Published:Updated:

மிஸ்டர் கழுகு : போன் என்னுடையதுதான் பேசியது நான் இல்லை !

அடம்பிடித்த 'அக்ரி'

மிஸ்டர் கழுகு : போன் என்னுடையதுதான் பேசியது நான் இல்லை !

அடம்பிடித்த 'அக்ரி'

Published:Updated:
மிஸ்டர் கழுகு : போன் என்னுடையதுதான் பேசியது நான் இல்லை !

‘அக்ரி’ கிருஷ்ணமூர்த்தி கைது சம்பந்தமாக நெல்லையில் இருந்து நமது நிருபர் அனுப்பிய கட்டுரையைப் படித்துவிட்டு நம்மைப் பார்த்தார் கழுகார்!

‘‘கடந்த ஒருமாத காலமாகத் முத்துக்குமாரசாமி தற்கொலை பற்றித் தொடர்ச்சியாக எழுதி வந்தது ஜூ.வி-தான். அதற்காகச் சிலர் தெரி​வித்துள்ள பாராட்டை இணையத்​தில் பார்த்தேன். எல்லா விஷயத்திலும் உண்மைகள் வெளிச்சத்துக்கு வரவேண்டும் என்பதுதானே நம்முடைய நோக்கம்!” என்றபடி செய்திகளை அவிழ்க்க ஆரம்பித்தார் கழுகார்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘பங்குனி உத்திரமான வெள்ளிக்​கிழமை அன்று அக்ரி கிருஷ்ணமூர்த்தி தனது சொந்த ஊரான எலத்தூருக்கு அருகில் இருக்கும் வில்வாரணி நட்சத்திர முருகன் கோயில், பூண்டி மகான், குலதெய்வமான கடலாடி பச்சையம்மன் கோயில் ஆகியவற்றில் குடும்பம் சகிதமாக நடந்த பூஜைகளில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். தரிசனம் முடிந்து வீட்டில் இருந்தவரை சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் சென்னைக்கு அழைத்துச் சென்றனர். கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்ட நாள் முதல், சென்னையில் வீட்டில் தானாகவே `ஹவுஸ் அரஸ்ட்டில்’ இருந்தவருக்குக் கடந்த 4-ம் தேதி ஆஜராக சி.பி.சி.ஐ.டி போலீஸ் சம்மன் கொடுத்திருந்தது. இந்த நிலையில், சி.பி.சி.ஐ.டி போலீஸுக்குத் தகவல் சொல்லாமல், கிளம்பி ஊருக்கு வந்துவிட்டார். இதைத் தெரிந்துகொண்டு, சி.பி.சி.ஐ.டி போலீஸ் திருவண்ணாமலைக்கு வந்து அழைத்துச் சென்றதாகச் சொல்கின்றனர்.”

மிஸ்டர் கழுகு : போன் என்னுடையதுதான் பேசியது நான் இல்லை !

‘‘ஓஹோ!”

‘‘முத்துக்குமாரசாமியின் தற்கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டப் பிறகு, எந்த வேகமும் இல்லை. வழக்கு ஸ்பீடு எடுக்க மூன்று காரணங்கள் இருந்​தன. ஒன்று, தலை​மைச் செயலாளர் ஞானதேசிகனின்
உற​வினர்தான் முத்துக்​குமாரசாமி. அதனால் ஞானதேசிகனும் இந்த விவகாரத்தை ஜெயலலிதாவின் கவனத்துக்குக் கொண்டு போய் இருக்கிறார். இரண்டாவது, எதிர்க் கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்தன. மூன்றாவது, ஆம் ஆத்மி கட்சியினர் முதல்வரின் இல்லத்துக்கே சென்று போராடியது. சட்டசபையில் எதிர்க் கட்சிகள் குரல் எழுப்ப முயன்றபோது, அரசு அசைந்து கொடுக்கவில்லை. கடைசியில் வேறுவழியில்லாமல்தான் களத்தில் இறங்கியது சி.பி.சி.ஐ.டி. அக்ரி கிருஷ்ணமூர்த்தியை விசா​ரணைக்கு வருமாறு அழைத்தது சி.பி.சி.ஐ.டி. ஆனால், ‘இதோ வருகிறேன். முக்கிய வேலை இருக்கிறது’ எனச் சொல்லி ஒரு வாரமாக இழுத்தடித்திருக்கிறார் அக்ரி கிருஷ்ணமூர்த்தி.’’

‘‘ஓ!’’

மிஸ்டர் கழுகு : போன் என்னுடையதுதான் பேசியது நான் இல்லை !

‘‘கடைசியில் மேலிடத்தில் இருந்து உத்தரவு வரவே களத்தில் இறங்கியது போலீஸ். அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் சொந்த ஊரான திருவண்ணாமலைக்குப் போனது போலீஸ். சனிக்கிழமை காலையில் அவரது வீட்டுக் கதவை காக்கிகள் தட்டியபோது அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறார் அக்ரி. ‘விசாரணைக்கு வரச்சொல்லி பலமுறை அழைத்தும் நீங்கள் வரவில்லை. உங்களை விசாரிக்கச் சொல்லியிருக்கிறார்கள்’ என போலீஸ் அதிகாரிகள் சொன்னதும் ‘யார் சொன்னார்கள்’ என்றாராம் அக்ரி. ‘எங்கள் உயர் போலீஸ் அதிகாரிகள் சொல்லித்தான் நாங்கள் வந்திருக்கிறோம். உடனே கிளம்புங்கள்’ என்று சொல்லியிருக்கிறார்கள். ‘என் காரிலேயே போகலாம்’ என்று அக்ரி சொன்னதை காக்கிகள் ஏற்கவில்லை. போலீஸ் ஜீப்பிலேயே அவரை சென்னைக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். ‘கோயிலுக்குப் போய்விட்டு போகலாம்’ என்று அவர் சொன்னதுக்கும் போலீஸ் அனுமதிக்கவில்லை. உடனே ‘ஒரு முடிவோடுதான் வந்திருங்கீங்கபோல...’ என அக்ரி சொன்னதை போலீஸ் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லையாம். ஆனாலும் பச்சயம்மனை மனதில் வணங்கியபடியே ஜீப்பில் உட்கார்ந்திருக்கிறார்!”

‘‘ம்!” 

‘‘சென்னையில் பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டிபோலீஸ் அலுவலகத்துக்கு அக்ரி அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே போவதற்கு முன்புகூட ‘ஆழ்வார்பேட்டையில் இருக்கிற என் வீட்டுக்குப் போய் சாப்பிட்டுவிட்டு போகலாம். மாத்திரைகள் எடுத்துக்கொண்டு வருகிறேன்’ எனச் சொல்லியிருக்கிறார் அக்ரி. ‘உங்களுக்கு என்ன தேவையோ, அதை வாங்கித் தருகிறோம்’ என்று சொன்னார்கள் போலீஸ் அதிகாரிகள். சனிக்கிழமை மாலை தொடங்கி நள்ளிரவு வரை அக்ரியை விசாரித்தார்கள். ஆனால், போலீஸுக்கு சரியான ஒத்துழைப்பை அவர் தரவில்லை. ‘எனக்கு எதுவும் தெரியாது. உதவியாளர்களைத்தான் கேட்க வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார். ‘உங்கள் போனில் இருந்து அழைப்பு போயிருக்கிறதே...’ என அதிகாரிகள் கேட்க... ‘செல்போனை நானா வைத்திருக்க முடியும்? விழா நடக்கும்போதும் மற்ற நேரங்களிலும் என் செல்போனை உதவியாளர்கள்தான் வைத்திருப்பார்கள். அவர்கள் ஏதாவது பேசினால், அதற்கு நானா பொறுப்பு?’ என மடக்கியிருக்கிறார் அக்ரி. ‘உங்கள் வாய்ஸ் எப்படி அந்த போனில் போனது’ என்று கேட்டபோது வாயே திறக்கவில்லையாம்.

‘இதெல்லாம் யார் சொல்லி நடக்கிறது’ என்று திரும்பத் திரும்பக் கேட்டிருக்கிறார் அக்ரி. ஆனால் காக்கிகள் பதில் சொல்லவில்லை. இரவு 9 மணி ஆனதும் ‘என்ன டின்னர் வேண்டும்’ என போலீஸ் அதிகாரிகள் அவரிடம் கேட்டிருக்கிறார்கள். ‘ஏங்க.... அப்ப என்னை வீட்டுக்கு அனுப்ப மாட்டீங்களா?’ என அப்பாவியாகக் கேட்டிருக்கிறார். அப்போதுதான் அவர் கைதுசெய்யப்பட்ட தகவலை சொல்லியிருக்கிறார்கள். அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போய்விட்டாராம். ‘என்ன சாப்பிடுறீங்க’ என போலீஸ் வற்புறுத்திக் கேட்டபோது, ‘இரண்டு இட்லி மட்டும் போதும்’ எனச் சொல்ல... உடனே இட்லி வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். கடந்த மாதம் வரையில் சிவப்பு விளக்கு காரில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வலம் வந்தார். அவர் வரும்போது சல்யூட் அடித்து கார் கதவைத் திறந்துவிட்ட போலீஸாரே, அவரை ஜீப்பில் ஏற்றி நெல்லைக்கு அழைத்துப் போனார்கள். அதிகாலை விழுப்புரத்தைத் தொட்டபோது காபி வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்!”

மிஸ்டர் கழுகு : போன் என்னுடையதுதான் பேசியது நான் இல்லை !

‘‘சொல்லும்!” 

‘‘முத்துக்குமாரசாமி தற்கொலை தமிழக அரசியலில் அதிர்வலைகளை உண்டாக்கினாலும் அதுபற்றி அரசு வாய் திறக்கவே இல்லை. ஆனால், அக்ரி வாய் திறந்ததுதான் அவரை கைதுவரை கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது. வட இந்திய டி.வி சேனல் ஒன்று இந்த விவகாரம் தொடர்பாக அவரிடம் கருத்துக் கேட்டதாம். அப்போது ‘எல்லாம் அம்மாவுக்குத் தெரியும்’ எனச் சொல்லியிருக்கிறார். இதுதான் கார்டனை சூடேற்றிவிட்டதாம். விஷயம் ஜெயலலிதா கவனத்துக்குப் போனது. ‘ஏன் இவ்வளவு தாமதம்? யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுங்கள்’ என்று ஜெயலலிதா சொன்னதாகச் சொல்கிறார்கள். கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் தலைமைச் செயலாளர் ஞானதேசிகனிடம் இதுபற்றி ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மூத்த போலீஸ் அதிகாரிகளிடமும் ஆலோசனை கேட்கப்பட்டது. அதன் பிறகுதான் அக்ரியை வளைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே திருநெல்வேலி கலெக்டர் இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்திருக்கிறார். அரசின் உத்தரவின் பேரில்தான் இந்த அறிக்கை அனுப்பப்பட்டதாம். அக்ரியை வளைப்பதற்கு முன்பே தலைமைப் பொறியாளர் செந்திலை விசாரித்திருக்கிறது போலீஸ்!”

‘‘அவருக்கு எவ்வளவு ரோல் இதில்?”

‘‘வேளாண் துறையில் எந்த அமைச்சர் வந்தாலும் அவர்களுக்கு வலதுகரமாக செயல்படுவார் செந்தில். இந்தத் துறையில் உள்ள அனைத்தும் அவருக்கு அத்துப்படி. இவர் தன்னோடு ஒருவரை வைத்துள்ளாராம். அவருக்கு அத்தனை விஷயங்களும் அத்துப்படியாம். அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, தலைமைச் செயலகத்தில் இருந்து செந்திலுக்கு ஓர் அவசர போன் அழைப்பு வந்துள்ளது. அப்போது சாப்பிட்டுக்கொண்டு இருந்த அவர், உடனடியாகத் தலைமைச் செயலகத்துக்குச் சென்றுள்ளார். முத்துக்குமாரசாமி குறித்து துறை அதிகாரிகள் விசாரித்துள்ளார்கள். அப்போது வழக்கம்போல எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லியிருக்கிறார் செந்தில்.

உடனே அதிகாரிகள்,  ‘நீங்கள் யாரை காப்பாற்ற நினைக்கிறீர்கள் என்பது எல்லாம் எங்களுக்குத் தெரியும். அனைத்து விவரங்களையும் சி.பி.சி.ஐ.டி போலீஸார் திரட்டிவிட்டனர்.  இனிமேல் எதுவும் செய்ய முடியாது’ என்று அதிகாரிகள் சொல்ல..... அதன் பிறகு முத்துக்குமாரசாமியின் விவகாரத்தில் யாருடைய தலையீடு எல்லாம் இருந்தது என்ற  விவரத்தைச் சொல்லியிருக்கிறார் செந்தில். அதை வைத்துத்தான் அக்ரியை கைதுசெய்துள்ளார்கள்!”

‘‘அப்படியா?”

‘‘இந்தத் துறையில் பதவி உயர்வு விவகாரத்தில் செந்திலின் அணுகுமுறையால் ஒரு தரப்பினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலருக்கு சாதகமாகப் பதவி உயர்வு வழங்க அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு அட்சயப்பாத்திரமாக இருந்தது இந்த செந்தில்தான் என்று சொல்கிறார்கள். இன்னும் யார் யாரெல்லாம் சிக்குகிறார்கள் என்பதை வைத்து உண்மைகள் வெளியில் முழுமையாக வரும்!” என்று சொல்லி நிறுத்திய கழுகாரிடம்,‘‘சென்னை வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர், த.மா.கா தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்துள்ளாரே?” என்றோம்!

‘‘சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான சீதாராம் யெச்சூரி வந்தார். வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எடுக்க வேண்டிய முடிவுகள் குறித்து அப்போது ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.

‘தி.மு.க., அ.தி.மு.க இல்லாத மாற்று அணி அமைப்பது பற்றி யோசிக்கலாம்’ என்று இவர்கள் பேசி இருக்கிறார்கள். ‘அதற்கான ஏற்பாடுகளை உடனடியாகத் தொடங்குங்கள்’ என்று யெச்சூரி சொல்லியிருக்கிறார். நீங்கள் சென்னை வந்திருப்பதால், உடனடியாக ‘ஜி.கே.வாசனை பார்க்கலாமே’ என்று ஜி.ராமகிருஷ்ணன் சொல்ல, புறப்​பட்டார்கள். ஜி.கே.வாசனின் வாரன் ரோடு வீட்டுக்கு யெச்சூரி, ஜி.ராமகிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன் ஆகிய மூவரும் சென்றுள்ளார்கள். வெளிப்படையாகவே விஷயத்தைச் சொன்னாராம் யெச்சூரி!”

‘‘என்ன விஷயம் அது?”

‘‘சட்டமன்றத் தேர்தலில் என்ன மாதிரியான கூட்டணியை அமைப்பது என்று கேட்டாராம் யெச்சூரி. ‘தி.மு.க., அ.தி.மு.க அல்லாத கூட்டணியை அமைக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். இதில் தே.மு.தி.க.,
ம.தி.மு.க., இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், த,மா.கா., விடுதலைச் சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி போன்றவை இடம்பெறலாம். அதற்கான முயற்சிகளை நீங்கள் எடுக்க வேண்டும்’ என்று யெச்சூரி சொல்லியிருக்கிறார். ‘நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று ஜி.கே.வாசன் அப்பாவியாகக் கேட்க, ‘விஜயகாந்த்திடம் நீங்கள்தான் பேச வேண்டும். நீங்கள் அழைத்தால் மட்டும்தான் அவர் வருவார்’ என்று யெச்சூரி சொன்னாராம். ‘எங்கள் கட்சியில் இப்போதுதான் உறுப்பினர் சேர்க்கையை முடித்திருக்கிறோம். பொதுக்குழு விரைவில் நடக்க இருக்கிறது. அதன் பிறகு மாநில, மாவட்ட நிர்வாகிகளை நான் நியமிக்க வேண்டும். தேர்தல் கூட்டணி வேலைகளை இப்போதே தொடங்குவது சாத்தியமில்லை. கட்சியின்  அடிப்படைப் பணிகளை முடித்துவிட்டுப் பார்க்கலாம்’ என்றாராம் ஜி.கே.வாசன். ‘இந்தக் கூட்டணியை மனதில் வைத்து நீங்கள் செயல்பட்டால் நல்லது’ என்று யெச்சூரி பேசி இருக்கிறார். அதன் பிறகு மையமாகச் சில அரசியல் விஷயங்களைப் பேசிவிட்டு கலைந்துள்ளார்கள்!”

‘‘தேர்தல் களம் சூடாக ஆரம்பித்துவிட்டது என்று சொல்லும்!”

‘‘ ‘தேர்தல் டிசம்பருக்குள் நடக்கலாம்’ என்று முன்பே சொல்லியிருந்தேனே! அதைத்​தான் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை வழிமொழிந்துள்ளார். அ.தி.மு.க-வின் உட்கட்சித் தேர்தல்  மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதற்கான ஆலோசனைக் கூட்டம், திருச்சி சமயபுரத்தில் நடந்தது. அந்தக் கூட்டத்தில் பேசிய தம்பிதுரை கட்சித் தேர்தலைப் பற்றிப் பேசிவிட்டு, விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரப்போகிறது என்றும் சொல்லிவிட்டுப் போனார். அது அனைத்துக் கட்சிகளையும் பரபரப்பாக்கி உள்ளது!”

‘‘ம்!”

‘‘வழக்கமாக எதிர்க் கட்சியை சார்ந்த திரைப்பட வெளியீட்டுக்கு ஆளும் கட்சிதான் குடைச்சல் கொடுக்கும். ஆனால், ஆளும் கட்சி ஆட்சியில் அ.தி.மு.க தயாரிப்பாளர் ப்ளஸ் இயக்குநர் பி.சி.அன்பழகன் ரிலீஸ் செய்த ‘நதிகள் நனைவதில்லை’ திரைப்படத்தை தியேட்டரைவிட்டு தூக்கச்சொல்லி ஸ்டாலின் மகன் உதயநிதி மிரட்டியதாக அன்பழகன் குற்றம்சாட்டியிருக்கிறார்.”

‘‘ஏற்கெனவே ‘கொம்பன்’ குழு இதே மாதிரி உதயநிதி மீது குற்றம்சாட்டியதே?”

‘‘அன்பழகன் வெளிப்படையாகவே சொல்ல ஆரம்பித்துவிட்டாராம். ‘கடந்த ஒன்றரை வருஷமாகத் தமிழ் சினிமாவின் போக்கே சரியில்லை. ஒரு மாஃபியா கும்பலின் கையில் சினிமா சிக்கி சீரழிந்து வருகிறது. இவர்களிடம் போராட முடியாமல், தோற்றுப்போய் நிறைய சினிமா தயாரிப்பாளர்கள் நொந்துபோய் மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு சொந்த ஊருக்கு ஓடிவிட்டார்கள். நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை. போராட்டக் குணம் கொண்டவன். நன்றாக ஓடவிருந்த என்னுடைய ‘நதிகள் நனைவதில்லை’ படத்தை உதயநிதி ஸ்டாலினும் ஞானவேல் ராஜாவும் சேர்ந்து ஓடவிடாமல், தியேட்டரைவிட்டு தூக்கச்செய்தனர். இதற்கு தியேட்டர்காரர்களும் துணைபோனதுதான் கொடுமையிலும் கொடுமை’ என்று சொன்னவர், இன்று சினிமாவில் நடக்கும் சீரழிவுகளை போயஸ் கார்டன் போய் ஜெயலலிதாவிடம் கடிதமாகக் கொடுத்துவிட்டு வந்து இருக்கிறாராம்!” என்று சொல்லிவிட்டுப் பறந்தார் கழுகார்!

படங்கள்: எல்.ராஜேந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism