Published:Updated:

மிஸ்டர் கழுகு: முதல்வர் வேட்பாளர்?

மிஸ்டர் கழுகு: முதல்வர் வேட்பாளர்?

பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு: முதல்வர் வேட்பாளர்?

ழுகார் உள்ளே நுழைந்ததும் உடன்குடி மின்திட்டம் பற்றி நமது நிருபர் எழுதிய கட்டுரையை வாங்கி வாசித்துவிட்டு சொல்லத் தொடங்கினார்!

''உடன்குடி அனல் மின்திட்ட விவகாரத்தில் தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் அ.தி.மு.கவுக்கு எதிராக ஒரே நேர்கோட்டில் இணைந்துள்ளன. தி.மு.க., பா.ம.க., கம்யூனிஸ்ட், காங்கிரஸ் என்று ஒவ்வொரு கட்சியினரும் தங்களின் அறிக்கைகள் மூலம் அ.தி.மு.கவை உடன்குடி விவகாரத்தில் வறுத்தெடுத்துக் கொண்டிருக்கின்றனர். 'அரசு தனது முடிவை தீர்க்கமாக எடுக்காததன் விளைவுதான் இப்படி ஒரு நெருக்கடி. முதல்வர் பன்னீர் இதில் தலையிட்டு கருத்துச் சொல்ல மாட்டார். ஆனால், இந்த விவகாரத்தில் நேரடியாக முடிவெடுத்தவர்கள் மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், முதல்வரின் செயலாளர் வெங்கடரமணன் ஆகிய நால்வரும்தான். இவர்கள்தான் இதனை உன்னிப்பாகக் கவனித்து முடிவெடுத்திருக்க வேண்டியவர்கள். அவர்களால்தான் இப்படி ஒரு சிக்கல்’ என்று சொல்கிறார்கள்!'

''சொல்லும்!'

''அரசியல் கட்சித் தலைவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு இவர்களால் உரிய பதில் சொல்ல முடியவில்லை. உடன்குடி அனல் மின்திட்டத்துக்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குப் பின் அது ரத்து செய்யப்பட்டது ஏன்? டெண்டருக்கான விலைப்புள்ளிகள் திறக்கப்பட்டு ஐந்து மாதங்களுக்குப் பிறகு, அது ரத்து செய்யப்பட்டது ஏன்? எப்போதும் மின்வாரியக் கட்டடத்தில் நடைபெறும் மின்வாரியக் கூட்டம் கடந்த 13-ம் தேதி தலைமைச் செயலகக் கட்டடத்தில் நடத்த வேண்டிய அவசியம் என்ன? எண்ணூர் திட்டத்தை ஏற்றுக்கொண்டு, அதே முறையில் விடப்பட்ட உடன்குடி டெண்டரை மட்டும் ரத்துசெய்யக் காரணம் என்ன என்று அடுக்கப்பட்டன கேள்விகள். ஆட்சிமட்டத்தில் இருக்கும் இந்த நால்வர்தான் இத்தகைய முடிவை எடுத்ததாகவும் சொல்கிறார்கள். போலீஸ் அதிகாரி ஒருவரிடம் குறிப்பிட்ட நிறுவனம் பற்றி தவறான ஓர் அறிக்கையை வாங்கி அதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டதாகவும் சொல்கிறார்கள்.'

''அவருக்கு என்ன ஆதாயம்?'

'' 'தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் வாங்கி அரசாங்கத்துக்கு விற்று அதில் லாபம் அடையும் இரண்டு எழுத்துக்காரர் ஒருவர் இருக்கிறார். இவர் கடந்த 91-96-ம் ஆண்டுகளில் கொடி கட்டிப்பறந்தவர். அவருக்கும் வி.ஐ.பி ஒருவரின் மகனுக்கும் தொழிலில் கூட்டு. இவர்கள் கொடுக்கும் ஐடியாதான் இவை எல்லாம்’ என்றும் சொல்கிறார்கள். தாங்கள் விரும்பும் நிறுவனம் கான்ட்ராக்ட் எடுத்தால் அதில் இருந்து சப் கான்ட்ராக்ட் பெறுவது இவர்கள் நிறுவனம். இதில் வேறொரு கம்பெனி நுழைய அனுமதிப்பார்களா என்ன? இதன் பிறகுதான் மளமளவென்று காரியங்கள் நடந்துள்ளன!'

''ஓஹோ!'

''இது நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்துக்கு விரோதமானது என்றும் சொல்கிறார்கள். சீன நிறுவனம் ஒன்று தங்களுக்கு டெண்டரை வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த நீதிபதி சத்தியநாராயணன், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார். உடனே, நீதிமன்றத்தில் பதில் சொன்ன தமிழ்நாடு மின்வாரியம், உடனடியாக எழுத்துப்பூர்வமான மனுவை தாக்கல் செய்கிறது. அந்த மனுவில், 'மனுதாரர் அளித்த கடிதம் டெண்டர் இறுதி செய்யப்படுவதற்கு முன்பாக, மின்வாரிய இயக்குநர்கள் குழுவால் முழுமையாகப் பரிசீலிக்கப்படும். தமிழ்நாடு டெண்டர்கள் வெளிப்படைத்தன்மைக்கான சட்டம் மற்றும் விதிகள் முழுமையாகப் பின்பற்றப்படும்’ என்று ஒரு பிரமாண வாக்குமூலத்தைத் தாக்கல் செய்கிறார் அப்போதைய மின்வாரிய சேர்மனும் இப்போதைய தலைமைச் செயலாளருமான ஞானதேசிகன். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுதாரர்கள் அளித்த புகார் மனுவை பரிசீலித்து, உரிய உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறார். நியாயமாகப் பரிசீலிக்க வேண்டும் என்று ஒரு நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்திலேயே மேல் முறையீடு செய்தது ஞானதேசிகன் தலைமையிலான மின்வாரியம். மனுதாரர் அளித்த புகார்களை முழுக்க பரிசீலித்து, அதன் மீது உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரே, டெண்டர் இறுதி செய்யப்பட வேண்டும் என்று நீதிமன்றம் மீண்டும் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, செப்டம்பர் 27 அன்று.....!'

''அன்றுதானே நீதிபதி குன்ஹா தீர்ப்பு அளித்த நாள்?'

''ஆமாம்!  ஜெயலலிதாவுக்கு தீர்ப்பு தரப்பட்ட அன்று மாலை 3 மணிக்கு, த்ரிஷி – சீன நிறுவனத்துக்கும், பெல் நிறுவனத்துக்கும் கடிதம் எழுதி அனுப்பியதாகவும் அதில் பெல் நிறுவனத்துக்கு டெண்டர் உறுதி செய்யப்பட்டது என்ற விவரம் இருந்தது என்றும் சொல்கிறார்கள். இந்த அவசரத்துக்கு என்ன காரணம் என்று கண்டுபிடித்தாலே போதும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்!' என்று கழுகார் நிறுத்த... நாம் டாப்பிக்கை மாற்றினோம்.

மிஸ்டர் கழுகு: முதல்வர் வேட்பாளர்?

''அனைவரும் எதிர்பார்த்தது மாதிரியே அகில இந்தியப் பொறுப்பை கைப்பற்றிவிட்டாரே குஷ்பு?''

''உடனடியாக அறிவிப்பார்கள் என்று குஷ்புவே எதிர்பார்க்கவில்லை. அகில இந்திய செய்தித் தொடர்பாளர் என்பது மிகவும் முக்கியமான, கெளரவமான பதவி. அது உடனடியாக குஷ்புவுக்குத் தரப்பட்டுவிட்டது. திருச்சியில் காங்கிரஸ் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட திருச்சி வேலுச்சாமி, மத்திய  அரசின்  கொள்கைகளைக் கடுமையாக விமர்சித்ததுடன், 'குஷ்பு முதல்வர் ஆவார்!’ என்றும் ஆரூடம் சொன்னார். 'குஷ்பு முதல்வர் ஆவாரா என்று நீங்கள் யோசிக்கலாம். பக்கத்திலிருக்கும் தஞ்சையில்தான் ஆழிகோ மருதையன் என்பவர், நடிகை ஜெயலலிதா முதல்வர் ஆவார் என்று முதன்முதலில் அறிக்கை தந்தார். அவரை அ.தி.மு.க- காரர்களே அப்போது தாக்கினார்கள். காலம் கடந்தது. மருதையன் சொன்னது நடந்தது. அதைப்போல் குஷ்பு முதல்வராவதும் உறுதி’ என முடித்தார். அவருக்கு அடுத்துப் பேசிய காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலரும், குஷ்புதான் வருங்கால முதல்வர் என்று முழக்கமிட்டனர்.!'

''இதற்கு குஷ்பு ஏதாவது பதில் சொன்னாரா?'

''அவர்களின் பேச்சுகளைக் கேட்ட குஷ்புவின் முகம் மலர்ந்து சிரித்தது. கடைசியாக மைக்கைப் பிடித்தார் குஷ்பு. மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டம் பற்றிப் பேசியவர் இறுதியாக, 'பெங்களூரில் நடந்து வரும் வழக்குக்கும் இந்த மசோதாவை அ.தி.மு.க ஆதரிப்பதற்கும் ஏதோ தொடர்பு இருப்பதாகச் சந்தேகம் உள்ளது. நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க எம்.பிகள் டேபிள் மேலே ஒரு படத்தை வைத்து கும்பிட்ட பிறகுதான் பேசவே ஆரம்பிக்கிறார்கள். அம்மா படம் என்றால் வீட்டில் வைக்க வேண்டியதுதானே என்று மற்ற எம்.பிகள் சொல்லிச் சிரிக்கிறார்கள். 2016-ல் நடக்கவுள்ள தமிழகம் உள்ளிட்ட நான்கு மாநில சட்டசபைத் தேர்தலுக்குப் பின் காங்கிரஸின் பலம் தெரியும்’ என்றார். முதல்வர் வேட்பாளர் என்பது குறித்து கருத்து எதுவும் சொல்லவில்லை.

திருச்சி ஆர்ப்பாட்டத்துக்கு மறுநாளே, குஷ்புவுக்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பதவியை அறிவித்தார் சோனியா. அதன் மறுநாளே சத்தியமூர்த்திபவனில் பத்திரிகையாளர்களையும் குஷ்பு சந்தித்தார். இது கட்சியில் இருந்த பலருக்கும் கடுப்பைக் கிளப்பி உள்ளதாம். தமிழகத்தைச் சேர்ந்த ஜெயந்தி நடராஜன் இருந்த பதவி இது. மீண்டும் தமிழ்நாட்டுக்கே கிடைத்துள்ளது!'

மிஸ்டர் கழுகு: முதல்வர் வேட்பாளர்?

''குஷ்புவின் பாப்புலாரிட்டிக்குக் கொடுத்​தி​ருப்​பார்கள்!'

''மாநிலப் பொருளாளர் பதவி நா.செ.ராமச்சந்​திரனுக்குத் தரப்பட்டுள்ளது. இந்தப் பதவியை ஜே.எம்.ஆரூண் எதிர்பார்த்துக் காத்திருந்தார். ஜி.கே.வாசன் ஆதரவாளராக இருந்த ஆரூணை அந்தப் பக்கம் போகவிடாமல் தடுத்து, மாநிலப் பொருளாளர் பதவி தருவதாகச் சொல்லி தக்க வைத்திருந்தார்களாம். அவருக்கு அந்தப் பதவி கிடைக்கவில்லை. ஆரூண் மனவருத்தத்தில் இருக்கிறாராம்!'

''பி.ஜே.பி-யில் புதிதாக மாநில அமைப்பு இணைப் பொதுச்செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளாரே?'

''ஆமாம்! அந்தப் பதவிக்கு கேசவ விநாயகம் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் இப்படி ஒரு பொறுப்பு கிடையாது. புதிதாக உருவாக்கப்பட்டு இவர் நியமிக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், 30 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்தார்.

பி.ஜே.பியின் அமைப்புச் செயலாளர் பதவிக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களைத்தான் நியமிப்பார்கள். இவர்களை டெல்லி தலைமையே நேரடியாக நியமிக்கும். அமைப்பு பொதுச் செயலாளராக இப்போது இருக்கும் மோகன்ராஜுலுவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்து வந்தவர்தான். அவர் இந்தப் பதவியில் 13 ஆண்டுகளாக இருக்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில்தான் இவர் பெயர் அதிகமாகப் பிரபலம் ஆனது. அவருக்கு அடுத்த இடத்துக்கு கேசவ விநாயகம் கொண்டு வரப்பட்டுள்ளார். மோகன்ராஜுலுவை டம்மி ஆக்குவதற்காக இவரைக் கொண்டு வந்துள்ளார்கள் என்றும் சிலர் இப்போதே கொளுத்திப் போடுகிறார்கள்.!'

''அப்படியா?'

மிஸ்டர் கழுகு: முதல்வர் வேட்பாளர்?

''சுமார் நான்கு வருடங்களாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவின் கூடுதல் டி.ஜி.பியாக இருந்த காந்திராஜன் திடீரென டம்மியான பதவியான போலீஸ் போக்குவரத்துத் துறைக்கு மாற்றப்பட்டார். அண்மையில் தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்ததாம். அப்போது,  உயர் அதிகாரி ஒருவர், 'டாஸ்மாக் வருமானத்தை மேலும் அதிகரிக்கலாம். அதற்கு, மதுவிலக்குப் பிரிவு செயல்பாடு சரியில்லை’ என்று குறை சொன்னாராம். உடனே சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், 'இல்லையே... அவர்கள் சரியாகத்தானே செய்கிறார்கள்’ என்று அடித்துப் பேசினாராம். உடனே இடைமறித்த  நம்பர் த்ரீ அதிகாரி, 'இல்லை.. இல்லை... மதுவிலக்குப்பிரிவு சரியில்லை’ என்கிற ரீதியில் கோபமாகப் பேசியிருக்கிறார். ஏற்கெனவே, கடலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் கொடி​கட்டிப்பறப்பதாக அந்த மாவட்ட அமைச்சர்  பகிரங்கமாகப் புகார் செய்தாராம். இதேபோல், திருவண்ணாமலை மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் நடமாட்டம் இருப்பதாகவும் அரசு மேலிடத்துக்குத் தகவல் போனதாம். இதையெல்லாம் வைத்துத்தான், மதுவிலக்குப்பிரிவின் தலைமையை மாற்ற முடிவு செய்தார்களாம். அந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு, காந்திராஜன் மாற்றப்பட்டார்!'

''கள்ளச்சாராயத்தை ஒழிக்க நினைக்கிறார்களா? நல்ல சாராயத்தை வளர்க்க நினைக்கிறார்களா என்று தெரியவில்லையே?'

''தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பதவியில் இருந்தவர் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான சோ.அய்யர். அவரது பதவிக் காலம் மார்ச் 9-ம் தேதியுடன் முடிந்தது. அடுத்து, அந்தப் பதவியைப் பிடிக்கப் போவது யார் என்று போட்டி நிலவியது. ரேஸில் ஜெயித்தவர் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கமிஷனராக இருந்த சீதாராமன். அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் நிர்வாகத்தில் வரும் துறை இது. சீதாராமன், ரிட்டயர்டு ஆக இரண்டு மாதங்கள் இருந்த நிலையில், புதிய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஏற்கெனவே, ஸ்ரீரங்கம் தொகுதியின் தேர்தல் அதிகாரியாக இருந்தவர், அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு வேண்டப்பட்டவர் என்பதை கண்டுபிடித்து அவரை வாக்குப்பதிவு நாளுக்கு முன்பு மாற்றினார்கள். இப்போது புதிய ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கும் சீதாராமனும், அமைச்சர் விஸ்வநாதனின் பக்கத்து ஊர்க்காரர் என்கிறார்கள். முன்பு, ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் ஐ.ஏ.எஸ் அந்தஸ்து பெற்றாராம். 'அப்போதும் சரி... இப்போதும் சரி... அமைச்சர் விஸ்வநாதனின் ஆசியைப் பெற்றவர் சீதாராமன். இரண்டு ஆண்டுகள் வீதம் மூன்று முறை பதவி நீடிப்பு பெற வாய்ப்புண்டு’ என்று தலைமைச் செயலக அதிகாரிகள் முணுமுணுக்கிறார்கள்' என்று சொல்லிவிட்டு எழுந்த கழுகார்,

''ராயப்பேட்டையில்  செயல்படும் கட்சியில்  இப்போது உள்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. பல ஆயிரம் பேருக்கு கட்சிப் பொறுப்புகளுடன் அவர்களுடைய பட்டியலை டைப்பிஸ்ட், ஸ்டெனோ டைப்பிஸ்ட், கிளார்க்குகள் தயார் செய்து வருகிறார்கள். ராயப்பேட்டை கட்சி அலுவலகம் அரசு அலுவலகம்போல செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் காலை 10 மணிக்கு சாப்பாட்டுடன் வந்து விடுகிறார்கள். இரவு 7 மணிக்கு மேல்தான் வீட்டுக்குக் கிளம்ப முடிகிறதாம். ஆளும் கட்சிக்குத் தனது விசுவாசத்தைக் காட்ட கோட்டையின் முக்கிய அதிகாரி ஒருவர்தான் இந்த ஏற்பாட்டை செய்து கொடுத்து அந்தக் கட்சி செலவை மிச்சப்படுத்தியுள்ளாராம்' என்றபடி பறந்தார்!

படங்கள்: சு.குமரேசன், எம்.விஜயகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு