Published:Updated:

'ஏப்ரல் 21 டெல்லியில் கூடுவோம்!’

கொந்தளிக்கும் தமிழக விவசாயிகள்

பிரீமியம் ஸ்டோரி

நிலம் கையகப்படுத்துதல் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நடந்த விவசாயிகள் பேரணிக்கு தமிழகத்தின் சார்பில் சென்று வந்துள்ளார்  தமிழக விவசாயிகள் சங்கத் தலைவரும் உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவருமான கு.செல்லமுத்து. அவரைச் சந்தித்தோம்.

'ஏப்ரல் 21 டெல்லியில் கூடுவோம்!’

''இந்தியா முழுவதும் உள்ள விவசாய அமைப்புகள் சேர்ந்து டெல்லியில் நடத்திய போராட்டம் எப்படி இருந்தது?'

''பிரதமர் நரேந்திர மோடி அரசு கொண்டு வந்துள்ள நிலம் கையகப்படுத்தும் அவசர சட்ட மசோதா ஏழை எளிய விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே குலைப்பதாக இருக்கிறது. எனவேதான் கடந்த 18, 19, 20, 21 ஆகிய நாட்களில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டோம். தமிழகத்தில் இருந்து எனது தலைமையில் 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சென்றிருந்தோம். இரவும் பகலும் நடு ரோட்டில் படுத்துக்கிடந்தும்கூட எங்களைக் கூப்பிட்டு பேசுவதற்கு மத்திய அரசுக்கு மனம் வரவில்லை. எனவேதான், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து இந்தச் சட்டத்துக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என்று வலியுறுத்தினோம். முந்தைய காங்கிரஸ் அரசு இந்தச் சட்டத் திருத்த மசோதாவைக்கொண்டு வந்தபோது டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினோம். ஆறு நாட்களுக்குப் பிறகு அன்றைய வேளாண் அமைச்சர் சரத்பவார், சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் என்று எட்டு அமைச்சர்கள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். எங்கள் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு சட்டத்தை நிறைவேற்றினார்கள். இப்போது, மோடி அரசு அந்தச் சட்டத்தில் அவசரத் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றத் துடிக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் விவசாயிகள் கடன், வறுமை, தற்கொலை பற்றி மோடி பேசினார். இப்போது அந்த விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்கக்கூட அவருக்கோ அவரது சகாக்களுக்கோ நேரமில்லை!'

'ஏப்ரல் 21 டெல்லியில் கூடுவோம்!’

''இந்தச் சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது அல்ல என்று பிரதமர் பேசி இருக்கிறாரே?'

''இந்த அரசு மீது நம்பிக்கை இழந்து நாங்கள் அவரவர் ஊருக்குச் சென்ற பிறகு நரேந்திர மோடி 'மனதில் உள்ளதைப் பேசுகிறேன்’ என்று 'மான் கி பாத்’ நிகழ்ச்சியில் வானொலியில் பேசினார். 'விவசாயிகளுக்கு துரோகம் செய்ய மாட்டேன்’ என்று கூறும் பிரதமர் மோடி, 'இந்த மசோதா பெரிய கார்ப்பரேட் நிறுனங்களுக்கும் பெரும் பணக்காரர்களுக்கும் ஆதரவானது என்று கூறப்படுவதை மறுக்கிறேன். பொதுத் துறை மற்றும் தனியார் துறை பங்களிப்புடன் ஒரு சாலை, ஒரு கால்வாய், ஒரு வீடு உருவாக்கப்படுகிறது என்று சொன்னால் அவற்றை தனியார் துறையினர் எடுத்துச் சென்று விடுவார்களா’ என்று கேள்வி எழுப்புகிறார்.

ஏழை விவாசாயிகள் சேற்றில் கை வைக்கவில்லை என்றால் யாரும் சோற்றில் கை வைக்கமுடியாது. கடன், நஷ்டம், வறுமை என்றாலும் மானத்துக்காக ஒரு விவசாயி தற்கொலை செய்துகொள்வானே தவிர, தன்னுடைய உயிரினும் மேலான நிலத்தைக் கைவிட மாட்டான். பெற்ற தாய் தந்தையைவிட பெற்ற பிள்ளைகளைவிட இந்த மண்ணை நேசிப்பான் விவசாயி. அவனுக்குரிய இழப்பீட்டை கொடுக்காமல் மழுப்புவது எந்த வகையிலும் நியாயம் இல்லை. எத்தனையோ திட்டங்களுக்கு விளக்கம் சொல்லும் மத்திய அரசு, விவசாயிகளின் சந்தேகங்களுக்கு இதுவரை பதில் சொல்லவில்லை. ஏதோ உள்நோக்கம் இருப்பதால்தான், அவசர சட்ட மசோதாவைப் பற்றி வெளிப்படையாகப் பேசவில்லை.''

'ஏப்ரல் 21 டெல்லியில் கூடுவோம்!’

''நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை ஜெயலலிதா ஆதரித்துள்ளாரே?''  

''நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் மாநில அரசுக்கு அதிக அதிகாரம் தரப்பட்டுள்ளதால் ஆதரிக்கிறோம் என்று காரணம் சொல்லியிருக்கிறார்கள். நிலத்தைக் கையகப்படுத்தவும் அதற்கு உத்தரவு போடவும் நிதி ஒதுக்கவும் போன்ற செயல்கள்தான் அதிகாரம் மிக்கவை. அவை மத்திய அரசிடம்தான் இருக்கும். குறிப்பிட்ட நிலத்தைக் கையப்படுத்திக் கொடு என்று மத்திய அரசு சொல்லும்போது அதை ஏழை விவசாயிகளிடம் இருந்து பறித்துக் கொடுக்கும் பாவச்செயலை செய்யும் தண்டல்காரன் வேலைதான் மாநில அரசு செய்யும். எனவே, சாக்குப்போக்கு சொல்லாமல் இரண்டாம் பசுமைப் புரட்சியில் ஜெயலலிதாவுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமேயானால், இந்தச் சட்டத்தை நிறைவேற்ற விடக் கூடாது.  விவசாயிகள் ஏப்ரல் 21-ம் தேதி மீண்டும் டெல்லியில் கூடுகிறார்கள். அடுத்த கட்ட போராட்டம் அப்போது முடிவாகும். விவசாயிகளை நாடோடி கூலிகளாக்கும் இந்தக் கறுப்புச் சட்டத்தைத் தோற்கடிப்போம்.''

எஸ்.முத்துகிருஷ்ணன், படம்: சொ.பாலசுப்ரமணியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு