Published:Updated:

மேக்கேதாட்டூ அணையும் அ.தி.மு.க - வின் அரசியல் சதுரங்கமும்!

மேக்கேதாட்டூ அணையும் அ.தி.மு.க - வின் அரசியல் சதுரங்கமும்!

பிரீமியம் ஸ்டோரி

மேக்கேதாட்டூவில் காவிரி ஆற்றின் குறுக்கே, கர்நாடகம் அணை கட்டுவதை எதிர்த்து நடத்தப்பட்ட 'பந்த்’தில் தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றாக கைகோக்க... பி.ஜே.பி-யும் அ.தி.மு.க-வும் அதில் பங்கேற்கவில்லை. 'பந்த்தை ஆதரிக்கிறோம்’ அல்லது 'எதிர்க்கிறோம்’ என இரண்டில் ஒன்றைச் சொல்லியிருக்க வேண்டும். ஆனால், 'பாம்பும் சாகக் கூடாது, கம்பும் உடையக் கூடாது’ என 'அமைதி’ காத்தன இந்த இரண்டு கட்சிகளும். இந்தக் கள்ள மௌனத்துக்குப் பின்னால் இருக்கும் 'நுண்ணரசியல்’ என்ன?

மேக்கேதாட்டூ அணையும் அ.தி.மு.க - வின் அரசியல் சதுரங்கமும்!

நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை ஆதரித்து விவசாயிகளின் வெறுப்பைத் தேடிக்கொண்ட ஜெயலலிதா, 'பந்த்’துக்கு தார்மீக ஆதரவுகூட தராதது விவசாயிகளின் கொதிநிலையை கூட்டியிருக்கிறது. கர்நாடகாவில் தங்கள் கட்சியின் ஆட்சி நடைபெற்றபோதிலும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி 'பந்த்’தை ஆதரித்தது. ஆனால் பி.ஜே.பியோ, கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்கும் தந்திரத்தில் 'அரசியல் சதுரங்கம்’ ஆடியது. தாமரையும் இரட்டை இலையும் சேர்ந்து போட்ட நாடகத்தைப் பார்ப்போம்.

தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தி பந்த் தேதி குறித்தது, அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு. இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு அல்லது எதிர்ப்பு என பி.ஜே.பி-யும் அ.தி.மு.க-வும் எந்தவொரு நிலைப்பாட்டையும் கடைசிவரையில் சொல்லவில்லை. 'பந்த்’தில் பங்கெடுக்காமல் போனால், தங்கள் மீது 'கறை’ படிந்துவிடும் என அஞ்சியதால், 'பந்த்’துக்கு முந்தைய தினம் சட்டசபையில் தனித் தீர்மானம் ஒன்றை ஏகமனதாக நிறைவேற்றியது அ.தி.மு.க அரசு. தீர்மானத்திலும்கூட 'சாஃப்ட் அப்ரோச்’தான்.

தீர்மானத்தில், கர்நாடகாவைக் கண்டிக்கும் கடுமையான வாசகங்கள் இல்லை. கர்நாடகாவைக் கண்டித்து தீர்மானத்தைப் போடுவதற்குத் தயக்கம் என்ன? கர்நாடகாவில் நடக்கும் சொத்துக் குவிப்பு வழக்குதான் காரணமாம். ''விவசாயிகளின் நலனா? அரசியல் எதிர்காலமா? என்கிற நிலையில் அ.தி.மு.க குழம்பிப் போயிருப்பதைத்தான் இது காட்டுகிறது. வழக்கு அச்சத்தால் கர்நாடகாவுக்கு எதிரான நிலையை உறுதியாக எடுக்க முடியாமல் அ.தி.மு.க தவிக்கிறது' என்கிறார்கள் விவசாயிகள்.

மேக்கேதாட்டூ அணையும் அ.தி.மு.க - வின் அரசியல் சதுரங்கமும்!

சட்டசபை 28-ம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என முன்கூட்டியே அலுவல் ஆய்வுக் குழு அறிவித்திருந்தது. பொதுவாக சனி, ஞாயிறுகளில் சபை நடைபெறுவது கிடையாது. அன்றைய தினம்தான் பந்த். தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு, தி.மு.க சார்பில் பேசிய துரைமுருகன், ''அரசே பந்த் நடத்தினால்தான் அது சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு எதிரானது. ஆனால், அ.தி.மு.க பங்கேற்கலாம். பந்த் அன்று நாம் மட்டும் சட்டசபையில் உட்கார்ந்திருந்தால் அது நியாயமாக இருக்காது. விவசாயிகளின் போராட்டத்தை மானசீகமாக ஆதரிக்கிறோம் என்பதை தெரிவிக்கும் வகையில் அவையை ஒத்திவைக்க வேண்டும். அது விவசாயிகளின் போராட்டத்துக்கு இந்த மாமன்றம் காட்டுகின்ற மரியாதை'' என்றார். ஆனால், ஆளும் கட்சியும் சபாநாயகரும் எந்த ரியாக்‌ஷனும் காட்டவில்லை. சட்டசபை நிகழ்வுகள் முடிந்ததும் இரவு 8 மணி அளவில் 'சட்டசபை நாளை ஒத்தி வைக்கப்படுகிறது’ என திடீரென்று ஓர் அறிவிப்பை வெளியிட்டார் சட்டமன்ற செயலாளர் ஜமாலூதீன். 'அலுவல் ஆய்வுக்குழு எடுத்த முடிவின்படி நாளை சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது’ என்று அதில் சொல்லியிருந்தார். ஆனால் பந்த் தொடர்பான வாசகம் எதுவும் இல்லை.

'பந்த்’தில் பங்கெடுக்கவில்லை என்ற நிலையில் சட்டசபையையும் நடத்தினால் அது இன்னும் எதிர்ப்பை உண்டாக்கும் என நினைத்துத்தான் இப்படியொரு ஏற்பாட்டை செய்திருந்தார்கள்.

கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை மூன்று மாதங்களுக்குள் முடிக்கச் சொல்லி சுப்ரீம் கோர்ட் உத்தரவு போட்டுள்ளது. பந்த் நடத்தக் கூடாது என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு ஏற்கெனவே உள்ளது. இந்த நிலையில் பந்த்துக்கு அ.தி.மு.க ஆதரவு கொடுத்தால் சுப்ரீம் கோர்ட்டின் கண்டனத்துக்கு ஆளாக நேரிடும் என அஞ்சித்தான் பந்த்துக்கு ஆதரவு தெரிவிக்காமல் இருதலைக் கொள்ளியாக இருந்திருக்கிறது அ.தி.மு.க.

''மேக்கேதாட்டூவில் அணை கட்டக் கூடாது'' என தமிழக எம்.பிகள் 55 பேர் ஒரே குழுவாக மோடியை சந்தித்து சட்டசபை தீர்மானத்தை வழங்கினார்கள். இந்தச் சந்திப்புக்கு அனுமதி வழங்கியதன் மூலம் தன் மீதான கறையைத் துடைத்துக் கொள்ளப் பார்க்கிறது பி.ஜே.பி. ஆனால், அந்த 55 எம்.பிகளில் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி, படங்கள்: தே.தீட்ஷீத்,  தி.ஹரிஹரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு