Published:Updated:

10.5% வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரம்; நெருக்கும் பாமக... இடியாப்பச் சிக்கலில் அதிமுக!

வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம்

தேர்தல் நேரத்தில் பிரச்னை எழுந்துவிடக் கூடாது என்பதற்காக மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரைச் சூட்டுவோம் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தும் அந்த மக்களின் கோபம் தணியவில்லை.

Published:Updated:

10.5% வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரம்; நெருக்கும் பாமக... இடியாப்பச் சிக்கலில் அதிமுக!

தேர்தல் நேரத்தில் பிரச்னை எழுந்துவிடக் கூடாது என்பதற்காக மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரைச் சூட்டுவோம் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தும் அந்த மக்களின் கோபம் தணியவில்லை.

வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம்

'உரலுக்கு ஒரு பக்கம் இடின்னா மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி' என கிராமங்களில் ஒரு சொலவடை உண்டு. தமிழகத் தேர்தல் களத்தில் அத்தகைய ஒரு சிக்கலைச் சந்தித்திருக்கிறது அ.தி.மு.க. வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உள் இட ஒதுக்கீடு வழங்கினால்தான் கூட்டணிக்கு ஒப்புக்கொள்வோம் என பா.ம.க கெடு விதிக்க, அவசர அவசரமாக ஓர் அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதன்படி, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலிருந்த இருபது சதவிகிதத்தை மூன்றாகப் பிரித்து, 10.5 சதவிகிதத்தை வன்னிய சமூகத்துக்கும் 7 சதவிகிதத்தை சீர்மரபினருக்கும் மீதமுள்ள 2.5 சதவிகிதத்தை மீதமுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கும் பகிர்ந்துகொள்ளும் வகையில் சட்டமன்றத்தில் கடந்த மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்துவிட்டார்.

வீடுகளில் கறுப்புக்கொடி
வீடுகளில் கறுப்புக்கொடி

ஆனால், சீர்மரபினர் பிரிவில் வரும் சில சமூகங்கள் அந்தச் சட்டத்துக்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தன. தென் தமிழகத்தின் பல கிராமங்களில் கறுப்புக்கொடி ஏற்றிப் போராட்டம் நடத்தப்பட்டது. தேர்தல் நேரத்தில் பிரச்னை எழுந்துவிடக் கூடாது என்பதற்காக மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரைச் சூட்டுவோம் எனத் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தும் அந்த மக்களின் கோபம் தணியவில்லை.

`அ.தி.மு.க-வின் கோட்டை’ என வர்ணிக்கப்படும் சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ராஜலட்சுமி வல்லராம்புரம் என்ற கிராமத்துக்கு பிரசாரத்துக்குச் சென்றபோது, கறுப்புக்கொடியுடன் அவர் வாகனத்தைச் சூழ்ந்துகொண்ட மக்கள், ``சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தி முடிக்காமல், எப்படி இட ஒதுக்கீடு வழங்கினீர்கள்?” என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்ப, எதிர்கொள்ள முடியாமல் அமைச்சர் எஸ்கேப் ஆனார். இதே சிக்கலை, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் உள்ளிட்ட பல தென் மாவட்ட அமைச்சர்கள் சந்தித்துவருகின்றனர். இந்த விவகாரம் தேர்தல் முடிவுகளில் பாதிப்புகளை ஏற்படுத்திவிடுமோ என மிரண்டு போயிருக்கின்றனர் அ.தி.மு.க-வினர்.

ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்
ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்

அதனால்தான், சில நாள்களுக்கு முன்னர், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ``வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு ஆறு மாதங்களுக்கு மட்டுமே...'' என்று பேசியது சர்ச்சையைக் கிளப்பியது. அவரைத் தொடர்ந்து தற்போது துணை முதல்வர் ஓ.பி.எஸ்-ஸும் ``வன்னியர்களுக்கான தற்போதைய இந்த உள் ஒதுக்கீட்டு ஏற்பாடு தற்காலிகமானதுதான். சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு முடிந்ததும், இதில் இறுதியானதும் நிரந்தரமானதுமான அரசாணை பிறப்பிக்கப்படும்” என்று தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் சொல்ல கொதித்துப்போனது தைலாபுர வட்டாரம்.

``தமிழ்நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% இடப்பங்கீடு வழங்குவதற்கான சட்டம் தற்காலிகமானதுதான் என்று சமூகநீதி குறித்த புரிதல் இல்லாத சிலர் கூறிவருகின்றனர்; அதை சில ஊடகங்கள் திரித்து வெளியிடுவதை விஷமப் பிரசாரமாகவே பாட்டாளி மக்கள் கட்சி பார்க்கிறது'' என அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டார் பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ். மேலும், ``வன்னியர் இடப்பங்கீட்டுக்காக இயற்றப்பட்ட சட்டம் நிரந்தமானதுதான்; சட்டங்களில் தற்காலிகச் சட்டம் எதுவும் இல்லை. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் தெளிவாக இருக்கிறார்'' என எடப்பாடி பழனிசாமியுடன் தொலைபேசியில் பேசியபோது உறுதி செய்ததாகவும் தெரிவித்தார்.

மருத்துவர் ராமதாஸ்
மருத்துவர் ராமதாஸ்

வட தமிழகத்தில் வன்னியர் உள் இட ஒதுக்கீட்டைச் சொல்லித்தான், பா.ம.க வாக்கு கேட்டுவருகிறது. வன்னியர்களின் வாக்குகளை நம்பித்தான் வட தமிழகத்தில் அ.தி.மு.க-வின் வெற்றியும் இருக்கிறது. ஏன், முதலமைச்சர் போட்டியிடும் தொகுதியிலேயே வன்னியர் வாக்குகள்தான் மெஜாரிட்டி. இந்தநிலையில் இப்படியொரு விவகாரம் கிளம்ப படு அப்செட்டில் இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இது குறித்து அதிகாரபூர்வமாக எந்தவொரு கருத்தையும் தெரிவிக்காமல் மௌனம் இருக்கிறார். இந்தநிலையில், இந்த விவகாரத்தில், துணை முதலமைச்சரின் பேச்சை நம்புவதா, இல்லை மருத்துவர் ராமதாஸின் கருத்தை நம்புவதா என இரண்டு சமூக மக்களுமே குழம்பிப் போயிருக்கிறார்கள்.

இந்தநிலையில், அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி இது குறித்துப் பேசுகையில், ``ராமதாஸைப் பொறுத்தவரையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு `ஆயிரம் கை, ஆயிரம் கால்’ இருக்கிறது என்று அஞ்சுகிறார். அதனால்தான், `ஊடகங்கள் விஷமப் பிரசாரம் செய்கின்றன’ என்று ஊடகங்கள் மீது பழிபோடுகிறார். சீர்மரபினருக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் ஏழு சதவிகித ஒதுக்கீட்டில் வண்ணார், வளையர், மீனவர் ஆகிய சமூகங்களுக்கு உரிய பிரதிநித்துவம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி வழங்கியிருந்தால், தெற்கில் இப்போது அ.தி.மு.க சந்திக்கும் எதிர்ப்புநிலை மட்டுப்படுத்தப்பட்டிருக்கும். எல்லா தரப்பு சமூகங்களிடமும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு பெருகியிருக்கும். ஆனால், அதை எடப்பாடி செய்யத் தவறியதால், அந்தச் சமூகங்களுக்கு செய்த அநீதியாகத்தான் பார்க்கிறேன். இதற்கான விலையை அவர்கள் கொடுத்துத்தான் ஆக வேண்டும்” என்றார்.

ரவீந்திரன் துரைசாமி
ரவீந்திரன் துரைசாமி

இந்தநிலையில் இது தொடர்பாக, அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் சிவசங்கரியிடம் பேசினோம்.

``வன்னிய சமூகத்துக்கு தற்போது கொடுக்கப்பட்டுள்ள 10.5 சதவிகித இட ஒதுக்கீடு என்பது நிலையானது. இந்த எண்ணிக்கை கூடுமே தவிர இனி குறைவதற்கு வாய்ப்பில்லை. குலசேகரன் தலைமையிலான ஆணையத்தின் கணக்கெடுப்பு வந்த பிறகு, அதற்கேற்ப மாற்றம் செய்யப்படும். சாதிவாரிக் கணக்கெடுப்பு வருவதற்கான காலத்தைத்தான் அனைவரும் ஆறு மாதம் எனக் குறிப்பிட்டுவருகின்றனரே தவிர வேறொன்றும் இல்லை'' என்கிறார் அவர்.