Published:Updated:

"ஏதோ பெரிய தவற்றை மறைக்கப் பார்க்கிறார்கள்”

நடிகர் சங்க விவகாரத்தில் கொந்தளிக்கும் நாசர்!

பிரீமியம் ஸ்டோரி

டிகர் சங்கத் தேர்தல் வரும் மே மாதம் நடக்க இருக்கும் வேளையில் பிரச்னைகள் வெடிக்கத் தொடங்கியுள்ளன. அண்மையில் திருச்சியில் நடந்த நாடக நடிகர்கள் கூட்டமைப்பில் நாசர், விஷால், பூச்சி முருகன் ஆகியோரைக் கடும் சொற்களால் திட்டினார் ராதாரவி என்று கிளம்பிய செய்தி நடிகர் சங்கத்துக்குள் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

"ஏதோ பெரிய தவற்றை மறைக்கப் பார்க்கிறார்கள்”

தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடம், சென்னையின் பிரதானமான தியாகராயர் நகரில் அமைந்திருந்தது. திடீரென ஒருநாள் இந்தக் கட்டடம் இடிக்கப்பட்டு, ஷாப்பிங் மால் கட்டப்போவதாகச் சொல்லப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் பதிவான நாள் 25.11.2010. ஆனால், அதன்பின் 30.11.2010 அன்று நடந்த செயற்குழுவிலும், 17.02.2011 அன்றைய பொதுக்குழுவிலும்தான் இதற்கான ஒப்புதலே பெற்று இருக்கிறார்கள். இது நடிகர் சங்கத்தின் ஒரு பிரிவினருக்கு கடுமையான கோபத்தைக் கிளப்பியது.

இவர்களில் ஒருவரான பூச்சி முருகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். சரத்குமார், ராதாரவிக்கு ஆதரவாக ஓர் அணியும், நாசர், விஷால், கார்த்தி, பூச்சி முருகன் போன்றோர் இன்னோர் அணியாகவும் மோதத் தொடங்கி உள்ளார்கள்.

"ஏதோ பெரிய தவற்றை மறைக்கப் பார்க்கிறார்கள்”

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த பூச்சி முருகனிடம் கேட்டோம். ''தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடம் தொடர்பான பிரச்னை,  நடிகர்கள் அனைவருக்கும் கடுமையான கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. பாரம்பர்யம் உள்ள கட்டடத்தைத் திடீரென்று இடித்துவிட்டு தனியார் ஒருவருக்கு மால் கட்ட அனுமதி கொடுத்துவிட்டார்கள். அதன்பிறகுதான் நடிகர்கள் பலருக்கே இந்த விஷயம் தெரியும்.  சரத்குமார், ராதாரவியின் தன்னிச்சையான இந்தப் போக்கைக் கண்டித்து இப்போது நடிகர்கள் வெளிப்படையாக ஒன்று திரண்டுள்ளார்கள். நடிகர் சங்க அறக்கட்டளையில் Life Trustee என்ற ஒரு வார்த்தையே கிடையாது. ஆனால், எல்லா பத்திரங்களிலும்  Life Trustee என்று இவர்கள் போட்டுக் கொள்கிறார்கள். 9 பேர் இருக்க வேண்டிய நடிகர் சங்க அறக்கட்டளையில் ராதாரவி, சரத்குமார் ஆகிய இருவர் மட்டுமே இருக்கிறார்கள். இதற்கு எல்லாம் நியாயம் கேட்ட என்னையும் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப் பார்த்தார்கள். நான் விடாமல் போராடி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து மீண்டும் சங்கத்தில் இணைந்தேன். ராதாரவி, எப்படியாவது தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்குடன், நாடக நடிகர்களைச் சங்கத்தில் இருந்து பிரிக்கும் வகையில் பேசுகிறார். ஆனால், அவரது கனவு பலிக்காது. கண்டிப்பாக நீதி வெல்லும்'' என்றார் அழுத்தமாக.

இதுபற்றி நடிகர் நாசரிடம் கேட்டோம். ''ஈழப் பிரச்னைக்காக சினிமா நடிகர்கள் ஒன்று சேர்ந்தபோது நடிகர் சங்க கட்டடம் பற்றி பேசினோம். தரைமட்டமாகிக் கிடந்த இடத்தை மீண்டும் உயிர்பிப்பதற்காக, சிறப்புக் கூட்டம் கூட்ட வேண்டும் என்று கேட்டோம். அனைத்து  நடிகர்களோடும் கலந்துபேசி, சங்க நிர்வாகத்திடம் நேரம் ஒதுக்க வேண்டி ஒரு கடிதம் எழுதினோம். அதில், கையொப்பம் வாங்க ஆரம்பித்தோம். நான்தான் அந்தக் கடிதத்தை, அப்போது எனக்குக்  கிடைத்த தகவல்கள்படி வடிவமைத்தேன். அதற்கு, விஷால் பெரிதும் உதவினார். ஆனால்,  சங்கத்துக்கு எதிராகச் செயல்படுவதாக நினைத்து அந்தக் கடிதத்தை ராதாரவி வாங்க மறுத்தார். அதிகாரபூர்வமாக அல்லாமல் சங்கத்தில் அல்லாத பொது இடத்தில் சந்திக்கலாம் என்று தூதுவிட்டார். கடைசியில், நந்தா அபார்ட்மென்டில் அவரை நாங்கள் சந்தித்தோம். பல சந்தேகங்கள் எங்கள் தரப்பில் எழுப்பப்பட்டன. ஆனால், எல்லாவற்றுக்கும் அரைகுறையாய்தான் அவர்களிடம் இருந்து பதில் வந்தது. நாங்கள் கையெழுத்து வாங்கிய மனுவை ராதாரவியிடம் கொடுத்தோம். அந்தக் கடிதத்தை அவர் செயற்குழுவின் பார்வைக்கோ, பொதுக்குழுவின் பார்வைக்கோ வைக்கவில்லை. அன்றிலிருந்துதான் அவர் எங்கள் மீது அவதூறு வீசி வருகிறார்.

"ஏதோ பெரிய தவற்றை மறைக்கப் பார்க்கிறார்கள்”

நீங்கள் யூ டியூப்க்குச் சென்று 'ராதாரவி ஸ்பீக்ஸ்’ என்று தட்டிப் பாருங்கள். பாரம்பர்யமிக்க நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் என்கிற வகையிலா பேசுகிறார்? 'ஆமாம். நான் ஊழல் செய்தேன்’ என்று மார்த்தட்டுகிறார். துணைத் தலைவரோ, ஒட்டுமொத்தமாக சினிமா நடிகர்களையும் 'நாய்’ என்று அழைக்கிறார். பொதுச் செயலாளரோ, 'நாசர் என்ன பெரிய .......?’ என்று கேள்வி எழுப்புகிறார். சங்கத்தினரைப் பிரிப்பதாக என்மீது பழி சுமத்துகிறார்கள். நான் அப்படிச் செய்திருந்தால் ஆதாரங்களைத் திரட்டி தீர விசாரித்து தண்டித்திருக்க வேண்டும். சங்கத்தைவிட்டு நீக்கியும் இருக்கலாம். ஏன் தயங்குகிறார்கள்? என்னை அவமானப்படுத்தியதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சங்கத்துக்குக் கடிதம் எழுதினேன். பதில், வராததால் மற்ற நிர்வாகிகளுக்கும் செயற்குழு உறுப்பினர்களுக்கும் அந்தக் கடிதத்தின் பிரதிகளை அனுப்பினேன். நான் யார் மீது புகார் செய்தேனோ  அவர்களின்  செயலை நியாயப்படுத்தியும் எனக்கு எதிராகவும் 11 பேர் கடிதம் எழுதினார்கள். அப்படி என்றால் மற்ற 18 நிர்வாகிகளின் நிலை என்ன?

நடிகர் சங்கத்தின் அதிகாரபூர்வமான கடிதத்தில், ராதாரவி, காளை ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று தீர்மானித்து உள்ளதாகவும் அதை ஏற்றுக்கொள்ளும்விதமாகவும் தலைவர் கையொப்பம் இருந்தது. இது எந்த அடிப்படையில் என்று குறிப்பிடவேயில்லை. ஆனால், 'கட்டட பிரச்னை குறித்து வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்’ என்று நடிகர் குமரிமுத்து எழுதிய கடிதத்தில், தங்களைத் தலைவர், பொதுச் செயலாளர் என்று குறிப்பிடாமல் பொதுவாக 'திருவாளர்கள்’ என்று எழுதியதை மரியாதைக்குறைவாகக் கருதி, அவரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கினார்கள். 'திருவாளர்கள்’ என்பதைவிட, மரியாதைக்குரிய வார்த்தைகளா 'நாய் என்பதும் ......... என்பதும்?’

"ஏதோ பெரிய தவற்றை மறைக்கப் பார்க்கிறார்கள்”

நான் நாடக நடிகர்களை இழிவுபடுத்திப்  பேசியதாக செயற்குழு உறுப்பினர்களில் சிலர் என்மீது கட்டுக்கதைகளை அவிழ்த்துவிடுகிறார்கள். இவர்கள் பொய் பிரசாரத்தைப் பார்த்தால், ஏதோ பெரிய தவற்றை மறைக்கப் பார்க்கிறார்கள் என்றே தோன்றுகிறது. கட்டட பிரச்னை குறித்து எப்போது பேச்சு எழுந்தாலும் பூச்சி முருகன் வழக்குப் போட்டதால், 'நிற்கிறது’ என்கிற அர்த்தமற்ற பதில்தான் வரும். இதுவரை வழக்கின் தன்மையைப் பற்றி எந்தப் பொதுக்குழுவிலும் விவாதிக்கவில்லை. இதுபற்றிக் கேட்டால் 'விசாரணை நடக்கிறது. அதைப் பற்றிப் பேசக் கூடாது’ என்கிறார். நானும் விஷாலும் பூச்சி முருகனை சந்தித்து வழக்கைத் திரும்பப் பெற வேண்டி பல முறை பேசினோம். இரு தரப்பினரையும் சந்திக்க வைக்க முயற்சி செய்தோம். அவரும், தான் வழக்கை வாபஸ் வாங்கிக்கொள்வதாகவும் அதைத் தானே பொதுக்குழுவில் அறிவித்து வழக்கின் தன்மையை விளக்கவும் தயாராக இருப்பதாகவும் சொன்னார். ஆனால், நீதிமன்ற உத்தரவோடு வந்தவரை அரங்கத்தினுள் அனுமதிக்கவே இல்லை. அதுமட்டுமல்லாமல், அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் அவரை திட்டினார்கள். இனி அவரும் வழக்கை வாபஸ் வாங்குவதாக இல்லை. எங்கள் நோக்கம் எந்த ஒரு தடையும் இன்றி கட்டடம் எழ வேண்டும் என்பதுதான். கடந்த இரண்டு முறை நிர்வாகம் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால், இந்த முறை தேர்தல் ஜனநாயக முறைப்படி தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நிச்சயம் நடந்தேறும். இது மாற்றங்களின் காலமாக இருக்கிறது. மாற்றம் வரும்' என்றார் உறுதியாக.

இதுகுறித்து ராதாரவியிடம் கேட்டபோது, 'நடிகர் சங்கத்தினுள் நடக்கும் பிரச்னையை அந்த நாலு சுவருக்குள் வைத்துத்தான் பேச வேண்டும். இதைப் பற்றி நான் வெளிப்படையாகப் பேச விரும்பவில்லை. எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன' என்று முடித்துக்கொண்டார்.

நிஜ குஸ்திக்கு தயாராகிவிட்டார்கள் நடிகர்கள்!

நா.சிபிச்சக்கரவர்த்தி, படம்: எம்.உசைன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு