Published:Updated:

அமைச்சர் அலுவலகத்தில் இருந்து பிரஷர் கொடுக்கிறார்கள்!

கொந்தளிக்கும் டாஸ்மாக் பணியாளர்கள்

டாஸ்மாக் வருமானத்தை ரூ.22 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.30 ஆயிரம் கோடியாக உயர்த்துவதற்கு தமிழக அரசு இலக்கு நிர்ணயித்து இருக்கும் வேளையில், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் மே 12-ம் தேதி மறியல் போராட்டம் நடத்துவதற்குத் தயாராகி வருகிறார்கள் டாஸ்மாக் பணியாளர்கள்.

‘‘காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை என தொடர்ந்து 12 மணி நேரம் வேலை செய்பவர்களை பகுதிநேர ஊழியர்கள் என்று அரசு சொல்கிறது. இது, எவ்வளவு பெரிய அநியாயம்? மாநில அரசின் ஒரு நிறுவனத்தில் 11 ஆண்டுகளாகப் பணியாற்றி வருபவர்களை, ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்றுஅரசு சொல்கிறது. இது, எவ்வளவு பெரிய அநீதி’’ என்று கொந்தளிக்கிறார், டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளன (சி.ஐ.டி.யு) மாநில பொதுச்செயலாளர் க.திருச்செல்வன். அவரிடம் சில கேள்விகள்.

‘‘ஏன் இந்தப் போராட்டம்?’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘‘‘டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனையை 2003-ல் தொடங்கியபோது, 33 ஆயிரம் பணியாளர்கள் வேலைக்குச் சேர்க்கப்பட்டனர். ‘தற்காலிக பகுதிநேர ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதிய ஊழியர்கள்’ என்று இவர்களை அரசு வரையறுத்தது. இவர்கள், 16 மணி நேரம் வேலை வாங்கப்பட்டனர். மாதச்சம்பளம் வெறும் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது.

அமைச்சர் அலுவலகத்தில் இருந்து பிரஷர் கொடுக்கிறார்கள்!

2005-ல் ஊதிய உயர்வு கேட்டோம்.  அதிகமாகச் சரக்கு விற்றால் இன்சென்டிவ் தருகிறோம் என்று அன்றைய அ.தி.மு.க அரசு சொன்னது. அதன் பிறகு, பல போராட்டங்களை நடத்தினோம். அதன் பலனாக, தி.மு.க ஆட்சியில் 3 முறை, அ.தி.மு.க ஆட்சியில் 3 முறை என 6 முறை ஊதியம் உயர்த்தப்பட்டது.

ஆனாலும்கூட, இன்றைக்கு டாஸ்மாக் பணியாளர்களின் மாத ஊதியம் வெறும் 6,500-தான். தமிழக அரசின் நிறுவனங்களான ஆவின், பூம்புகார், சிவில் சப்ளை, கோ-ஆப்டெக்ஸ் ஆகியவற்றின் ஊழியர்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்கப்படுகிறது. டாஸ்மாக்கும் அரசு நிறுவனம்தான். மாநில அரசுக்கு அதிகமான வரிவருவாயை ஈட்டித்தரும் நிறுவனமும்கூட. இதில் பணியாற்றும் ஊழியர்களை அரசு வஞ்சிக்கிறது.’’

‘‘ஊதியத்தை உயர்த்தாததற்கு அரசு என்ன காரணம் சொல்கிறது?’’

அமைச்சர் அலுவலகத்தில் இருந்து பிரஷர் கொடுக்கிறார்கள்!

“வரி வருவாய் மாநில அரசுக்குப் போய் விடுவதால், நிறுவனம் நஷ்டத்தில் இருக்கிறது என்று டாஸ்மாக் நிர்வாகம் கூறுகிறது. மாநில அரசையே வாழவைத்துக்கொண்டிருக்கும் டாஸ்மாக் நிறுவனம் நஷ்டத்தில் இருக்கிறது என்று அதிகாரிகள் சொல்வதைக்கேட்டால், எல்லோருக்கும் சிரிப்புதான் வரும்.’’

‘‘டாஸ்மாக் பணியாளர்களுக்கு சலுகைகள், உரிமைகள் என என்னதான் வழங்கப்படுகிறது?’’

‘‘தொழிலாளர்நலத் துறை சட்டங்கள், கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம், தேசிய பண்டிகை விடுமுறைகள் என அனைத்திலும் டாஸ்மாக் நிர்வாகம் தனது பணியாளர்களுக்கு விலக்கு வாங்கிவிட்டது. வாரம் ஒரு நாள் விடுமுறை என்பதும் கிடையாது. இன்னும் மோசம் என்னவென்றால், பணியாளர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு உடல்நிலை சரியில்லை என்றால், அவர்கள் இ.எஸ்.ஐ மூலமாக மருத்துவ சிகிச்சை பெற முடியாது.

இ.எஸ்.ஐ-யில் இருந்தும் அவர்களுக்கு விலக்கு வாங்கிவிட்டார்கள்.’’

‘‘தி.மு.க ஆட்சியில் பணிநேரம் குறைக்கப்பட்டதே?’’

‘‘16 மணி நேரத்தை 12 மணி நேரமாகக் குறைத்துள்ளோம் என்று ‘பெருமையோடு’ சொன்னார் அன்றைய முதல்வர் கருணாநிதி. 12 மணி நேரம் என்பதும் சட்டவிரோதமானது. எல்லோருக்கும் முன்மாதிரியாக நடந்துகொள்ள வேண்டிய அரசு நிறுவனம், தனியா ரைவிட மிகமோசமாக நடந்துகொள்கிறது. கொத்தடிமைகளைப்போல டாஸ்மாக் பணியாளர்கள் நடத்தப்படுகிறார்கள்.

 மொத்தத்தில் தி.மு.க.,

அ.தி.மு.க ஆகிய இரு ஆட்சிகளின் அணுகுமுறைகளிலும் எந்த வித்தியாசமும் இல்லை. 2010-ம் ஆண்டு தி.மு.க ஆட்சி நடந்தது. இதே கோரிக்கைகளுக்காக வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தினோம். அப்போது எதிர்க் கட்சித் தலைவராக இருந்த இப்போதைய ‘மக்கள் முதல்வர்’ எங்கள் போராட்டத்தை ஆதரித்து அறிக்கை வெளியிட்டார். ‘என் ஆட்சியில் பணியில் அமர்த்தப்பட்டவர்கள் என்பதற்காக, டாஸ்மாக் பணியாளர்களை மைனாரிட்டி தி.மு.க அரசு பழிவாங்குகிறது. டாஸ்மாக் தொழிலாளர்களின் கோரிக்கை நிறைவேறும் நாள் வெகுதொலைவில் இல்லை’ என்று அந்த அறிக்கையில் சொன்னார். 2011-ல் ஆட்சி மாறியது. ஆனால், காட்சி மாறவில்லை. கடை ஆய்வு  என்ற பெயரில் பணியாளர்களை அதிகாரிகள் மிரட்டுகிறார்கள். இன்னாருக்குத்தான் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று அமைச்சர் அலுவலகத்தில் இருந்து பிரஷர் கொடுக்கிறார்கள். இதை எல்லாம் கண்டித்துத்தான் இந்த மறியல் போராட்டம்.’’

- ஆ.பழனியப்பன்