Published:Updated:

‘‘தமிழகத்தில் பி.ஜே.பி-யை வளர்ப்பது கஷ்டம் என்பது எங்களுக்கும் தெரியும்!”

பெங்களூரு மாநாட்டில் அமித்ஷா அதிரடி

‘‘தமிழகத்தில் பி.ஜே.பி-யை வளர்ப்பது கஷ்டம் என்பது எங்களுக்கும் தெரியும்!”

பெங்களூரு மாநாட்டில் அமித்ஷா அதிரடி

Published:Updated:

பெங்களூரில் நடந்து முடிந்த பி.ஜே.பி மாநாடு, மோடி ஆதரவாளர்கள் அத்வானியை ஏற்கத் தயாராக இல்லை என்பதை ஆணித்தரமாக வெளிப்படுத்தியிருக்கிறது.

பி.ஜே.பி-யின் தேசிய உயர்மட்ட செயற்குழுக் கூட்டம் கடந்த 2-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை பெங்களூரில் நடைபெற்றது. அதில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, பி.ஜே.பி-யின் தேசிய தலைவர் அமித்ஷா, மூத்த தலைவர் அத்வானி, மத்திய அமைச்சர்களான ராஜ்நாத் சிங், வெங்கையா நாயுடு, அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டவர்களும்
பி.ஜே.பி ஆளும் மாநில முதல்வர்கள், மாநில பொதுச் செயலாளர்கள்  உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் வந்திருந்தனர். தமிழகத்தில் இருந்து மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், மோகன்ராஜுலு, விநாயகம்  உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

‘‘தமிழகத்தில் பி.ஜே.பி-யை வளர்ப்பது கஷ்டம் என்பது எங்களுக்கும் தெரியும்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நரேந்திர மோடி பிரதமராகவும் அமித்ஷா தலைவராகவும் ஆன பிறகு, தேசிய அளவில் நடக்கும் முதல் கூட்டம் என்பதால், ஏக பரபரப்பு. சில மாதங்களுக்கு முன்பு பெங்களூரு பி.ஜே.பி அலுவலகம் எதிரே குண்டு வெடித்ததால், பாதுகாப்பு ஏற்பாடும் பலமாக இருந்தது. 5,000-க்கும் மேற்பட்ட கர்நாடக மாநில போலீஸாரும்  4,000 மத்திய ஆயுதப்படை போலீஸாரும் குவிக்கப்பட்டு இருந்தனர். ‘டாக் ஸ்குவாட்’, ‘பாம் ஸ்குவாட்’ என பாதுகாப்பு ஏற்பாடுகள் பரபரப்பாக இருந்தன. பொதுக்கூட்டத்தில் மட்டுமே பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். செயற்குழுவில் மூச்!

‘‘தமிழகத்தில் ஆள் சேர்ப்பது கடினம்!”

பெங்களூரு குமாரக்ருதா ரோட்டில் உள்ள லலித் அசோகா ஹோட்டலில் பி.ஜே.பி-யின் தேசிய துணைத் தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான எடியூரப்பா குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கிவைக்க, அமித்ஷா தலைமையில் தேசிய கலந்தாய்வுக் கூட்டம் தொடங்கியது. ஒவ்வொரு மாநிலப் பொதுச் செயலாளரிடமும் உறுப்பினர் சேர்க்கையைப் பற்றி கலந்து ஆலோசித்தார் அமித்ஷா. தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்திரராஜனை அழைத்து, ‘‘கர்நாடகாவில் 85 லட்சம் உறுப்பினர்களையும் ‘கம்யூனிஸ்ட் பெல்ட்’ என்று சொல்லக் கூடிய கேரளாவில்கூட, 25 லட்சம் உறுப்பினர்களையும் சேர்த்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வெறும் 35 லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்திருக்கிறீர்கள். அதற்குமேல் சேர்க்க முடியவில்லையா’’ என்று அமித்ஷா கேட்டிருக்கிறார். 

‘‘மற்ற மாநிலங்களில் சுலபமாக உறுப்பினர்களைச் சேர்த்துவிடலாம். ஆனால், தமிழ்நாட்டில் உறுப்பினர்களைச் சேர்ப்பது கடினம். தமிழ்நாடு திராவிட கட்சிகளின் கையில் சிக்கியிருக்கிறது. எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள், மேயர்கள், கவுன்சிலர்கள் என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு யாரும் தமிழகத்தில் நம் கட்சியில் கிடையாது. அப்படிப்பட்ட மாநிலத்தில் நீங்கள் எங்களுக்குக் கொடுத்த டார்கெட் 30 லட்சம். ஆனால் நாங்கள் 35 லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்திருக்கிறோம்’’ என்று தமிழிசை விளக்கம் அளித்துள்ளார்.

அப்போது அமித்ஷா, ‘‘தமிழ்நாட்டில் அவ்வளவு சுலபமாக உறுப்பினர்களைச் சேர்க்க முடியாது என்பது உண்மைதான். இவ்வளவு உறுப்பினர்களைச் சேர்த்த தமிழக தலைவர்களுக்குப் பாராட்டுகள். தமிழகத்தில் அதிக உறுப்பினர்களைச் சேர்க்கத் தனி கவனம் செலுத்தி, தமிழகத்துக்கு மட்டும் ஒரு புதிய திட்டத்தை உருவாக்கலாம்’’ என்றார்.

பிரதமர் மோடி மதியம்தான் வந்தார். மாலையில் பேசும்போது, ‘‘மத்திய அரசின் அனைத்துத் திட்டங்களும் எல்லா மாநிலங்களுக்கும் சரியாகப் போய் சேருகிறதா என்பதை நீங்கள் கண்காணிக்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்களை மக்களின் கவனத்துக்கு நீங்கள்தான் கொண்டு செல்ல வேண்டும். பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் திட்டம், தூய்மை இந்தியா திட்டத்தைப் பற்றி மக்களிடம் சொல்ல வேண்டும். நாம் எப்போதும் மக்களைவிட்டு விலகிப் போய்விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று மோடி அறிவுரைகள் கூறியிருக்கிறார்.

‘‘தமிழகத்தில் பி.ஜே.பி-யை வளர்ப்பது கஷ்டம் என்பது எங்களுக்கும் தெரியும்!”

‘தொண்டர்களும் தலைவர்கள் ஆகலாம்’

இரண்டாம் நாள் நிகழ்வுகளில் அனைத்து தலைவர்களும் இருந்தார்கள். தொடங்கிவைத்துப் பேசிய அமித்ஷா, ‘‘9,21,29,000 உறுப்பினர்கள் நம் கட்சியில் இருக்கிறார்கள். நாம்தான் அதிகமாக உறுப்பினர்களை வைத்திருக்கும் கட்சி” என்று பெருமையுடன் அறிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, ‘‘உறுப்பினர்களைச் சேர்ப்பது மட்டுமல்லாமல் அந்த உறுப்பினர்களைக் கட்சியில் எப்படி பங்கேற்க வைக்கவேண்டும்? அவர்களுக்கு எப்படி பொறுப்புகள் வழங்கவேண்டும்’’ என்பதைப் பட்டியலிட்டார். ‘தொண்டர்களும் தலைவர்கள் ஆகலாம்’ என்ற திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். 6 மாதங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். இதுவரை சேர்க்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் ஏப்ரல் முதல் ஜூலை 31-ம் தேதி வரை கட்சியின் வரலாறு, கொள்கை, கட்சிக்காகப் பாடுபட்ட தலைவர்களின் வரலாறு, கட்சியின் நோக்கம் என அனைத்தும் அவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது. அதில் தேறியவர்களுக்கு அடுத்த 3 மாதங்களில் பயிற்சி அளிக்கப்பட்டு, பொறுப்புகள் வழங்கப்படும்’’ என்றும் மோடி அறிவித்தார்.

பெரிய தலைவர்களும் பார்வையாளர்களே!

மாலை 6 மணிக்கு பெங்களூரு பசவனகுடியில் உள்ள நேஷனல் கல்லூரி மைதானத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. அந்த மேடையில் மிக முக்கியத் தலைவர்களுக்கு மட்டுமே இடமளிக்கப்பட்டிருந்தது. மத்திய அமைச்சர்கள், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் மேடையின் பக்கவாட்டில் தனி மேடையில் அமர்ந்திருந்தார்கள். முதலில் மேனகா காந்தி வந்தார். அதன் பிறகு சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு, ராஜ்நாத் சிங், அத்வானி, அமித்ஷா என ஒவ்வொருவராக மேடைக்கு வந்தனர். மேடையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாருக்கும் இடமில்லை. 
‘கர்நாடக காங்கிரஸ் அரசு செயல்படாத அரசாக இருப்பதால், மீண்டும் பி.ஜே.பி கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடிக்கும்’ என்று தன்னுடைய விருப்பத்தைச் சொல்லி முடித்தார் எடியூரப்பா.
மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் ஆனந்தகுமார், ‘‘மேக்கேதாட்டு எங்களுடையது. அதை எக்காரணம் கொண்டும் யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது’’ என்று பேசிக்கொண்டு இருந்தார். வரிசையாக தலைவர்கள் பேச வேண்டியிருந்தது. ஆனால், திடீரென அமித்ஷா மைக் பிடித்தார். அனைவரையும் வரவேற்றுவிட்டு, ‘‘இனி பிரதமர் நரேந்திர மோடி பேசுவார்” என்று அறிவித்தார். மேடையில் இருந்த முக்கியத் தலைவர்கள் யாருக்கும் பேச வாய்ப்புத் தரப்படவில்லை. இந்த மேடையில் ஆனந்திபென் (குஜராத்), வசுந்தர ராஜே சிந்தியா (ராஜஸ்தான்), ராமன் சிங் (சத்தீஷ்கர்), சிவராஜ் சிங் சவுகான் (மத்தியப் பிரதேசம்), தேவேந்திர பட்னா (மகாராஷ்ட்ரா), மனோகர்லால் கட்டார் (ஹரியானா) உள்ளிட்ட 6 முதல்வர்கள் இடம்பெற்றிருந்தார்கள். இவர்களும் பார்வையாளர்கள் மட்டுமே!

நரேந்திர மோடி, ‘‘நாட்டில் ஊழல் தாண்டவமாடியது. இப்போது ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம். ஏழைகளின் கிராமத்தில் வாழ்ந்துதான் இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன்” என்றார்.

‘‘தமிழகத்தில் பி.ஜே.பி-யை வளர்ப்பது கஷ்டம் என்பது எங்களுக்கும் தெரியும்!”

புறக்கணிக்கப்பட்ட அத்வானி!

மோடி பிரதமர் ஆனதில் இருந்து அத்வானி கட்சியைவிட்டு ஓரங்கட்டப்படுவதாகச் சொல்லி வந்ததை, இந்த தேசிய செயற்குழு கூட்டத்திலும் நிரூபிப்பதாக இருந்தது. முதல் நாள் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் தேசிய அளவிலான பல பி.ஜே.பி தலைவர்கள் கலந்துகொண்டனர். ஆனால், அன்று அத்வானி கூட்டத்துக்கு வரவில்லை. அடுத்த நாள் பிரதமர் பேசும் பொதுக்கூட்டத்துக்கும் தாமதமாகவே வந்தார். அனைவருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு, வாடிய முகத்தோடு மேடையில் அமர்ந்தார். அவர் அருகிலேயே தலைவர் அமித்ஷா அமர்ந்திருந்தார். ஆனால், அத்வானியிடம் பேசவில்லை. அமித்ஷா பேசிக்கொண்டிருக்கும்போது மோடி வந்ததும் மோடியை பேசச் சொல்லி அமித்ஷா கேட்டுக் கொண்டார். அத்வானிக்குப் பேச வாய்ப்பு கொடுக்கவில்லை. பார்வையாளராகவே உட்கார்ந்துவிட்டுப் போய்விட்டார் அத்வானி.

பார்வையாளர் பதவியாவது அவருக்கு மிஞ்சுமா என்பதுதான் பெங்களூரு மாநாடு சொல்லும் நிலவரம்!

- வீ.கே.ரமேஷ்
படங்கள்: ரமேஷ் கந்தசாமி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism