Published:Updated:

மிஸ்டர் கழுகு: கலெக்டர் கார் ஓட்டியது யார்..?

மிஸ்டர் கழுகு: கலெக்டர் கார் ஓட்டியது யார்..?

பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு: கலெக்டர் கார் ஓட்டியது யார்..?
மிஸ்டர் கழுகு: கலெக்டர் கார் ஓட்டியது யார்..?

''வேளாண் பொறியாளர் முத்துக்​குமாரசாமியின் மரணத்துக்கு காரணமானவர்கள் யார் என்பது அரசுக்கும் காவல் துறைக்கும் அப்பட்டமாகத் தெரிந்திருந்தும் அதை மூடி மறைக்க முயற்சிகள் நடப்பதாகவே அரசு ஊழியர்கள் குமுற ஆரம்பித்து உள்ளார்கள். இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் இருவர் அப்ரூவராக மாறத் திட்டமிட்டு வருவதால், அரசியல்வாதிகள் சிலருக்கு கிலி ஏற்பட்டு உள்ளது'  என்று உள்ளே நுழைந்ததும் செய்திகளைக் கொட்டினார். நாம் பொரி கடலையை எடுத்து வைத்தோம். கொறித்தபடியே தொடர்ந்தார்.

 ''முத்துக்குமாரசாமியின் மரணம் தொடர்பான சி.பி.சி.ஐ.டி விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. எஸ்.பியான அன்பு தலைமையில் நடக்கும் இந்த விசாரணை குறித்த விவரங்கள் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதில் மட்டுமே கவனமாக இருக்கிறார்கள். அதனால், இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர்களைக்கூட இதுவரையிலும் அழைத்து விசாரிக்கவில்லை. நெல்லையில் அ.தி.மு.க பிரமுகர்கள் சிலருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது!'

''என்ன சொல்கிறார்கள் நெல்லையில்?'

'' 'வேளாண்மைத் துறையில் தற்காலிக டிரைவர் பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் பணி நடக்க இருப்பதை அறிந்த உள்ளூர் கட்சிக்காரர்கள் சிலர் தங்களுக்கு வேண்டியவர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு ஆட்களை நிரப்ப திட்டமிட்டனர். இரண்டு மாவட்ட நிர்வாகிகள் தங்களுக்கு தலா இரண்டு ஸீட் என முடிவு செய்து கொண்டார்கள். மேலும் மூன்று பேர் தலா ஒரு ஸீட் கேட்டார்கள். ஆனால், சென்னையில் இருப்பவர்கள் அவர்களாக நியமிக்க நினைத்தார்கள். அதன் பிறகு இவர்களுக்குள் மோதல் வந்தது. பின்னர் சமாதானம் ஆனது.

இவர்களுக்கு பணத்தைப் பிரித்துக்​கொள்ள முடிவு செய்திருந்த நிலையில், முத்துக்குமாரசாமி எல்லோரையும் சீனியாரிட்டி அடிப்படையில் தேர்வு செய்ததால், சென்னையில் இருந்து மட்டும் அல்லாமல் இங்கே உள்ள கட்சிப் பிரமுகர்களும் அவரை அடிக்கடி கூப்பிட்டு பணம் கேட்டு நெருக்கடி கொடுத்தார்கள். கடைசியாக அவர் ரயில் முன் பாய்வதற்கு சிறிது நேரத்துக்கு முன்புகூட அந்தப் பகுதியில் வசிக்கும் கட்சிக்காரர் ஒருவரின் வீட்டில்தான் இருந்திருக்கிறார். இந்தப் பிரமுகரின் வீட்டில் வைத்து நடந்த பஞ்சாயத்தைத் திசை திருப்பவும் முயற்சி நடக்கிறது. கடைசியாக முத்துக்குமாரசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அந்த ஆளும் கட்சிப் பிரமுகரின் உதவியாளர் யதேச்சையாக படம் பிடித்து வைத்து இருக்கிறார். வீட்டில் யாரெல்லாம் இருந்தார்கள் என்பதை அவரிடம் விசாரித்தாலே, போலீஸால் கண்டுபிடித்துவிட முடியும். போலீஸுக்கும் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும், சி.பி.சி.ஐ.டி போலீஸார் அந்த நபரிடம் இதுவரை விசாரிக்கவே இல்லை’  இது அத்தனையும் ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒருவரே சொல்லும் தகவல்!''

மிஸ்டர் கழுகு: கலெக்டர் கார் ஓட்டியது யார்..?

''அப்படியா?'

''அந்தப் படம் சி.பி.சி.ஐ.டி வசம் போய்விடக் கூடாது என்பதற்காக ஆளும் கட்சி டெல்லி பிரமுகர் தலைமையில் ரகசியமாகப் பேச்சு​வார்த்தை நடந்திருக்கிறது. ஆனால், அந்த உதவியாளரோ, 'அண்ணாச்சி.. எங்கிட்ட அப்படி எந்தப் படமும் கிடையாது. யாரோ உங்ககிட்ட என்னைப் பத்தி தப்பா சொல்லிருக்காங்க’ எனச் சொல்லி மழுப்பிவிட்டாராம். இப்போது அந்த நபரை ஆளும் கட்சியினர் உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். தன் மீது சொந்தக் கட்சிக்காரர்களிடம் சந்தேகப் பார்வை ஏற்பட்டு இருப்பதைப் புரிந்துகொண்ட அந்த நபர், போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு வீட்டிலேயே முடங்கிக்கிடக்கிறார்!'

''ஏன் ஆளும் மேலிடம் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது?'

''அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுத்ததை எதிர்க் கட்சிகள் பூதாகரமாக்கி வருகின்றன. இந்த நேரத்தில் ஆளும் கட்சியினர் வரிசையாக சிக்கினால் பெரிய விவகாரமாகி விடும் என்று நினைத்துத்தான் அடக்கி வாசிக்கிறார்களாம். சைவ வேளாளர் சங்கத்தினர், சுதேசி மக்கள் இயக்கத்தினர் என்று பல அமைப்புகள் இந்த விவகாரத்துக்கு நீதி கேட்டு வருகின்றனர். 'ஒரு வழக்கு நியாயத்தின் பக்கத்தில் இருந்து திசைமாறிச் செல்வதை கண்டும் காணாமல் இருப்பது நல்ல அரசுக்கு அழகல்ல’ என நடுநிலையாளர்கள் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள்' என்று நிறுத்திய கழுகார் ஐஸ் வாட்டர் கேட்டு வாங்கிக் குடித்தார்.

''உடன்குடி டெண்டர் விவகாரத்தில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் நீண்ட விளக்கம் கொடுத்துள்ளாரே?'

''உடன்குடி அனல்மின் நிலைய டெண்டர் விவகாரம் சட்டசபையில் கடந்த வாரத்தில் பற்றிக்கொண்டது. அதனால்தான் மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், நீண்ட விளக்கம் கொடுத்துள்ளார். ஆனால், அவர்  அவசரகதியில் நிறைய தவறான தகவல்களைச் சொல்லி இருப்பதாகச் சொல்கிறார்கள்!'

''அப்படியா?'

''நத்தம் விஸ்வநாதன் தன்னுடைய உரையில், 'தி.மு.க ஆட்சியில் அறிவிக்கப்பட்ட, உடன்குடி மின்திட்டத்தை நிறைவேற்றும் பணி, பெல் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டது. 2007ல் அறிவிக்கப்பட்டு 2011 வரை அதை நிறைவேற்ற பெல் நிறுவனம் எந்தப் பணியையும் செய்யவில்லை. திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த ஒரு வருவாய் ஆய்வாளரைக்கூட தி.மு.க அரசாங்கம் நியமிக்கவில்லை. சுற்றுச்சூழல் அனுமதியைப் பெறவில்லை. நிதி ஆதாரத்தைத் திரட்டவில்லை’ என்று குற்றம்சாட்டி உள்ளார். தி.மு.க ஆட்சியில் பெல் நிறுவனமும் மின்வாரியமும் இணைந்து, 'உடன்குடி மின் கழகம்’ என்ற ஒரு புதிய அமைப்பை உருவாக்கின. மார்ச் 2011ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் சுற்றுச் சூழல் ஆய்வறிக்கையைத் தந்துள்ளது. அந்த அறிக்கை மொத்தம் 112 பக்கங்களைக் கொண்டது. அதில், அண்ணா பல்கலைக்கழகம், மிக மிகத் தெளிவாக, உடன்குடி மின் திட்டத்துக்காக 939 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் தெளிவாகச் சொல்லியிருக்கிறது. உடன்குடியில் சுற்றுச் சுவர் அமைத்து, நிலத்தை சீர் செய்யும் பணியை ஏற்றுக்கொண்டிருந்த எஸ்.ஆர்.சி. புராஜெக்ட்ஸ் நிறுவனம், 2012 மே மாதம் தனது வேலையை  முடித்து​விட்டது. இவை அனைத்தும் நத்தம் விஸ்வநாதன் பேச்சில் இல்லை!'

''தி.மு.க செய்ததை இவர் எப்படிச் சொல்வார்?'

''ஒரு வேலையும் நடக்கவில்லை, வருவாய் ஆய்வாளரைக்கூட தி.மு.க நியமிக்கவில்லை என்று பேசி உள்ளாரே அதற்குச் சொல்கிறேன். அமைச்சர் தன்னுடைய உரையில், '2012 பிப்ரவரி 24ம் தேதி புதிய உடன்குடி திட்டத்தை ஜெயலலிதா அறிவித்தார். திட்டத்துக்கான சுற்றுச்சூழல் அனுமதி 2012 டிசம்பரில் கோரப்பட்டது. அதன் பிறகு நிலம் ஒதுக்கப்பட்டு, 2013 அக்டோபரில் டெண்டர் விடப்பட்டது. டெண்டரில், 'பெல்’ மற்றும் சீன நிறுவனம் உள்பட நான்கு நிறுவனங்கள் பங்கேற்றன. இந்த நிறுவனங்களின் தகுதியை ஆய்வு செய்ய நான்கு மாதங்கள் ஆனது. சீன நிறுவனம் வெளிநாட்டு நிறுவனம் என்பதால், இந்தக் கால அவகாசம் தேவைப்பட்டது’ என்று குறிப்பிட்டுள்ளார்.  

இதில், பெல் – தமிழக மின் வாரிய கூட்டுத் திட்டத்தை ஜெயலலிதா ரத்து செய்தது உண்மை. புதிய திட்டத்தை அவர் அறிவித்ததும் உண்மை. ஆனால், டெண்டர் கோரப்பட்ட தேதி மற்றும் நாள்களின் விவரங்கள் தவறு. 2013, அக்டோபர் 14-ம் தேதி புதிய டெண்டர் கோரப்பட்டது என்று அமைச்சர் கூறுகிறார். ஆனால், அந்த டெண்டருக்கான விளம்பரம் 2013, ஏப்ரல் 7-ம் தேதி நாளிதழ்களில் வெளிவந்துள்ளன. அந்த விளம்பரத்திலேயே 24 ஏப்ரல் 2013 முதல் டெண்டர் ஆவணங்கள் விற்பனை செய்யப்படும் என்பதும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதுபோல், டெண்டர் கோரிய நிறுவனம் வெளிநாட்டு நிறுவனம் என்பதால், அதன் தகுதிகளை பரிசீலிக்க காலதாமதமானதாக அமைச்சர் கூறுகிறார். ஆனால், மின்வாரிய ஆவணங்களின்படி, 11 நவம்பர் 2013 அன்று கூடிய மின்வாரிய தொழில்நுட்பக் குழு, பெல் நிறுவனம் மற்றும் ஒரு சீன நிறுவனத்தின் டெண்டர்கள் தொழில்நுட்ப ரீதியாக தகுதியானவை என்றும் மற்ற இரண்டு சீன நிறுவனங்களின் டெண்டர்களும் தகுதியற்றவை என்றும் முடிவெடுத்துள்ளன. மின்வாரியத்தின் எந்தக் கோப்புகளிலும் அமைச்சர் சொல்வதுபோல் வெளி நாட்டு நிறுவனங்கள் என்பதால், அவற்றை பரிசீலிக்க தாமதமானது என்று குறிப்பிடப்படவில்லை!'

மிஸ்டர் கழுகு: கலெக்டர் கார் ஓட்டியது யார்..?

''ஓஹோ!'

''இறுதியில், 'பெல்’ மற்றும் சீன நிறுவனங்களின் டெண்டர்கள் ஏற்கப்பட்டன. இந்த நிலையில், 'பெல்’ நிறுவனத்துக்கு, ஏற்கெனவே ஒப்பந்தம் அளிக்கப்பட்டு, ரத்து செய்யப்பட்டு உள்ளது. எனவே, அந்த நிறுவனத்தைக் கறுப்புப்பட்டியலில் சேர்க்க வேண்டும் என, சீன நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கால் டெண்டரை இறுதி செய்து, நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. சீன நிறுவனம் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்!'

''தள்ளுபடியா?'

''அதுதான் இல்லை!  பெல் நிறுவனத்துக்கு எதிராக சீன நிறுவனம் வழக்குத் தொடுத்திருந்தது உண்மை. ஆனால், அப்போது போடப்பட்ட அந்த வழக்கு உடன்குடி அனல் மின்திட்டத்துக்காக அல்ல. அது  எண்ணூர் அனல்மின் நிலைய டெண்டர் குளறுபடி காரணமாக தொடரப்பட்ட வழக்கு. அந்த வழக்கின் எண் : கீறி 27529/2014. அதில், தமிழக ஒப்பந்தப்புள்ளிகள் சட்டத்தின்படி, ஏற்கெனவே அளித்த ஒப்பந்தங்களைச் சரி வர நிறைவேற்றாமல் தாமதம் செய்யும் நிறுவனத்தின் விலைப்​புள்ளியை நிராகரிக்க வேண்டும் என்ற விதியை காரணம் காட்டி எண்ணூர் அனல் மின்நிலைய டெண்டரில், பெல் நிறுவனத்தின் விலைப்புள்ளி நிராகரிக்கப்பட வேண்டும் என்றே கோரியிருந்தது. அதற்கும் உடன்குடி டெண்டருக்கும் எந்தவகையிலும் சம்பந்தம் இல்லை. அந்த விவகாரம் வேறு. இந்த விவகாரம் வேறு!'

''வழக்கு என்றதும் அனைத்தையும் ஒரே வழக்குதான் என்று அமைச்சருக்குச் சொல்லியிருப்பார்கள்!'

மிஸ்டர் கழுகு: கலெக்டர் கார் ஓட்டியது யார்..?

''மேலும், அந்த வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது என்று அமைச்சர் சொல்வது எப்படி என்றே தெரியவில்லை. ஏனென்றால், அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படவில்லை. இன்னும் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீதிபதி ராமசுப்ரமணியம் முன்பு விசாரணை நடைபெற்று, தற்போது அதன் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், அமைச்சர் தன்னுடைய உரையில், 'பெல் மற்றும் சீன நிறுவனத்தின் திட்டம் மற்றும் விலைப்புள்ளிகளைப் பரிசீலித்து அறிக்கை அளிக்க ஜெர்மனி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை ஆய்வு செய்த அந்த நிறுவனம், இரண்டிலும் குறைகள் உள்ளன. அவற்றை சீர் செய்த பிறகு, டெண்டரை ஏற்கும் முடிவை, தமிழக அரசின் மின்வாரியமே முடிவு செய்துகொள்ளட்டும் என்றும் அந்த நிறுவனம் ஆலோசனை சொன்னது என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஜெர்மன் நிறுவனம் அளித்த அறிக்கையில், 'இரண்டு நிறுவனங்களின் டெண்டர்களிலும் குறை உள்ளது. ஆனால், சீன நிறுவனத்தின் விலைப்புள்ளியே குறைவானது. டெண்டரை வழங்குவதற்கு பெல் நிறுவனத்தைவிட சீன நிறுவனத்துக்கே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்’ என்றும் குறிப்பிட்டு இருந்தது. அதை அமைச்சர் தன்னுடைய உரையில் குறிப்பிடவில்லை. இப்படித்தான் தப்பும் தவறுமாக அமைச்சரின் விளக்க உரை அமைந்து இருந்தது. அமைச்சர் சட்டசபையில் பேசியபோது, 'அறியாமல் தவறான தகவல்களைப் பதிவு செய்துவிட்டாரா? அல்லது அவருக்கு வசதியாக அவற்றை மறைத்துவிட்டு விளக்கமளித்தாரா’ எனத் தெரியவில்லை!'

''வேலூர் மாவட்ட கலெக்டர் விவகாரமும் சட்டமன்றத்தில் எதிரொலித்துள்ளதே?'

''வேலூர் மாவட்ட கலெக்டர் நந்தகோபாலின் வாகனம் மோதி ராஜ்குமார் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே இறந்துபோனார். உதயசூரியன் என்பவர் உயிருக்குப் போராடிக்கொண்டு இருக்கிறார். இது சம்பந்தமாக சட்டமன்றம் வரை விவகாரம் போனது. 'இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரும் மது அருந்தி இருந்தார்கள்’ என்று முதலமைச்சர் பன்னீர்செல்வம் சொல்லியிருக்கிறார்!'

''உண்மை என்ன?'

மிஸ்டர் கழுகு: கலெக்டர் கார் ஓட்டியது யார்..?

''சம்பவத்தைத் தொடர்ந்து அந்த இடத்தில் நடந்துகொண்ட முறைதான் பலத்த சந்தேகத்தைக் கிளப்பி உள்ளது. கடந்த 21ம் தேதி அன்று இரவில் சுமார் 9.30 மணி அளவில் வேலூர் கலெக்டரின் வாகனம் மோதி இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் நடந்த ஒரு மணிநேரத்துக்குள் அங்கிருந்த இரண்டு சக்கர வாகனத்தையும் கலெக்டரின் காரையும் அவசர அவசரமாக அகற்றி இருக்கிறார்கள். 11 மணிக்கு வந்து பார்த்தால் அப்படி ஒரு சம்பவமே அங்கு நடந்தது தெரியாதது மாதிரி மறைக்கப்பட்டுள்ளது. கலெக்டரின் காரை, அவரது டிரைவரே ஓட்டி வந்தார் (!) என்று நம்புவோம். தனது வாகனம் மோதி இரண்டு பேர் உயிருக்குப் போராடிக்கொண்டு இருந்தபோது அந்த இடத்தில் இருந்து தப்பிக்க நினைத்திருக்கிறார்கள். சுற்றி இருந்தவர்கள் கூடிவிட்டார்கள். காரில் வந்தவர் கலெக்டர் என்றதும் மக்கள் கொஞ்சம் பதுங்கினார்கள். அதற்குள் போலீஸ் வந்துவிட்டது. அவர்களைப் பாதுகாப்பாக அனுப்பி வைத்துவிட்டார்கள். அன்றைய தினம் வேலூரில் இருந்த முன்னாள் அமைச்சர் துரைமுருகன் இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு இரவு 11 மணிக்கு அந்த இடத்துக்குப் போயுள்ளார். சுத்தமாக இருந்துள்ளது அந்த இடம். விபத்து நடந்ததற்கான அறிகுறியே இல்லையாம். தடயங்களை மறைக்க வேண்டும் என்று நினைப்பவர் எப்படி நடந்து கொள்வாரோ அப்படி நடந்துள்ளார்கள். மறுநாள் துரைமுருகன் சாலைமறியலில் இறங்கி உள்ளார்!'

''ம்!'

''கூட்டம் கூடிவிட்டது. மறுநாள் மாலை எஸ்.பி வந்துள்ளார். 'வேண்டுமென்றே செய்யப்பட்டதாக நான் சொல்லவில்லை. எதிர்பாராமல் நடந்த விபத்தாகக்கூட இருக்கட்டும். என்ன வழக்கு போட்டுள்ளீர்கள்? யாரை கைது செய்துள்ளீர்கள்? வண்டியை ஓட்டியது யார்?’ என்று துரைமுருகன் கேட்க... 'நாங்கள் விசாரணை செய்து வருகிறோம்’ என்று சொல்லியிருக்கிறார் எஸ்.பி. உடனே அந்த பைக்கை ரிமூவ் செய்தது ஏன் என்றும் இவர் கேட்டுள்ளார். அதன் பிறகு தலைமைச் செயலாளர் ஞானதேசிகனிடமும் பேசி உள்ளார். 'எனக்கு வேறு மாதிரி சொல்கிறார்கள்’ என்றாராம் அவர். 'நான் உங்களுக்காக கோயிலுக்கு வந்துகூட சத்தியம் செய்கிறேன், நான் சொல்வது உண்மை’ என்றாராம் இவர். இரண்டு நாட்கள் கழித்து மருத்துவமனைக்கு வந்து பார்த்துச் சென்றுள்ளார் கலெக்டர். அந்த டிரைவரை ஏதோ சொல்லச் சொல்கிறார்கள். 'இது என்னுடைய வாழ்க்கைப் பிரச்னை, யாருக்காகவோ நான் என் வாழ்க்கையைத் தொலைக்க முடியாது’ என்கிறாராம் அவர். விபத்து நடந்தது உண்மை, ஒருவர் இறந்தது உண்மை, இன்னொருவர் உயிருக்குப் போராடுவது உண்மை, யாருடைய வாகனம் என்று போலீஸுக்குத் தெரியும். யார் யார் வந்தது என்பதும் தெரியும். ஆனால், எதுவுமே நடக்கவில்லை!' என்றபடி பறந்தார் கழுகார்!

படங்கள்: ச.வெங்கடேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு