Published:Updated:

"கருத்துச் சொல்லவே சுதந்திரம் இல்லையா?”

"கருத்துச் சொல்லவே சுதந்திரம் இல்லையா?”

பிரீமியம் ஸ்டோரி

வதூறு வழக்குகள்... அதிகாரம்... வன்முறைகளை ஆயுதங்களாக வைத்துக்கொண்டு ஆளும் தரப்பும், அரசு எந்திரங்களும், அடிப்படைவாதிகளும் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராகத் தொடர்ச்சியாக அடக்குமுறைகளை நிகழ்த்தி வருகின்றனர். இந்தப் போக்குக்கு எதிரான கண்டனக் கூட்டத்தை 'மாற்றத்துக்கான பத்திரிகையாளர் மையம்’ சென்னையில் நடத்தியது.

2011 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, அணிகள் உடைந்து சிதறிக்கிடந்த கட்சிகளும், நேருக்குநேரான சந்திப்புகளைத் தவிர்த்து வந்த தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் ஒற்றுமையாக ஒரே மேடையைப் பகிர்ந்து கொண்டனர்.

"கருத்துச் சொல்லவே சுதந்திரம் இல்லையா?”

'இந்து’ என்.ராம்: ''கருத்துச் சுதந்திரத்துக்கு  எதிரான அடக்குமுறைகள் எழும்போது, அதனால் பாதிக்கப்பட்டவர்கள் வலுவாகப் போராட வேண்டும். எழுத்தாளர் பெருமாள் முருகன் விவகாரத்தில் கருத்துச் சுதந்திரம் கேள்விக்குறியாக்கப்பட்டது. அவருக்கு ஆதரவாக பலர் இருந்தாலும், அவர் சற்று பின்வாங்கிவிட்டார். அவர் இன்னும் வலுவாகப் போராடி இருக்க வேண்டும். பத்திரிகையாளர்களின் குரல்வளை நெரிக்கப்படும்போது, அதை எதிர்த்துப்​ போராட அவர்களுக்கு  அரசியல் ரீதியான ஆதரவு தேவை. மாற்றத்துக்கான பத்திரிகையாளர் மையம் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இந்த நிகழ்வு அதற்கு ஒரு தொடக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்றே நான் பார்க்கிறேன்.''

மு.க.ஸ்டாலின்: ''1949-ம் ஆண்டு தி.மு.க தொடங்கப்பட்டபோது, அறிஞர் அண்ணா வெளியிட்ட கொள்கை அறிவிப்பில், பேச்சுரிமையும் எழுத்துரிமையும் என்று வலியுறுத்தப்பட்டு இருந்தது. அதனால்தான், அதிகாரத்தில் உள்ளவர்கள் கருத்துரிமைகளுக்கு எதிராக எப்போது செயல்பட்டாலும், நாங்கள் அதற்கு எதிராகப் போராடி வந்துள்ளோம். போராடு​பவர்களுக்கு ஆதரவாகத் தோள் கொடுத்து​ள்ளோம்.''

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்: ''கருத்துச் சுதந்திரத்துக்கு இதுபோல், கடந்த காலங்களிலும் இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது. அப்போதும், இதுபோன்ற ஒரு கூட்டத்தை இந்து ராம் நடத்தினார். அதில், ஜனநாயக சக்திகள் எல்லோரும் திரளாகக் கலந்துகொண்டோம். அந்தக் கூட்டம்தான், அன்றைய ஜெயலலிதா ஆட்சி மாற்றத்துக்குப் போடப்பட்ட பிள்ளையார் சுழி. இன்றும் அந்த அம்மையாரின் ஆட்சிதான் நடக்கிறது. அந்த அம்மையார் ஆட்சியில் அன்று நடத்தியதைப் போன்றே இன்றும் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான அடக்குமுறைகள் தொடர்கின்றன. இப்படி இவர்கள் நடந்துகொண்டால், சட்டத்தால் புறக்கணிக்கப்பட்டு  எதிர்காலத்தில் மக்களாலும் புறக்கணிக்கப்படுவார்கள். அதற்கான பிள்ளையார் சுழி, இந்தக் கூட்டத்தின் மூலம் போடப்பட்டுள்ளது.''

ஜி.ராமகிருஷ்ணன்: ''தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரத்துக்கும் கருத்துச் சுதந்திரத்துக்கும் எதிரான அடக்குமுறை நடப்பதும் அதை எதிர்த்து பத்திரிகையாளர்கள் போராடுவதும் இன்று நேற்றல்ல. பல ஆண்டுகளாக நடக்கிறது. அட்டைப்படத்தில் ஒரு கார்ட்டூன் வெளியிட்டதற்காக ஆனந்த விகடன் ஆசிரியர் பாலுவை, அன்றைய எம்.ஜி.ஆர் அரசாங்கம்  கைதுசெய்து சிறையில் அடைத்தது. பாலு அதை எதிர்த்து நீதிமன்றம் சென்று போராடி வெற்றிபெற்றார். நீதிமன்றத்தில், உங்கள் மதிப்புக்கு ஏற்பட்ட இழப்புக்கு எவ்வளவு நஷ்டஈடு வேண்டும் என்று நீதிபதி கேட்டபோது, 'என்னுடைய மதிப்பு விலை மதிக்க முடியாதது. ஆனால், அரசாங்கம் தன்னுடைய தவறை உணர வேண்டும் என்பதற்காக ஆயிரம் ரூபாய் மட்டும் நஷ்டஈடு கொடுத்தால் போதும்’ என்று சொன்னார். அந்தச் சம்பவங்கள் எல்லாம் நமக்கு முன்னுதாரணமாக உள்ளன.

"கருத்துச் சொல்லவே சுதந்திரம் இல்லையா?”

ம.தி.மு.க மல்லை சத்யா: ''பத்திரிகையாளர்​களுக்கும் கருத்துச் சுதந்திரத்துக்கும் ஆதரவாகவே ம.தி.மு.க என்றும் தோள் கொடுத்து வந்​துள்ளது. உலக வரலாற்றை பல நேரங்களில் திருத்தி எழுதியவர்கள் பத்திரிகையாளர்கள்தான். எனவே, இங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தையும் நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டு என்றும் பத்திரிகையாளர்கள் பக்கம் இருப்போம்.''

ஜவாஹிருல்லா: ''கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான தாக்குதல்கள் என்பது ஆளும் வர்க்கம், அரசு எந்திரம் என்று எல்லோராலும் நடத்தப்படுகிறது. புதிய தலைமுறை மீது எறியப்பட்ட டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள் என்பது அந்த அலுவலகத்தின் மீது எறியப்பட்ட குண்டு அல்ல. மாறாக ஜனநாயகத்தின் மீது எறியப்பட்ட வெடிகுண்டு. ஆனால், அதில் கைது செய்யப்பட்டவர்கள் வெறும் அம்புகள்.  அதற்காகத் திட்டமிட்டவர்கள், அந்தச் செயலை ஆதரித்து அறிக்கைவிட்டவர்கள், கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை புழல் சிறையில் போய் பார்த்து நலம் விசாரித்துவிட்டு வந்தவர்கள் எல்லாம் குற்றவாளிகள் இல்லையா?'

டாக்டர் கிருஷ்ணசாமி: ''பத்திரிகைகளின் சுதந்திரம் பாதிக்கப்படும்போது ஜனநாயகத்தில் சமமற்ற நிலை உருவாகும். அந்த நிலை ஏற்பட்டால், நாட்டின் வளர்ச்சியும் மக்களின் முன்னேற்றமும் அமைதியான வாழ்க்கையும் பாதிக்கும். அதனால், பத்திரிகை சுதந்திரம் என்பது எந்த நிலையிலும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் எப்போதும் உறுதி​யாக இருந்து வந்துள்ளோம்.''

ரவிக்குமார்: ''கருத்துச் சுதந்திரம் பற்றி பேசுகிற இந்த நேரத்தில் நாம், 'வெறுப்பு பிரசாரம்’ பற்றியும் சிந்திக்க வேண்டும். ஏனென்றால், இன்றைக்கு ஊடகங்களால் நிகழ்த்தப்படும் வெறுப்பு பிரசாரம் என்பது ஒரு சந்தைப் பண்டமாகத் திகழ்கிறது. எனவே அதையும் நாம் கருத்தில்கொள்ள வேண்டும்.''

கூட்டத்தின் முடிவில் பத்திரிகைச் சுதந்திரத்தை காப்பதற்கு அவசியமான ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஜோ.ஸ்டாலின்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு