Published:Updated:

46 வது ஆண்டு தினத்தில் ஆட்டம் காணும் அ.தி.மு.க-வின் ஆணிவேர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
46 வது ஆண்டு தினத்தில் ஆட்டம் காணும் அ.தி.மு.க-வின் ஆணிவேர்!
46 வது ஆண்டு தினத்தில் ஆட்டம் காணும் அ.தி.மு.க-வின் ஆணிவேர்!

46 வது ஆண்டு தினத்தில் ஆட்டம் காணும் அ.தி.மு.க-வின் ஆணிவேர்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அண்ணா தி.மு.க... தமிழ்த் திரைப்படத் துறையில் தனக்கென தனி பாணியை அமைத்து, முன்னணி நடிகராகத் திகழ்ந்த மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் 1972 அக்டோபரில் இதே நாளில்தான் இந்த மாபெரும் இயக்கத்தை உருவாக்கினார்.

அ.தி.மு.க தொடங்கி ஆறு மாதத்துக்குள்ளாகவே திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆருக்கு முதல் வெற்றியை மக்கள் அளித்தனர். அடுத்து 1977-ல் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க அமோக வெற்றிபெற்று முதல்வர் பதவி ஏற்றார் எம்.ஜி.ஆர். திரைப்படத் துறையில் தனி பாணியை வகுத்துக் கொண்டதுபோலவே, கருணாநிதி தலைமையிலான தி.மு.க-விடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றிய எம்.ஜி.ஆர், தான் மறையும்வரை முதல்வராகவே இருந்து மறைந்தார். 1987-ம் ஆண்டு டிசம்பர் மாதம்வரை தொடர்ந்து மூன்று முறை அ.தி.மு.க வெற்றிபெற்று தமிழகத்தில் ஆட்சி செய்தது. 

எம்.ஜி.ஆர். மறைந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அவரால் தோற்றுவிக்கப்பட்ட அ.தி.மு.க தற்போது இரண்டு அணிகளாகப் பிரிந்து கிடக்கின்றன.

எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர், இரண்டாகப் பிளவுபட்ட அ.தி.மு.க, ஜானகி தலைமையிலான அணிக்கு மக்களிடம் செல்வாக்கு இல்லை என்று தெரிந்தது, அவரே அரசியலை விட்டு ஒதுங்கிக் கொள்வதாக அறிவித்தார். அ.தி.மு.க-வில் கொள்கை பரப்பு செயலாளராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்த ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. ஒன்றுபட்டது. 1991-ல் ஆட்சியைப் பிடித்த ஜெயலலிதா, முதல் ஐந்து ஆண்டுகளில் மேற்கொண்ட அணுகுமுறை, வளர்ப்பு மகன் சுதாகரனின் ஆடம்பரத் திருமணம் போன்ற பல்வேறு செயல்பாடுகளால் 1996-ல் படுதோல்வி அடைந்தது. தி.மு.க. ஆட்சியைப் பிடித்து கருணாநிதி மீண்டும் முதல்வரானார். அதுவரை தொடர்ந்து மூன்றுமுறை தொடர்ந்து ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. அதன் பின்னர் மாறிமாறி ஆட்சியில் இருந்தது. 2001-ல் அ.தி.மு.க, 2006-ல் தி.மு.க. மீண்டும் 2011-ல் அ.தி.மு.க என்று கருணாநிதியும், ஜெயலலிதாவும் அடுத்தடுத்து முதல்வராக இருந்தனர். 

இந்நிலையில்தான் 2016-ம் ஆண்டில் அ.தி.மு.க. தனித்து நின்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. ஆனால், இந்தமுறை முழுமையாக ஐந்து ஆண்டுகாலம் ஆட்சி செய்வதற்குத்தான் ஜெயலலிதா உயிரோடு இல்லை. 

எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர், முடக்கப்பட்ட அ.தி.மு.க சின்னமான இரட்டை இலையை 1989-ம் ஆண்டில் தேர்தல் ஆணையத்திடம் இருந்து மீட்டு, கட்சியை சுமார் 30 ஆண்டுகள் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தார் ஜெயலலிதா. தனி ஒருவரின் தலைமைக்குக் கட்டுப்பட்டு செயல்பட்டதாலோ என்னவோ, அடுத்த தலைமையை ஜெயலலிதா அடையாளம் காட்டாமலேயே மரணம் அடைந்துவிட்டார். ஜெயலலிதாவின் மரணம் பற்றிய சர்ச்சை ஒருபுறம் இருந்தாலும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தனி அணியாக அ.தி.மு.க பிரிந்தபோது, எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்றார். ஆனால், அதன் பிறகான அரசியல் சூழல்களில் ஓ.பி.எஸ்ஸும், எடப்பாடியும் ஒரே அணியில் இணைந்து, சசிகலா குடும்பத்தினரை ஓரங்கட்டத் தொடங்கினர். இதையடுத்து, சசிகலாவின் அக்காள் மகனும், அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளருமான தினகரனை ஆதரித்து 19 எம்.எல்.ஏ-க்கள் தமிழக பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவைச் சந்தித்து, எடப்பாடி தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். 

தற்போது, மீண்டும் முடக்கப்பட்டுள்ள இரட்டை இலைச் சின்னத்தை இரு அணியினரும் பெற முயற்சி மேற்கொண்டுள்ளனர். ஏற்கெனவே சசிகலாவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த எடப்பாடி தரப்பு, தற்போது அதை மாற்றி அளித்துள்ளது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெறக்கூடும் என்று தெரிகிறது.

இதையடுத்து, ஆர்.கே.நகர் தேர்தலில் இரட்டை இலைச் சின்னத்தைப் பெற்று, சசிகலா தரப்பினர் இல்லாத அ.தி.மு.க.-வை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ். சார்பில் தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக, தேர்தல் ஆணையம் இன்னமும் முடிவெடுக்கவில்லை. 

அ.தி.மு.க. ஏற்கெனவே பிளவுபட்டபோது, ஜெயலலிதா தலைமைக்கு கட்சியில் பரவலாக செல்வாக்கு உருவாகி இருந்தது. எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்தபோதே தனக்கென ஒரு கூட்டத்தை, மக்கள் ஆதரவைப் பெற்றிருந்தார் ஜெயலலிதா. மேலும் எம்.ஜி.ஆருடன் பல திரைப்படங்களில் ஜோடியாக நடித்து, சாமான்ய மக்களிடம் செல்வாக்கு பெற்றிருந்தது, அவர் தலைமைப் பதவிக்கு வர கைகொடுத்தது. 

ஆனால், ஓ.பன்னீர்செல்வமோ, எடப்பாடி பழனிசாமியோ அல்லது தினகரனோ, ஜெயலலிதா இருந்தவரை மக்கள் மத்தியில் செல்வாக்கை பெற்றிருக்கவில்லை. ஜெயலலிதா என்ற ஒரு தனி ஆளுமைதான் அ.தி.மு.க-வின் அடையாளமாகப் பார்க்கப்பட்டது. ஜெயலலிதாவின் தோழி என்ற அடிப்படையிலும், அவருடன் உதவியாக உள்ளார் என்ற ரீதியிலுமே சசிகலாவை மக்கள் பார்த்து வந்துள்ளனர். எந்தவொரு அதிகாரப் பதவியிலும் சசிகலா இருந்ததில்லை.

ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை, அ.தி.மு.க தோற்றுவிக்கப்பட்ட நாளன்று, கட்சித் தலைமை அலுவலகத்துக்கு வந்து, எம்.ஜி.ஆரின் உருவப்படத்துக்கு மாலை அணிவிப்பதுடன், தொண்டர்களுக்கு மடல் எழுதி, கட்சியின் முக்கியத்துவத்தை தொண்டர்களுக்கு உணர்த்துவார். 

எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அ.தி.மு.க. என்ற ஆலமரம் தற்போது அதன் வேர்களையும், விழுதுகளையும் இழந்துவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதிலும், எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இந்த நேரத்தில், அ.தி.மு.க. ஆட்டம் கண்டிருப்பது, உண்மையான எம்.ஜி.ஆர் தொண்டர்களை, பக்தர்களை கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது. அ.தி.மு.க தோற்றுவிக்கப்பட்டு 45 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், மூன்று அணிகளாகச் சிதறுண்டு போய் கிடக்கிறது. இனி இந்த ஆலமரத்துக்கு தலைமை தாங்கப் போவது யார் என்ற கேள்வி சாமான்யத் தொண்டர்களிடத்தும், நடுநிலையான வாக்காளர்களிடத்தும் எழுந்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆரும் சரி; ஜெயலலிதாவும் சரி, மத்தியில் ஆட்சியில் இருந்த அரசுகளிடம் ஒருபோதும் சரணாகதி அடைந்தது கிடையாது. ஆனால், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், அ.தி.மு.க. அணிகள் இணைப்பு உள்பட பல்வேறு நிகழ்வுகளும் மத்திய அரசின் கண்ணசைவிலேயே நடக்கின்றன. துணை முதல்வராக இருக்கும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டெல்லி சென்று பிரதமரைச் சந்திக்கிறார். ஆனால், தமிழகத்துக்கான நிலக்கரியை கேட்டுப் பெறுவதாகக் கூறுகிறார். உள்கட்சிப் பிரச்னையை மத்திய அரசு தீர்த்து வைக்கும் நிலைக்கு எம்.ஜி.ஆர் தொடங்கிய அ.தி.மு.க. தள்ளப்பட்டிருப்பது அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ள அவலம் என்றே கருதலாம். 

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்ற இரு ஆளுமைகள் கட்டிக்காத்த அ.தி.மு.க-வுக்கு  தனித்திறமையும், டெல்லியில் இருந்து இங்கு வந்து தங்களை சந்தித்துப் பேசக்கூடிய வலிமையும் கொண்ட தலைவர் ஒருவர் இனி கிடைப்பது அரிதான விஷயமே... அப்படி நடந்தால் அ.தி.மு.க-வின் சாமான்யத் தொண்டர்கள் மகிழ்ச்சியடைவர். 

“ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது...”, “அம்மாவின் ஆன்மா என்னை உந்தித் தள்ளியது”, “அ.தி.மு.க.-வில் தர்மயுத்தம்”, “ஜெயலலிதாவின் ஆட்சியை சிறப்பாக நடத்தி வருகிறோம்”, என்றெல்லாம் தெரிவித்துவரும் தற்போதைய ஆட்சியாளர்கள், ஜெயலலிதா வளர்த்தெடுத்த அ.தி.மு.க-வை, அவர் கூறியதுபோன்று இன்னும் நூறு ஆண்டுகள் செயல்பாட்டுடன் இருக்க உண்மையிலேயே விரும்புவார்கள் என்றால், தன்னிச்சையாக, செயல்பட வேண்டும். மத்திய அரசுக்கு அடிபணிந்து, ‘ரெய்டு'-களுக்குப் பயந்து அ.தி.மு.க-வை அடகுவைக்காமல் இருக்க வேண்டும். எதிர்காலத் தலைமுறைக்கு அவர்கள் செய்யும் கைம்மாறு அதுவே...!

அ.தி.மு.க எனும் ஆலமரத்தின் ஆணிவேர் அசையாமல், விழுதுகள் விழாமல் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை அனைவரும் சேர்ந்து எடுக்கட்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு