Published:Updated:

”தேர்தல் முடிவுகளை வைத்து எங்களை எடை போடாதீர்கள்!”

புதுவையில் கூடிய இந்தியக் கம்யூனிஸ்ட்!

பிரீமியம் ஸ்டோரி

பி.ஜே.பி அரசை கடுமையாக விமர்சிக்கும் மாநாடாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு நடந்து முடிந்திருக்கிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 22-வது தேசிய மாநாடு கடந்த மார்ச் 25 முதல் 29 வரை புதுச்சேரியில் நடைபெற்றது.  மத்திய அரசு கொண்டு வரும் நிலம் கையகப்படுத்தல் சட்டத்தை எதிர்த்து வரும் 14ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்துவது என்பது உட்பட பல முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சி.பி.எம் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், தேவபிரத பிஸ்வாஸ் (அகில இந்திய பார்வர்டு பிளாக்), அபானி ராய் (ஆர்.எஸ்.பி), திலங்கர் பட்டாச்சார்யா சி.பி.ஐ(எம்.எல்), புரோவாஷ் கோஷ்(எஸ்.யு.சி.ஐ) உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின் மூத்த தலைவர்கள் மாநாட்டை வாழ்த்திப் பேசினர்.

”தேர்தல் முடிவுகளை வைத்து எங்களை எடை போடாதீர்கள்!”

மாநாட்டில், கட்சியின் பொதுச் செயலாளராக சுதாகர் ரெட்டி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். ''இந்தியாவில் இப்போது அமைந்திருப்பது சங் பரிவாரத்தின் ஆட்சி. அப்பட்டமாக இந்துத்துவம், இந்த மண்ணில் வலதுசாரிகளால் திணிக்கப்பட்டு இருக்கிறது. நரேந்திர மோடி தலைமையிலான இந்த அரசு, மிக மோசமான ஓர் அரசாகச் செயல்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் பல கோடிகளைச் செலவு செய்து ஊடகங்கள் மூலமாக, ஒரு சிறந்த ஆட்சியாளராக மோடியை முன்னிறுத்த முயலுகின்றன. ஆனால் நரேந்திர மோடி,  பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி வருகிறார். அவருடைய குறுகிய கால ஆட்சியில், விலைவாசி கடுமையாக உயர்ந்திருக்கிறது. லஞ்சம் பெருகியிருக்கிறது. வேறு எந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்திய நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கும் வகையில், அன்னிய முதலீடுகளை அனுமதிப்பதற்கு மோடி அரசு கதவுகளைத் திறந்துள்ளது.  மோடி அரசின்  வரவு செலவுத் திட்டம், மக்களுக்கானது அல்ல. ஒடுக்கப்பட்ட, பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்காக ஒதுக்க வேண்டிய நிதியை ரத்து செய்துவிட்டு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல கோடிகளை வழங்கியிருக்கிறார்கள். 'கறுப்புப் பணத்தை மீட்டு அதை மக்களுக்குப் பகிர்ந்தளிப்போம்’ என்று கூறிய மோடி, அதற்காக இதுவரை எதுவும் செய்யவில்லை.

நமது மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தக்கூடியப் பெரிய அழிவுச் செயலில் பி.ஜே.பி இறங்கியிருக்கிறது. சிறுபான்மையின மக்களிடையே நாம் எந்த நேரத்திலும் தாக்கப்படுவோம் என்ற பயத்தை நிரந்தரமாக உருவாக்கி அவர்களின் மன தைரியத்தைச் சிதைக்கிறார்கள். இன்னும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால் ஒரு கலாசார, பண்பாட்டுப் பயங்கரவாதத்தைத் தனது போர்வாளாக உருவாக்கி வைத்திருக்கிறது. அதனால்தான் எழுத்தாளர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். கலாசார பயங்கரவாதத்தின் மூலம் எழுத்து மற்றும் பேச்சுரிமையை நசுக்கப் பார்க்கிறார்கள். நமது மூத்தத் தலைவர்களில் ஒருவரான கோவிந்த் பன்சாரே, இந்துத்துவவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். அடிப்படை மக்களின் வர்க்கப் போராட்டங்களின் அடிப்படையில் நம்முடையை பிரச்னைகளையும் நாட்டின் பிரச்னைகளையும் தீர்க்க நாம் அனைவரும் அணி திரள வேண்டும்.  பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும் பெண்களும் இங்கு கூடியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. லட்சியத்தை நிறைவேற்றுவதற்காக உங்கள் கைகளில் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியை கொடுக்கத் தயாராக இருக்கிறோம். அதை எடுத்துக்கொண்டு நீங்கள் முன்னேறி வெற்றிபெற வேண்டும்'' என்று பேசினார் சுதாகர் ரெட்டி.

”தேர்தல் முடிவுகளை வைத்து எங்களை எடை போடாதீர்கள்!”

தேசிய செயலராக மீண்டும் தேர்வு செய்யப்பட்ட, மாநிலங்களவை உறுப்பினர் டி.ராஜா, ''காங்கிரஸ் கட்சியின் மக்கள் விரோதப் போக்கின் காரணமாக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அந்தக் கட்சி தோற்றது. காங்கிரஸ் கட்சிக்கு எதிரான வாக்குகளால்தான் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தது. முன்பிருந்த காங்கிரஸ் கட்சியும் தற்போதுள்ள பி.ஜே.பி அரசும் கார்ப்பரேட் பெரு முதலாளிகளை ஆதரிப்பதில் ஒரே நிலைப்பாடுதான்.

பெரு முதலாளிகளின் ஆட்சிதான் நரேந்திர மோடியின் ஆட்சி. கார்ப்பரேட் நிறுவனங்களின் மீதான வரி 30 சதவிகிதத்தில் இருந்து 25 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டு உள்ளதோடு சொத்துவரியும் குறைக்கப்பட்டு சலுகைகள் அள்ளிக்கொடுக்கப்படுகின்றன. ஆனால், அடித்தட்டு மக்களுக்கான நிதிகள் குறைக்கப்பட்டிருக்கிறது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கார்ப்பரேட் நிறுவன பெரு முதலாளிகள், இரண்டு லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி செலுத்தாமல் உள்ளனர். பெயர் பட்டியலைக்கூட இவர்களால் வெளியிட முடியவில்லை. வங்கி ஊழியர்களின் சம்மேளனம் அவர்களின் பெயர்களைப் பட்டியலிட்டுக் காட்டும்போது அரசாங்கம் ஏன் தயக்கம் காட்டுகிறது? மோடியின் ஆட்சி, தொழிலாளர்களுக்கு எதிரான அதேசமயம், பெரு முதலாளிகளுக்கான ஆட்சி. இந்த நிலையில்தான் மோடியின் ஆட்சியைத் தங்களின் ஆட்சியாக இந்துத்துவ அமைப்புகள்  கருதுகின்றன'' என்றார்.

”தேர்தல் முடிவுகளை வைத்து எங்களை எடை போடாதீர்கள்!”

இறுதியாகப் பேசினார் தா.பாண்டியன். ''தேநீர் விற்று வளர்ந்தவன் என்று தம்மைப் பற்றிச்  சொல்லிக் கொள்ளும் மோடி அணிந்திருக்கும் சட்டையின் விலை ரூ.10 லட்சம். ஒரு நாளைக்கு ஐந்து முறை சட்டையை மாற்றும் இந்த ஏழைப் பங்காளனை மோடி என்றும் சொல்லலாம், மோசடி என்றும் சொல்லலாம். இவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற உடனே, இந்திய அரசியலமைப்பில் மதச்சார்பற்ற, சமதர்ம என்ற இரண்டு சொற்களையும் எடுத்துவிட வேண்டும். அப்படியென்றால், 'சுரண்டுவோம்... கோயிலுக்குள் வராமல் தடுப்போம்... குடிசைகளைத் தீயிட்டு கொளுத்துவோம்...’ என்று அர்த்தம். ஆனால் ஒருசாரார் எங்களைப் பார்த்து கேட்கிறார்கள், 'தேர்தலில் நீங்கள் வெற்றி பெறவில்லையே’ என்று. தேர்தல் என்பது ஒரு சந்தை வியாபாரம். ஆண்டுதோறும் வந்து செல்லும் தீபாவளிப் பட்டாசு. கொளுத்தும்போது அங்கே வெளிச்சம் தெரியும். பிறகு, அங்கிருக்கும் குப்பைகள்தான் தெரியும். தேர்தலுக்கும் அதற்கும் வேறுபாடு இல்லை. அதனால் அதை வைத்து எங்களை எடை போட்டுவிடாதீர்கள். இந்தியாவில் வீடு இல்லாத மக்கள் 4 கோடிக்கும் மேல் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் வீடு கிடைக்க வேண்டும் என்பதற்காக கம்யூனிஸ்ட் கட்சி போராடுகிறது. இதுபோன்ற மக்கள் பிரச்னைகளுக்காக கம்யூனிஸ்ட் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்துப் போராட வேண்டும்'' என்றார் உறுதியுடன்.

பொதுக்கூட்டம் முடிந்ததும் அருகிலிருந்த டீக்கடைப் பக்கம் ஒதுங்கினோம். அப்போது கம்யூனிஸ்ட் கட்சியின் வயது முதிர்ந்த தொண்டர் ஒருவர் அந்தக் கடைக்காரரிடம் பேசிக்கொண்டிருந்தது நம் காதில் விழுந்தது, ''கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வாக்கு வங்கி இல்லை, கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வராது என்றெல்லாம் சிலர் பேசுகிறார்கள். இப்போது தேர்தலில் ஜெயிக்கிற கட்சிகளுக்குக் கிடைப்பது எல்லாம் தற்காலிக வெற்றிதான். இறுதியான வெற்றி கம்யூனிஸ்ட்களுக்குத்தான்!''

ஜெ.முருகன், படங்கள்: அ.குருஸ்தனம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு