Published:Updated:

‘‘இது தமிழர், தெலுங்கர் பிரச்னை அல்ல!”

ஆந்திர மனித உரிமை அமைப்பு வழக்கறிஞர் பேட்டி!

மரக்கட்டைகளைக் காப்பாற்ற, தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்களைச் சுட்டுக் கொன்று கரிக்கட்டைகளாக்கி காட்சிக்கு வைத்தது ஆந்திர போலீஸ். அவர்கள் செய்தது கொலை அல்ல... என்கவுன்டர் என்று அதை நியாயப்படுத்திக்கொண்டிருக்கிறது சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு.

இரண்டு மாநிலங்களில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கும் இந்த விவகாரத்தை நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்று, சரியான பாதையில் அடியெடுத்து வைத்திருக்கிறது ஏ.பி.சி.எல்.சி என்று அழைக்கப்படக்கூடிய ஆந்திர மாநில மனித உரிமைகள் குழு. அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் சிக்கல சந்திரசேகர் தாக்கல் செய்த வழக்கில்தான், ‘‘என்கவுன்டரில் ஈடுபட்ட அனைவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்யவேண்டும்’’ என்று ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அந்த வழக்குத் தொடர்பாக ஏ.பி.சி.எல்.சி அமைப்பின் இணைச் செயலாளரும் வழக்கறிஞருமான கிரந்தி சைதான்யாவிடம் பேசினோம்.

‘‘சுட்டுக் கொல்லப்பட்ட 20 தமிழர்களும் உண்மையில் செம்மரக் கட்டை கடத்தல்காரர்களா?’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘‘அனைவரும் அப்பாவிக் கூலித் தொழிலாளிகள். அவர்களில் பலர் தாங்கள் எதை வெட்டிக்கொண்டிருக்கிறோம் என்று அறியாதவர்கள். தச்சு வேலை, தையல் வேலை என்று சொல்லி, காட்டுக்குள் அழைத்து வந்து மரங்களைச் வெட்ட நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள்.’’

‘‘இது தமிழர், தெலுங்கர் பிரச்னை அல்ல!”

‘‘ ‘செம்மரம் வெட்டியவர்கள் எங்களைத் தாக்கியதால், நாங்கள் அவர்களைச் சுட்டுக் கொன்றோம்’ என்று போலீஸ் சொல்கிறதே?’’

‘‘கூலித் தொழிலாளிகள் எங்களைத் தாக்கினார்கள் என்று சொல்வது சுத்தப் பொய். தாக்குதல் நடந்திருந்தால், அது என்ன மாதிரியான தாக்குதல்? ஆயுதங்களை வைத்துத் தாக்கினார்களா? ஒருவேளை அவர்கள் தாக்குதல் நடத்தியிருந்து, அதன் காரணமாக போலீஸ்காரர்கள் எதிர்த் தாக்குதல் தொடுத்திருந்தால், அந்தத் துப்பாக்கிச் சூடு கண்மண் தெரியாமல்தான் நடந்திருக்கும். அதில் பலியானவர்களுக்கு தலை, முதுகு, மார்பு, கை, கால்கள் என்று பல இடங்களில் தோட்டாக்கள் பாய்ந்திருக்கும். ஆனால், இங்கு கிடத்தப்பட்டுக் கிடந்த எந்தத் தொழிலாளியின் உடம்பிலும் அப்படி கண்ட இடங்களில் காயம் ஏற்படவில்லை. சரியாக மார்பில் தோட்டாக்கள் பாய்ந்துள்ளன. வரிசையாக நிற்க வைத்து, பின்னால் கைகளைக் கட்டி, அவர்களுக்கு நேருக்கு நேர் நின்று சுட்டால்தான் இது சாத்தியம்.’’

‘‘தற்போது ஆந்திர உயர் நீதிமன்றம் என்கவுன்டரில் ஈடுபட்டவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யச் சொல்லி உள்ளது. இது உங்கள் முயற்சிக்குக் கிடைத்துள்ள வெற்றிதானே?’’

‘‘2014-ம் ஆண்டு பி.யூ.சி.எல் அமைப்பு vs மகாராஷ்டிர மாநில அரசு வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், என்கவுன்டர் விவகாரத்தில் சில விதிமுறைகளை வகுத்தளித்து தீர்ப்பளித்தது. அதில், என்கவுன்டர் திட்டம் தீட்டியது முதல் போலீஸ் டைரி மெயின்டெயின் செய்ய வேண்டும். என்கவுன்டரில் ஈடுபட்டவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யவேண்டும். அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அவர்களிடம் இருக்கும் ஆயுதங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. அதன்படி, இந்தத் தீர்ப்பு வந்துள்ளது. இதையடுத்து இதில் எத்தனைபேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்போகிறது? அவர்கள் மீது துறைரீதியாக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படப் போகின்றன என்பதை எல்லாம் பார்க்க வேண்டும். அத்துடன் வழக்கை சரியான திசையில் கொண்டு சென்று, இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்குத் தண்டனை வாங்கித் தர வேண்டும். இனிமேல் இதுபோன்று அரசியல், அதிகாரவர்க்கம், மாஃபியாக்கள் கூட்டுச் சேர்ந்து நடத்தும் நாடகத்தில் அப்பாவி உயிர்கள் என்கவுன்டர் என்ற பெயரில் பறிபோவது முற்றிலுமாக நிறுத்தப்படுவதே எங்கள் நோக்கம்.’’

‘‘இந்தப் பிரச்னை இரு மாநிலங்களுக்கு இடையிலான பிரச்னையாக உருவெடுத்துள்ளது பற்றி?’’

‘‘இறந்த கூலித் தொழிலாளர்களை தமிழர்கள் என்றோ, தெலுங்கர்கள் என்றோ பார்ப்பது தவறு. அவர்கள் மனிதர்கள். அநியாயமாக அவர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. அதற்கு நீதி கேட்டுப் போராட வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. அந்த 20 உயிர்களும் ஆந்திர எல்லையில் ஆந்திர மாநிலக் காவல் துறையால் பறிக்கப்பட்டுள்ளன. ஆந்திராவில் அந்தத் தொழிலாளர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு உள்ளதால், அவர்களுக்கான நீதியைப் பெற்றுத் தர வேண்டிய தார்மீக கடமை ஆந்திர மக்களுக்குக் கூடுதலாக உள்ளது. ஆனால், இதை இரண்டு மாநிலப் பிரச்னையாகப் பார்க்க முடியாது.’’

‘‘தமிழக அரசாங்கத்திடம் இருந்து என்ன மாதிரியான நடவடிக்கைகளை எதிர்பார்க்கிறீர்கள்?’’

‘‘தமிழக அரசு இந்த விவகாரத்தில் நீதி விசாரணை முறையாக நடக்கிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். செம்மரங்கள் விளைவது ஆந்திரா என்றாலும் அவை வெளிநாடுகளுக்குக் கடத்தப்படும் வழித்தடங்கள், ரயில் பாதைகள், கடல் வழிகள் எல்லாம் தமிழகத்தில்தான் உள்ளன. தமிழகத்தில் இருந்துதான் அதிக எண்ணிக்கையில் கூலித் தொழிலாளர்கள் இதற்காக அழைத்து வரப்படுகின்றனர். தமிழகத்தில் செம்மரக் கட்டை கடத்தல் தொழிலில் ஈடுபடும் மாஃபியாக்கள்தான், அங்கிருந்து கூலித் தொழிலாளிகளை இங்கு அனுப்புகின்றனர். இவற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை இனியாவது விரைவுபடுத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள பழங்குடியின மக்களிடம் போதிய விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும்’’ என்றார்.

கடந்த 12-ம் தேதி ஆந்திர வனப்பகுதியில் தலைமறைவாக இருந்த 40 தொழிலாளர்கள் காட்டைவிட்டு வெளியேறும்போது போலீஸார் மடக்கிப் பிடித்துள்ளதாகவும் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீஸார் விசாரித்து வருவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து ஆந்திர போலீஸார் வட்டாரத்தில் விசாரித்தபோது, அவர்கள் எந்தத் தகவலையும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
இதற்கிடையில் தமிழக டி.ஜி.பி அசோக்குமார், திருவண்ணாமலை, வேலூர் எஸ்.பி-களுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில், ‘‘தமிழகத்தில் செம்மரக் கடத்தல் கும்பல் குறித்த விவரங்களையும் தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு வேலைக்காகச் சென்றவர்களின் விவரங்களையும் செம்மரக் கடத்தல் ஏஜென்ட்கள் குறித்த தகவல்களையும் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்களையும் ஆந்திர அரசு உடனடியாக அறிக்கையாகச் சமர்ப்பிக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளது.

-ஜோ.ஸ்டாலின்
படங்கள்: ச.வெங்கடேசன்

தற்காப்புக்காகத்தான் சுட்டோம்!

‘‘இது தமிழர், தெலுங்கர் பிரச்னை அல்ல!”

செம்மரக் கடத்தல் தடுப்பு அதிரடிப் படை ஆந்திர டி.ஐ.ஜி காந்தா ராவிடம் பேசினோம். தமிழ் பத்திரிகை என்றவுடன் முதலில் பேச தயங்கினார். சம்பவ இடத்தில் என்ன நடந்தது என்று மட்டும் கேட்டதற்கு அவர் “சேஷாசலம் வனப்பகுதி சந்திரகிரி மண்டலம், வாரிமெட்டு வனத்தில் ஈஸ்தகாயலபண்டா என்ற இடத்திலும், சச்சினவாடுபண்டா பகுதியிலும் செம்மரங்களை 200-க்கும் மேற்பட்ட கடத்தல்காரர்கள் வெட்டுவதாக எங்களுக்குத் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் என்னுடைய தலைமையில் 3 டீம் கொண்ட அதிரடிப்படையினர் அந்த இரண்டு இடங்களையும் சுற்றி வளைத்தோம். அப்போது மைக்கில் சரணடையும்படி அறிவித்தோம். ஆனால், அவர்கள் எங்கள் மீது சரமாரியாகக் கற்களை வீசி தாக்கத் தொடங்கினார்கள். இதில் 11 போலீஸாருக்குக் காயம் ஏற்பட்டது. வேறுவழியின்றி தற்காப்புக்காக அவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினோம். சுமார் அரைமணி நேரம் இந்த மோதல் நடந்ததில் 20 பேர் இறந்துவிட்டனர். இறந்தது தமிழர்கள் என்பது அப்போது எங்களுக்குத் தெரியாது. தப்பி ஓடியவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடந்துவருகிறது. வனப்பகுதிக்குள் அவர்கள் மறைந்திருக்க வாய்ப்புள்ளது. அனைத்து செக்போஸ்ட்களும் உஷார்படுத்தப்பட்டு உள்ளன. இந்தச் சம்பவத்தில் மனித உரிமை மீறல் எதுவும் நடக்கவில்லை” என்றார்.

- எஸ்.மகேஷ்