Published:Updated:

‘ஆட்டம்போடும் அத்தனை பேரும் ஜெயிலுக்குப் போவார்கள்!’

சேலத்தில் விளாசிய பிரேமலதா விஜயகாந்த்

‘ஆட்டம்போடும் அத்தனை பேரும் ஜெயிலுக்குப் போவார்கள்!’

சேலத்தில் விளாசிய பிரேமலதா விஜயகாந்த்

Published:Updated:

“நேர்மையான அதிகாரிகளை டார்ச்சர் பண்ணி சாகடிக்கிறாங்க. சகாயத்துக்கு மிரட்டல் கடிதம் எழுதுறாங்க. விஜயகாந்த் ஓரளவுக்குத்தான் பொறுப்பேன். அதுக்கப்புறம் பொறுக்க மாட்டேன்” என்று தனது கட்சியின் மகளிர் அணி பொதுக் கூட்டத்தில் இப்படித்தான் சீறினார், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்!

‘ஆட்டம்போடும் அத்தனை பேரும் ஜெயிலுக்குப் போவார்கள்!’

சேலம் போஸ் மைதானத்தில் தே.மு.தி.க மகளிர் அணி பொதுக்கூட்டம் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. மதுவை ஒழிப்போம், பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்போம், பெண்ணுரிமையைக் காப்போம் என்ற முழக்கங்கள் எழுப்பட்டன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பொதுக்கூட்டத்தில் முதலில் பேசியவர், கெங்கவல்லி தொகுதி எம்.எல்.ஏ-வான சுபா, “இதுபோல மகளிருக்குத் தனியாக இடம் ஒதுக்கி, இவ்வளவு பாதுகாப்பாக ஒரு பொதுக்கூட்டத்தை தமிழ்நாட்டில் எந்த அரசியல் கட்சித் தலைவராவது  நடத்தியிருக்காங்களா?  எங்கள் தலைவர்  நடத்தியிருக்கிறார்.  அப்படிப்பட்ட எங்க கேப்டனைப் பத்தி என்ன சொல்றீங்க...! இது பனங்காட்டு நரி. எதுக்கும் அஞ்சாது. சட்டமன்றத்துல கைய நீட்டி நாக்கை மடிச்சி எதிர்த்துப் பேசுன ஒரே எதிர்க் கட்சித் தலைவர், எங்க தலைவர்தான். நாம எல்லோரும் ராமனையும் சீதையையும் பார்த்துருக்கோமா? இதோ அமர்ந்துருக்காங்க (விஜயகாந்த், பிரேமலதா)  பாருங்க! இவங்கதான் ராமன் சீதை. தாயும் தகப்பனுமா இருந்து எங்களைப் பிள்ளைகளா நினைச்சி ஊட்டி ஊட்டி வளர்க்குறாங்க. சட்டமன்றத்துல சிட்டிசன்னு சொல்லிப்புட்டிங்க. தமிழ் குடிமகன்ங்கிற அவார்டை பிரதமரிடம் வாங்கியவர்தான் என் தலைவர் கேப்டன். அம்மா.. அம்மான்னு சொல்றீங்க. அம்மாவெல்லாம் சும்மா. என் தலைவர் 2016-ல் முதலமைச்சர் நாற்காலியில உட்காரப்போறார். அதை நீங்களெல்லாம் பார்க்கத்தான் போறீங்க” என்று படபடவென  வெடித்தார்.

விஜயகாந்த் பேசும்போது, “மேக்கேதாட்டு அணை பிரச்னையில் இருந்து ஆரம்பிக்கிறேன். தமிழக முதல்வராக எம்.ஜி.ஆரும் கர்நாடக முதல்வராக குண்டு ராவும் இருந்தாங்க. அப்போ, குண்டு ராவை எம்.ஜி.ஆர் பார்க்கலை. நேராக இந்திரா காந்திகிட்ட போய் பேசினார். அதன் பிறகுதான், அணைக் கட்டுவதை இந்திரா காந்தி தடுத்தாங்க. அதே மாதிரி, சோனியா காந்திகிட்ட போய் நம்ம விவசாயிகள் முறையிடணும். நானும் வர்றேன்.

கர்நாடகத்துல காங்கிரஸ் ஆட்சி நடக்குது. அதனால, விவசாயிகள் எல்லாம் டெல்லிக்குப் போய், சோனியா காந்தி வீட்டு முன்னாடி உட்காருங்க. கண்டிப்பாக விவசாயிகள் பிரச்னையை அவங்க தீர்த்துவைப்பாங்க. அதைவிட்டுட்டு, இங்கே உட்காந்திருந்தா காங்கிரஸ் அரசியல் பண்ணிகிட்டுத்தான் இருக்கும். வர்ற சட்டசபைத் தேர்தல்ல எனக்கு இறங்குமுகம்னு சொல்றாங்க. ஆனா, இப்போதான் எனக்கு ஏறுமுகம். கூட்டத்தைப் பார்த்தீங்களா? உங்களுக்குத்தான் இறங்குமுகம். 10-ம் தேதிக்கு அப்புறம் தீர்ப்பு வந்துடும். அப்புறம் ஒன்..டூ... த்ரீ.. ஃபோர்... ஃபைவ்... சிக்ஸ் என எண்ணப்போறீங்க” என்றார். 

கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சுதான் ஹைலைட். “இது பெண்களுடைய பொதுக்கூட்டமா இல்லை, மாநாடா என்று வியக்கும் அளவுக்கு  ஒரு மாபெரும் மக்கள் அலை கூடியிருக்கிறது. இது ஒன்றும் சாதாரண சாதனை அல்ல. நம்முடைய இந்தப் பொதுக்கூட்டத்தைப் பார்த்துவிட்டு, இது மாநாடுபோல நடந்துகொண்டிருக்கிறது என்று அண்ணன் பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவருக்கு நமது நன்றிகள்.

‘ஆட்டம்போடும் அத்தனை பேரும் ஜெயிலுக்குப் போவார்கள்!’

தே.மு.தி.க தேய்ந்துவிட்டது என்று எழுதுகிறார்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல, இந்தப் பொதுக்கூட்டத்தின் வாயிலாக தே.மு.தி.க என்றைக்கும் தேயக்கூடிய கட்சி அல்ல தேர்ச்சிபெற்று ஆட்சியில் அமரக்கூடிய கட்சி என்பதை தே.மு.தி.க நிலை​நாட்டிக்கொண்டிருக்கிறது. கேப்டனை எதிர்த்தவர்களின் வரலாற்றைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஒரு காமெடியன் முதல் கொடநாடு நாயகி வரைக்கும் கேப்டனை எதிர்த்தவர்கள் அத்தனைபேரும் இன்றைக்கு தலைக்குப்புற விழுந்திருக்கிறார்கள். இன்றைக்கு எத்தனை லட்சம் குடும்பங்கள் டாஸ்மாக் என்னும் அரக்கன் கையில் சிக்கித் தவிக்கின்றன. பெண்கள் எங்கு சென்​றாலும் ரகசிய கேமராக்கள் மூலம் படம்பிடிக்கிறார்கள். அதனால், பெண்கள் எல்லோரும் விழிப்பு உணர்வோடு இருந்து தட்டிக் கேட்க வேண்டும். கேப்டன் முதலமைச்சரானதும் முதல் கையெழுத்தை டாஸ்மாக் கடைகளை அகற்றுவதற்காகப் போட வேண்டும் என்று இங்கு சொன்னார்கள். நிச்சயமாக அந்த நாள் வெகுதொலைவில் இல்லை.

தலைவர் எவ்வழியோ, தொண்டர்கள் அவ்வழி என்பதற்கு சிறந்த உதாரணமாக அ.தி.மு.க இருக்கிறது. முதலில், தலைவி ஊழல் குற்றவாளியாக தண்டனை பெற்று ஜெயிலுக்குப் போனார். அடுத்து, மந்திரியாக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர்களின் கவுன்ட் டவுண் ஆரம்பித்துவிட்டது. அக்ரி கிருஷ்ணமூர்த்தி மட்டுமல்ல, அ.தி.மு.க-வுல ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்கிற அத்தனை பேரும் இனி ஒன் பை ஒன்னா ஜெயிலுக்குப் போகத்தான் போகிறார்கள்” என்று அதிரடியாக முடித்தார்.

அடுத்த ஆட்டத்துக்குத் தயாராகிவிட்டது தே.மு.தி.க!

- எம்.புண்ணியமூர்த்தி, படங்கள்: எம்.விஜயகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism