Published:Updated:

கொசஸ்தலை... ஒரு ஜீவநதியின் சாம்பல் சமாதி..! #VikatanExclusive

கொசஸ்தலை... ஒரு ஜீவநதியின் சாம்பல் சமாதி..! #VikatanExclusive
கொசஸ்தலை... ஒரு ஜீவநதியின் சாம்பல் சமாதி..! #VikatanExclusive

கொசஸ்தலை... ஒரு ஜீவநதியின் சாம்பல் சமாதி..! #VikatanExclusive

“அன்னைக்கு நைட்டு எல்லோரும் தூங்கிட்டு இருந்தோம்; திடீர்னு வீட்டுக்குள்ள தண்ணி வந்துடுச்சு. சுத்தி என்ன நடக்குது, என்னாகுதுனு எதையுமே எங்களால யோசிக்க முடியல; தண்ணியோட அளவு கொஞ்சம் கொஞ்சமா ஏறிட்டே போச்சு. வீட்டுக்குள்ள இருக்குற எதை எடுக்குறது, என்ன பண்றதுனு ஒண்ணுமே புரியல; வீட்டை விட்டு வெளிய ஓடுறது மட்டும்தான் தப்பிக்க ஒரே வழியினு புரிஞ்சுது; உடனே எல்லோரையும் கூட்டிட்டு வீட்டுக்கு வெளியே வந்தோம். இடுப்பு அளவுக்குத் தண்ணி; சுத்திமுத்தி பார்த்தோம். ஒதுங்க ஒரு இடமும் தெரியல; ஊர்ல இருந்த உயரமான ஒரே இடம், ரயில்வே ஸ்டேஷன் ப்ரிட்ஜ் மட்டும்தான். அது மட்டும்தான் எங்களுக்கு இருந்த ஒரே ஆறுதல். கொஞ்சம்கூட யோசிக்காம உடனே எல்லோரும் ப்ரிட்ஜ் மேல ஏறிட்டோம். ஒருவேளை அந்த ப்ரிட்ஜ் மட்டும் இல்லன்னா, அன்னைக்கே எங்க ஊர்ல 2000 பேரும் பொணமாகியிருப்போம்ப்பா..." - இன்னமும் 2015 வெள்ள நினைவுகளின் மிரட்சி  நீங்காமல் பேசுகிறார் முத்துலட்சுமி. அந்த தினத்தைப் பற்றிச் சொல்லும்போதே பயம் கவ்விக்கொள்கிறது. மனதைத் திடப்படுத்திக்கொண்டு பேசத்தொடங்குகிறார்.

"மூணு நாள், எந்த ஆதரவும் இல்லாம அந்த ப்ரிட்ஜ் மேலயே கிடந்தோம். நாங்க சேத்துவச்ச எல்லாத்தையும் அந்த வெள்ளம் கொண்டுபோயிடுச்சு. உயிர் பிழைச்சதே பெரிய விஷயமாயிடுச்சு. சரி...எப்படியோ தப்பிச்சிட்டோம்னு நிம்மதிப் பெருமூச்சு விடுறதுக்குள்ள, போன வருஷம் புயல் வந்துடுச்சு. வீட்டுக் கூரை எல்லாம் போச்சு. இந்த வருஷம் இன்னும் நாலஞ்சு நாள்ல ஏதோ வரும்னு சொல்றாங்கப்பா. இந்த வருஷம் என்ன ஆகப்போகுதுன்னே தெரில; நினைச்சாலே ரொம்ப பயமா இருக்கு. இந்த வருஷம் எங்களுக்கு எதுவும் ஆகறதுக்குள்ளயாவது எங்கள காப்பாத்திடுங்க" - இன்னும் நான்கு நாள்களுக்குள் சென்னைக்குப் புயல் வரப்போகுது என யாரோ, எங்கோ  இருந்துகொண்டு வாட்ஸ்அப்பில் பரப்பிய வதந்தியையும் கடந்த காலத் துயரங்களையும் இப்படிப் பகிர்ந்துகொள்கிறார் முத்துலட்சுமி.  எண்ணூர்ப் பகுதியில் இருக்கும் அத்திப்பட்டு, புதுநகரில் வசிப்பவர். ஓர் இடத்தின் இயற்கை வளங்களைச் சுரண்டிவிட்டு, அங்கிருப்பவர்களை நிர்கதியாக்குவதுதானே நம் அரசுகளின் பணி? நெடுவாசல், கதிராமங்கலம் எனப் பல இடங்களில் இதைத்தானே பார்த்துக்கொண்டிருக்கிறோம். அப்படி அரசால் மெள்ள மெள்ள சூறையாடப்பட்டுக்கொண்டிருக்கும் எண்ணூரில் வசிப்பவர்தான் இந்த முத்துலட்சுமி.

"நல்ல தண்ணீரில் வளரும் கொசு முட்டைகளால்தான் டெங்கு வளர்கிறது; எனவே, வீட்டைச் சுற்றி எங்கேயும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். தண்ணீர் தேங்கியிருக்கும் இடங்களைக் கண்டறிந்து உடனே தூய்மைப்படுத்துங்கள்..." ஒருபக்கம் இப்படி விளம்பரம் செய்துகொண்டிருக்கிறது அரசு. ஆனால், வருடத்தின் பாதி நாள்கள் கொசுக்களுக்கு பயந்து, மாலை நேரத்தில் கதவைக்கூடத் திறக்காமல் வாழும் அளவுக்கு சபிக்கப்பட்டவர்களாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் அத்திப்பட்டு, புதுநகர் மக்கள். அந்த அளவுக்கு இங்கே சுற்றுச்சூழல் பாதிப்படைய யார் காரணம்? பதில், அரசின் இரண்டு அனல்மின் நிலையங்கள் மற்றும் இரண்டு பெட்ரோலிய நிறுவனங்கள்.

ஒரு காலத்தில் படகுப் போக்குவரத்து நடக்கும் அளவுக்கு நீர்வளத்துடன் இருந்த பகுதி, இந்த எண்ணூர் கடற்கழி. நீர், ஆற்றிலிருந்து கடலுக்குச் சென்று சேரும் பாதை. கடலிலிருந்து பேரலைகள் வந்தாலும்கூட அவற்றை உள்வாங்கிக்கொள்ளும். சூழலியல் ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதி. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியை நாம் எப்படிப் பராமரிக்க வேண்டும்? ஆனால், இன்று சாம்பல் மேடாகக் காட்சியளிக்கிறது எண்ணூர்க் கடற்கழி. இந்தப் பகுதியில் பாயும் கொசஸ்தலை ஆற்றை, இன்னும் எத்தனை நாள்களுக்கு ஆறு எனச்சொல்ல முடியும் என்றுகூடத் தெரியவில்லை; வேண்டுமானால், "ஒரு காலத்தில் இங்கே கொசஸ்தலை ஆறு ஓடிக்கொண்டிருந்தது. அதன் சமாதி இதுதான்" என்று நம் எதிர்கால சந்ததியினருக்குக் காட்டலாம். ஆனால், சமாதிக்கான இடத்தையாவது, இந்த ஆற்றில் விட்டுவைப்பார்களா எனத் தெரியவில்லை.

அந்த அளவுக்கு ஜோராக நடந்துகொண்டிருக்கின்றன கட்டுமானப்பணிகளும் கழிவுகளை ஆற்றில் கலக்கும் பணிகளும். எண்ணூரின் அத்திப்பட்டு, புதுநகர்ப் பகுதியில் ஓரிரு நாள்கள் பெய்த மழைக்கே, முழங்கால் அளவுக்குத் தண்ணீர் நிற்கிறது. ஊர் முழுக்கவே உள்ள சேறும், சகதியும்தான் நம்மை வரவேற்கின்றன. அந்தச் சேற்றில் இறங்கித்தான் தினமும் இந்தப் பகுதி மாணவர்கள் பள்ளி செல்ல வேண்டும். அந்தச் சேற்றில் இறங்கித்தான், அவசர காலத்தில் மருத்துவமனைக்கு ஓட வேண்டும். அந்தச் சேற்றில் இருக்கும் குழாயில்தான் தண்ணீர் பிடிக்க வேண்டும். இது ஏதோ ஓரிரு நாளாக நடக்கும் கதை அல்ல; கடந்த 20 வருடங்களாகவே நடக்கும் கதை. கால்சட்டையை மடித்துக்கொண்டு, சேற்றில் இறங்கியபடியே ஊருக்குள் புறப்பட்டோம். எல்லாப் பக்கமும் நீரால் சூழப்பட்ட வெனிஸ் நகரைப் போல, எல்லாப் பக்கமும் சேற்றால் சூழப்பட்டிருக்கின்றன இந்நகரின் வீதிகள். வீதிகளைப் போலவே இந்தப் பகுதியில் இருக்கும் மக்களின் நிலையும் மோசம்தான்.
கேமரா சகிதமாக ஊருக்குள் எங்களைப் பார்த்த மக்கள், ஊரின் பிரச்னைகளைக் கொட்ட ஆரம்பித்துவிட்டனர் . 

“சாயங்காலம் ஆறு மணிக்கு மேல் கதவைக்கூடத் திறக்கமுடியாது. அந்த அளவுக்குக் கொசுவோட அட்டகாசம் இங்க அதிகம். தினமும் அந்தக் காய்ச்சல், இந்தக் காய்ச்சல்னு நிறைய பேர் டி.வியில பேசறாங்க. ஆனா, இங்க இருக்கிறவங்களுக்கு ஒரு காய்ச்சல் வந்தா, அது என்னன்னுகூடத் தெரிஞ்சுக்க முடியாது. இங்க இருந்து ஆஸ்பத்திரி போகணும்னாகூட பஸ்ஸோ, ரயிலோ பிடிச்சுதான் போகணும். வசதி இருக்கிறவங்க போவாங்க; வசதி இல்லாதவங்க என்ன சார் பண்ணுவாங்க? எங்க கஷ்டத்தைச் சொல்லாத இடமே கிடையாது. அதிகாரிங்க, எம்.எல்.ஏ., கலெக்டர்னு எல்லா இடத்திலேயும் சொல்லிட்டோம். யாரும் நடவடிக்கை எடுக்கல. எங்க ஊர்ல ஒரே ஒரு தார் ரோடுகூட கிடையாது. 15 வருஷத்துக்கு முன்னாடியும் இதேபோல மழை பெஞ்சா தண்ணி வரும். ஆனா, இப்படித் தேங்கியெல்லாம் நிக்காது. ஆனா, இந்த கம்பெனிங்க கட்டுனதுல இருந்து, எல்லாப் பக்கத்துல இருந்தும், எங்க ஊருக்குள்ள தண்ணி வந்துடுது. ஒரு நாள் மழை பெஞ்சாலே போதும், முட்டி வரைக்கும் தண்ணி நிற்க ஆரம்பிச்சுடும். எல்லா கஷ்டமும் பட்டுட்டோம். இனியாவது கவர்மென்ட் எங்களுக்கு வழிசெஞ்சு கொடுக்கணும்ங்க" என்றார்.

"எந்த வசதியையும் யாரும் செஞ்சு தர மாட்டாங்க; ஆனா, தேர்தலுக்குத் தேர்தல் ஓட்டு கேட்க மட்டும் கரெக்டா வந்துடுவாங்க. அவங்க நல்ல நேரம், எல்லாத் தேர்தலும் வெயில் காலத்துலதான் வருது; மழைக்காலத்துல இங்க வந்தாதான எங்க கஷ்டம் தெரியும். சின்னச் சின்னப் பிரச்னைகளை எல்லாம் கொஞ்சநாள் முன்னாடி வரைக்கும் பஞ்சாயத்துத் தலைவர்கிட்டயாவது சொல்லிட்டிருந்தோம். ஆனா இப்போ, அங்க போய் சொன்னா... அடுத்த தேர்தல் நடக்குற வரைக்கும் உங்களுக்குப் பஞ்சாயத்துத் தலைவர்லாம் கிடையாதுன்னு சொல்றாங்க. இப்படி எல்லாப் பக்கமும் அடிச்சா என்னதாங்க பண்ணுவோம்? ஆனா, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு மட்டும் கரெக்ட்டா கொடுக்க வந்துர்றாங்க" என ஒரு கையில் வாக்காளர் அடையாள அட்டையையும் மறுகையில் ஆதார் அட்டையையும் வைத்துக்கொண்டு கேள்வி எழுப்புகிறார் அருகில் இருப்பவர். 

"வடசென்னை அனல்மின் நிலையம் கட்டும்போது, அங்கே இருந்தவர்கள் இடம் மாற்றப்பட்டனர். அப்படி வந்தவர்கள்தாம் இந்தப் பகுதி மக்கள். இது பொறம்போக்கு நிலம். இது, குடியிருக்கவே தகுதியற்ற இடம். இங்கே நிச்சயமாகத் தண்ணீர் வரும். ஆனால், இந்த இடத்தில்தான் இவர்களைக் குடியமர்த்தியிருக்கிறது அரசு. முதலிலேயே இந்த இடத்தின் நிலைமை மிக மோசம். அதுவும் தற்போது சுற்றியும் நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகள் இருப்பதால், நிச்சயம் அதிகமாகத் தண்ணீர் தேங்கும். எனவே, இந்தப் பகுதி மக்கள் ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள்" என அதிரவைக்கிறார், சூழலியலாளர் நித்யானந்த் ஜெயராமன்.

மேலும் தொடர்ந்த அவர், "இதற்கு முன்னராவது இந்தப் பகுதியில் தேங்கும் தண்ணீர் வெளியேறுவதற்கு வாய்ப்பிருந்தது. ஆனால், நீர் வழித்தடத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருக்கும் வடசென்னை அனல்மின்நிலையம், வல்லூர் அனல்மின்நிலையம், HPCL மற்றும் BPCL நிறுவனங்களால் இனி தண்ணீர் வெளியேறுவதற்கான வழியே இல்லை. அவர்கள் ஏற்படுத்தியிருக்கும் சின்னச்சின்ன வழிகளும் போதுமானவை கிடையாது. எனவே, இந்த ஆண்டு அதிக மழைப்பொழிவு ஏற்பட்டால், இந்தப் பகுதி மக்கள் மிகப்பெரிய ஆபத்தைச் சந்திப்பார்கள்" என்கிறார். 

இந்தப் பகுதி மக்களின் கோரிக்கை அனைத்தும், தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தரச்சொல்வதுதான். ஆனால், இங்கே அது மட்டுமே பிரச்னை கிடையாது. இங்கே இருக்கும் முதல் பிரச்னை, எண்ணூரின் நீர்வழித்தடத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருக்கும் நிறுவனங்கள்.

அடுத்த பிரச்னை, கொசஸ்தலை ஆற்றில் சரமாரியாகக் கலக்கப்படும் அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகளும் அதனால் ஆறு முழுவதுமாகச் சாம்பல் சமாதியாக மாறவிருக்கும் அபாயமும். 

மூன்றாவது பிரச்னை, இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள். இது, அவர்களின் வாழ்வாதாரத்தோடு தொடர்புடைய பிரச்னை மட்டுமே அல்ல; அவர்களின் உயிர் சம்பந்தப்பட்ட பிரச்னையும்கூட. "திடீரென இந்தப் பகுதியில் வெள்ளம் வந்தால், நினைத்துப் பார்க்கவே முடியாத பேரழிவு ஏற்பட வாய்ப்புண்டு" என்கிறார், நித்யானந்த் ஜெயராமன். ஓரிரு நாள்கள் பெய்த மழைக்கே ஊர்முழுக்க தண்ணீர் நிற்கிறது என்றால்,பெருவெள்ளம் ஏற்பட்டால் என்ன ஆகும் என்பதையும் சிந்தித்துப்பார்க்க வேண்டும். 

எண்ணூரோடும், அந்தப் பகுதி மக்களோடும் தொடர்புடைய இந்தப் பிரச்னைகளை, அவர்களின் பிரச்னைகளாக மட்டுமே நினைத்து நாம் கடந்துவிட முடியாது. காரணம், அங்கே அழிக்கப்படுவது நம்முடைய ஆறு; அங்கே வதைக்கப்படுபவர்கள் நம் மக்கள்!

அடுத்த கட்டுரைக்கு