Published:Updated:

'5 ஆயிரம் மரங்களை வெட்டினால் அணை!’

மேக்கேதாட்டூவில் இருந்து நேரடி ரிப்போர்ட்

ருபக்கம் தமிழகமும், இன்னொருபக்கம் கர்நாடகாவும் கொந்தளிக்க ஆரம்பித்துவிட்டன. காரணம் மேக்கேதாட்டூ.

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட திட்டமிட்டுள்ள பகுதிதான் மேக்கேதாட்டூ. அந்த மேக்கேதாட்டூவைத் தேடிப் புறப்பட்டோம். பெங்களூரில் இருந்து 55 கிலோ மீட்டர் பயணித்து கனகபுரா சென்றோம். அங்கிருந்து 28 கிலோ மீட்டர் தூரத்தில் 'சங்கமா’ என்ற ஊர் வருகிறது. காவிரி ஆறும், அர்க்காவதி நதியும் கலக்கும் இடத்துக்குத்தான் 'சங்கமா’ என்று பெயர். சங்கமாவில் இருந்து கரடுமுரடான மலைப்பாதையில் பயணிக்க வேண்டும். பஸ் வசதி எதுவும் கிடையாது. ஜீப் மட்டும் போகும். அந்த அளவுக்குத்தான் மலைப்பாதை இருக்கிறது. அந்த மலைப் பயணத்தில் ஏராளமான மான்களையும், யானைகளையும் நாம் பார்த்தோம். 10 கிலோ மீட்டர் தூரம் இப்படியாகக் கடந்தால் மேக்கேதாட்டூ என்ற இடம் வருகிறது. அந்த இடத்தில்தான் அடர்ந்த காட்டுக்கு நடுவில் சீறிப்பாய்ந்து தமிழகத்தை நோக்கி ஓடுகிறது காவிரி. இந்த இடத்தில்தான் தடுப்பணை கட்டப்போவதாக அறிவித்துள்ளது கர்நாடக அரசு.

அணை கட்டுவதற்கான எந்த வேலைகளும் அங்கே தொடங்கப்படவில்லை. அப்படி வேலை தொடங்குவதானால் முதலில் அந்தப் பகுதியில் இருக்கும் 5,000-க்கும் மேற்பட்ட மரங்களை வெட்ட வேண்டும். அதற்கு மத்திய அரசிடம் அனுமதி வாங்க வேண்டும்.

'5 ஆயிரம் மரங்களை வெட்டினால் அணை!’

நாம் அங்கே சென்றிருந்தபோது, ஜோசப் என்ற விவசாயியைச் சந்தித்தோம். ''இங்கே இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் போனால் தோரேஸ்புரானு என்ற ஒரு மலைகிராமம் இருக்கு. நான் அந்த ஊர்க்காரன்தான். எங்க கிராமத்துக்குப் பக்கத்துல ஆறு ஓடினாலும் எங்களுக்குத் தண்ணீர் கிடைப்பதில்லை. காரணம் எங்கள் ஊர் இருப்பது ஆற்றில் இருந்து மேட்டுப் பகுதி. 30 வருடங்களுக்கு முன்னாடி இருந்தே இங்கே அணை கட்டப்போவதாகச் சொல்றாங்க. ஆனால், இதுவரை எதையும் செய்யலை. இப்பவாவது செய்வாங்களானு பார்க்கலாம். அப்படி அணை கட்டினால் எங்களுக்கு சந்தோஷம்தான்' என்கிறார்.

நாம் அங்கே சென்றிருந்த சமயத்தில் மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா அந்தப் பகுதியைப் பார்வையிட வருவதாகச் சொன்னார்கள். அதனால் காத்திருந்தோம். தேவகவுடாவும் வந்தார். மேக்கேதாட்டூ பகுதிகளை பார்வையிட்ட பிறகு நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு தேவகவுடாவிடம் பேசினோம். ''எங்கள் மாநிலத்தில் அணைக்கட்ட தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவிப்பது சரியானது அல்ல. நான் அடிப்படையில் ஒரு பொறியாளர் என்பதால் அணைகள் கட்டப்படும் இடத்தை நேரில் பார்வையிட்ட பிறகு நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என்பதற்காகத்தான் இங்கே வந்தேன். மழைக் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடலில் கலக்கும் உபரி நீரை சேமிப்பதற்காகத்தான் இந்த அணைகள் கட்டும் திட்டம் கொண்டுவரப்பட்டது. காவிரி பிரச்னை என்பது பிரிட்டிஷ்காரர் காலத்தில் இருந்து இருப்பதுதான்.

தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க கட்சியைத் தவிர மாற்றுக் கட்சிகள் இல்லாததால், இந்தத் தண்ணீர் பிரச்னையை அந்தக் கட்சிகள் அரசியலாக்கி வருகிறார்கள். பி.ஜே.பிக்கு இதில் உடன்பாடு இல்லை. தமிழ்நாட்டு மக்கள் என்னுடைய சகோதரர்கள். அவர்கள் எங்களைப் புரிந்துகொள்ள வேண்டும்!'' என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

தமிழகத்தில் முழு அடைப்பு நடந்த அதே நாள் கர்நாடகாவின் பல பகுதிகளிலும் கன்னட அமைப்​பினர் போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் முதல்வர் பன்னீர்செல்வம், முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் உருவப்படங்களை வைத்து அவற்றுக்குப் பாடை கட்டி ஊர்வலமும் நடத்தினார்கள். தீயிட்டும் கொளுத்தினார்கள். ஏப்ரல் 18-ம் தேதி கர்நாடகா முழுவதும் முழு அடைப்புக்கு அனைத்து கர்நாடக அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

கர்நாடகாவிலும் தமிழர்கள் வசிக்கிறார்கள். தமிழகத்திலும் கன்னடர்கள் வசிக்கிறார்கள். இரு மாநில மக்களின் நட்பு உணர்வு பாதிக்காமல் நல்லதொரு முடிவு எடுக்க வேண்டியது மத்திய அரசுதான்!

வீ.கே.ரமேஷ், படம்: ரமேஷ் கந்தசாமி