உரையின்போது ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த தே.மு.தி.க உறுப்பினர்கள் கறுப்புச் சட்டையோடு வந்திருந்தார்கள். சட்ட​சபைக்குள் போக முடியாததால், கோட்டை வளாகத்திலேயே தர்ணா போராட்டம் நடத்தினார்கள். முதல்வரின் தனிப் பிரிவு அருகே அப்படியே உட்கார்ந்துவிட்டார்கள். தனிப் பிரிவுக்குப் புகார் கொடுக்க வரும் மக்கள் யாரும் போராட்டம் நடத்திவிடக் கூடாது என்பதில் காக்கிகள் கவனமாக இருப்பார்கள். அதற்காகவே அந்த ஏரியாவில் சாதாரண உடையில் நிறைய போலீஸார் இருப்பார்கள். ஆனால் தே.மு.தி.க உறுப்பினர்கள் அங்கே போராட்டம் நடத்தியபோது போலீஸ் அமைதியாக வேடிக்கை பார்க்கத்தான் முடிந்தது. அந்த வகையில் கோட்டைக்குள் நடந்த முதல் போராட்டம் இதுவாகத்தான் இருக்கும். 'எதிர்க் கட்சியான தே.மு.தி.க-வுக்கு சட்டமன்ற பணியாற்ற வாய்ப்பு கொடு! தடுக்காதே... தடுக்காதே... ஜனநாயக கடமை ஆற்ற தடுக்காதே..!’ என்ற வாசகங்கள் எழுதப்பட்ட அட்டையைத் தாங்கிப் பிடித்தபடி அமர்ந்திருந்தார்கள். பட்ஜெட்டை எதிர்த்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்த தி.மு.க உறுப்பினர்கள் ஸ்டாலின் தலைமையில் வெளியே வந்தனர். பத்திரிகையாளர்களிடம் ஸ்டாலின் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். அதன் அருகில்தான் தே.மு.தி.க எம்.எல்.ஏக்கள் தர்ணா நடத்திக் கொண்டிருந்தார்கள்.

தங்களைப் படம் பிடித்துக் கொண்டிருந்த மீடியா ஆட்களிடம் தே.மு.தி.க கொறடா சந்திரகுமார், ''தி.மு.க வெளிநடப்பு செய்துவிட்டது. அங்கே போகவில்லையா?'' என்றார். ''ஸ்டாலின் உங்களைப் பார்க்க வருகிறார்'' என்று மீடியாவினர் சொல்ல... 'எங்களைப் பார்க்க வருகிறாரா?'' என்று கொஞ்சம் ஜர்க் ஆனார். தர்ணா நடந்த இடத்துக்கு வந்தார் ஸ்டாலின். மொத்த மீடியாவினரும் தர்ணா நடந்த இடத்தில் குவிந்துவிட்டார்கள். தரையில் உட்கார்ந்திருந்த சந்திரகுமாரின் கையைப் பிடித்து ஸ்டாலின் ஆதரவு தெரிவி்த்து, ''சட்டசபையில் இதுபற்றி பேசுவோம்'' என்றார். தே.மு.தி.க எம்.எல்.ஏக்கள் சிரித்தார்களே தவிர, எந்த ரியாக்‌ஷனும் காட்டவில்லை. ஸ்டாலின் கிளம்பிய நிலையில் மீடியாவினர், ''போட்டோ எடுக்கவில்லை. மீண்டும் ஒருமுறை போஸ் கொடுங்கள்'' எனக் கேட்க... மீண்டும் கைகுலுக்கும் வைபவம் அரங்கேறியது. ஸ்டாலின் ஆதரவுக் காட்சியை மீடியாவினர் படம் பிடிக்கும் போராட்டத்தில் தே.மு.தி.க-வின் மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ எஸ்.ஆர்.பார்த்திபன் தொடையில் புகைப்படக்காரர் ஒருவர் மிதித்துவிட்டார். வலியில் அலறித் துடித்துவிட்டார் பார்த்திபன்.

'தீ குளிக்க வேண்டாம்... டீ குடிக்கலாம்!’

பட்ஜெட் படித்து முடிக்கும் வரையில் தர்ணா தொடர்ந்தது. அந்த இரண்டரை மணி நேரமும் ஏக கலகலப்பு. ''முக்கியமான போராட்டம் இது. இதை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும்'' என்றபடியே மீடியாவினரிடம் தன் செல்போனைக் கொடுத்து தர்ணாவை படம் பிடிக்கச் சொன்னார் தே.மு.தி.க எம்.எல்.ஏ வெங்கடேசன். பிறகு செல்போனில் குரூப்புடன் சேர்ந்து 'செல்ஃபி’ எடுத்துக்கொண்டார். ''போராட்டத்தைத் தீவிரப்படுத்த வேண்டும். அதற்காக...'' என வெங்கடேன் எழுந்து பேச ஆரம்பிக்க.... ''தீ குளிக்கலாமா?'' எனக் குரல் வர... ''உயிரை மாய்த்துக் கொள்ளும் போராட்டம் வேண்டாம். வேண்டுமானால் டீ குடிக்கலாம்'' என்றார். சற்றுத் தூரத்தில் போலீஸ் அதிகாரிகள் டீ குடித்துக்கொண்டிருந்தனர். ''எங்களுக்கு டீ இல்லையா?'' என்றார்கள் தர்ணாகாரர்கள். ஆனால் டீ வரவில்லை. பிறகு, வெளியில் இருந்து டீ, பட்டர் பிஸ்கெட் வரவழைத்தனர்.

சந்திரகுமார் சேனல்களுக்கு பேட்டி கொடுத்துக்​கொண்டிருந்தார். ஆந்திரா சேனல்காரர்கள்  தெலுங்கில் பேட்டி கேட்டனர். சந்திரகுமாரைத் தவிர வேறு யாருக்கும் பேட்டி கொடுக்கும் அதிகாரம் இல்லை. ஆனால் கும்மிடிப்பூண்டி சேகருக்கு தெலுங்கு தெரியும் என்பதால் அவரை பேட்டி கொடுக்கச் சொன்னார். மற்ற எம்.எல்.ஏ-க்கள், ''நமக்கும் தெலுங்கு தெரியாமல் போச்சேப்பா'' என அவரைக் கிண்டலாகக் கலாய்த்தார்கள். தர்ணா முன்வரிசையில் சந்திரகுமார் அமர்ந்திருந்தார். கடைசி வரிசையில் இருந்த எதிர்க் கட்சித் துணைத் தலைவர் மோகன்ராஜ், ''கொறடா இடத்தைவிட்டு அசைய மாட்டேங்கிறாரே... இங்கேயும் அவரின் இடத்தை யாராவது பிடித்துக்கொள்வார்கள் என அசையாமல் இருக்கிறாரே'' என கிண்டல் அடித்தார். சம்மணம் போட்டுத் தரையில் உட்கார்ந்திருந்த பலருக்கும் கால்கள் வலி எடுக்க ஆரம்பித்தன. சிலர் ரிலாக்ஸாக காலை நீட்டியபடியே உட்கார்ந்திருந்தார்கள்.

பட்ஜெட் முடிந்த பிறகுதான் தர்ணாவை முடிக்க வேண்டும் என முடிவு செய்திருந்தார்கள். அதனால் ''ஓ.பி.எஸ் எப்போது முடிப்பார்'' என பத்திரிகையாளர்களிடம் கேட்டபடியே இருந்தனர். ஒரு கட்டத்தில் ''உள்ளே போய் ஸ்கோர் பாத்துட்டு வா'' என உதவியாளர்களிடம் கிண்டல் அடித்தனர். ''நம்ம தர்ணாவை எந்தெந்த டி.வியில காட்டிக்கிட்டு இருக்காங்க.. யாராவது பாத்துட்டு வந்து சொல்லுங்க'' என ஒருவர் ஆர்வமாகக் கேட்டுக்கொண்டிருந்தார். பட்ஜெட் முடிந்ததும் உறுப்பினர்கள் வெளியே வர ஆரம்பித்தனர். முன்னாள் சபாநாயகர் டி.ஜெயக்குமார் வெளியே வர தர்ணாவில் இருந்த எம்.எல்.ஏக்கள், ''சார் இந்தப் பக்கம் வந்துட்டுப் போங்க...'' என ஜாலியாக அழைத்தார்கள். அவரோ டாட்டா காட்டியபடியே எஸ்கேப் ஆனார். பட்ஜெட்டைவிட தே.மு.தி.க-வின் போராட்டம்தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி, படங்கள்: சு.குமரேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு