Published:Updated:

‘‘கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் கடத்துவேன்”

வேல்முருகன் டமால் டுமீல்!

பிரீமியம் ஸ்டோரி

‘‘எனது மக்களின் வாழ்வு முன்னேற்றம் அடையவில்லை என்றால் சிமென்ட் தயாரிப்பு நிறுவன முதலாளிகளை  கடத்திச் சென்றுவிடுவேன்” என்ற வேல்முருகனின் ஆவேசப் பேச்சால் அரியலூர் மாவட்டமே பரபரப்பு களமாகக் காட்சியளிக்கிறது.

கடந்த மார்ச் 31-ம் தேதி. விடியற்காலை முதலே வேல்முருகனின் ஆதரவாளர்களும் பொதுமக்களும் ஆலத்தியூர் கிராமத்தில் குவியத் தொடங்கினர்.

11 மணியளவில் களத்துக்கு வந்த வேல்முருகனைக் கண்டவுடன் அவரை வாழ்த்திபோட்ட கோஷங்கள் அடங்கவே அரை மணிநேரம் ஆகியது.

மாநில பொதுச்செயலாளர் எடப்பாடி வை.காவேரி பேசத்தொடங்கினார். ‘‘அரியலூர் மாவட்டத்தில் ஒன்பது சிமென்ட் ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகள் வெளிவிடும் புகையால் தஞ்சாவூர், பெரம்பலூர், கடலூர் வரை உள்ளவர்களுக்கு சுவாசம் சம்பந்தமான நோய்கள், சிறுநீரகக் கோளாறு, ஆஸ்துமா, கேன்சர், தோல் நோய்கள் என பலவிதமான நோய்கள் வருகின்றன. இனிமேல் நிலங்களை ஆலைக்குக் கொடுக்க மாட்டோம் என்று உறுதி ஏற்க வேண்டும்”  என்று கூறினார்.  

‘‘கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் கடத்துவேன்”

அடுத்தபடியாக மைக்கைப் பிடித்தார் வேல்முருகன். ‘‘இந்தப் பகுதியில் 800 ஏக்கர் நிலங்களை ஆலைகள் அபகரித்துள்ளன. இவர்களை எதிர்த்துப் போராட்டம் நடத்த அனுமதி கேட்டிருந்தோம். ஆனால், காவல் துறையினர்  வட்டாட்சியருக்குப் பரிந்துரை செய்துள்ளோம் என்று நகர்ந்துகொண்டனர். நான் சிறிய கட்சி என்று காவல் துறை ஏளனம் செய்கிறார்கள். கெயில் பிரச்னை தடைபடுவதற்குக் காரணமே நான்தான். எனது கோரிக்கையை முன்னெடுத்துதான் முன்னாள் முதல்வர், குழுவை அமைத்தார். கர்நாடக அரசு, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதைத் தடுக்கப் போராடியது எங்களது கட்சி. தூத்துக்குடியில் உப்புத் தொழிற்சாலையைத் திறக்கக் கோரி, நான் களத்தில் இறங்கி போராடியபிறகு கம்பெனி திறக்கப்பட்டு இப்போது 1,000 பேர் வேலை செய்கிறார்கள். எங்களைச் சிறிய கட்சி என்று ஏளனம் செய்யாதீர்கள். 10 வருடங்களில் செய்ய வேண்டிய சாதனையை இரண்டே வருடங்களில் செய்திருக்கிறோம்.

மற்ற கட்சிக்காரர்கள் மாதிரி பெட்டி வாங்கிவிடுவேன் என்று எண்ணிவிடாதீர்கள். ‘கத்தி’ பட பிரச்னை தொடர்பாகப் பலமுறை தொடர்புகொண்டார்கள். உங்களது கட்சியை 10 வருடங்களுக்கு நடத்தவேண்டிய பணத்தை நாங்கள் தருகிறோம். இதை இப்படியே விட்டுவிடுங்கள்’ என்றார்கள். அதை நான் பொருட்படுத்தவில்லை.

‘‘கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் கடத்துவேன்”

இ்ந்த மாவட்டத்தில் நிலத்தைக் கையகப்படுத்தியபோது, ‘வேலைவாய்ப்பு, மருத்துவமனை, பள்ளி மற்றும் கல்லூரிகள் கட்டித் தருகிறோம்’ என்றனர். ‘குடிநீர் வசதி, தடையற்ற மின்சாரம் கொடுக்கிறோம்’ என்றனர். இதில் எதையாவது செய்துள்ளார்களா? ஆலை வெளியிடும் புகையால் பலர், நுரையீரல் பிரச்னை, ஆஸ்துமா, கேன்சர் போன்ற கொடிய நோய்களினால் இறந்துள்ளனர். இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு நஷ்டஈடு கொடுத்ததுண்டா? இங்கு 400 அடிக்கு மேல் சுண்ணாம்பு வெட்டி எடுக்கிறார்கள். இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதோடு, பூகம்பம் வருவதற்கும், கடல் நீர் உள்ளே புகவும் வாய்ப்புள்ளது. நேற்று வரையிலும் மக்கள் பயன்படுத்திய சாலையை மறித்துக்கொண்டு, ‘ரோடு கம்பெனிக்கு சொந்தம்.

‘‘கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் கடத்துவேன்”

உங்களுக்கு வழிவிட மாட்டோம்’ என்று மிரட்டுகிறார்கள். மண்ணின் மக்கள் பிச்சை எடுக்கிறான். என்ன ஒரு கேவலம்? ஒன்பது சிமென்ட் ஆலைகளில் இந்த வட்டாரத்தைச் சேர்ந்த யாராவது ஒருவர் நாற்பதாயிரம், ஐம்பதாயிரம் சம்பளம் வாங்குகிறேன் என்று சொல்லுங்கள் பார்ப்போம். எங்களின் அறியாமையைப் பயன்படுத்தி மிகக் குறைந்த விலையில் வாங்கிய விவசாய நிலங்களுக்கு மறுவாழ்வு நிதியாக ஏக்கருக்கு ரூ.20 லட்சம் வழங்கவேண்டும். இனி கையகப்படுத்தும் ஓர்  ஏக்கருக்கு ஒரு கோடி வழங்க வேண்டும், நிலம் கொடுத்தவருக்கு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட 25 கோரிக்கைகள் உடனே நிறைவேற்றப்பட வேண்டும்.

இல்லை என்றால், முதல் கட்டமாக உங்களது அதிகாரிகளின் வண்டிகளை சிறைப்பிடிப்பேன். அதற்கும் மசியவில்லை என்றால், சிமென்ட் நிறுவன முதலாளிகளைக் கடத்துவேன். ‘கத்தி’ படம் திரையிடக் கூடாது என திரையிட்ட சினிமா தியேட்டருக்கு என்னோட அனுமதியில்லாமல் எனது ஆட்கள் 13 வெடிகுண்டுகளை வீசினார்கள். இப்போது எனது மக்களுக்கு ரூ.20 லட்சம் கிடைக்க வேண்டும் என்றால், எத்தனை வெடிகுண்டுகள் வீசுவார்கள் என நீங்களே எதிர் பார்த்துக்கொள்ளுங்கள். ‘நான் புலிகளின் தம்பி’ என்பதை மறந்து விடாதீர்கள்’’ என்றார் வேல்முருகன். 

இது என்னடா புதுப்பிரச்னை என்று புலம்ப ஆரம்பித்துள்ளது, அரியலூர் போலீஸ்!

- எம்.திலீபன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு