பிரீமியம் ஸ்டோரி

எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

மன்மோகன் சிங்..?

கழுகார் பதில்கள்

பிரதமராக இருந்த காலத்தில் கைகட்டி வாய்மூடி மெளனமாக இருந்து பல விஷயங்களைக் கண்டும் காணாமல் இருந்ததற்கான பலனை அவர் இப்போது அனுபவிக்கிறார். நிலக்கரித் துறை அவரது கட்டுப்பாட்டில் இருந்தபோது வழங்கப்பட்ட இரண்டு உரிம வழங்கல்களில் நடந்த முறைகேடுகள் சம்பந்தமாகத்தான் அவருக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. அவருக்காக நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கிறார், அவரது அமைச்சரவையில் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த வழக்கறிஞர் கபில்சிபல், ‘இது வெறும் நிர்வாக நடைமுறை, அதற்கு பிரதமரை எப்படி பொறுப்பாளர் ஆக்க முடியும்?’ என்று கேட்டுள்ளார். கோடிக்கணக்கான மதிப்புள்ள டெண்டர் வழங்கல் எப்படி சாதாரண நிர்வாக நடைமுறையாக மட்டும் இருக்க முடியும்? அத்தகைய உரிமங்கள் வழங்கும் நடைமுறை, அமைச்சரவைக் குழுவின் ஒப்புதல் இல்லாமல் தரப்பட்டிருக்க சாத்தியம் இல்லை.
இந்த நிலையில் சி.பி.ஐ நீதிமன்றம் அனுப்பிய சம்மனுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து மன்மோகன் சிங்குக்கு ஓரளவு நிம்மதியை கொடுத்துள்ளது. 
 

சம்பத்குமாரி, பொன்மலை.

முதல்வர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தது ‘நிஜ’ பட்ஜெட்டா? ‘நிழல்’ பட்ஜெட்டா?

கழுகார் பதில்கள்

நிஜம்போல் தெரியும்  நிழல் பட்ஜெட்.

எஸ்.பி.அரசு, பெரியமதியாக் கூடலூர்.

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி வெளியே வரும் பட்சத்தில் ஜெயலலிதாவின் எதிர்கால நடவடிக்கைகள் எப்படி இருக்கும்?

இனிமேலாவது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கே.வெங்கட், விழுப்புரம்.

காவல் துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்வதால் மட்டும், ஒரு மாவட்டத்தில் நடக்கும் குற்றங்கள் குறைந்துவிடுமா?

குற்றவாளிகளைப் பிடிக்காமல், குற்றங்களைத் தடுக்காமல் மெத்தனமாக இருந்தார் என்று குற்றம்சாட்டி ஒரு காவல் துறை அதிகாரியை இன்னொரு மாவட்டத்துக்கு மாற்றுகிறார்கள். இது ஏதோ பெரிய, தண்டனைக்குரிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. இத்தகைய அதிகாரிகள் இன்னொரு மாவட்டத்துக்குப் போனபிறகும் அதே மெத்தனத்துடன்தான் இருக்கப் போகிறார்கள். அதனால் என்ன பயன்? இவர் போய்ச் சேர்ந்த மாவட்டத்தில் அதுவரை ஒழுங்காகப் பணிகள் நடந்து வந்திருக்கும். இவர் போய் அதையும் கெடுப்பார். மற்றபடி அதனால் எந்த நன்மையும் இல்லை.

ஆர்.ஷம்மு, குடந்தை.

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து..?

புதிய வரிகள் இல்லை, அதேநேரத்தில் புதிய திட்டங்களும் இல்லை. கடந்த நான்காண்டு காலத்தில் தங்களது ஆட்சியில்  செய்யப்பட்ட சிறப்பான திட்டங்களால் தமிழகம் அடைந்த வளர்ச்சியை விளக்கவும் இல்லை, அடுத்த ஓராண்டு காலத்துக்கு இந்த அரசின் கொள்கைபூர்வமான திட்டப்பணிகள் என்ன என்று அறிவிக்கவும் இல்லை. எந்தெந்த துறைக்கு எவ்வளவு பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்ற பட்டியல் மட்டும்தான் பட்ஜெட்டில் இருக்கிறது. இது வழக்கமான நிர்வாக விஷயங்கள்தான். மற்றபடி ‘மக்களின் முதல்வரை’ பாராட்டுவதற்கே தமிழக முதல்வர் இதைப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

ஓ.பி.எஸ் பாடிய பட்ஜெட் கவிதையில் திரும்பத் திரும்பப் படிக்கத் தூண்டிய வரிகள் இவைதான்...

‘நாடே வணங்கும்

நான்காம் தமிழ்... ஐந்தாம் வேதம்...

ஆறாம் காப்பியம்... ஏழாம் அறிவு...

எட்டாம் அதிசயம்... ஒன்பதாம் வள்ளல்...

எங்கள் அம்மா.” 

அன்பாழி, பெரியமதியாக்கூடலூர்.

 நாம் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லவேண்டிய செய்திகள் என்னென்ன?

அசுத்தம் இல்லாத இயற்கையும் ஆபத்து தராத செயற்கையும்.

எது உண்மையான இன்பம் என்று அறியும் மனமும் ஈகைக்குணமும்.

சமூகநோக்கமும், நாட்டுப் பற்றும்.

- இந்த ஆறுக்குள் அனைத்தும் அடங்கி இருக்கிறது. அடுத்த தலைமுறைக்கு இது போய்ச் சேருமானால், எல்லாத் தலைமுறையும் செழித்து வாழும்.

சரண்சுகன் சித்தப்பு, கருப்பம்புலம்.

 ‘திருவிளையாட’லில் மூத்தவர் தாய் தந்தையை மட்டும் சுற்றி வந்து பழத்தைப் பெற்றார். ஆனால், அழகிரியோ அம்மாவை மட்டும் சுற்றுகிறார். இளையவர் அம்மா, அப்பா இருவரையும் சுற்றி பழத்தைப் பெற்றுவிடுவார்போலத் தெரிகிறதே?

 பழம் அவருக்குத்தான் சந்தேகமில்லை. எப்போது என்பதுதானே பிரச்னை? இளையவரும் சுற்றோ சுற்று எனச் சுற்றுகிறார். பழம்தான் கைக்கு வரமாட்டேன் என்கிறது.

கே.ஜி.ஶ்ரீராமன், பெங்களூரு.

‘நான் ஆட்சியில் இருந்தால், தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அவர்கள் பார்த்து எழுத பாடப் புத்தகத்தையே வழங்கி இருப்பேன்’ என்கிறாரே லாலுபிரசாத்?

ஓஹோ! இந்த மாதிரியான வாக்குறுதிகளால்தான் அவர் பீகாரில் ஜெயித்தாரோ?

வண்ணை கணேசன், சென்னை-110.

உலகத் தரம் வாய்ந்த நகரமாக டெல்லியை மாற்ற முடியாதது ஏன் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருப்பது பற்றி?

உலகத் தரம் வாய்ந்ததாக மாற்றுவது அப்புறம்! அது பாதுகாப்பான நகரமாக மாற்றுங்கள் கெஜ்ரிவால்.

திருலோக்கி.க.தமிழ்மணி, நெடுந்திடல்.

 வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு நிதி கேட்கும் தி.மு.க கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது வசூலித்த 106 கோடி ரூபாயை செலவழித்துவிட்டதா?

 தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் மனதில் உள்ளதை நீங்கள் கேட்டுவிட்டீர்கள். செலவழித்துவிட்டீர்களா பொருளாளர்?

கழுகார் பதில்கள்

நிஜந்தன், சீர்காழி.

 டிராஃபிக் ராமசாமி கைது பற்றி?

ஒருவர் புகார் கொடுத்து அதிவேகத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது இதுவாகத்தான் இருக்கும். இதேவேகம் எல்லா வழக்குகளிலும் இருந்தால் எப்படி இருக்கும்?

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

 கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002 kalugu@vikatan.com என்ற முகவரியிலும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு