Published:Updated:

ஆஸ்திக்கு விவேக்... கட்சிக்கு தினகரன்..! சசிகலாவின் 5 கட்டளைகள் #VikatanExclusive

ஆஸ்திக்கு விவேக்... கட்சிக்கு தினகரன்..! சசிகலாவின் 5 கட்டளைகள் #VikatanExclusive
ஆஸ்திக்கு விவேக்... கட்சிக்கு தினகரன்..! சசிகலாவின் 5 கட்டளைகள் #VikatanExclusive

“சொத்துகளை மீட்டெடுப்பதும், மீட்டெடுத்தவற்றைப் பத்திரமாகப் பாதுகாப்பதும், இளவரசியின் மகன் விவேக்கின் கடமை! 

கட்சியைக் கைப்பற்றுவதும், கையில் இருக்கும் கட்சியைக் காப்பாற்றுவதும், இரண்டையும் இணைத்து வலுவாக வளர்தெடுப்பதும் தினகரனின் கடமை! 

தினகரனுக்கும் விவேக்குக்கும் முழுமையான ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது மன்னார்குடி குடும்பத்திலுள்ள மற்ற ரத்த உறவுகளின் கடமை!”

இந்த மூன்று கட்டளைகளைப் பிறப்பித்து, அதை மன்னார்குடி குடும்பத்துக்குச் சாசனமாக்கிச் சென்றுள்ளார் சசிகலா! சசிகலாவின் சாசனத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர இப்போதைக்கு அந்தக் குடும்பத்துக்கு வேறு வழியில்லை. அதனால், அதை அப்படியே ஒத்துக்கொண்டு, நிறைவேற்றித் தருவதாக சத்தியம் செய்து கொடுத்திருக்கின்றனர் மன்னார்குடி ரத்த உறவுகள். இதோடு வேறு இரண்டு கட்டளைகளைத் தினகரனுக்குத் தனியாகப் பிறப்பித்துள்ளார் சசிகலா. பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து 5 நாள்கள் பரோலில் வந்த சசிகலா சாதித்துவிட்டுப்போனது இதைத்தான். இந்த ஸ்கெட்ச்படி, தற்போது மன்னார்குடி குடும்பத்தின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதோடு, மன்னார்குடி குடும்பத்திலிருந்து புதிய சக்தியாக விவேக் வெளிச்சத்துக்கு வந்துள்ளார். ‘அரசியல் நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடக் கூடாது’ என்ற நிபந்தனைக்குட்பட்டு பரோலில் வந்த சசிகலா, மன்னார்குடி குடும்பத்தை ஒருங்கிணைத்து, அந்தக் குடும்பத்துக்கு இந்த ‘மாஸ்டர் பிளானை’ போட்டுக் கொடுத்துள்ளார். இதைச் சட்டப்படி அரசியல் நடவடிக்கை என்று சொல்ல முடியாது. ஆனால், எதிர்கால அரசியலில் மிகமுக்கியமான திருப்பங்களை ஏற்படுத்தும் நடவடிக்கையாக இது இருக்கலாம்! இல்லாமலும் போகலாம்! ஆனால், மன்னார்குடி குடும்பத்தைப் பொறுத்தவரை, இது மிக முக்கியமான நடவடிக்கை! 

சிக்கலும் தீர்வும்!

30 ஆண்டுகளில் மன்னார்குடி குடும்பம் சந்திக்காத சோதனைக் காலகட்டத்தை இப்போது சந்தித்துள்ளது. இதற்கு முன்பு, 1995-களின் இறுதியில் தொடங்கி 1997 வரை இதேபோன்ற சோதனைகளை அந்தக் குடும்பம் சந்தித்தது. அந்த நேரத்தில், அந்தக் குடும்பத்துக்கு அப்போது எல்லாம் நம்பிக்கையாக இருந்தவர் நடராசன். மன்னார்குடி குடும்பத்துக்கு கட்சிக்குள்ளும், ஆட்சியிலும் எந்தப் பிரச்னை வந்தாலும் அதை நடராசன்தான் ‘டீல்’ செய்வார். அதுபோல, குடும்பத்துக்குள் ஏற்படும் சர்ச்சைகளையும் நடராசன்தான் தீர்த்து வைப்பார். தினகரன், திவாகரனோடு மோதுவார்; பாஸ்கரன், தினகரனைத் திட்டுவார்; விநோதகன், ஜெயராமன் சொல்வதைக் கேட்கமாட்டார்; மஹாதேவன் யாருக்கும் கட்டுப்படமாட்டார். ஆனால், இவர்கள் அனைவரும் நடராசனுக்குக் கட்டுப்படுவார்கள். நடராசன் பேச்சைத்தட்டமாட்டார்கள். ஏனென்றால், நடராசனால்தான் ஜெயலலிதாவிடம் சசிகலா நெருங்கினார். அதனால்தான், தங்கள் குடும்பத்துக்கு இந்த வாழ்வு வந்தது என்பது மன்னார்குடி குடும்பத்துக்கு நன்றாகத் தெரியும். அதை யாரும் மறுக்க முடியாது. அந்த அளவுக்கு நடராசன் தனக்கான லாபியை உருவாக்கி வைத்திருந்தார். தமிழகத்திலோ... டெல்லியிலோ... தமிழர்கள் அதிகம் வாழும் உலக நாடுகளிலோ... அல்லது வேறு எங்கேயோபோய்... யாரையாவது பிடித்து நடராசன் மன்னார்குடி குடும்பத்தின் சிக்கல்களைத் தீர்த்துவிடுவார். ஜெயலலிதாவின் அரசியல் ஏற்றத்துக்கும் நடராசனின் இந்த ‘லாபி’ பலவகையில் உதவியது. ஒருகட்டத்தில், நடராசனின் இந்த ‘லாபி பவர்’ தான் அவர்மீது ஒருவித சந்தேகத்தையும் அச்சத்தையும் ஜெயலலிதாவுக்கே உருவாக்கியது. அதில்தான் இருவருக்கும் கருத்து முரண்பாடுகள் தோன்றின. அதையடுத்துத்தான் நடராசன், போயஸ் கார்டன் வீட்டிலிருந்து வெளியேறினார். ஜெயலலிதாவால் மன்னார்குடி குடும்பத்துக்குச் சிக்கல் வந்தால், அதைச் சசிகலா சமாளித்துவிடுவார். வெளியில் வரும் பிரச்னைகளை நடராசன் தீர்த்துவைப்பார். ஜெயலலிதா, சசிகலா, நடராசன் என்ற மூன்று சக்திகள் இருந்ததால், அந்தக் குடும்பம் தமிழகத்தில், அ.தி.மு.க என்ற கட்சியில், அதன் தலைமையில் நடந்த ஆட்சியில் ஆதிக்க சக்தியாக வலம் வந்தது. ஆனால், ஜெயலலிதா இறந்தபிறகு நிலைமை தலைகீழாக மாறியது. அதன்பிறகு சசிகலா சிறைக்குப் போய்விட்டார். நடராசன் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்ந்துவிட்டார். ஆட்சியில் இருந்த அதிகாரத்தை எடப்பாடி பழனிசாமி பறித்துவிட்டார். கட்சியைப் பன்னீர் செல்வம் கபளீகரம் செய்துவிட்டார். இந்தநிலையில் மன்னார்குடி குடும்பம் திகைத்துப்போய் இருந்தது. அதற்கு உடனடித் தீர்வாக, கொஞ்சம் ஆறுதலாக இருந்தது சசிகலாவின் சமீபத்திய பரோல் வருகை! அந்த வருகையில் அவர் கட்சியை தினகரனே கவனிக்கட்டும் என்று மன்னார்குடி குடும்பத்திடம் கறாராகச் சொல்லிவிட்டார். அதைவிட முக்கியமாக, நம் குடும்பத்தின் சொத்துகள், வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பான நிர்வாகத்தை விவேக் கவனிக்கட்டும் என்றும் விவேக்கை முக்கியமான ஆளாக அடையாளம் காட்டிச் சென்றுள்ளார். தனது இந்த வார்த்தைகளுக்கு மன்னார்குடி குடும்பத்தைச் சம்மதிக்கவும் வைத்துள்ளார். தினகரனை எல்லோருக்கும் தெரியும். ஆனால், விவேக் யார்? என்பது பலருக்குத் தெரியாது.

விவேக் பராக்.. பராக்.. பராக்!

சசிகலாவின் இரண்டாவது அண்ணன் ஜெயராமன். அவரது மனைவி இளவரசி. இவர்களுக்கு கிருஷ்ணப் பிரியா, ஷகிலா, விவேக் என்று மூன்று பிள்ளைகள். 1991-96 காலகட்டத்தில் தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி நடைபெற்றபோது, ஜெயலலிதா தனது ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தில் ஆடம்பர பங்களா ஒன்றைக் கட்டிக்கொண்டிருந்தார். அந்தக் கட்டுமான வேலைகளை மேற்பார்வை செய்தது சசிகலாவின் அண்ணன் ஜெயராமன்தான். அந்த நேரத்தில் பங்களாவுக்குத் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தபோது, மின்சாரம் பாய்ந்து ஜெயராமன் இறந்துவிட்டார். இதையடுத்து, அவருடைய மனைவியும் மூன்று பிள்ளைகளையும் ஜெயலலிதா, தனது போயஸ் தோட்டத்து வீட்டிலேயே தங்க வைத்துக்கொண்டார். இப்போதும் அவர்களுடைய ஒரிஜினல் முகவரி போயஸ் தோட்டம் வீடுதான். அங்கிருந்து சென்னையில் படித்தவர்கள், அதன்பிறகு ஊட்டி கான்வென்ட்டில் சேர்ந்து படித்தனர். அதன்பிறகு இளவரசியின் மூன்றாவது பிள்ளை விவேக்கை ஜெயலலிதா பூனேவுக்கு அனுப்பி பி.பி.ஏ படிக்க வைத்தார். அதன்பிறகு எம்.பி.ஏ-வை ஆஸ்திரேலியாவில் சேர்த்துப் படிக்க வைத்தார். ஆஸ்திரேலியாவில் படிப்பை முடித்த விவேக், பெங்களூரில் ஐ.டி.சி-யின் டீலராக வேலை பார்த்தார். தற்போது அவரிடம்தான் சசிகலா, தங்கள் குடும்பச் சொத்துகள், வெளிநாட்டு முதலீடுகள் பற்றிய நிர்வாகத்தை ஒப்படைத்துள்ளார். இதன்மூலம் அந்தக் குடும்பத்தின் அடுத்த சக்தியாக விவேக் அடையாளம் காட்டப்பட்டுள்ளார். அதற்குச் சில காரணங்கள் இருந்தன. 

​​​​கோட்டை விட்ட தினகரன்... சாதித்துக்காட்டிய விவேக்... 

சசிகலாவின் கணவர் நடராசன், கல்லீரல், கிட்னி பாதிக்கப்பட்டு குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையைக் காரணம் காட்டி சசிகலாவுக்குப் பரோல் கேட்கப்பட்டது. முதலில் இந்த விவகாரத்தை டீல் செய்தது டி.டி.வி.தினகரன்தான். ஆனால், தினகரன் தலையிட்டதாலோ என்னவோ... தமிழகக் காவல்துறையிலிருந்து ஏகப்பட்ட கண்டிஷன் சொல்லி பரோல் தள்ளிப்போனது. அந்த நேரத்தில் நடராசன் உடல்நிலை மிக மோசமடைந்தது. இந்தநிலையில், சசிகலாவின் பரோல் விவகாரத்தைக் கையில் எடுத்தவர் அவருடைய அண்ணன் ஜெயராமன்-இளவரசி தம்பதியினரின் மகன் விவேக். விவேக் சீனுக்கு வந்ததும் வேலைகள் வேகமாக நடந்தன. அவர் சார்பில், தமிழகக் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில், “சசிகலாவின் பரோல் நாள்களில் எந்த அரசியல் நடவடிக்கைகளும் இருக்காது” என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டது. அதன்பிறகு தமிழகக் காவல்துறை முதலமைச்சர் எடப்பாடியோடு பேசிவிட்டு பச்சைக்கொடி காண்பித்தது. சசிகலாவுக்குப் பரோல் கிடைத்தது. வெளியில் வந்தவர் எங்கு தங்க வேண்டும், எத்தனை மணிக்கு நடராசனைப் பார்க்க மருத்துவமனைக்குப் போக வேண்டும், வீட்டில் யாரைச் சந்திக்கலாம்; யாரைச் சந்திக்கக் கூடாது என எல்லாவற்றையும் விவேக்தான் முடிவு செய்தார். மீண்டும் சசிகலாவைப் பத்திரமாக பரப்பன அக்ரஹாராவுக்குக் கொண்டுபோய் சேர்க்கும்வரை விவேக் கண்ணசைவில்தான் காரியங்கள் நடைபெற்றன. ஆனால், சசிகலா வந்த காரில் கூட விவேக் ஏறவில்லை. எல்லா வேலைகளையும் கச்சிதமாக முடித்துவிட்டு அவர் கேமராக்களில் தலைகாட்டாமல் மறைந்து கொண்டார். விவேக்கின் இந்த நடவடிக்கைகள் சசிகலாவின் கவனத்தை ஈர்த்தது. 

சந்திப்புகளும்... நிராகரிப்புகளும்... 

பரோலில் வந்த சசிகலாவால் போயஸ் கார்டனுக்குப் போக முடியவில்லை. அதனால், இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியாவின் வீட்டில் தங்கினார். போயஸ் கார்டனுக்குப் பிறகு, சசிகலாவுக்குப் பரிட்சயமான வீடு இதுதான். 2011-ம் ஆண்டு, ஜெயலலிதா போயஸ்கார்டன் வீட்டிலிருந்து சசிகலாவை வெளியேற்றியபோதும் அவர் இந்த வீட்டில்தான் தங்கியிருந்தார். அங்கு சசிகலாவின் உறவினர்கள் தினகரன், தினகரன் மனைவி அனுராதா, திவாகரன், திவாகரனின் மகன் ஜெயானந்த், மகள் ராஜ மாதங்கி, நடராசனின் தம்பி பழனிவேல், ராமச்சந்திரன், அவர்களுடைய வாரிசுகள் உள்ளிட்டவர்கள் வந்து சந்தித்தனர். இவர்களைத்தவிர சசிகலாவை மிக முக்கியமான சிலர் சந்தித்தனர். அவர்கள் இப்போது மட்டுமில்லை; எப்போதும், சசிகலா மற்றும் ஜெயலலிதாவை எந்தவித அப்பாயின்ட்மென்ட்டும் இல்லாமல் சந்திக்கும் வழக்கம் உடையவர்கள். கட்சிக்கும், ஆட்சிக்கும் அப்பாற்பட்ட ரத்த சொந்தங்களும் இல்லாத மனிதர்கள். போயஸ்கார்டன் மாளிகையை நன்றாக அறிந்தவர்களுக்கு மட்டும்தான் அந்த ரகசியம் புரியும்; அந்த மனிதர்களையும் புரியும். அவர்களுக்கு ஜெயலலிதாவையோ... சசிகலாவையோ சந்திப்பதற்கு நாள், தேதி கிடையாது. திடீரென்று வருவார்கள். அதன்பிறகு மாதக்கணக்கில் மறைந்துபோய் விடுவார்கள். அப்படிப்பட்ட சில குறிப்பிட்ட மனிதர்களில் மிக முக்கியமானவர்கள், ராஜம்மாள், தாம்பரம் நாராயணன், தேவாதி, ஜமால் போன்றவர்கள். அவர்களும் விவேக்கின் அனுமதி பெற்றுத்தான் இந்தமுறை சசிகலாவைச் சந்திக்க முடிந்தது. அவர்களில், இந்தமுறை ராஜம்மாள் சசிகலாவைச் சந்தித்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். தாம்பரம் நாராயணனும் சசிகலாவைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்ததாகச் சொல்கிறார்கள். அவர்களிடம் பேசிக்கொண்டிருந்த சசிகலா, பழைய கதைகளை மனம்விட்டுப் பேசியுள்ளார். அப்போது அவர், “1998 தேர்தல் சமயத்திலயும் இப்போது இருப்பதுபோல இக்கட்டான நிலைதான். மத்தியில் சிதம்பரம் நிதி அமைச்சர். இங்கே, தி.மு.க ஆட்சி. இருவரும் சேர்ந்து என்னையும், அக்காவையும் (ஜெயலலிதா), எங்க குடும்பத்தையும் பாடாய்ப்படுத்தினார்கள். அந்த நேரத்தில் நாடாளுமன்றத் தேர்தல்(1998) வந்துச்சு, அப்போது 40 தொகுதிகளுக்கும் நேரடியாகப் போய், ஒவ்வொரு தொகுதிக்கும் 40 லட்ச ரூபாய் செலவுக்குக் கொடுத்துவிட்டு வந்தேன். நான் போன இடமும் தெரியாது; திரும்பிய தடமும் தெரியாது. ஆனா, இப்போ ஒரே ஒரு தொகுதியில (ஆர்.கே.நகர்) இடைத்தேர்தல். இதுக்குப் பணம் கொடுத்தேன். அத எழுதி வெச்சேன்னு இவனுங்க மாட்டிக்கிட்டு, என்னையும் வருத்தப்பட வெச்சுட்டானுங்க. கட்சியையும் பறிகொடுத்துட்டு நிக்கிறாங்க” என்று புலம்பியது ஹை-லைட். இதுபோன்ற பழைய கதைகளைத்தான் பெரும்பாலான நேரங்களில், சசிகலா தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிப் புலம்பிக்கொண்டிருந்தார். ஆனால், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், கட்சிக்காரர்கள் என யாரையும் சந்திக்கவில்லை. குறிப்பாக கடந்த 11-ம் தேதி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஏழுபேர் சசிகலாவைச் சந்திக்க வந்துள்ளனர். அவர்களிடம் பேசிய விவேக், “நான் எவ்வளவு சிரமப்பட்டு அத்தைக்கு இந்தப் பரோலை வாங்கியிருக்கிறேன் என்பது உங்களுக்கும் தெரியும். ஆனால், நீங்களே நிலைமையைப் புரிந்துகொள்ளாமல் அத்தையைச் சந்திக்க வந்தால் எப்படி?” என்று கேட்டுள்ளார். அதைப்புரிந்து கொண்டு அவர்களும் அமைதியாகத் திரும்பிவிட்டனர். 

3 கட்டளைகள்!

சசிகலா வந்த சமயத்தில் குடும்பத்தில் முக்கிமாகப் பேசித் தீர்க்கப்பட்ட  பஞ்சாயத்துதான் நாம் முதல் பாராவிலேயே குறிப்பிட்டிருந்தது. காரணம் அப்போது சசிகலாவிடம் தினகரன் சார்பில் புகார் வாசிக்கப்பட்டது. அவர், “நாம் வளர்த்துவிட்ட பன்னீரும் பழனிசாமியும் துரோகிகளாகிவிட்டனர். அவர்களிடமிருந்து கட்சியைக் காப்பாற்ற நான் தனியாளாகப் போராடிக்கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் குடும்பத்தில் இருப்பவர்களே எனக்குக் குடைச்சல் கொடுக்கும் வேலைகளைச் செய்கின்றனர். குறிப்பாக திவாகரன் தரப்பு எந்த உதவியும் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால், உபத்திரவம் செய்யாமல் இருந்தால் போதும்” என்று குறிப்பிட்டுள்ளார். இதைப்போல, விவேக், திவாகரனின் மகன் ஜெயானந்த் என்று ஆளுக்கு ஆள் ஒப்பாரி வைத்துள்ளனர். அதைக் கேட்ட சசிகலா, “பணம் இருந்தால்தான் கட்சியை நடத்த முடியும். ஆனால், கட்சியின் பணத்தை 80 சதவிகிதம் நானும் அக்காவும் எடப்பாடி பழனிசாமி பொறுப்பில்தான் விட்டிருந்தோம். அதை இப்போது திரும்ப மீட்பது எளிதான காரியம் அல்ல. அதுபோல, நம் குடும்பத்தை வைத்து இதுவரை கோடி கோடியாக சம்பாதித்த அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களும் இப்போது எடப்பாடி-பன்னீர் பக்கம்தான் இருக்கின்றனர். அதனால், அவர்களாலும் நமக்கு ஒரு ரூபாய்கூட உதவி கிடைக்காது. அதனால், நம்முடைய வெளிநாட்டு முதலீடுகள், இங்கிருக்கும் சொத்துகளைப் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். அதைச் சரியாக நிர்வாகம் செய்தால்தான், எதிர்காலத்தில் கட்சியைக் காப்பாற்ற பணம் தேவைப்படும்போது நம்மால் செலவழிக்க முடியும். அதனால், அந்தப் பொறுப்பை விவேக் பார்த்துக்கொள்ளட்டும். அதனால், சொத்து விவகாரங்களில் விவேக் எடுக்கும் முடிவுக்கு மற்றவர்கள் கட்டுப்படுங்கள். அதுபோல, தினகரன் இப்போது கட்சியை வழிநடத்தும் வேலைகளையும், எடப்பாடி-பன்னீர் மற்றும் தி.மு.க-வைச் சமாளிக்கும்விதமும் சரியாக இருக்கிறது. எந்தநேரத்தில் தேர்தல் வந்தாலும், தி.மு.கதான் ஆட்சியைப் பிடிக்கும். அதன்பிறகு எடப்பாடியும், பன்னீரும் காணாமல் போய்விடுவார்கள். அந்த நேரத்திலும் இப்போது தினகரன் சமாளித்து கட்சி நடத்துவதுபோல், நாம் கட்சியை நடத்த வேண்டும். அதற்கு தினகரன்தான் சரியான ஆள். அதனால், கட்சி விவகாரங்களில் தினகரன் எடுக்கும் முடிவுக்கு மற்றவர்கள் கட்டுப்படுங்கள். சொத்துகளை விவேக் பராமரிக்கட்டும். கட்சியை தினகரன் வழிநடத்தட்டும். மற்றவர்கள் இருவருக்கும் கட்டுப்பட்டிருங்கள்” என்று விவேக்குக்கு முதல்முறையும், தினகரனுக்கு இரண்டாவது முறையும் பட்டம் கட்டியிருக்கிறார் சசிகலா! அதை மன்னார்குடி குடும்பமும் ஏகமனதாக ஒப்புக்கொண்டிருக்கிறது. 

கட்சியைப் புதிதாகக் கட்டு... ஆட்சியைக் கலைக்காதே!

சசிகலாவை இரண்டு நாள்கள் கிருஷ்ணப்பிரியாவின் வீட்டில் வைத்துச் சந்தித்தார் தினகரன். அவரிடம் பேசிய சசிகலா, “ஆட்சியைக் கலைப்பேன் என்று பேசாதே. இது நாம் ஏற்படுத்திய ஆட்சி. அது இன்று துரோகிகளின் கைகளில் போனாலும், அந்த ஆட்சியில் இருக்கும் மற்றவர்கள் நமக்கு விசுவாசமானவர்கள்தாம். அவர்கள் எப்போதும் நம்மோடுதாம் இருப்பார்கள். நீ ஆட்சியைக் கலைப்பேன் என்று பேசுவதும், அதற்கு முயற்சி செய்வதும் அவர்களையும் வெறுப்படைய வைப்பதாக எனக்குத் தகவல்கள் வந்தன. அதனால், நீ உன் வசம் இருக்கும் கட்சியைப் பார்த்துக்கொள். இரட்டை இலைச் சின்னம் நமக்கும் கிடைக்காது; எடப்பாடி-பன்னீருக்கும் கிடைக்காது. அதனால், கட்சியை நாம் முதலிலிருந்து கட்ட வேண்டியதாகத்தான் இருக்கும். அதைத் தயார்படுத்தி வை. அப்போதுதான், நாளை அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு(எடப்பாடி மற்றும் பன்னீர்) ஆட்சி கலைந்தாலும், அல்லது தி.மு.க-வினால் ஆட்சி கலைந்தாலும், அங்கிருப்பவர்கள் நம்மைத் தேடி வரும் அளவில் கட்சியைத் தயார்படுத்தி வை. அப்போதுதான், நாம் தேர்தலைச் சந்திக்க முடியும்” என்று அறிவுரை செய்துள்ளார். அதனால்தான், கடந்த இரண்டு நாள்களாக தினகரனின் பேச்சில் மாற்றம் தெரிகிறது. சசிகலா வந்த அன்று, “அண்ணன் பழனிசாமி மற்றும் இந்தப் புலிகேசிகளின் ஆட்சியைக் கலைப்பேன்” என்று பேசியவர், இப்போது முதலமைச்சர் மற்றும் ஊழல் செய்த அமைச்சர்களை மாற்ற வேண்டும் என்று பேசத் தொடங்கியுள்ளார். 

புதிதாக எம்.எல்.ஏ-க்களை இழுக்க வேண்டாம்!

சசிகலா தினகரனுக்குக் கொடுத்த முக்கியமான மற்றொரு அட்வைஸ், “புதிதாக எந்த எம்.எல்.ஏ-க்களையும் இழுக்க வேண்டாம். இவ்வளவு சோதனையான காலத்தில் நம்முடன் இருப்பவர்கள் மட்டுமே நமக்கானவர்கள். மற்றவர்களை இழுக்க வேண்டுமானால் பணம் கொடுக்க வேண்டும். இப்போது பணம் எல்லாம் முடக்கப்பட்டுள்ளது. மேலும் பணத்துக்காக வருபவர்கள், நாளையே பணத்துக்காக வேறு இடத்துக்கும் தாவி விடுவார்கள். அதனால், இப்போது நம்முடன் இருப்பவர்களை மட்டும் வைத்து கட்சியை நடத்து” என்றார். 

சசிகலாவின் ஒரு நாள்!

காலையில் எழுந்து அந்த வீட்டுக்குள்ளே 10 நிமிடங்கள் வாக்கிங் போய் இருக்கிறார். அதன்பிறகு, தமிழ் நாளிதழ்கள், வார இதழ்கள் என ஒன்றுவிடாமல் அத்தனையும் படித்துள்ளார். அதில் 2 மணிநேரம் ஓடிப்போய்விடும். காலை உணவு இரண்டு இட்லியும், ஒரு சப்பாத்தியும் மட்டும்தான். அதை முடித்துவிட்டு கணவர் நடராசனைப் பார்க்க காலை 11 மணி  குளோபல் மருத்துவமனைக்குக் கிளம்பிவிடுவார். அங்கு நடராசனைப் பார்ப்பதற்கு டாக்டர்கள் நேரம் கொடுக்கும்வரை, சசிகலாவுக்காக புக் செய்யப்பட்டு 2005-ம் எண் அறையில் காத்திருப்பார். அங்கு அவருடன் இளவரசியின் வாரிசுகள் கிருஷ்ணப்பிரியா, விவேக், ஷகிலா ஆகியோர் மட்டும் உடனிருப்பார்கள். சில சமயம், தினகரனும், அவரது மனைவி அனுராதா, திவாகரன் மகன் ஜெயானந்த் ஆகியோரும் இருப்பார்கள்.  அவர்களைத் தவிர கட்சிக்காரர்கள் யாருக்கும் அனுமதியில்லை. நடராசனைப் பார்த்துவிட்டு, டாக்டர்களுடன் நடராசன் உடல்நிலை பற்றிப் பேசிவிட்டு திரும்புவதற்கு மதியம் 2 மணிக்கு மேல் ஆகிவிடும். முதல்நாள் மருத்துவமனைக்குச் சென்ற சசிகலாவிடம், நடராசனின் மருத்துவ விவரங்களை தெரிவித்த டாக்டர் டீம், பதப்படுத்தி வைத்திருந்த நடராசனின் கல்லீரலைக் காண்பித்துள்ளது. அப்போது அதுபற்றி விளக்கிய டாக்டர் டீம், “இது ரோசப்பூ கலரில் இருக்க வேண்டும். ஆனால், சாருக்குக் கருகிவிட்டது” என்று சொல்லியிருக்கின்றனர். அதைக் கவனமுடன் கேட்ட சசிகலா, நடராசனின் உடல்நிலை பற்றிய மற்ற விவரங்களையும் கேட்டுள்ளார். இப்படி மருத்துவமனை விசிட் முடிய மதியம் காலை 11 மணி முதல் மதியம் 2.30 மணி வரை ஆகிவிடும். அதன்பிறகு வீட்டுக்கு வந்தால் வெறும் தயிர் சாதம் மட்டும்தான் உணவு. பிறகு, உறவினர்களுடன் சந்திப்பு. அதன்பிறகு செய்திகளைப் பார்ப்பதும், மாலை நாளிதழ்களைப் படிப்பதும், மீண்டும் உறவினர்களைச் சந்திப்பதும்தான் வாடிக்கை. இரவு உணவு இரண்டு சப்பாத்திகள் மட்டும். 

பரப்பான தி.நகர்... காலியான கோட்டை...

சசிகலா வந்த 5 நாள்களும் அவர் தங்கியிருந்த தி.நகர் ஹபிபுல்லா சாலை பரபரப்பானது. ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் முதல்நாளே ஆஜராகிவிட்டார். சசிகலாவின் உதவியாளராக இருந்த கார்த்திக்கேயனும் ஆஜராகிவிட்டார். அதுபோல, பல அ.தி.மு.க-வினர், தினகரன் ஆதரவாளர்கள் என அந்தத் தெரு பரபரப்பானது. ஆனால், அதே நேரத்தில் ஆட்சி நடக்கும் தலைமைச் செயலகம் வெறிச்சோடியது. எடப்பாடி பழனிசாமி அணியும், பன்னீர் செல்வம் ஆதரவாளர்களும் கொஞ்சம் ஆடிப்போய்த்தான் இருந்தனர். முதல்வர் முதல் அமைச்சர்கள்வரை சென்னையைக் காலி செய்துவிட்டு, சொந்த ஊர்களுக்கு ஓடிப்போய்விட்டனர். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா, டெங்கு விழிப்புஉணர்வு முகாம் என்று காரணம் சொல்லிவிட்டு தங்களின் ஜாகையை மாற்றிக்கொண்டனர். அதுபோல, அமைச்சர்கள் அனைவருடைய செல்போனும் அணைத்து வைக்கப்பட்டது. ஆனால், சசிகலா தரப்பிலிருந்து யாரும் அவர்களைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்யக்கூட இல்லை. அதுபற்றி பேச்சு வந்தபோது, “நமக்கு விசுவாசமானவர்கள் யார் என்று நமக்குத் தெரியும். அவர்களிடம் நாம் இப்போது பேசி என்ன ஆகப்போகிறது. அதுபோல, நமக்குத் துரோகம் செய்பவர்கள் யார் என்பதும் நமக்குத் தெரியும்! அவர்களிடம் சின்னம்மா பேசுவதற்கு என்ன இருக்கிறது?” என விளக்கம் சொன்னார்கள். சென்னை தி.நகரிலுள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியாவின் வீட்டை உளவுத்துறை போலீஸ் நெருப்பு வளையம் போட்டுக் கண்காணித்தது. குளோபல் மருத்துவமனையும் உளவுத்துறையின் கண்காணிப்புக்குக் கொண்டு வரப்பட்டது. அதோடு இந்த இரண்டு இடங்களிலும் உளவுத்துறை ரகசிய கேமராக்களையும் பொருத்தியிருந்தது. ஆனால், அவர்கள் எதிர்பார்த்தமாதிரி அல்லது எடப்பாடி பழனிசாமி சந்தேகப்பட்டதுமாதிரி யாரும் சசிகலாவைச் சந்திக்கவில்லை; தேவையற்ற சட்டம்-ஒழுங்குப் பிரச்னைகள் எதுவும் ஏற்படவில்லை. அதனால், போலீஸுக்கும் நிம்மதி. எந்தச் சர்ச்சையும் இல்லாமல், பரோல் நாள்களை அமைதியாகக் கழித்துவிட்டு சசிகலா சிறைக்குச் சென்றதில் நிம்மதியடைந்த போலீஸ், சசிகலா குடும்பத்துக்கு அனுப்பிய வாட்ஸ்-அப் மெசேஜ், ‘நன்றி!’ என்பது.