
கே.கிருஷ்ணமூர்த்தி, காரைக்குடி.
ஓ.பன்னீராகப் பிறக்கவில்லையே என்று என் நண்பன் அடிக்கடி கவலைப்படுகிறான்?
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பன்னீர் கஷ்டம் அவருக்குத்தான் தெரியும். எப்படா இந்த சுமையை இறக்கி வைக்கலாம் என்று அவர் துடித்து வருவதாக அவரை அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.கடந்த வாரத்தில் ஒருநாள் ஜெயலலிதாவை சந்தித்துள்ளார். மொத்தமே 12 நிமிடங்கள்தான் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. சந்திப்புக்கு முன்புவரை அவர் அடைந்த அவஸ்தையை அவர் மட்டுமே அறிவார்! ஆம் ஆத்மி கட்சியினர் முதலமைச்சர் வீட்டுக்கு முன் ஓர் ஆர்ப்பாட்டத்துக்கான அறிவிப்பைச் செய்திருந்தார்கள். உரிய பாதுகாப்பு செய்யப்படாத காரணத்தால், ஆர்ப்பாட்டக்காரர்கள் முதல்வரின் கார் நிற்கும் போர்டிகோ வரைக்கும் வந்துவிட்டார்கள். கொட்டு வைத்து அடித்துக்கொண்டே வந்தார்கள். ஒரு முதலமைச்சர் வீட்டுக்குக் கொடுத்த முக்கியத்துவம் அவ்வளவுதான்.
பி.அருணன், மதுரை.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிதானே நடக்கிறது. பிறகு, ஏன் காவிரியில் அணை கட்டும் விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்துக்குச் சாதகமாகத்தானே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்?
கர்நாடகாவில் பலமான மாற்றுக் கட்சியாக பி.ஜே.பி இருக்கிறது. எனவே அந்த மாநிலத்துக்குச் சாதகமாகத்தானே நடந்து கொள்வார்கள். தமிழகத்துக்குச் சாதகமாக நடந்துகொண்டால் இங்கே ஆட்சியையா பிடிக்கப் போகிறார்கள்? ரங்கம் கசப்பு போதாதா?
அம்மா பிரியன், சிந்தாமணி.
ஒருவேளை ஜெயலலிதாவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் உடனே முதலமைச்சர் ஆவாரா அல்லது பொதுத்தேர்தல் வரை காத்திருப்பாரா?
சாதகமான தீர்ப்பு வந்தால், பொதுத்தேர்தலை உடனடியாக வரவைத்து விடுவார். பொதுத்தேர்தல் வரும் வரை காத்திருப்பதற்கு அவர் என்ன யதார்த்தம் புரியாதவரா? 'சதியையும் விதியையும் வென்று வந்துவிட்டேன்’ என்ற ஒரு முழக்கம் போதாதா அவருக்கு?

டி.ஜெயதமிழண்ணா, சென்னை.
விசாரணை முடிந்து தீர்ப்புத் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்ட ஜெயலலிதா மீதான வழக்கின் தீர்ப்பு எப்போது வரும்?
தீர்ப்பு எப்போது வரும் என்ற முடிவு அந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி கையில்கூட இல்லை. உச்ச நீதிமன்றத்தின் கையில்தான் இருக்கிறது. இந்த வழக்கின் அரசு வழக்கறிஞராக பவானி சிங் வாதாடியது சரியா என்ற சிக்கலான கேள்விக்கு விடை தேடிக்கொண்டு இருக்கிறது உச்ச நீதிமன்றம்.
தமிழகத்தின் எல்லையில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. தமிழகத்தில் வழக்கின் விசாரணை நடந்தால், நியாயமாக நடக்காது என்பதால்தான் விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்றினார்கள். அரசு வழக்கறிஞரை நியமித்தார்கள். முதலில் ஆச்சார்யா இருந்தார். அவருக்குப் பிறகு பவானி சிங் நியமிக்கப்பட்டார். இது அந்த வழக்குக்கு மட்டும்தான், மேல் முறையீட்டு மனுவுக்கும் சேர்த்து அல்ல என்று தி.மு.க. தரப்பு வாதிடுகிறது. அந்த பவானி சிங்கை, அரசு வழக்கறிஞராக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை நியமித்தது. வழக்கை கர்நாடக மாநில அரசு நடத்தும்போது, தமிழகம் எப்படி வழக்கறிஞரை நியமிக்கலாம் என்று தி.மு.கவும் கேட்கிறது. மிகவும் சிக்கலான கேள்வி இது. என்ன விடை வருகிறது என்று பார்ப்போம்!

ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.
ஶ்ரீராமானுஜர் பற்றிய தொடருக்கு கருணாநிதி கதை வசனம் எழுதுவது பற்றி?
''மதத்திலே புரட்சி செய்த மகான்களில் ராமானுஜரும் ஒருவர் என்பதை நான் அறிவேன். மாற்றத்துக்கு வித்திட்ட அப்படிப்பட்ட சம்பவங்களை மக்களிடம் எடுத்துச்சொல்லி சிந்தனைக்கு விருந்தாக்கிட வேண்டுமென்ற கோரிக்கை வந்தபோது அதனை ஏற்க முன்வந்தேன்'' என்று கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார். நாத்திகரான கருணாநிதி, ராமானுஜரைப் பற்றி எழுதலாமா என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. ராமானுஜரின் வாழ்க்கையில் குறிப்பிட்ட ஒருசில பகுதிகளை மட்டுமேதான் எழுதப் போவதாக கருணாநிதி சொல்லியிருக்கிறார். 'ராமானுஜர் வாழ்க்கை வரலாற்றில் எதையும் திரித்தோ இட்டுக்கட்டியோ எழுதமாட்டேன்’ என்றும் கருணாநிதி வாக்குறுதி கொடுத்துள்ளார்.
என்.காளிதாஸ், சிதம்பரம்.
'நீதியின் பெயரால் நாடுகள் செய்யும் படுகொலையே மரண தண்டனை’ என்று போப் ஆண்டவர் ஃபிரான்சிஸ் கூறியுள்ளாரே?
ஆண்டவரின் குரல்!
பொன்விழி, அன்னூர்.
மகாத்மா காந்தி, நேதாஜி பற்றி தரம்தாழ்த்தி விமர்சித்த மார்க்கண்டேய கட்ஜு பற்றி..?
அவர் வெறும் பரபரப்புக்காகப் பேசுவதாகவே தெரிகிறது!

ப.த.தங்கவேலு, பண்ருட்டி.
அமைச்சர் பதவியில் இருந்து ஒருவரை நீக்கம் செய்ய வேண்டுமென்றால், அதற்கு எந்த ஒரு காரணமும் சொல்லத் தேவையில்லையா?
வெளிப்படையாகச் சொல்லத் தேவையில்லை. யாரை அமைச்சராகச் சேர்க்கலாம் யாரை நீக்கலாம் என்பது ஒரு முதலமைச்சரின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பது உண்மைதான். அவர்கள் சொல்லாவிட்டாலும் வெளியில் தெரியாமல் போய்விடுமா என்ன?
ந.பாலகிருஷ்ணன், தாமரைப்பாளையம். மக்கள் கெட்டு வருகிறார்களா? நாடு கெட்டு வருகிறதா?
நாடு என்பது வெறும் எல்லை அல்ல. மக்கள்தானே! மக்கள் கெட்டு வருவதால், நாடு கெட்டுப் போனதாகத் தெரிகிறது.
கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002 kalugu@vikatan.com என்ற முகவரியிலும் அனுப்பலாம்!