Published:Updated:

மிஸ்டர் கழுகு: டிசம்பரில் சட்டசபைத் தேர்தல்!

மிஸ்டர் கழுகு: டிசம்பரில் சட்டசபைத் தேர்தல்!

பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு: டிசம்பரில் சட்டசபைத் தேர்தல்!

''தீர்ப்புத் தேதி இன்னமும் முடிவாக​வில்லையா?' கழுகார் தலை தெரிந்ததும் நாம் கேட்ட கேள்வி இது!

''ஆனால் தேர்தல் தேதி முடிவாகி வருகிறது!' கழுகார் அடித்த சிக்ஸர் இது!

''அதற்குள்ளாகவா? அடுத்த ஆண்டுதானே சட்டமன்றத் தேர்தல்?' என்ற கேள்வியைப் போடும் முன்பு கழுகார் தொடங்கினார்.

''பல்வேறு விஷயங்களை அலசி ஆராய்ந்ததில் 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை நடத்துவது சரியில்லை என்று ஆளும் கட்சியின் மேலிடம் முடிவுக்கு வந்திருப்பதாகச் சொல்கிறார்கள். அதற்கு முக்கியக் காரணம், 6ம் நம்ப​ருக்கு உள்ள நெகடிவ் சென்டிமென்ட்தான். இதற்கு முன்பு 1996 தேர்தலில் ஜெயலலிதா கடும் தோல்வி அடைந்தார். 2006 தேர்தலிலும் ஆட்சிக்கு வர முடியவில்லை. இதனை வைத்து 2016 தேர்தலும் அந்த மாதிரி ஆகிவிடக் கூடாது என்பதில் முன்னேற்பாட்டுடன் இருக்கிறார்கள். அதனால்தான் 2016 பிறப்பதற்கு முன்னதாகவே சட்டமன்றத் தேர்தலை நடத்திவிட்டால்

அ.தி.மு.க-வுக்கு சாதகமாக இருக்கும் என்று ஜெயலலிதா நினைக்கிறாராம். இந்த ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி மன்மத ஆண்டு பிறக்கிறது. அடுத்த ஆண்டு 2016 ஏப்ரலில் துர்முகி ஆண்டு பிறக்கிறது. துர்முகி என்பது நெகடிவ் அர்த்தம் கொடுப்பது. எனவே, மன்மத ஆண்டுக்குள்ளேயே தேர்தல் நடந்தால் நல்லது என்றும் நினைக்கிறார்களாம்!''

''அப்படியானால் இந்த ஆண்டிலேயேவா?'

''ஆமாம்! டிசம்பர் மாதத்தில் நடத்திவிடலாம் என்பது அவர்கள் திட்டமாம். டிசம்பரில் தேர்தல் வைக்க நினைப்பதற்கு இன்னொரு முக்கியமான காரணமும் சொல்லப்படுகிறது!'

''அது என்ன?'

மிஸ்டர் கழுகு: டிசம்பரில் சட்டசபைத் தேர்தல்!

''கும்பகோணம் மகாமகம். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் மகாமகம் நடக்கும். இந்தியப் பிரசித்திப்பெற்ற வைபவம் அது. 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ம் தேதி மகாமகம் நடக்க இருக்கிறது. 260 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடக்கும் இந்த விழாவுக்கு இதுவரை 70 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்ட ஆட்சியர் சுப்பையன்தான் இதற்கு முழுப் பொறுப்பு. இந்த மகாமகம் நடப்பதற்கு முன்னதாகத் தேர்தல் நடந்துவிட்டால் நல்லது என்றும் ஆட்சி மேலிடம் நினைக்கிறதாம்!'

''அப்படியா?'

''ஜெயலலிதா முதல் முறை ஆட்சிக்கு வந்தபோது 1992-ம் ஆண்டு மகாமகம் நடந்தது. அப்போது நடந்த பாதுகாப்புக் கெடுபிடிகள் காரணமாக

50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் இறந்தார்கள். அவரது ஆட்சிக்கு மிகப்பெரிய கெட்ட பெயரை ஏற்படுத்திய சம்பவம் அது. அதனாலேயே 2004-ம் ஆண்டு மகாமகம் நடந்த போது ஜெயலலிதா அங்கு போகவில்லை. ஒரே நாளில் இருந்த மகாமகக் குளியலை, கொடியேற்றத்தில் இருந்து 10 நாட்கள் வரை குளிக்கலாம் என்று மாற்றி நெரிசல் இல்லாமல் பார்த்துக்கொண்டார்கள். இந்தச் சூழ்நிலையில், மீண்டும் அ.தி.மு.க ஆளும் கட்சியாக இருக்கும்போதே மகாமகம் வருகிறது. அது எந்தவிதமான நெகடிவ் சென்டிமென்டையும் உருவாக்கிவிடக் கூடாது என்பதால்தான் டிசம்பரில் தேர்தல் வைக்கலாம் என்று திட்டமாம்!'

''பெங்களூரு வழக்கில் தீர்ப்பு எப்போது, என்ன மாதிரியான தீர்ப்பு என்றே தெரியாமல் தேர்தலுக்கு தேதி பார்க்க முடியுமா என்ன?'

''தீர்ப்பு எப்படி இருந்தாலும் தேர்தல் நடத்துவதற்கு என்ன தடை இருக்க முடியும்? தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு சாதகமாக வந்தால், எந்தத் தடையும் இல்லை. எதிராக வந்தால், உச்ச நீதிமன்றத்துக்கு அப்பீல் போவார்கள். எட்டு மாத இடைவெளிக்குள் அங்கும் மேல்முறையீட்டு விசாரணை நடந்து முடிந்துவிடும் அல்லவா? தான் முதல்வராக இருக்கிறோமோ, இல்லையோ அ.தி.மு.க ஆளும் கட்சியாகவாவது இருக்க வேண்டும் என்று ஜெயலலிதா நினைப்பார்தானே? மேலும், ஆளும் கட்சியினர் மீது மக்கள் அதிருப்தி அதிகமாவதற்கு முன்னால்

தேர்​தலைச் சந்தித்துவிடுவதும் நல்லது என்று நினைக்கிறாராம்!'

''விரைவில் தேர்தல் திருவிழா தொடங்கும் என்று சொல்லும்!'

''பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பைச் சொன்னதுமே இதற்கான முஸ்தீபுகள் ஆரம்பம் ஆகிவிடும் என்றே சொல்கிறார்கள்!'

''இப்போது சொல்லும் தீர்ப்பு எப்போது?'

''பவானி சிங்கை அரசு வழக்கறிஞராக இந்த வழக்கில் நியமிக்கக் கூடாது என்று தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன் தாக்கல் செய்த மனு ஏப்ரல் 1-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அப்போது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்ன சொல்கிறார்கள் என்பதை வைத்தே தீர்ப்புத் தேதி முடிவாகும். 'ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் ஆஜராக பவானி சிங்கை கர்நாடக அரசு நியமிக்கவில்லை. தமிழக அரசுதான் நியமித்துக்கொண்டது. இது விதிமுறைக்கு மாறானது. பவானி சிங் மீது சந்தேகம் உள்ளது. அவரை நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக வேறொருவரை அரசு வழக்கறிஞராக நியமிக்க வேண்டும்’ என்று அன்பழகன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அந்தி அர்ஜுனா வாதங்களை வைத்தார். கர்நாடக அரசின் சார்பில் வழக்கறிஞர் எம்.என்.ராவ் ஆஜராகி இருக்கிறார். 'பவானி சிங்கை கர்நாடக அரசு நியமிக்கவில்லை’ என்று சொல்லிவிட்டார். அன்பழகனுக்காக இன்னொரு மூத்த வழக்கறிஞர் விகாஷ் சிங் என்பவரும் ஆஜரானார்!'

''அன்பழகனுக்காக இரண்டு வழக்​கறிஞர்​களா?'

''தி.மு.க இந்த விஷயத்தை எவ்வளவு சீரியஸாகப் பார்க்கிறது என்பதற்கு உதாரணம், உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களாக அந்தி அர்ஜுனாவும் விகாஷ் சிங்கும் ஆஜரானது. 'அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்கக்கோரும் எங்கள் மனு மீதான முடிவு தெரியும் வரை கர்நாடக நீதிமன்றத்தில் நடக்கும் மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பை வெளியிடக் கூடாது’ என்று சொல்லி ஒரு மனுவை விகாஷ் சிங் தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனு பற்றித்தான் நீதிபதி மதன்லோகூர் தலைமையிலான பெஞ்ச் ஏப்ரல் 1ம் தேதி விசாரணை நடத்தப் போகிறது!'

''அன்றைய தினமாவது தெளிவு கிடைக்கு​மா?'

''பவானி சிங்கை மாற்றக்கோரிய மனு கடந்த 18-ம் தேதி விசாரணைக்கு வந்தது. 24-ம் தேதிக்கு மாற்றினார்கள். அதன் பிறகு 26-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அன்றைய தினம் நடந்த விசாரணையில் ஏப்ரல் 1-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இப்படித் தேதிகளை மாற்றி மாற்றி ஒத்தி வைத்துக்கொண்டு போவதும் டென்ஷனைக் கூட்டிவருகிறது. 'உச்ச நீதிமன்றத்தில் இப்படி ஒரு வழக்கு நடந்து வருவதால் அதனை உன்னிப்பாகக் கவனித்தே தீர்ப்புத் தேதியை நீதிபதி அறிவிப்பார். இந்தக் காலக்கட்டத்தை தீர்ப்பு எழுதுவதற்கு அவர் பயன்படுத்திக் கொள்வார்’ என்றும் சொல்கிறார்கள்' என்று சொல்லிய கழுகார் சகாயம் மேட்டரை எடுத்தார்!

மிஸ்டர் கழுகு: டிசம்பரில் சட்டசபைத் தேர்தல்!

''சகாயம் குழுவினர் நூலிழையில் உயிர் தப்பித்த  கொலை முயற்சி சம்பவத்தைக் கடந்த இதழில் உமது நிருபர் எழுதியிருந்தார். அந்தச் சம்பவம் சம்பந்தமாக இதுவரை யாரையும் மதுரை மாவட்ட காவல் துறை கைது செய்யவில்லை. சகாயம் முறைப்படி புகார் அனுப்பிவிட்டார். சம்பவம் நடந்த குண்டக்கல் பகுதி காவல் நிலையமான ஒத்தக்கடை காவல் நிலையமோ, அரிவாளுடன் வந்த மர்மநபரை அழைத்து முறைப்படி விசாரணை நடத்தியதாகத் தெரியவில்லை. அரிவாளோடு வந்த மர்மநபரைப் பற்றிய தகவலை பத்திரிகையாளர்கள் கேட்டால், 'உள்ளூர்க்காரன், மாடு மேய்ப்பவன், அவன் எப்போதும் அங்குதான் இருப்பான்’ என்ற தகவலை மட்டும் சொல்லிக்கொண்டு மற்ற விவரங்களைச் சொல்லாமல் மறைத்து விடுகின்றனர். இதேபோல பல்வேறு வெளியே தெரியாத சம்பவங்கள் விசாரிக்காமலேயே கிடப்பில் கிடக்கிறது என்று சொல்லப்படுகிறது!'

''உயர் நீதிமன்றம் கண்காணிக்கும் விஷயத்திலேயே இவ்வளவு அலட்சியம் என்றால் மற்ற விஷயங்களில் எந்த அழகில் விசாரணை நடத்துவார்கள்?'

''கிரானைட் முறைகேடு விவகாரங்களில் மதுரையைத் தாண்டியும் பல்வேறு நரபலிகள் அரங்கேறிய சம்பவங்கள் வெளியாகி  மிகப்பெரிய அச்சத்தை உண்டாக்கி இருக்கிறது. சகாயம் மதுரை மாவட்டத்தை மட்டும் விசாரித்து வருவதால் மற்ற மாவட்டங்களில் இருந்து வரும் புகார்களை அந்த அந்த மாவட்ட கலெக்டர், எஸ்.பி ஆகியோருக்கு அனுப்பிவிடுகிறார். ஆனால், அங்கு போகும் மனுக்கள் அப்படியே குப்பைத் தொட்டிக்குப் போவதோடு புகார் அனுப்பிய நபர்களும்  மிரட்டப்பட்டு தாக்குதலுக்குள்ளாக்கி வருகின்றனராம். 'கடந்த ஜனவரி மாதம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம பொதுமக்கள் சார்பில் அந்தப் பகுதியில் செயல்பட்டு வரும் கிரானைட் தொழிற்சாலை ஒன்று எட்டுக்கும் மேற்பட்ட நபர்களை நரபலி கொடுத்ததாகப் புகார் அனுப்பி இருந்தார்கள்.''

''கேட்கவே பகீரென இருக்கிறதே!''

''ம்! அந்தப் புகார் விருதுநகர் மாவட்டத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதுவரை நடவடிக்கைகள் இல்லையாம்.  ஒரு பெண், பருத்திக்காட்டில் வேலை செய்துவிட்டு தனியாக வீடு திரும்பும்போது கடந்த 2012 ஜனவரி மாதம்

11--ம் தேதி காரில் கடத்தி, மந்திரவாதி ஒருவர்  மூலம் ஒரு கிரானைட் குவாரி அருகே வைத்து நரபலி கொடுத்துவிட்டு பிணத்தை அவர் வேலை பார்த்த பருத்திக்காட்டில் போட்டுவிட்டனர். அந்தப் பெண்ணின் உறவினர்  புகார் கொடுத்ததும், போலீஸ் மோப்பநாய் ராணியுடன் வந்தது. அது பருத்திக்காட்டில் இருந்து மோப்பம் பிடித்துக்கொண்டு நரபலி கொடுத்த கிரானைட் இடத்தில் போய் படுத்தது. பிறகு அங்கிருந்து ஓடி கிரானைட் கம்பெனியில் வேலை பார்க்கும் லாரி டிரைவர், மேனேஜர் போன்றவர்களை நாய் கவ்வப்போக... நாயைப் பிடித்து நிறுத்திய போலீஸார் உடனடியாக கிரானைட் உரிமையாளருக்கு போன் செய்து பேசி முடித்துக்கொண்டனர். நான்கு நபர்கள் சேர்ந்து கொலை செய்ததாக போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை! இந்தப் புகாரும் தற்போது சகாயத்தின் கையில் இருக்கிறது!''

''100-க்கும் மேற்பட்ட விசாரணைக் கமிஷன்கள் அமைத்தால்தான் மொத்தமாக விசாரிக்க முடியும்போல!'

''இதுபோன்ற பல்வேறு ரத்தச் சம்பவங்களைப் பட்டியலிட்டு பெயர், முகவரி, இடம் என்று அனைத்தும் துல்லியமாகக் குறிப்பிட்டு புகார் வந்திருக்கிறது. அந்தப் புகாருடன் ஒரு வரைபடமும் வரைந்து அதில் நரபலி கொடுக்கும் இடத்தைத் துல்லியமாகக் குறிப்பிட்டு அனுப்பி இருக்கிறார்களாம். இதுவரை நடந்த நரபலிகளுக்கு யார் யார் உதவி செய்தார்கள் என்ற விவரமும் அதில் இருக்கிறது!'' இப்போது நாம் டாப்பிக்கை மாற்றினோம்.

''காங்கிரஸில் என்ன கலாட்டா?'

''தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இளங்கோவன் நியமிக்கப்பட்ட பிறகு கட்சியில் தடாலடி நடவடிக்கைகளுக்குப் பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது. சென்னையில் கடந்த

29-ம் தேதி நடந்த அகில இந்திய கட்டுமானத் தொழிலாளர்கள் மாநாட்டில் பேசிய இளங்கோவன், 'கடந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த அமைச்சர்களே காரணம். ஆனால் அவர்களோ, காங்கிரஸ் கட்சி தோற்கும் என்பது எங்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தெரியும் என்று பேசுகிறார்கள். அந்த அழுக்குகள் கட்சியில் இருப்பதால்தான் காங்கிரஸ் தோற்றது. அவர்கள் கட்சியைவிட்டு வெளியேறினாலே காங்கிரஸ் கட்சிக்கு விமோசனம் கிடைக்கும். வெற்றி பெறுவோம்’ என்று பேசி இருக்கிறார். இந்தப் பேச்சு ப.சிதம்பரம் கோஷ்டியை கொதிப்படைய வைத்துள்ளது. ஏற்கெனவே ஒரு தடவை இளங்கோவன் பேசுகையில், 'ஒரு தலைவரும் அவரது வாரிசும் கட்சியைவிட்டு வெளியேறினால் காங்கிரஸ் கட்சிக்கு நல்லது நடக்கும்’ என்று பேசி இருந்தார். இப்போது, மீண்டும் இளங்கோவன் அதிரடியாகப் பேசி இருப்பது அவர்களுக்கு இடையே மீண்டும் பிரச்னையை கிளப்பி இருக்கிறது. மேலிடத்துக்கு இந்தப் பேச்சை புகாராகத் தட்டி விட்டுள்ளார்கள். ஏற்கெனவே விரக்தியில் இருக்கும் சிதம்பரத்தை இளங்கோவனின் இந்தப் பேச்சு அதிகமாகச் சீண்டி உள்ளது!'

''ம்!'

''ஞானதேசிகன் காங்கிரஸ் தலைவராக இருக்கும்போதே கார்த்தி  சிதம்பரத்துக்கு மாநிலப் பொருளாளர் பதவி கிடைக்க ப.சிதம்பரம் காய் நகர்த்தினாராம்.

சோனியா​வின் ஆலோசகரான அகமது பட்டேல் சொல்லியும் கேட்காமல் முன்னாள் எம்.எல்.ஏ கோவை தங்கத்துக்கு பொருளாளர் பதவியை ஞானதேசிகன் கொடுத்துவிட்டாராம். அதன் பிறகு, இளங்கோவன் தலைவரானவுடன் மகனுக்கு பொருளாளர் பதவி வேண்டும் என்று காய் நகர்த்தினார். அந்தப் பதவியை​யும் நாசே.ராமச்சந்திரனுக்குக் கொடுத்துவிட்டார் இளங்கோவன். மேலும், சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்கு ஒரு மாவட்டத்துக்கு தனக்கு வேண்டப்பட்ட ஒருவரை மாவட்டத் தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் சிதம்பரம் கேட்டாராம். அந்தப் பரிந்துரைகளை இளங்கோவன் கேட்கவில்லையாம். திருநாவுக்கரசர் ஆதரவாளரான, 'குட்லக்’ ராஜேந்திரனை மாவட்டத் தலைவர் ஆக்கிவிட்டாராம். அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவராம். இந்தக் கோபமும் சிதம்பரத்துக்கு!'

''பி.ஜே.பி பற்றி ஏதாவது தகவல் உண்டா?'

''தமிழக பி.ஜே.பியில் எம்.பி ஆகி மத்திய மந்திரி ஆகலாம் என்ற ஆசை பலருக்கும் இருந்தது. ஆனால், பொன்.ராதாகிருஷ்ணனைத் தவிர, அனைவரும் தோற்றுவிட்டனர். அடுத்ததாக, மாநிலத் தலைவர் ஆகலாம் என்றும் சிலருக்கு ஆசை இருந்தது. அது தமிழிசைக்குப் போய்விட்டது. அவர்கள் விரும்பிய பதவியைக் கொடுக்காமல் வேறு வேறு பதவிகள்தான் கிடைத்தன. இருந்தாலும் அவர்களை இன்னும் சோதிக்க வேண்டாம் என்று கவர்னர் பதவிக்கு மாநில நிர்வாகத்திடம் டெல்லியில் இருந்து லிஸ்ட் கேட்டுள்ளனர். மூத்த தலைவர்கள் கே.என்.லட்சுமணன், இல.கணேசன் ஆகியோரை கவர்னர் பதவிக்குப் பரிந்துரை செய்து டெல்லிக்கு அனுப்பி உள்ளதாம் மாநில தலைமை!' என்று சொல்லிவிட்டு எழுந்த கழுகார்,

''தமிழ் மாநில காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை 45 லட்சத்தைத் தாண்டி விட்டதாம். மார்ச் 31-ம் தேதியோடு உறுப்பினர் சேர்க்கையை முடித்துவிட்டு கட்சியின் பொதுக்குழுவைக் கூட்ட ஜி.கே.வாசன் முடிவு செய்துள்ளாராம். ஏப்ரல் 24-ம் தேதி த.மா.கா கட்சியின் முதல் பொதுக்குழு கூடுகிறது. அந்தக் கூட்டத்தில் மாநிலத் தலைவராக ஒருமனதாக ஜி.கே.வாசன் தேர்வு செய்யப்பட இருக்கிறார். அதையடுத்து, மாநில மாவட்ட நிர்வாகிகள் அறிவிக்கப்பட இருக்கிறார்கள். அதற்குள் இன்னும் சிலரை காங்கிரஸில் இருந்து இழுக்கும் திட்டம் இருக்கிறதாம்!' என்றபடி பறந்தார்.

அட்டை மற்றும் படங்கள்: சு.குமரேசன், படம்: சக்திஅருணகிரி

விஜயகாந்த் ரிட்டர்ன்!

மிஸ்டர் கழுகு: டிசம்பரில் சட்டசபைத் தேர்தல்!

சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் சட்டசபையில் பங்கேற்க முடியாத தே.மு.தி.க எம்.எல்.ஏ-க்கள் கோட்டையில் தொடர் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள். 30-ம் தேதி திடீரென்று சட்டசபைக்கு வந்து கையெழுத்துப் போட்டுவிட்டு விஜயகாந்த் கிளம்பிப் போனார். தங்கள் கட்சி எம்.எல்.ஏ-க்கள் போராட்டம் நடத்துவதுகூட தெரியாமல் விஜயகாந்த் கிளம்பிப் போனதைக் கண்டு ஆச்சர்யப்பட்ட தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள்  அவருக்கு போன் போட்டு சொல்ல.. உடனே காரை யூ டர்ன் அடித்து மீண்டும் கோட்டைக்கு வந்தார். தரையில் உட்கார்ந்து போராடிக்கொண்டிருந்தவர்களை, அணிவகுப்பு பார்க்க வரும் ஜனாதிபதியைப்போல பார்த்தார். என்ன நினைத்தாரோ கிளம்பும்போது எல்லோரையும் அழைத்துக்கொண்டு போய்விட்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு