Published:Updated:

92 கி.மீ... டிரைவ் இன் கடற்கரை... காடு சூழ் வீடுகள்... கேரள மேற்கு கடற்கரைச் சாலை! #Travelogue

92 கி.மீ... டிரைவ் இன் கடற்கரை... காடு சூழ் வீடுகள்... கேரள மேற்கு கடற்கரைச் சாலை! #Travelogue
92 கி.மீ... டிரைவ் இன் கடற்கரை... காடு சூழ் வீடுகள்... கேரள மேற்கு கடற்கரைச் சாலை! #Travelogue

கேரளத்தின் கோழிக்கோடு தொடங்கி கண்ணூர் வரையிலான 92 கி.மீ மேற்கு கடற்கரைச் சாலையில் இரண்டு நாட்கள் ‘ஃபோட்டோ வாக்’ பயணம். ‘வாண்டர்மைல்’ என்னும் பயணக்குழு தங்கள் முகநூல் பக்கத்தில் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. கிழக்குக் கடற்கரைச் சாலையின் நீள அகலங்களை திறந்தவெளி ஜீப்பில் நண்பர்களுடன் அளந்திருக்கிறேன். இதோ, இப்போது மேற்கு கடற்கரைச் சாலையில் ஒரு ட்ரிப்... அரபிக் கடல் பகுதிக்கும் படையெடுக்கும் வாய்ப்பு... மிஸ் பண்ண முடியுமா? வாண்டர்மைலின் பத்து பேர் கொண்ட குழுவில் நானும் இணைந்தேன். சென்னையிலிருந்து கேரளாவுக்குப் புறப்பட்டோம். ஒரு வார இறுதியின் அதிகாலை எங்களுக்கு, கேரளத்தின் கோழிக்கோடு நகரில் விடிந்தது. 92 கி.மீ பயணத்திற்கு எங்களை அழைத்துச் செல்லவிருக்கும் டாடா விங்கர் ரகக் கார், கோழிக்கோடு ரயில் நிலையத்தில் எங்களுக்காகக் காத்திருந்தது.

கோழிக்கோட்டின் பிரபலமான பாளையம் மார்க்கெட் பகுதிக்குள் கார் நுழைந்தது. காலை ஆறு மணிக்கே சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த கூட்டத்தைப் பார்த்ததும் சட்டென காரிலிருந்து இறங்கி, மார்க்கெட்டைச் சுற்றிவரத் தொடங்கினோம். தன்னை
போட்டோ எடுப்பது தெரிந்ததும் வெட்கப்பட்ட பாட்டி, பூட்டப்பட்டிருந்த டீக்கடை வாசலில் அமர்ந்து விட்டேத்தியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த கிழவர், ‘எங்களை போட்டோ எடுங்கள், அவர்களை எடுங்கள்...’ என்று கேமிராவைப் பார்த்ததும் மகிழ்ச்சியுடன் மாறிமாறி  போஸ் கொடுத்த மக்களுடன் சில மணிநேரம் செலவிட்டுவிட்டு, அங்கிருந்து நகர்ந்தோம். கடற்கரைச் சாலையின் வழி எங்கிலும் இயற்கையாக உருவான ஹாலோப்ளாக் கற்களால் எழுப்பப்பட்ட சுவர்களும், அதில் கிளைத்து முளைத்திருந்த செடிகளும் எங்களை வரவேற்றன. கூடவே, கடலை நோக்கிப் பயணமாகும் கேரளத்து உப்பனாறுகளும், அதன் இரு கரைகளிலும் வளர்ந்திருந்த தென்னை மரங்களும் அந்த வெயிலிலும் அவ்வளவு இதம்!

கோழிக்கோடிலிருந்து மூன்று மணிநேரப் பயண தூரத்தில் இருக்கும் மாட்டணூரில் தங்கிவிட்டு, அங்கிருந்து பயணத்தைத் தொடர்வதாக யோசனை. கேரளத்தின் பழமைவாய்ந்த கட்டிடங்களை  ‘தரவாட்’ என்பார்கள். அதுபோல, மாட்டணூரின் 300 வருடப் பழமைவாய்ந்த ‘கல்லூர் தரவாட்’ என்னும் கட்டிடத்தில் தங்கினோம். எங்கு பார்த்தாலும், காரைக்குடி செட்டிநாடு வகையறா கட்டிடங்களைப் போல, எட்டுகட்டுகளை உடைய பிரமாண்ட வீடுகள். வீட்டின் அத்தனை பகுதிகளிலும் சூரியவெளிச்சம் படுவதுபோல கட்டமைப்பு. வீட்டின் பின்புறம் பாசி நிரம்பிய குளம். வீட்டைச் சுற்றிலும் சிறுகாடு என ரம்மியமாக இருந்தது இடம். அவ்வப்போது பெய்த சாரல் மழையில் ஒருபுறம் மண் வாசமும் மறுபுறம் காட்டின் வாசமும் நாசியைத் துளைத்தது.

கல்லூர் தரவாட்டுக்குச் செல்ல இரவாகிவிட்டதால் வீட்டின் பின்னால் இருக்கும் குளத்தை அப்போது பார்க்க முடியவில்லை. இரவு அங்கே தங்கிவிட்டு, அதிகாலை வெளிச்சம் கண்ணில்பட்டதும் குளத்தைச் சுற்றிப்பார்க்கக் கிளம்பினோம். கட்டிடத்தின் பின்னிருக்கும் அந்த குளத்துக்கு இரண்டு நுழைவுவாயில். ஒன்று, அந்த வீட்டில் அந்தக் காலத்தில் இருந்த ஆண்கள் நுழைவதற்கும், மற்றொன்று பெண்கள் நுழைவதற்குமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. துணிதுவைப்பதற்கும் உடைமாற்றிக் கொள்வதற்கும் பெண்களுக்கு தனி அறை இருந்தது. அவ்வப்போது துள்ளிக்குதித்து நீச்சலடித்துக் கொண்டிருந்த ஒரு பெரிய மீன், குளத்தைச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தது

காலையில் மீண்டும் டாடா விங்கரில் மாட்டணூரில் இருந்து புறப்பட்டோம். மேற்குக் கடற்கரையோரம் சூரிய அஸ்தமனத்தைப் பார்ப்பது அன்றைய இலக்கு. மாட்டணூரிலிருந்து புறப்பட்ட வண்டி மெல்ல ஊர்ந்து, கடற்கரையோர ஊர்களையும் கிராமங்களையும் கடந்து பயணித்தது. 

காணி நிலம் வேண்டும் பராசக்தி
அங்கு தூணில் அழகியதாய்
நன்மாடங்கள் துய்ய நிறத்தினதாய் 

அந்தக்காணி நிலத்திடையே ஓர் மாளிகை
கட்டித் தரவேணும் 

அங்கு கேணி யருகினிலே

தென்னைமரம் கீற்று மிளநீரும்

என்னும் பாரதியின் வரிகளைப் பிரதியெடுத்தது போலிருக்கிறது மேற்குக் கடற்கரைக்கோடி கேரளத்தின் அடையாளம். அங்குள்ள ஒவ்வொரு கிராமும், ஒவ்வொரு வீடும் அத்தனை அழகு. வீட்டை ஒட்டிச் செல்லும் ஓடைகள், குறைந்தபட்சம் வீட்டுக்கொரு தென்னை மரமாவது இருக்கிறது. இது, கார்ப்பரேட் சூழலில் சிக்கி தினம் ஓட்டமெடுத்துக் கொண்டிருக்கும் சென்னை வாசிகளின் கவனத்துக்கு... 

கேரள முதல்வரின் ஊரில்...

செல்லும் வழியில் ஓரிடத்தில் ஊரே திரண்டிருந்தது. பூக்கள் போல புலிகள் போல மாறுவேடம் போட்டிருந்தனர் சிறுபிள்ளைகள். தங்கள் பாரம்பரிய உடையில் வண்ணவண்ணக் குடைகளைக் கையில் பிடித்தபடி நின்றிருந்தனர் பெண்கள். எப்போது வேண்டுமானாலும் வாசிக்கத் தயாரான நிலையில், செண்டை மேளத்தைத் தோளில் சுமந்தபடி காத்திருந்தனர் சில கலைஞர்கள். ‘இது எந்த ஊர்’ என விசாரித்ததும், ‘பினராயி’ என பதில் வந்தது. கேரள முதல்வர் பினராயி விஜயனின் சொந்த ஊர். 'கேரள உல்சவம்’ என்னும் வருடாந்திரத் திருவிழாவுக்குத் தயாராகிக் கொண்டிருந்தது. ‘கேரள உல்சவம்’ - கேரளாவின் மறக்கடிக்கப்பட்ட அல்லது அதிகம் அறியப்படாத நாட்டுப்புறக் கலைகளுக்கான திருவிழா. கேரளத்தின் ஒவ்வொரு ஊரிலும் எளிமையாகவும் பிரமாண்டமாகவும் இந்த விழா கொண்டாடப்படுகிறது.

திடீரென, செண்டை வாசிக்கத் தொடங்கியதும் கூட்டத்திலிருந்த வாண்டுகள் துள்ளிக்குதித்தனர். கேரள பாரம்பர்யத்தை உணர்த்தும் வேடங்களில் இருந்த சிறுவர்களையும், கேரளத் தலைவர்களின் புகைப்படங்களையும் தாங்கிய வண்டிகள், செண்டை மேளக்காரர்களைப் பின்தொடர்ந்து சென்றன. கோலாட்டம் ஆடிக்கொண்டு பெண்களும், தெய்யம் என்னும் நடனக்கூத்துக்கான வேடம் அணிந்த இளைஞர்களும் அணிவகுத்துச் சென்றனர். மேளத்தின்  தாளத்துக்கேற்ப ‘ததிங்கினதோம்’ என கால்கள் தன்போக்கில் ஆடத் தொடங்கின. அணிவகுப்பை முழுவதுமாக வழியனுப்பிவைத்துவிட்டு வண்டி அங்கிருந்து கிளம்பியது. 

ஆசியாவின் மிகப்பெரும் ட்ரைவ் இன் கடற்கரை

அடுத்து, வண்டி கண்ணூர் முழப்பிளங்காடு டிரைவ் இன் கடற்கரை நோக்கிச் சீறிப்பாய்ந்தது. ஆசியாவின் மிகப்பெரும் டிரைவ் இன் கடற்கரை அது. அங்கிருந்துதான் சூரிய அஸ்தமனத்தை பார்ப்பதாகத் திட்டம். ஆனால், அன்று மேகங்கள் சூரியனை முற்றிலுமாக மறைத்திருந்தது. அலைகளையும் கரையொதுங்கிய சிப்பிகளையும் சங்குகளையும் மட்டும் அங்கே அமர்ந்து ரசித்துவிட்டு தரவாட்டுக்குத்  திரும்பினோம். ஏமாற்றமே என்றாலும், எதிர்பாராமல் நிகழும் சம்பவங்கள்தானே பயணத்தின் அழகு!

ஆனால், தரவாட் நோக்கிய பயணம் எங்களுக்கு வேறொரு உலகத்தைத் திறந்து விட்டிருந்தது. அதுவரையிலும், அந்நியப்பட்டிருந்தவர்கள் இப்போது நண்பர்களாகி விட்டோம். ‘அந்தாக்‌ஷரி’ என்னும் பாட்டுக்குப் பாட்டு விளையாடினோம். இது இன்னும் நீளாதா எனும் தருணத்தில், தரவாட் வந்துசேர்ந்தோம். மறுநாள், சிறுபிள்ளைகளும் பயம் அறியாமல் சுழற்றி விளையாடும் களரிப்பயட்டு தற்காப்புக் கலை நிலையம் எங்களை வரவேற்கக் காத்திருந்தது.

பழஸிராஜாவின் பிண்டாளிக் களரி

அதே மேற்குக் கடற்கரைச் சாலையில் இருக்கும் பிண்டாளிக் களரி பயிற்சி மையத்தில் அடியெடுத்து வைத்தோம். கேரள வர்ம பழஸிராஜாவும் அவரது தளபதி வேலுத்தம்பியும், ஆங்கிலேயர்களை எதிர்க்கக் கற்றுக் கொண்டதுதான் பிண்டாளிக் களரி முறை. பின்னாளில் அவர்களே அதை தம்முடைய போர் வீரர்களுக்குக் கற்றுத்தரத் தொடங்கினர். மங்கலான வெளிச்சம் நிறைந்த அந்த கூடாரத்தில் ஏழு வயது சிறுவன் முதல் நாற்பது வயது பெரியவர் வரை, பாரபட்சமின்றி வாளைச் சுழற்றிக் கொண்டிருந்தனர்.

சுழன்றும் பறந்தும் பயிற்சி செய்யும்போது அவர்களது உடல், படகுபோல வளைந்து நெளிந்து பாய்கிறது. கேடயம், சிலம்பம், வாள் என அனைத்தையும் அநாயசமாகச் சுற்றிச் சுழற்றுகின்றன அவர்களது கைகள். உருமி எனப்படும் சுருள்வாள் வீச்சின்போது, வீசுபவரைச் சுற்றி யாரும் இருக்கக் கூடாது. உருமிப் பயிற்சியின்போது வேடிக்கை பார்ப்பதற்குக் கூட யாரும் அவர் அருகே நிற்பதில்லை. உருமி, காற்றைக் கிழித்துச் சுழலும் சத்தம் காதுகளில் கேட்கிறது. விசாரித்தபோது, கேரளத்தின் பல பகுதிகளில் பெண்களுக்கு, களரி கட்டாயத் தற்காப்புப் பயிற்சியாகக் கற்றுத்தரப்படுவது தெரியவந்தது. வாள் சுழற்றியவர்களில் ஒருவர், பெண்களுக்கான தேசிய அளவிலான களரியில் சாம்பியன் பட்டம் வென்றவர். கேரளம் போல தமிழகத்திலும் பெண்களுக்கான தற்காப்புக் கலை பயிற்சி என்பது கட்டாயமாக்கப்பட்டால் எப்படி இருக்கும் என்கிற ஏக்கப்பெருமூச்சுடன் அங்கிருந்து வெளியேறினோம்.

video courtesy: TrippersTrip

அந்தி சாயும் வேளையில் மீண்டும் தரவாட் திரும்பினோம். தரவாடின் குளத்தருகே இருந்த கொடியில் சில எறும்புக் கூட்டங்கள் வரிசையாக ஊர்ந்து சென்றுகொண்டிருந்தது. கடல் வாசத்தையும் காட்டின் வாசத்தையும் சுமந்தபடி, மீண்டும் அந்த எறும்புகள் போலத்தான் நாங்களும் சென்னையை நோக்கிப்  பயணப்படத் தொடங்கியிருந்தோம்.

photo courtesy : thiru_clicker