Published:Updated:

இன்னும் எவ்வளவு பார்க்கணுமோ? கலங்கிய கருணாநிதி

நடுங்க வைக்கும் நான்காவது அஸ்திர்ம்!

பிரீமியம் ஸ்டோரி

டெல்லியில் தனிப்பெரும்பான்மையுடன் பி.ஜே.பி அரசாங்கம் அமைந்தது முதல், தமிழகத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதியின் குடும்பத்தினர் மீதான வழக்குகளின் பிடி இறுகிக்கொண்டே போகிறது.  

இன்னும் எவ்வளவு பார்க்கணுமோ? கலங்கிய கருணாநிதி

2ஜி அலைக்கற்றை வழக்கில் கனிமொழி, ராசா உள்ளிட்ட 17 பேர் கைதான வழக்கு காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்டது. அந்த வழக்கில் தயாளு அம்மாள் சாட்சி மட்டும்தான். ஆனால், தயாளு அம்மாளையும் குற்றவாளியாக சேர்த்தது, கலைஞர் தொலைக்காட்சிக்கு முறைகேடாக 200 கோடி ரூபாய் பணம் வந்த வழக்கில். அதில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. அதன் பிறகு விவகாரம் மாறன் சகோதரர்கள் மீது திரும்பியது.  பி.எஸ்.என்.எல் தொலைபேசி இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்திய விவகாரத்தில் சன் டி.வி ஊழியர்கள் கைது செய்யப்பட்டார்கள். இந்த வரிசையில் நான்காவது அஸ்திரமாக  ஏர்செல் மேக்ஸிஸ் விவகாரத்தில், சொத்து முடக்கம் என்கிற அளவுக்கு மத்திய அரசின் பிடி இறுக ஆரம்பித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, ஜெயலலிதாவை போயஸ் தோட்டத்தில் வைத்து சந்தித்துவிட்டுப்போன பிறகு, கருணாநிதி குடும்பத்துக்கு எதிரான இந்த நடவடிக்கைகளின் வேகம் கூடி வருகிறதாகவும் சொல்லப்படுகிறது.  இந்த வரிசையில் மாறன் சகோதரர்களுக்குச்  சொந்தமான 742 கோடி ரூபாய் சொத்துகள் (பணம், மனைகள், கட்டடங்கள்) முடக்கிவைக்கப்பட்டுள்ளன.  

புகார் கிளப்பிய சிவசங்கரன்!

மத்திய அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது அவருக்கும் ஏர்செல் நிறுவன உரிமையாளர் சிவசங்கரனுக்கும் ஏற்பட்ட மோதல்தான் விவகாரத்தின் அடிப்படை. ''சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரன், 1995ம் ஆண்டு தொலைத்தொடர்புத் துறையில் காலடி எடுத்து வைத்தார். அவர் தொடங்கியதுதான் ஏர்செல் நிறுவனம். அவர் தனது கம்பெனியின் சார்பாக 14 சர்க்கிள்களில் செயல்பட அனுமதி கேட்டு மத்திய தொலைத்தொடர்புத் துறைக்கு கடந்த 2005ம் ஆண்டு விண்ணப்பம் அளித்தார். தயாநிதிமாறன், சிவசங்கரன் கொடுத்த விண்ணப்பங்களின் மீது எந்த முடிவும் எடுக்கவில்லை. காலதாமதமாகிக்கொண்டே போனது. அதன் பிறகு, திடீரென்று ஒருநாள், ஏர்செல் நிறுவனத்தின் 74 சதவிகிதப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனம் வாங்கியது. அதுவரை கிடப்பில் இருந்த விண்ணப்பங்கள் அனைத்துக்கும்  தொலைத்தொடர்பு அமைச்சரவையிடம் இருந்து விறுவிறுவென அனுமதி கிடைத்தது. இதன் பின்னணியில் மர்மங்கள் பல மறைந்துள்ளன' என்கிறது சி.பி.ஐ.

2011ம் ஆண்டு, திடீரென்று சிவசங்கரன் வெளிச்சத்துக்கு வந்து,  'என்னுடைய ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்கச் சொல்லி தயாநிதி மாறன் என்னை மிரட்டினார். அப்படி நான் விற்க வேண்டும் என்பதற்காகவே, அவர் எனக்கு நியாயமாக ஒதுக்க வேண்டிய உரிமங்களைக்கூட தரவில்லை. மேலும், என்னை இந்தத் தொழிலைவிட்டு ஓடிப்போய்விடுமாறும் மிரட்டினார். இதற்காக நான் கேட்ட உரிமங்கள் எதையும் தயாநிதி மாறன் கொடுக்காமல் இழுத்தடித்தார். சாதாரணக் காரணங்களைச் சொல்லி என்னுடைய விண்ணப்பங்களில் முடிவெடுக்காமல் இழுத்தடித்த அவர், மேக்ஸிஸ் நிறுவனம் எனது நிறுவனத்தை வாங்கியதும் அடுத்த சில மாதங்களில் அதற்கு அனைத்துச் சலுகைகளையும் வழங்கினார்.

என்னை மிரட்டி எனது ஏர்செல் நிறுவனத்தை மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு தயாநிதி மாறன் வாங்கிக்கொடுத்ததற்கு கைம்மாறாக, அந்த நிறுவனம் தயாநிதி மாறனுக்கு சுமார் 700 கோடி ரூபாயை லஞ்சமாகக் கொடுத்துள்ளது. அந்த லஞ்சத்தை நேரடியாகக் கொடுக்காமல், மறைமுகமாக, தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனுக்குச் சொந்தமான சன் டி.வி நிறுவனத்தில் முதலீடு என்ற பெயரில் மேக்ஸிஸ் செய்துள்ளது' என்று பரபரப்பைப் பற்ற வைத்தார். சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள வழக்குக்கு இதுவே முக்கியமான ஆதாரம்.

சி.பி.ஐ விசாரணை தொடங்கியது!

''ஏர்செல் நிறுவனத்தின் பங்குகள் மேக்ஸிஸ் நிறுவனத்துக்குக் கைமாறிய நான்கே மாதங்களில் சன் டைரக்ட் டி.வி நிறுவனத்தில், 'சவுத் ஆசியா என்டர்டெயின்மென்ட் ஹோல்டிங் லிமிடெட்’ என்ற மலேசிய கம்பெனி 543  கோடிகளை முதலீடு செய்தது தெரியவந்தது. அந்த நிறுவனமும் மேக்ஸிஸ் நிறுவன உரிமையாளர் அனந்தகிருஷ்ணனின் நிறுவனம்தான் என்பதும் தெரியவந்தது. அதன் பிறகு (அதாவது, பிப்ரவரி

2008ல் இருந்து ஜூலை 2009 வரை) 'சவுத் ஆசியா எஃப்.எம்’ என்ற நிறுவனத்தில் அனந்தகிருஷ்ணனின் மேக்ஸிஸ் குரூப்பின் துணை நிறுவனமான ஆஸ்ட்ரோ ஆல் ஆசியா நெட்வொர்க் நிறுனம் 193 கோடியை முதலீடு செய்ததும் வெளிச்சத்துக்கு வந்தது. இதற்கான ஆவணங்கள், தொலைபேசி உரையாடல்கள் உள்ளிட்ட ஆதாரங்களைக் கைப்பற்றினோம்' என்று டெல்லி சி.பி.ஐ வட்டாரங்கள் சொல்ல ஆரம்பித்தன. 2ஜி வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் ஆனது. ''2ஜி வழக்குக்கும் இந்த வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அவர்களுக்கு விசாரிக்க அதிகாரம் இல்லை’ என்று எதிர்தரப்பு தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்த நிலையில், மாறன் சகோதரர்கள் இருவரும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்கள். அவர்கள் ஜாமீன் மனு மீதான விசாரணை ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி சி.பி.ஐ நீதிமன்றத்தில் நடக்க இருக்கிறது.  

அமலாக்கத் துறை வந்தது ஏன்?

இந்த விவகாரத்தில், சிவசங்கரனின் ஏர்செல்லில் இருந்து அனந்தகிருஷ்ணனின் மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு கைமாறிய பங்குகளின் மதிப்பு மூன்றாயிரத்து 500 கோடி ரூபாய் என்று அளவிட்டுள்ளது சி.பி.ஐ. மேக்ஸிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனங்களிடம் இருந்து சன் டைரக்ட் நிறுவனத்துக்கு வந்த முதலீடுகளின் மதிப்பு 742 கோடி ரூபாய். இப்படி வெளிநாட்டில் இருந்து பல கோடி ரூபாய் முதலீடுகள் இந்தியாவுக்குள் வந்ததிலும், தொலைத்தொடர்புத் துறையில் உள்நாட்டில் செயல்பட்ட ஒரு நிறுவனத்தின் 74 சதவிகிதப் பங்குகள்  மொத்தமாக வெளிநாட்டு நிறுவனத்துக்கு விற்கப்பட்டுள்ளதிலும் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன என்றால் அதனுடைய பணப் பரிவர்த்தனைகள் எப்படி நடந்தன என்பதை அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது.  

இன்னும் எவ்வளவு பார்க்கணுமோ? கலங்கிய கருணாநிதி

தொலைத்தொடர்புத் துறையில் எந்த அந்நிய நாட்டு முதலீடும் 74 சதவிகிதத்துக்கு மேல் போகக் கூடாது. இதன்படி ஏர்செல்லில் அனந்தகிருஷ்ணனின் 'மேக்சிஸ்’ நிறுவனத்துக்கு அதிகபட்சமான 74 சதவிகிதம் போக, மீதி 26 சதவிகிதம் பங்குகளை டெக்கான் டிஜிட்டல் நெட்ஒர்க் என்கிற நிறுவனம் வாங்கி உள்ளது. இந்த டெக்கான் நிறுவனத்தில், ஆஸ்ட் ரோவின் 49 சதவிகிதப் பங்குகள் உள்ளன என்பதும் தெரியவந்துள்ளது. எனவே, மீதமுள்ள பங்குகளும் மறைமுகமாக மேக்ஸிஸ் நிறுவனத்துக்காகவே வாங்கப்பட்டு உள்ளன. இந்தப் பணங்கள்,  'பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்ட விதிமுறை’களுக்கு எதிரானது என்று சொல்லி அமலாக்கத் துறை ஒரு வழக்கைப் பதிவு செய்தது. அதன் பிறகுதான், 742 கோடி ரூபாய் சொத்துகளை முடக்கும் உத்தரவை கடந்த புதன்கிழமை அமலாக்கத் துறை பிறப்பித்தது. அதில், ஏர்செல்மேக்ஸிஸ் ஊழல் புகார் தொடர்பாக தயாநிதி மாறன், அவருடைய சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோர் மீது கூட்டுச்சதி 120பி, அரசு ஊழியர் அதிகார துஷ்பிரயோகம் செய்வது, முறைகேடான வழிகளில்  சொத்து சேர்த்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. எனவே, இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள், நிறுவனங்களின் சொத்துகள் முடக்கப்படுகின்றன என்று

குறிப்​பிட்டுள்ளது. விரைவில் அமலாக்கத் துறையின் குற்றப்பத்​திரிகையிலும் மாறன் சகோதரர்களின் பெயர் சேர்க்கப்படும் என்று டெல்லி தகவல்கள் சொல்கின்றன.

கலங்கிய கருணாநிதி!

சி.பி.ஐ மற்றும் அமலாக்கத் துறையின் நடவடிக்கைகள் கருணா​நிதி​யை கலங்க வைத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. ''ஒரே குடும்பத்தில் தயாளு, கனிமொழி, தயாநிதி, கலாநிதி, அமிர்தம் ஆகிய ஐந்து பேர் வழக்கில் சிக்கியுள்ளது தலைவரை வருத்தமடைய வைத்துள்ளது. ஏற்கெனவே 2ஜி வழக்கில் கலைஞர் டி.வி சிக்கி உள்ளது. இப்போது சன் டி.வியும் மாட்டி உள்ளது. இந்த விவகாரங்கள் சம்பந்தமாக தனது குடும்பத்தினர் நீதிமன்றம் செல்வதை கவலையுடன் தலைவர் பார்க்கிறார். 'இன்னும் என்ன மாதிரியான கஷ்டமெல்லாம் அனுபவிக்கப் போறேனோ’ என்று அவர் கலங்கினார்' என்று சொல்கிறார்கள் தி.மு.க வட்டாரத்தில்.

சி.பி.ஐ., அமலாக்கத் துறையின் நடவடிக்கைகளைப் பார்த்தால் நடவடிக்கைகள் போகப் போக வேகமாகத்தான் இருக்கும் எனத் தெரிகிறது.

ஜோ.ஸ்டாலின்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு