Published:Updated:

‘6 எம்.எல்.ஏ.க்களுக்குத் தரப்பட்டது இரட்டை ஆயுள் போன்றது!”

‘6 எம்.எல்.ஏ.க்களுக்குத் தரப்பட்டது இரட்டை ஆயுள் போன்றது!”

பிரீமியம் ஸ்டோரி

ரிமை   மீறல்குழு வழங்கிய தண்டனை தே.மு.தி.கவினரை மட்டுமல்ல; அனைத்துக் கட்சிகளையும்  அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

‘6 எம்.எல்.ஏ.க்களுக்குத் தரப்பட்டது இரட்டை ஆயுள் போன்றது!”

 தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில்

அ.தி.மு.க எம்.எல்.ஏ கடம்பூர் ராஜு பேசியபோது, எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த்தை விமர்சித்துப் பேசினார். அதன்பின் நடந்த விவாதத்தில் பேரவைத் தலைவரை சூழ்ந்துகொண்டு கோஷமிட்டனர் தே.மு.தி.க எம்.எல்.ஏக்கள். அவைக் காவலர் தாக்கப்பட்டதாக போலீஸ் நிலையத்தில் புகார் தரப்பட்டது. இந்தப் பிரச்னையில் 19 உறுப்பினர்களை பேரவைக் கூட்டத் தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்து பேரவைத் தலைவர் உத்தரவிட்டார்.

இந்தப் பிரச்னையை அவை உரிமை மீறல் குழு விசாரித்தது. இறுதியாக தே.மு.தி.க எம்.எல்.ஏக்களான வி.சி.சந்திரகுமார், ஆர்.மோகன்ராஜ், எல்.வெங்கடேசன்,

எஸ்.ஆர்.பார்த்திபன், சி.ஹெச்.சேகர், கே.தினகரன் ஆகிய ஆறு பேரை அடுத்த கூட்டத்தொடர் தொடங்கி 10 நாட்களுக்கு அவை நடவடிக்கைகளில் இருந்து நீக்கிவைக்கப்படுவதாகப் பேரவைத் தலைவர் தனபால் அறிவித்தார். அதை எதிர்க் கட்சிகள் கடுமையாக எதிர்த்துள்ளன.

''அடுத்த கூட்டத்தொடர், குளிர்காலக் கூட்டத்தொடர் என்பதால் அதிகபட்சம் 5 நாட்கள் மட்டுமே நடைபெறும். அதன்பின், அடுத்த ஆண்டு கவர்னர் உரை மீதான விவாதம் மற்றும் இடைக்கால பட்ஜெட் தாக்கல் நடைபெறும். இவையும் ஓரிரு நாட்களே நடைபெறும். பேரவைத் தலைவர் அறிவிப்பின்படி பார்த்தால், அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் வரை இந்த 6 பேரும் சட்டமன்றத்துக்குள் வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது' என்று தே.மு.தி.கவினர் சொல்லி வருகிறார்கள்.

தண்டனை விதிக்கப்பட்டுள்ள தே.மு.தி.கவின் மேட்டூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேட்டூர் எஸ்.ஆர்.பார்த்திபனிடம் பேசினோம். 'சட்டப் பேரவைத் தலைவரும் சட்டசபைச் செயலாளரும் ஜெயலலிதாவை தகுதிநீக்கம் செய்தது குறித்து வெளியிட்ட  அறிவிக்கையில், அவர்கள் தெரிவித்த கருத்துகளை சட்டசபையில் எடுத்துக் கூறியதற்காக  இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளனர்.  ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டு, பொதுமக்களின் பிரச்னைகளுக்காக சட்டமன்றத்தில் குரல் எழுப்புகிறோம். அதற்காக,  இடைநீக்கம் செய்துள்ளனர். இதற்கு தமிழக சட்டசபையில் அனைத்து எதிர்க் கட்சிகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

‘6 எம்.எல்.ஏ.க்களுக்குத் தரப்பட்டது இரட்டை ஆயுள் போன்றது!”

இந்தக் கடும் சஸ்பெண்ட்  நடவடிக்கை ஜனநாயக நாட்டில் மக்கள் பிரதிநிதிகளுக்கு நேர்ந்துள்ள அவமானம். அவர்கள் மட்டுமே பேசவேண்டும். அவர்களை ஆதரித்து மட்டுமே பேச வேண்டும். யாரும் எதிர்த்துப் பேசக் கூடாது என்ற போக்கில் அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். சபாநாயகர் வெளியேறச் சொன்னதும் நாங்கள் அமைதியாக வெளியேறினோம். இதை அவர்கள் தொலைக்காட்சியான ஜெயா டி.வியில்கூட காட்டினார்கள். நாங்கள் எழுப்பிய, எழுப்புகிற பொதுமக்களின் பிரச்னைகளுக்கு எந்த அமைச்சராவது தெளிவாக, ஆதாரபூர்வமாக பதிலளித்தால் மேட்டூர் அணையில் இருந்து குதிக்க நான் தயார்' என்று கொந்தளித்தார்.

தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பனிடம் பேசினோம். 'உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு எல்லாவிதமான உரிமைகளும் உண்டு. ஆனால், அந்தத் தண்டனை நியாயமாக இருக்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகளை இவ்வாறு, சட்டசபைக்கு வரவிடாமல் தடுப்பது தவறு. அந்தத் தொகுதி மக்களின் கோரிக்கைகளை யார் மன்றத்தில் வைப்பார்கள்? இந்தத் தண்டனை, மிக அதிகம் என்றே நினைக்கிறேன். சபைக்குள் வரக் கூடாது என்று உத்தரவிட சபாநாயகருக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால்,

எம்.எல்.ஏக்களுக்கு வழங்கப்படும் சம்பளம், தங்கும் விடுதி போன்ற சலுகைகளைப் பறிக்க முடியாது' என்று சொன்னார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழு தலைவர் அ.செளந்திரராஜன், 'இது, இரட்டை ஆயுள்  தண்டனை போன்றது. அதற்காக அந்த உறுப்பினர்களின் செயலை நியாயப்படுத்தவில்லை. தவறு என்றால் தண்டிக்கலாம். அது எல்லையை மீறக் கூடாது. இப்படி ஒரேயடியாக தண்டனை விதிப்பது எந்த வகையில் நியாயம்? சம்பளம், குடியிருப்பு, அலுவலகம் எல்லாம் பறிக்கப்படும் அளவுக்கு அவர்களைத் துன்புறுத்தி

அ.தி.மு.க அரசு மகிழ்ச்சி அடைகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை மெஜாரிட்டி என்ற அளவுகோலை வைத்துக்கொண்டு, 'இனி நீ எம்.எல்.ஏ இல்லை’ என்று எப்படி சொல்ல முடியும்? தமிழக அரசு, இந்தத் தடையை கண்டிப்பாக நீக்கிக்கொள்ள வேண்டும்' என்று வேண்டுகோள் விடுத்தார்.

மக்கள் பிரதிநிதிகளின் உரிமைகளை முற்றிலும் முடக்குவது சரியா?

எஸ்.முத்துகிருஷ்ணன், மா.அ.மோகன் பிரபாகரன்

படம்: சு.குமரேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு