பிரீமியம் ஸ்டோரி

எஸ்.எம்.சுல்தான், மதுரை.

எம்.ஜி.ஆர் ஆட்சியில் அவரது அண்ணன் சக்ரபாணிக்கு ஏதாவது பதவி கொடுக்கப்பட்டதா?

கழுகார் பதில்கள்!

எம்.ஜி.ஆர் தனிக்கட்சி ஆரம்பிக்கும்போது எப்போதாவது தேவைப்பட்டால் தனது அண்ணன் சக்ரபாணியிடம் ஆலோசனை கேட்பதை வழக்கமாக வைத்திருந்தார். ஆட்சி அமைத்த பிறகு அதிகாரிகள் மட்டத்தில் தனது ஆலோசனைகளை முடித்துக்கொண்டார். தனது உறவினர்கள் ஆட்சியில் தலையிடக் கூடாது என்று எம்.ஜி.ஆர் நினைத்தார். 'எனது பெயரை 'எனது உறவினர்’ என்று சொல்லிக்கொண்டு யாராவது பயன்படுத்தினால் அதற்கு முக்கியத்துவம் தரவேண்டாம்’ என்று நாளிதழ்களில் எம்.ஜி.ஆர் விளம்பரமே கொடுத்தார். தலைமைச் செயலகத்தில் அதனை ஒட்டவும் சொன்னார். எம்.ஜி.ஆர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது நடந்த 1984 சட்டமன்றத் தேர்தலில் சில இடங்களில் அ.தி.மு.கவுக்கு ஆதரவாக சக்ரபாணி பிரசாரம் செய்தார். அ.தி.மு.க வீரப்பன் அணியாகவும் ஜெயலலிதா அணியாகவும் பிரிந்து மோதிக்கொண்டு இருந்த நேரம் அது. 'எனது தம்பி மிக நல்ல நோக்கத்துக்காக இந்தக் கட்சியை ஆரம்பித்தார். அந்த நோக்கத்தை யாரும் சிதைத்துவிடக் கூடாது’ என்று அறிவுரை சொல்லி வந்தார்.

சினிமா வட்டாரத்திலும் குடும்பத்திலும் எம்.ஜி.சக்ரபாணியை 'பெரியவர்’ என்றுதான் அழைப்பார்கள். எம்.ஜி.ஆருக்கு 'சின்னவர்’ என்று பெயர்!

ப.க.சபாபதி, நீலகிரி.

2016 சட்டமன்றத் தேர்தலில் பா.ம.க தலைமையில் கூட்டணி அமைக்க விரும்பும் கட்சிகள் உண்டா?

இதே கேள்வியைத்தான் ராமதாஸும் அன்புமணியும் கேட்டுக்கொள்கிறார்கள். எட்டு கட்சிகளின் பெயரைச் சொல்லி அவர்கள் வரலாம் என்று அழைத்த பிறகும் யாரும் வருவதாகத் தெரியவில்லையே!

பொன்விழி, அன்னூர்.

கருணாநிதி கதை வசனத்தில் ஏதாவது திரைப்படம் தயாராக இருக்கிறதா?

அதுதான் தினமும் ரிலீஸ் ஆகிக்கொண்டே இருக்கிறதே!

ஆர்.எஸ்.பிரபு, சென்னை - 90.

நாவலர் நெடுஞ்செழியன், ஓ.பன்னீர்செல்வம்... இருவரையும் ஒரே மாதிரி எனலாமா?

நாவலர் பேசியே பெரிய ஆள் ஆனவர். பன்னீர் பேசாமல் பெரிய ஆள் ஆகிவிட்டவர். மற்றபடி இவர்கள் இருவருக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை. நாவலர் நெடுஞ்செழியன், தி.மு.க-வின் ஐம்பெருந்தலைவர்களில் ஒருவர். கருணாநிதியே தனது திருவாரூருக்கு நாவலரை அழைத்து வந்து கூட்டம் போட்டுள்ளார். அண்ணாவால் பொதுச்செயலாளர் ஆக்கப்பட்டவர். பெரியார் வெண்தாடி வைத்திருந்தபோது, கறும்தாடி வைத்திருப்பார் நாவலர். அதனால் அவரை 'இளந்தாடி பெரியார்’ என்று அழைப்பார்கள். தமிழகத்தில் பாரதிதாசன் கவிதைகளை விதைத்தவர் நாவலர். அவரை பன்னீர்செல்வத்துடன் எப்படி ஒப்பிட முடியும்?

க.பாலகிருஷ்ணன், சுரண்டை.

நீதிபதி குமாரசாமியின் கேள்விகள்..?

வருமானவரி, கணக்கு வழக்குகள், கம்பெனிச் சட்டங்கள், லாப நஷ்டங்கள், வருமானம் மற்றும் செலவுகள், அரசு ஊழியரா இல்லையா, வழக்கு தாக்கல் செய்யப்பட்டதே சரியா தவறா, எஃப்.ஐ.ஆர் போடத் தகுதி வாய்ந்தவர்தான் தாக்கல் செய்தாரா, பொருட்களின் தரம், அசையாச் சொத்துகளின் மதிப்பீடுகள், அசையும் சொத்துகளின் விலை என்று இறுக்கமான விஷயங்களை மட்டுமே அதிகமாகக்கொண்ட வழக்கு இது. பொதுமக்களுக்கு இந்த வழக்குப் பற்றி படிக்க சுவாரஸ்யமான தகவல்கள் இருக்காது. ஆனால் நீதிபதி குமாரசாமி, தன்னுடைய விசாரிக்கும் பாணி மூலமாக சுவையான வழக்காக மாற்றி, கடைசி வரைக்கும் டென்ஷன் குறையாமல் விசாரணைப் படலத்தை நடத்தி முடித்துவிட்டார். க்ளைமாக்ஸ் அவர் கையில்தான் இருக்கிறது.

தாரா ரமேஷ், புதுச்சேரி - 4.

விளம்பரப் பலகைகளைக் கிழிக்கும் டிராஃபிக் ராமசாமியின் செயல்..?

  நீங்கள் சாலையில் பார்த்தும் பார்க்காமலும் சாதாரணமாகக் கடந்து செல்லும் விளம்பரப் பலகைகள் வைப்பதற்கு ஏராளமான விதிமுறைகள் உள்ளன. விளம்பரத் தட்டிகள் வைப்பவர்கள் 15 நாட்களுக்கு முன் மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும். காவல் நிலையத்துக்கு தனியாக விண்ணப்பம் அனுப்ப வேண்டும். எந்த இடத்தில் வைக்கப்படுகிறதோ அந்த நில உரிமையாளரிடம் தடையில்லா சான்று பெற வேண்டும். இதனால் பொதுமக்களுக்கு இடையூறு இல்லை என்பதற்கான விளக்கப் படத்தை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். விளம்பரத்தின் கீழ் பகுதியில் மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் எண், அனுமதிக் காலம் ஆகியவற்றை எழுத வேண்டும். ஒவ்வொரு விளம்பரத்துக்கும் 250 ரூபாய் அட்வான்ஸ் செலுத்த வேண்டும். அதில் 50 ரூபாய் திரும்பத் தரப்பட்டுவிடும். சாலை மத்தியில் வைக்கக் கூடாது. நடைபாதைகளில் வைக்கக் கூடாது. அனுமதி காலம் முடிந்த உடனேயே அகற்ற வேண்டும் இப்படி ஏராளமான கட்டுப்பாடுகளை மாநகராட்சி விதித்துள்ளது. இப்போது வைக்கப்படும் விளம்பரப் பலகையில் பாதி அளவுகூட இந்தக் கட்டுப்பாடுகளை பின்பற்றுவது இல்லை. எனவே, டிராஃபிக் ராமசாமி செய்வது, அரசின் சட்டதிட்டங்களைக் காப்பாற்றும் முயற்சிதானே!

டி.பிரேம்குமார், கோயம்புத்தூர்6.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசும் மத்திய அரசும் உயர்ந்த விருதுகள் அளிக்காதது வேதனைக்குரிய விஷயம்தானே?

நடிகர் திலகம் என்ற பாராட்டைவிட சிவாஜிக்கு வேறு என்ன பாராட்டு வேண்டும். ரசிகர்கள் அளிக்கும் பட்டத்துக்கு இணையானது அல்ல, அரசாங்கம் அளிக்கும் பட்டங்கள். இத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் வெளியாக இருக்கிறது 'வீரபாண்டிய கட்டபொம்மன்.’ அவரது குரலைக் கேட்கும்போது காது அதிர்கிறது. பார்க்கும்போது கண்கள் துடிக்கின்றன.

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

விஜயகாந்த் மனதில் அரசியலைப் பற்றி என்ன எண்ணம் ஓடிக்கொண்டு இருக்கும்?

'ஓட்டுப் போடுவதற்கு மட்டும்தானே பொதுமக்கள் வெளியில் வருகிறார்கள், அரசியல்வாதியும் தேர்தல் நேரத்தில் வெளியில் வந்தால் போதாதா? வருஷம் முழுவதும் உழைக்க வேண்டுமா?’ என்று நினைப்பாரோ? அதனால்தான் ஆளையே காணோமா?

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002 kalugu@vikatan.com என்ற முகவரியிலும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு