பிரீமியம் ஸ்டோரி

தாரா ரமேஷ், புதுவை - 4.

சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ மறைவு குறித்து?

இப்படி ஒரு தலைவர் இந்தியாவுக்குக் கிடைக்க மாட்டாரா என்று ஏங்க வைத்த ஆட்சியாளர். அவருக்கும் தமிழர்களுக்கும் பூர்வகாலத் தொடர்பு இறுக்கமாக இருந்தது என்பதே அவரது மறைவின்போது ஏங்கவைத்தது.

கழுகார் பதில்கள்!

1960-களின் மத்தியில் அன்றைய தி.மு.க தலைவர் அண்ணா, சிங்கப்பூர் போயிருந்தார். அவருக்கு, அங்கு நல்லதோர் வரவேற்பு தரப்பட்டது. இந்தியாவில் இருந்து சென்றிருந்த ஏராளமான தமிழர்கள் மத்தியில் நடந்த கூட்டத்தில், 'இதனையே உங்களது சொந்த நாட்டைப்போலக் கருதி தமிழர்கள் வாழ வேண்டும். இந்த நாட்டின் இறையாண்மைக்கு விரோதமாக நீங்கள் நடந்துகொள்ளக் கூடாது’ என்ற பொருளில் அறிவுரைகள் சொன்னார். அப்போது லீ குவான் யூ ஒரு வாக்குறுதியைக் கொடுத்தார். 'தமிழர்களுக்கு இலங்கையிலும், பர்மாவிலும் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை நான் அறிவேன். ஆனால் மலேசியாவிலோ, சிங்கப்பூரிலோ எந்தக் கசப்பும் ஏற்படாமல் நான் தடுப்பேன்’ என்று தமிழர்கள் மீது கரிசனமாக நடந்துகொண்டவர் அவர்.

ஈழத்தில் 2009-ம் ஆண்டு நயவஞ்சகப் படுகொலைகள் நடத்தப்பட்டபோது எல்லா நாடுகளும் வாய்மூடி மெளனம் சாதித்தன. அப்போது, 'இலங்கை ஒரு மகிழ்ச்சிக்குரிய நாடாக இருக்க வாய்ப்பு இல்லை. இலங்கையில் சிங்களவர்கள் இருந்த காலம் முதல் தமிழர்களும் அங்கு வாழ்கிறார்கள். அந்த நிலம் இரண்டு இனத்துக்கும் சொந்தமானது. சிங்களவர்களின் தாக்குதலுக்கு எதிராக ஈழத்தமிழர்கள் தொடுத்த போர் என்னைப் பொறுத்தவரை நியாயமானதே’ என்று கம்பீரமாகச் சொன்னவர் லீ குவான் யூ. அதனால்தான் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் லீ குவான் யூவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

சி.கார்த்திகேயன், சாத்தூர்.

தேர்தலில் போட்டியிடாத கட்சிகளுக்குத் தேர்தல் கமிஷன் கிடுக்கிப்பிடி போடப் போகிறதாமே?

ஓட்டுக்குப் பணம் கொடுப்பவர்களுக்கு எதிராக முதலில் கிடுக்கிப்பிடி போடுங்கள். மற்றவை அப்புறம் பார்க்கலாம்.

ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.

மு.க.அழகிரி, தி.மு.க-வை வெறுக்கிறாரா... அல்லது மு.க.ஸ்டாலினை வெறுக்கிறாரா?

மு.க.ஸ்டாலினைத்தான் வெறுக்கிறார். தி.மு.க மீது வெறுப்பு இருந்திருந்தால் தனது பிறந்தநாள் அன்று கறுப்பு சிவப்பு கரை தாங்கிய வேட்டியை அணிந்திருக்க மாட்டார். இரு வண்ணக் கொடியை ஆட்டியபடி ஊர்வலமும் வந்திருக்க மாட்டார்.

பி.கம்பர் ஒப்பிலான், கோவிலம்பாக்கம்.

அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக குஷ்பு நியமனம் செய்யப்பட்டது குறித்து?

செய்தித் தொடர்பாளராக ஆனபிறகு சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த முதல்நாளே, தான் தேர்ந்த அரசியல்வாதி என்பதை குஷ்பு காட்டிவிட்டார். குஷ்புவிடம் தொடர்ந்து கேள்விகள் கேட்டுக்கொண்டே இருந்தார்கள் நிருபர்கள். 'இதையெல்லாம் ஜெயலலிதாவிடம் கேட்க உங்களுக்கு தைரியம் இருக்கிறதா?’ என்று கேட்டார். சரியான ஆளுக்குத்தான் செய்தித் தொடர்பாளர் பதவி கொடுத்துள்ளார்கள்.

வி.என்.செய்யதுபுகாரி, அதிராம்பட்டினம்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அதிகபட்சமாக எதை எதை தெரிந்து கொள்ளலாம்?

ராணுவம், உளவுத் துறை, காவல் துறையின் சில பிரிவுகள், காப்புரிமை, மத்திய அரசின் கொள்கை முடிவுகள் தொடர்பான விவாதங்கள், இந்திய அறிவியல் தொழில்நுட்பம்... போன்ற ஒருசில விஷயங்கள் நீங்கலாக அனைத்தைப் பற்றியும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கலாம். இது சட்டம்.

ஆனால் நடைமுறையில், எதையெல்லாம் ஆட்சியில் இருப்பவர்கள் சொல்ல விரும்பவில்லையோ அதையெல்லாம் கேட்க முடியாது என்ற சூழ்நிலைதான் இருக்கிறது. தகவல் தரமுடியாது என்று நேரடியாகச் சொல்லாமல், ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி தட்டிக் கழித்துவிடுவார்கள். அந்தச் சட்டத்தின் வீரியத்தைக் குறைக்கும் அளவுக்குத்தான் காரியங்கள் பலநேரங்களில் நடக்கின்றன.

கலைஞர் ப்ரியா, வேலூர்(நாமக்கல்).

அ.தி.மு.க - பி.ஜே.பி கூட்டணி உறுதிதானா?

நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து நின்று வென்றதைப்போலவே, சட்டமன்றத் தேர்தலிலும் தனித்து நின்று வெல்லவே ஜெயலலிதா நினைப்பார்.

வண்ணை கணேசன், சென்னை - 110.

இணையதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவிப்பவர்களைக் கைதுசெய்யும் சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளதே?

சமூக வலைதளங்களில் கருத்து வெளியிடுகின்ற சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் 66ஏ பிரிவு இருந்தது. அந்தப் பிரிவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. பால்தாக்கரே மறைவுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் தேவையா என்று சொல்வதற்காகவும். கார்த்தி சிதம்பரத்தால் காங்கிரஸ் கட்சிக்கு என்ன நன்மை என்று கருத்துச் சொன்னதற்காகவும் கைதுசெய்ய ஆரம்பித்தால் அதன் தொடர்ச்சியாக வீட்டுக்குள் வைத்துக்கூட யாரும் யாரைப் பற்றியும் விமர்சனம் செய்யக் கூடாத சூழ்நிலை ஏற்படும். தகவல் தொழில் நுட்பம் இன்று அனைவர் உடலிலும் மூன்றாவது கையாக முளைத்துள்ளபோது, அதனை ஆரம்பத்திலேயே முடக்கிப்போடும் பிரிவாக 66ஏ இருந்தது. கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமையைத் தடுக்கும் சட்டப்பிரிவுகள், விதிமுறைகள், கட்டுப்பாடுகளை உச்ச நீதிமன்றம் முழுமையாகப் பரிசீலனை செய்வது நல்லது.

சம்பத்குமாரி, பொன்மலை.

'நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையும் என்று எனக்கு தேர்தலுக்கு முன்பே தெரியும்’ என்று ப.சிதம்பரம் சொல்லியிருக்கிறாரே?

ஓஹோ! அதனால்தான் அவர் தேர்தலில் போட்டியிடவில்லையா? இதைப் படித்ததும், 'அப்பா! இதை ஏன் என்னிடம் சொல்லவில்லை? வேகாத வெயிலில் நான் அலைந்து அலைந்து ஓட்டு கேட்டிருக்க மாட்டேனே?’ என்று கார்த்தி கோபித்துக் கொண்டிருப்பார்.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002 kalugu@vikatan.com என்ற முகவரியிலும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு